மூன்று நாய்கள்

This entry is part 15 of 30 in the series 22 ஜனவரி 2012

உயிர்மை இதழின் கேள்வி

மத அடிப்படைவாதம் இலக்கியப் பிரதிகளை கண்காணிக்கும்போது அது தமிழில் சிறுபான்மையின மக்களின் இலக்கிய வளர்ச்சியைத் தடுக்கிறதா அல்லது அதுவே மீறலுக்கான உத்வேகத்துடன் கூடிய இலக்கிய மறுமலர்ச்சியைஏற்படுத்துகிறதா..

பதில்

தன்னைத்தவிர பிறவற்றை அழித்தொழிப்பது அடிப்படைவாதத்தின் முக்கியக் கூறு.இது மத அடிப்படைவாதமாக மாறும்போது தனது மதத்திற்கு எதிராக தாம் கருதுபவை அனைத்தையும் அழித்தொழிக்க எத்தனிக்கிறது. இது பிற மதங்களின் கருத்துரிமை,மதத்திற்குள்ளே நிகழ்த்தப்படும் ஜனநாயக உரையாடல்,மத அமைப்புக்குள்ளே வாழும் விளிம்புநிலை மக்களின் விடுதலை என எதுவாகவும் இருக்கலாம்

புனிதநூல்கள் குறித்த மரபுவழி வாசிப்பையும் பொருள்கோளலையும் படைப்பு ரீதியாக கேள்வி கேட்காத வரைக்கும் ஒரு படைப்பாளி தைரியமாக உயிர்வாழலாம்.அவனோ அல்லது அவளோ எழுத்து அகதியாக இடம்விட்டு இடம் பெயரவேண்டிய அவசியம் இருக்காது.காபிர்பத்வா வழங்கமுடியாது. இறந்து போனால் மய்யித்தை அடக்குவதற்கு மையவாடி தர மறுப்பதற்கும் வாய்ப்பு ஏற்படாது.

இஸ்லாமிய இறையியல் சிந்தனைப்போக்கில் அனல்-ஹக்(நானே உண்மை) கருத்தாக்கத்தை முன்வைத்தவர் சூபிஞானி மன்சூர் ஹல்லாஜ். கிபி பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவருக்கு இஸ்லாமிய அப்பாஸித் ஆட்சியாளர் முக்ததிர்பில்லாஹ் மரணதண்டனை வழங்கினார்.சூபி மன்சூர் ஹல்லாஜ் கதறக் கதற வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

எகிப்தின் முக்கிய நாவலாசிரியை நவ்வல் எல் சாதவி. தூக்குத்தண்டனைக் கைதிகள், மருத்துவமனைப் பெண்களின் பாலியல்பிரச்சினைகளையும், மனநிலைக் கோளாறுகளையும் பகுப்பாய்வுசெய்தவர். எண்பதுகளில் சிறையிலடைக்கப்பட்டார். மலம்துடைக்க வழங்கப்பட்ட டிஸ்யூபேப்பரையும்ஐப்ரோபென்சிலையும் கொண்டே தனது சிறைக்குறிப்புகளை எழுதிய வரலாறும் உண்டு.

சோமாலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அயன்ஹிர்ஸ் அலி பெண்ணுறுப்பு சுன்னத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தவர். டச்சுதிரைப்படத் துறை

தியோவான்கோவுடன் இணந்து இஸ்லாமியக் கலாச்சாரத்தில் பெண்ணின் இடம்  குறித்து பேசும் பணிதல் (சப்மிஸன்) குறும்படத்தை தயாரித்து வெளியிட்டார். தியோவான்கோ நவம்பர் 2004ல் படுகொலை செய்யப்பட்டார்.

மரபுவழி  உலமாக்களுக்கும் சூபிகளுக்குமான முரண் தொடர்ந்து வரலாற்றில் நிகழ்ந்துள்ளது.18ம் நூற்றாண்டைச் சேர்ந்த பதினெண்ணாயிரம் ஞானப்பாடல்களை எழுதிய சூபிஞானி பீர்முகமது அப்பாவிற்கு கண்டனம் தெரிவிக்க காயல்பட்டணத்திலிருந்து சதகத்துல்லா ஆலீமை அழைத்துவந்தார்கள். பீர்முகமதுஅப்பா தான் நெசவு செய்து கொண்டிருந்த காக்குழியில் மக்கமா நகரின் காபத்துல்லாவை காண்பித்து அதிசயம் செய்தாரென வாய்மொழி வரலாறு கூறும். உழைப்பையே தொழுகையென அறிவித்தவர். அன்பனே நீ நடத்தும் நீதி அநீதியாக இருந்ததே என எதிர்க் கவிதை பாடி பீர்முகமது அப்பா தன்னை தரநீக்கம்(Declass) செய்தபோது நாய்போல் ஒதுங்கி நின் வாயில்வந்தேன் எனப் பாடினார்.இறைவனின் வாசல் இந்த உலகில் காபத்துல்லா..காபா வாசலில் ஒரு நாய்போல் ஒதுங்கி வந்தேன் என்பதான தரநீக்கக் குரலை யாரால் என்ன செய்ய முடியும். இது பீர்முகமது அப்பா தன்னை பாதிக்கப்பட்டவர்கள் விளிம்புநிலை மக்கள் சார்பாக அடையாளப்படுத்தியதின் குறியீடே ஆகும்.

வேட்டைப் பெரிதென்று வெறிநாயைக் கைப்பிடித்து /காட்டில் புகலாமோ கண்ணே ரஹ்மானே – என பாடிய குணங்குடி மஸ்தான் சாகிபு 1835ல் மரணமடைகிறார். அருணாசலமுதலியார் என்ற இந்துப் பெருமகனார்தான் முதன்முதலில் சாகிபின் பாடல்களைப் பதிப்பித்துவெளியிட்டார். காஞ்சிபுரம் இராமஸ்வாமி நாயுடுவும் , மா,வடிவேலுமுதலியாரும் விளக்க உரைஎழுதி வெளியிட்டவர்களில் முக்கியமானவர்கள். 144 ஆண்டுகளுக்குப் பின்னர்தான்(1979) குணங்குடியார்பாடல்களை திருத்தணி என்.ஏ.ரஷீது என்ற ஒரு முஸ்லிமால் பதிப்பிக்க முடிந்திருக்கிறது.

இன்றைய முஸ்லிம்களின் தமிழ் அறிவுச் சூழலோ இன்னும் அபாயகரமாக இருக்கிறது. பீர்முகமதப்பா, குணங்குடியப்பா உள்ளிட்ட தமிழ் சூபிகளை இஸ்லாமியரே அல்ல என்றுகூறி வகாபிய அடிப்படைவாதிகள் நிராகரிக்கிறார்கள்.மாற்றுசமயக் கலாச்சாரத்தை தங்கள் கவிதைச் சொல்லாடல்களில் பின்பற்றி தூய இஸ்லாத்தை கெடுத்துவிட்டார்கள் என விமர்சிக்கிறார்கள். நவீனஇஸ்லாமியநுண்கலை,இசை,இலக்கியத்தையும் இவர்கள்அங்கீகரிக்கவில்லை.

மற்றொருபுறத்திலோ சூபிகளின் பெயரைச் சொல்லிக் கொண்டேஜமாத்துகளின் நிர்வாகிகள் , இலக்கிய பிதாமகர்கள் ஊர்விலக்கம்,இலக்கியவிலக்கம் என ஒடுக்குமுறையை நிகழ்த்தும் கலாச்சார வன்முறையாளர்களாக இருக்கிறார்கள்.

சமயத் தொன்மங்களினூடாக படைப்புச் செயல்பாட்டின் பயணம் நிகழும் பின்காலனியக் காலமிது. எட்வர்டு சையதும்,காயத்திரி ஸ்பைவாக்கும் அடையாள அரசியல், அடித்தள மக்கள் குழும பண்பாடு குறித்தும் யோசிக்கவைத்துள்ளார்கள். ஜாலயதார்த்தம்,கலாச்சார யதார்த்தமென புனைவுகளின் பரப்பு விரிகிறது. என்றாலும் புதிய தலைமுறையைச் சார்ந்த படைப்பாளிகளையும், இலக்கியப் பிரதிகளையும், மத அடிப்படைவாதிகள் பத்வா சாட்டைகளோடு தொடர்ந்து மிரட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

எனக்கென்னவோ இன்னொன்றும் தோன்றுகிறது.. மதம்,புனிதங்கள்,விருதுகள் என எல்லாவகை அதிகாரமையங்களின் பாதங்களையும் நக்கிக் கொண்டு நாய்போல் கிடந்தால் ஒருவேளை இலக்கிய மறுமலர்ச்சி ஏற்பட்டுவிடும் போலிருக்கிறது.

நன்றி

உயிர்மை டிசம்பர் 2011

Series Navigationசோ – தர்பார்உன்னதமானவர்களின் உள் உலகங்களைக் கண்டு வியக்கும் இந்திரன்
author

ஹெச்.ஜி.ரசூல்

Similar Posts

7 Comments

 1. Avatar
  தங்கமணி says:

  மதம்,புனிதங்கள்,விருதுகள் என எல்லாவகை அதிகாரமையங்களின் பாதங்களையும் நக்கிக் கொண்டு நாய்போல் கிடந்தால் ஒருவேளை இலக்கிய மறுமலர்ச்சி ஏற்பட்டுவிடும் போலிருக்கிறது என்று ரசூல் கூறுகிறார். அது எப்படி நிகழும் என்றும் எழுதியிருக்கலாம். ஒரு வேளை அங்கதமாக கூறுகிறாரோ என்னவோ?

 2. Avatar
  தக்கலை கவுஸ் முகம்மது says:

  /// இஸ்லாமிய இறையியல் சிந்தனைப்போக்கில் அனல்-ஹக்(நானே உண்மை) கருத்தாக்கத்தை முன்வைத்தவர் சூபிஞானி மன்சூர் ஹல்லாஜ்///
  /// உழைப்பையே தொழுகையென அறிவித்தவர்.///
  /// அன்பனே நீ நடத்தும் நீதி அநீதியாக இருந்ததே என எதிர்க் கவிதை பாடி பீர்முகமது அப்பா தன்னை தரநீக்கம்(Declass) செய்தபோது நாய்போல் ஒதுங்கி நின் வாயில்வந்தேன் எனப் பாடினார்.இறைவனின் வாசல் இந்த உலகில் காபத்துல்லா..காபா வாசலில் ஒரு நாய்போல் ஒதுங்கி வந்தேன் ///
  ///நவீனஇஸ்லாமியநுண்கலை,இசை,இலக்கியத்தையும் இவர்கள்அங்கீகரிக்கவில்லை ///

  ஹெச்.ஜி.ரசூல் எனும் இந்த சகோதரரின் மேற்காணும் கருத்துக்கள் யாவும் இஸ்லாம் அறியாத மேலும் தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லி கொண்டு வாழ்ந்து வரும் அன்பரின் உளறல்கள்.. இவரின் இந்த உளறல்களை படித்ததும் எனக்கு கீழ்காணும் அல்லாஹ்வின் வாக்குகள் நினைவுக்கு வருகிறது ,

  7:179. நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன – ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் – இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்
  2:18. (அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.

  24 :51 அல்லாஹ்வின் பக்கமும் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவனது தூதரின்பாலும் அழைக்கப்படும்போது நாங்கள் செவியுற்றோம், கட்டுப்பட்டோம் என்பதுதான் மூஃமின்களின் பதிலாக இருக்க வேண்டும். மேலும் அவர்களே வெற்றி பெற்றவர்கள். (அல்குர்ஆன் 24:51)

  3 :32 அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் கட்டுப் படுங்கள்! என்று (நபியே) கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் அத்தகைய காபிர்களை அல்லாஹ் விரும்பமாட்டான் (அல்குர்ஆன் 3:32)

 3. Avatar
  தங்கமணி says:

  முகம்மது இவ்வாறு தன்னை நம்பாதவர்களை திட்டுவதை தக்கலை கவுஸ் முகம்மது காட்டுவது அதிர்ச்சியாக இருக்கிறது. இப்படியா ஒரு மனிதனை திட்டுவார்?

 4. Avatar
  தங்கமணி says:

  தக்கலை கவுஸ் முகம்மது அய்யா, இதே திண்ணையில் கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் என்று ஒரு சீரீஸ் ஓடுகிறது. அதையும் கொஞ்சம் படியுங்கள்.

 5. Avatar
  தக்கலை கவுஸ் முகம்மது says:

  ஹாய் தங்கமணி ! எந்தமுகம்மது யாரை திட்டுகிறார் ? .. கொஞ்சம் புரியும் படியா சொல்லுங்களேன்

 6. Avatar
  தக்கலை கவுஸ் முகம்மது says:

  /// கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் ///

  நோய்க்கு சிகிட்சை செய்வது நல்லது

 7. Avatar
  கே. பி. ஆனந்தன் says:

  புதிய தீர்க்கதரிசியாக பீரப்பாவை ஏற்பதில் கௌஸ் முகம்மதுகளுக்கு என்ன தடையிருக்கிறதோ தெரியவில்லை. எல்லா ஆன்மிகக் கருத்தாங்களையும் ஏற்பதால்தான் இந்து ஆன்மிகம் உலகிற்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது. எச். ஜி. ரசூல் முன்வைக்கும் கருத்துக்களை ஏன் இவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *