மாநகர பகீருந்துகள்

This entry is part 8 of 30 in the series 22 ஜனவரி 2012

புதிய ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டவுடன், பலரும் பலவிதமாகக் கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தனர். நமக்கு ஒன்றும் பாதிப்பில்லை.. நாம்தான் வெளியிலேயே போவதில்லையே என்று எண்ணிக் கொண்டேன். சென்ற வாரம் ஒருவழி காரில் போய் விட்டு, போரூர் திரும்ப வேண்டிய கட்டாயம். மயிலாப்பூர் சுற்றிவிட்டு, மந்தைவெளி வந்தால், ஒரே பேருந்தில் திரும்பலாம், காசு மிச்சம் எண்ணிக்கொண்டு ஒரு கிலோ மீட்டர் நடந்தேன். போரூருக்கு அந்தப் பகுதியில் இருந்து ஒரே பேருந்து. 54 f. என் அதிர்ஷ்டம் ஒரு பேருந்து நின்று கொண்டிருந்தது. சொகுசு. என்ன.. எட்டு ரூபாய் கொடுத்துக் கொண்டிருந்தோம். இப்போது பதினொரு ரூபாய் கொடுக்கப் போகிறோம் என்கிற குருட்டு நம்பிக்கையில் ஏறி உட்கார்ந்தேன். நடத்துனர் சீட்டு கொடுக்கும்போது பார்த்தால் ரூட் ஷாக். பதினைந்து ரூபாய். ஐந்து ரூபாய்க்கு இருந்த சாதாரணக் கட்டண பேருந்து இப்போது எட்டு ரூபாய். ஆனால் நம் அவசரத்திற்கு ஒரு பேருந்து கூட கிடைக்காது. சொகுசில் வரவேண்டியதுதான்.
மயிலாப்பூர் போன்ற மேல்தட்டு வாசிகள் பகுதிக்கு எல்லாமே சொகுசு பேருந்துகள் தாம். அத்தி பூத்தாற்போல் ஒன்றிரண்டு சாதா பெருந்துகள் வருமாம். அதுவும் வேலை செய்யும் ஏழைகள், பூ வியாபாரம் செய்பவர்கள், பழ வியாபாரம் செய்பவர்களுக்கு வசதியாக காலையிலும் மாலையிலும். இடையில் மாட்டிக்கொண்டால் சொகுசுதான். இதில் இன்னொரு கூத்து என்னவென்றால் கிண்டிக்கு பதினொரு ரூபாய். கிண்டியில் இருந்து போரூர் போகவேண்டுமென்றால் இன்னுமொரு பதினொரு ரூபாய். இருபத்தி இரண்டுக்கு பதினைந்து தேவலை என்று எண்ணிக் கொண்டேன்.
இன்று இன்னுமொரு அனுபவம். போரூர் டு கத்திபாரா சாதாரணக் கட்டணப் பேருந் தில் ஐந்து ரூபாய். கத்திபாரா டு போரூர் சொகுசில் பதினொரு ரூபாய். ஐம்பது விழுக்காடு அதிகரிக்கப்பட்ட பயணக்கட்டணத்தில் ஐந்து பதினொன்றானது எப்படி என்று கணேசன் வாத்தியாரைக் கேட்க வேண்டும். அவர்தான் எனக்கு தொடையைக் கிள்ளி கணக்குச் சொல்லிக் கொடுத்தவர்.
இயந்திரம் துப்பிய சீட்டைக் கவனித்தேன். கிண்டி என்றே போட்டிருந்தது. கத்திபாரா என்று தானே அச்சிட்டிருக்க வேண்டும். நடத்துனர் சொன்னார்.
‘ ரெண்டு ஸ்டேஜ் வரையிலும் பதினொரு ரூபாய். ராமாபுரத்தில் ஏறினீங்கன்னா ஒன்பது ரூபாய். ‘
அதாவது கட்டணத்தை ஏற்றி ஸ்டேஜ்களையும் இணைத்து விட்டார்கள். ரெட்டை லாபம். அதான் கூட்டமும் குறைந்து விட்டது. வருமானமும் எதிர்பார்த்த அளவு இல்லை. இனிமேல் சொகுசில் ஏறினால் கையில் ரப்பர் கையுறை போட்டுக் கொண்டு ஏற வேண்டும். தொட்டால் ஷாக்கடிக்கிறது.
விலையேற்றத்திற்கு முன்னால், பெங்களூர் பேருந்துக் கட்டணம் ரொம்ப அதிகம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அவர்களை நல்லவர்களாக்கி விட்டார்கள் மகா கனம் பொருந்திய ராஜ ராஜ மாநகர அதிகாரிகள். பெங்களூரில் ஆறு கிலோமீட்டருக்கு, ஏசி பேருந்திலேயே பதினைந்து ரூபாய்தான். அதுவுமில்லாமல் எப்டிஆர் பஸ்கள் என்று போட்டிருக்கிறார்கள். ஒரு பகுதியை ஆரம்பமாகவும், இன்னொரு பகுதியை கடைசியாகவும் கொண்டு, மூன்று நான்கு நகர் பகுதிகளைச் சுற்றிக் கொண்டே இருக்கும். சாதாக் கட்டணம். ஆறு ரூபாயில் பக்கமாக இருக்கும் எல்லாப் பகுதிக்கும் போய் வந்து விடலாம். திருச்சியில் இன்றும் தில்லை நகர் டு தில்லை நகர் என்று பேருந்துகள் உண்டு. ரயில்வே ஸ்டேஷன், வர்த்தகப்பகுதி என்று எல்லாப் பகுதிகளையும், அவை சுற்றிக் கொண்டேயிருக்கும். இங்கே கொஞ்சம் காலம் முன்பு கே கே நகர் டு கே கே நகர் என்று ஒரு தடம் ஆரம்பித்தார்கள். கொஞ்ச காலம் கழித்து அது காணாமல் போனது. பெங்களூரின் பரப்பளவு கம்மி. ஆனாலும் நம் மாநிலம் அளவு பேருந்துகளின் எண்ணிக்கை. தொலைதூர பேருந்துகள் ஒரு குறிப்பிட்ட தூரம் ஓடிய பின், நகரப் பேருந்துகளாக மாற்றி விடுகிறார்கள். இவர்கள் அவைகளை என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. மீண்டும் மீண்டும் புதிய பேருந்துகளை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
டெல்லியில் 2000 வருடத்தில் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் பேருந்துகள் என்று பிரவுன் கலரில் ஓடும். ஆரம்பித்த இடத்தில் இருந்து ஒரு தொலைவு வரை ஐந்து ரூபாய். அப்புறம் பத்து ரூபாய். ஐந்து ரூபாய் முடியும் இடத்தில் ஏறி பத்து ரூபாய் இடத்தில் இறங்கிக் கொண்டால் ஐந்து ரூபாய் தான். அதுவே அப்போது கொள்ளை என்றார் கள். இதற்கு என்ன சொல்வார்களோ?
சொகுசு பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக காத்தாடுகின்றன. சாதா கட்டணப் பேருந்துகள் பிதுங்கி வழிகின்றன. மக்கள் விழிகளும் தான். அடுத்த முறை ஆட்சிப் பொறுப்பு கிடைக்க வேண்டுமென்றால், அரசு உடனடியாக சொகுசு பேருந்துகளை எல்லாம் சாதா கட்டணப் பேருந்துகளாக மாற்றவேண்டும். உடனே நடக்கும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. அதான் ஐந்தாண்டைத் தூக்கி கையில் கொடுத்து விட்டோமே!
0
கொசுறு செய்தி
ஷேர் ஆட்டோக்கள் விலையேற்றவில்லை. ஆனால் வெள்ளை மாஜிக் வேன்கள் மாலை மங்கியவுடன் ஐம்பது விழுக்காடு ஏற்றி விடுகின்றன. போரூர் டு கிண்டி – பத்து ரூபாய். கிண்டி டு போரூர் – பதினைந்து ரூபாய்.
இன்னொரு செய்தி: கிடைக்கும் காலி இடங்களிலெல்லாம் தட்டி மூடப்பட்டு டாஸ் மாக் கடைகள் ஏராளமாக முளைத்து விட்டன. இப்போது ஐ டி யுவதிகளும் குடிக்கி றார்களாம். ஸ்டேடஸ் சிம்பல். தி ஹிண்டு நியூஸ். ஒரு மாதத்தில் ஒரு லட்சம் பெட்டிகள் அதிகமாக விற்றிருக்கின்றன. மப்பில் ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது. வாழ்க நிர்வாகம்.
0

Series Navigationலிங்குசாமியின் ‘ வேட்டை ‘மல்டிப்ளெக்சும் மஸ்தான் பாயும்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *