முன்னணியின் பின்னணிகள் – 24

This entry is part 30 of 42 in the series 29 ஜனவரி 2012

சாமர்செட் மாம்
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்

அதற்கெல்லாம் பின்னால் ஒரு ஒருவருட அளவில், எப்போதெல்லாம் ரோசி என்னுடன் வெளியே வந்தாளோ, என் அறைவரை வந்து போவதை வழக்கமாக்கிக்கொண்டாள். சில நேரம் ஒருமணி தங்குவாள். சில சமயம் விடியல் வரை, அதாவது வேலைக்காரர்கள் முறைவாசல் என்று வாசலை சுத்தம்செய்கிற வேலை ஆரம்பிக்கும் வரை.
கதகதப்பான காலைகளின் அழகான நினைவுகள் என்னுள் இன்னும் இருக்கவே செய்கின்றன. இரவின் அலுத்து ஓய்ந்த காற்றின் ஆயாசம் மெல்ல மாறி, இதமான புத்துணர்ச்சியைத் தருகிறாப் போன்ற நினைவுகள். சந்தடியற்ற தெருவில் எங்கள் காலடிச் சத்தம் பேரொலியாய்க் கேட்கும். குளிர்காலம் குளிரையும் மழையையும் ஒருசேரக் கொணரும். அமைதியாய் இருந்தாலும் உற்சாகத்துக்குக் குறைவில்லை. ஒரே குடையடியில் இறுகத் தழுவியபடி தெருவில் வெடவெட வென்று போவோம்.
தெருக்காவலர்கள் வெறித்துப் பார்ப்பார்கள். சில சமயம் சந்தேகமாக, சில சமயம் அவர்களும் கண்ணில் குறும்புடன் சிரித்துக் கொள்வார்கள். சில வீட்டின் வாசல் தாழ்வாரத்தில் வீடற்ற யாராவது பாவப்பட்ட ஜென்மம் சுருட்டிப் படுத்திருப்பதைக் காண நேரிட்டால் ரோசி என் கையைப் பற்றி லேசாய் அழுத்துவாள். (ஒரு சிறு பரிமாறல் அவ்வளவே. எனக்கு துட்டுப் புழக்கம் அத்தனை கிடையாது, என்றாலும் அவளிடம் நல்ல பேர் எடுக்க நான் நினைக்கிறேன்… என்பதை சுட்டிக்காட்டும் சமிக்ஞை அது.) ஒரு வெள்ளி நாணயத்தை நான் அவனது மடிப்பாத்திரத்திலோ, வற்றிய உள்ளங்கையிலோ இடுவேன்.
ரோசி என்னை, ஆகாவென வாழ்க்கையை உணர வைத்தாள். நான் அவள்மீது அபார நேசம் வைத்திருந்தேன். ரொம்ப வெளிப்படையான எளிமையுடன் அவள் இருப்பது, எனக்கு திருப்தி தந்தது. அவளிடம் நல்ல புலனடக்கம் இருந்தது. சட்டென உணர்ச்சிகளைக் கொட்டிவிடாத நிதானப்போக்கு. நம்முடன் கூட இருக்கிற அந்தப் பரிவுப் பகிர்வை அதுவே குறிப்புணர்த்த வல்லதாய் இருக்கும். அவளது சந்தோஷ கணங்களை போகிறபோக்கில் பிறருக்கும் அவள் வழங்குகிறாள்.
என்னோடு அவள் காதல் புரியுமுன்னால் நான் யோசிப்பது உண்டு – இவள் என்ன, காதலன்களின் எஜமானியா? அடிமைகொள்ளும் வேட்கைக்காரியா? ஃபோர்டு, ஹாரி ரெட்ஃபோர்டு, அப்புறம் ஹிலியர்… அவளிடம் அதைக் கேட்டேன். என்னை முத்தமிட்டாள்.
”மடத்தனமாப் பேசாதே. உனக்குத் தெரியாதா என்ன? அவங்க கூட வெளிய போக எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனால் அத்தோட சரி…”
ஏ நீ அந்த ஜார்ஜ் கெம்ப்பை நாயாய்ச் சுற்றிவர அடித்தாயல்லவா, என்று கேட்க உந்துதல். ஆனால் கேட்க விரும்பவில்லை. அவளுக்கு கோபம் வந்து நான் பார்த்ததே யில்லை. என்றாலும் மேற்படி கேள்வி போட்டால், அவள் சினந்து சீறத்தான் சீறுவாள்.
நம்மைக் காயப்படுத்தி விடுகிறாப் போல எந்தச் சொல்லும் அவள் வாயில் இருந்து வராதபடி நாம் பார்த்துக் கொள்ளலாம். அப்புறம் நான் அவளோடு சகஜமாக இணக்கமாகப் பேச முடியாதபடி ஆகிப்போகும். அவளை நான் மன்னிக்க முடியாமல் எக்கச்சக்கமாய் நிலைமை ஆகிவிடக் கூடாது. நான் சிறு வயசுக்காரன். 21 தாண்டியவன். குவின்டின் ஃபோர்டும் மத்தாட்களும் என்னைவிட வயசில் மூத்தவர்கள். அதனால் ரோசி அவர்களின் சிநேகிதி மட்டுமே என்பது இயல்பாய்த்தான் பட்டது எனக்கு.
ஆ நான் அவள் காதலன், என்கிற நினைப்பே என்னை கிளுகிளுப்பாய்க் குளிப்பாட்டியது. மற்றவருடன் அரட்டையடிக்கையிலும் சிரிக்கையிலும் நான் அவளைப் பார்க்கிறேன். அந்த சனி மதியங்களில் அவள் தேநீர் பரிமாறுவதைப் பார்த்தபடி நான் உள்ளுக்குள் விகசித்துப் பெருகினேன். நாங்கள் சேர்ந்து கழித்த ராத்திரிகளை அப்போது நினைத்துக் கொள்வேன். இந்தா சுத்தி உட்கார்ந்து சிரிச்சிக்கிட்டிருக்காங்களே இந்த மண்டூகங்களுக்கு ஒரு மகா ரகசியம் தெரியவே தெரியாத் – எனக்குள்ளே சிரிப்பு பீரிடும்.
அந்த லயோனல் ஹிலியர் ஆள் எம்டன். சில சமயம் என்னை கண் குத்திடப் பார்ப்பான். என்னை வைத்து அவனுக்குள் என்னவோ வேடிக்கை இருக்கலாம். நான் ரோசியிடம், ஏய் அவனாண்ட எதும் நம்மைப் பத்திச் சொல்ட்டியா, என்று கேட்டேன். என் கண்ணுக்கே தப்பி சில சமாச்சாரங்கள் லோகத்தில் புழங்குதோ என்று வெடவெடத்தது. ஹிலியருக்கு என் மேல சந்தேகமோன்னு இருக்குடி, என்று சொன்னேன் பதட்டத்துடன். அந்த சிரிப்புப் பிரவாக நீலக் கண்களால் என்னைப் பார்த்தாள்.
”அதைப் பத்தி அலட்டிக்காதே…” என்றாள் அவள். ”அவன் மனசே எப்பவும் விகாரமானதுதான்.”
குவின்டின் ஃபோர்டுடன் நான் அத்தனை நெருக்கம் பாராட்டியதாகச் சொல்ல முடியாது. என்னைப் பத்தி பெரிய அபிப்ராயம் கிடையாது அவனிடம். அசடு நான் அவனுக்கு. (அதென்னமோ உண்மைதான்னு வெய்ங்க!) என்னைக் கண்டுகொள்வதே இல்லை. எனக்கு அப்பக்கூட முன்னைவிட என்னைப் பார்த்ததும் இவன் விரைத்துக் கொள்கிறானோ என்று கிலி. எனக்கு ஆச்சர்யம். ஒருநாள் ஹாரி ரெட்ஃபோர்டு என்னைத் தன்னுடன் சாப்பிடக் கூப்பிட்டான். அப்படியே எங்கயாச்சும் நாடகம் பார்த்திட்டு வருவம், என்றான்.
அதைப்பற்றி ரோசியிடம் சொன்னேன்.
”ம். போயிட்டு வாயேன். நல்லா பழகுவான் அவன். பெரியாம்பளை ஹாரி. எனக்கு எப்பவும் சிரிப்பு காட்டிட்டே யிருப்பான்.”
நான் போய்வந்தேன். ரொம்ப தன்மையாய் நடந்துகொண்டான் அவன். மத்த நடிகன் நடிகைகள் பற்றி நிறையப் பேசினான். மத்தாளைப் பந்தாடுகிற நகைச்சுவை அவனுடையது. குவின்டின் ஃபோர்டை என்ன காய்ச்சு காய்ச்சுகிறான். குவின்டினை அவனுக்குப் பிடிக்கவில்லை. ரோசியைப் பற்றி அவனைப் பேசவைக்க முயற்சி செய்தேன். அவளைப் பற்றி அவனிடம் சொல்ல ஏதும் இல்லை. அட இவன் கிறுகிறுத்த நாய், சும்மா ஓடிட்டிருக்கிறதுலயே சுகம் அவனுக்கு. சமிக்ஞைகளிலும் ரெட்டை அர்த்த பேச்சிலும் ஆள் பொம்பளை விஷயத்தில் கில்லாடி என்று காட்டிக்கொண்டான்.
எடேய், எனக்கும் ரோசிக்குமான உறவைத் தெரிஞ்சிக்கிட்டே தான் இப்படி என்னை உட்கார வைத்து மத்த கதை பேசுகிறானோ என்று குழப்பமாய் இருந்தது. சட்டென உள்ளே சுருங்கிப் போனேன். அட இவன் ஒருத்தனுக்குத் தெரிஞ்சிருந்தால் அது உலகத்துக்கே தெரிஞ்சாப் போலத்தான்… என் மனசை அவனுக்குக் காட்டிக்கொள்ளாமல் மறைக்க முயன்றேன். என்றாலும் அந்த உள் துடிப்பு அடங்குவதாய் இல்லை.
குளிர்காலத்தில் சனவரி இறுதி வாக்கில், லிம்பஸ் தெருவில் ஒரு புது வரவு. ஜாக் குய்பர், ஒரு டச்சு யூதர். அம்ஸ்தெர்தாமில் இருந்து வந்த வைர வியாபாரி. (ஆம்ஸ்தெர்தாம் – நெதர்லாந்தின் தலைநகரம். வைரம் பட்டை தீட்டும் தொழில் அங்கே பிரசித்தம்.) வியாபார நிமித்தம் சில வாரங்கள் லண்டன் வந்திருக்கிறார். திரிஃபீல்ட் தம்பதிகளைப் பற்றி அவர் எப்படித் தெரிந்துகொண்டார் தெரியாது. அந்தாள் எழுத்தாளர்ன்றதை மதிச்சி பார்த்துப்போக வந்தவரா இவர்? அதொரு காரணம் என்றாலுங் கூட, அவர் அப்புறமும் வந்ததுக்கு அந்த ஒரு காரணம் தான் என்று கூற இயலாது. உயரமான உருண்டுதிரண்ட கருப்பு மனிதர். வழுக்கைத் தலை. ஒரு கொக்கி போலும் மூக்கு. வயசு 50. ஆனால் பார்க்க திடகாத்திரம். பேச்சில் அதிகாரத் தெறிப்பு. சூட்டிகையும் வேடிக்கையும் கலந்தவர்.
ரோசியை வெளிப்படையாகவே ரசித்துப் பேசினார் அவர். பணத்துக்கு பஞ்சம் கிடையாது. தினசரி அவளுக்கு ரோஜாக்கள் அனுப்பிக் கொண்டிருந்தார். எதுக்கு இப்பிடி அநாவசியமா பணத்தை இரையணும், என ரோசி அவரைக் கடிந்து கொண்டாள். ஆனாலும் அதெல்லாம் அவளுக்குப் பிடிக்காமல் என்ன? என்னால் அந்த மனுசரைத் தாள முடியவில்லை. லஜ்ஜையில்லாத மனுசர். காது கிழியறாப்ல கத்திப் பேசறார். அவர் ஆங்கிலம் வெளிநாட்டு உச்சரிப்பில், ஆனால் தரமாய் இருந்தது, எனக்கு அது பிடிக்கவில்லை. ரோசியைப் பணத்தால் சுருட்டி அள்ளிக்கொள்ளப் பார்க்கிறார்… அவளது சகாக்களை நல்ல சிநேகத்துடன் இன்முகமாய்ப் பேசுகிறார். குவின்டின் ஃபோர்டுக்கும் என்னைப்போல அவரிடத்தில் சின்ன அளவில் மரியாதை இருந்தது என்று தெரிந்துகொண்டேன். நாங்கள், நானும் குவின்டினும் இப்போது நெருங்கிப் பழகத் தலைப்பட்டோம்.
”நல்ல வேளை, அவரு இங்க ரொம்ப காலம் தங்கப் போறதில்ல” என்றான் குவின்டின். வாயைக் கடித்தபடி தனக்கே போலப் பேசிக்கொண்டான். அவனது கருத்த புருவங்கள் வில்லென உயர்ந்தன. அந்த வெண்கேசத்திலும் சோனியான நீள முகத்திலும் ஒரு பரிவு தெரிந்தது. ”பொம்பளைங்க எல்லாரும் ஒரே மாதிரிதான்டா. வாலைக் குழைக்கிற நாய்கள் அவர்களுக்கு இஷ்டமானவை…”
”ஐய அவன் ஆளே பார்க்க பொறுக்கியாட்டம்…” என நான் எகிறினேன்.
”அட அதான் அவளுக்குப் பிடிக்குதோ என்னமோ?” என்றான் குவின்டின்.
அடுத்த ரெண்டு மூணு வாரங்களில் ரோசியின் அடுத்தகட்டமாய் செயல்பாடுகள் எதுவும் தெரியவில்லை. ஜாக் குய்பர் ராத்திரியானால் அவளை வெளியே கூட்டிப் போய்விடுவார். எல்லாம் பெரிய டாம்பிக உணவு விடுதிகள். ஒரு நாடகம் மாற்றி அடுத்தது… எனக்கு மண்டை காய்ந்து கொதிப்பேறியது.
”அவருக்கு லண்டனில் யாரையும் தெரியாது” என்றாள் ரோசி. ”இங்க இருக்கற கொஞ்ச நாள்ல எத்தனை முடியுமோ அத்தனையும் அவர் பார்க்கலாம்னு பார்க்கிறார். எல்லா இடத்துக்கும் எல்லா தடவையும் தனியா ஒராளா, போக வெறுப்பா இருக்காதா இவனே? இன்னும் ஒரு பதினஞ்சுநாள் இருக்கப் போறார், அவ்ளதான்.”
தான் செய்வது என்னவோ போற காலத்துக்குப் புண்ணியம் சேர்க்கிறாப் போலப் பேசினாள்.
”ஆளு சூப்பர், இல்லியா?” என்று கேட்டேன்.
”நல்ல ஜாலியான மனுசன் அவ்ளதான். சிரிக்கச் சிரிக்கப் பேசுவார்.”
”அந்தாள் உன் பின்னாடியே சுத்தி வர்றாரு, உனக்கு அது தெரியல்லியாக்கும்?”
”அப்பிடி இருக்கறது அவருக்குப் பிடிக்கிறது. அதுல எனக்குச் சங்கடம் எதுவும் இல்லை.”
”கிழட்டு தடித் தாண்டவராயன் பார்க்கவே சகிக்கலியே. அவரைப் பார்க்கவே பயந்து கெடக்கு எனக்கு.”
”ஏ ஆள் அந்தளவுக்கு மோசமில்லை” என்றாள் ரோசி.
”நீ அவராண்ட எதுவும் வெச்சிக்க வேண்டாம்…. கேட்டியா?” என நான் இரைந்தேன். ”அந்தாள் ஒரு ஈனப்பிறவி.”
ரோசி தலையை வறட் வறட்டென்று சொறிந்து கொண்டாள். அவளிடம் இது ஒரு கெட்ட பழக்கம்.
”ஹா, வெளிநாட்டுக்காரங்களுக்கும் நம்ம ஆங்கிலேயர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்…” என்றாள்.
ஜாக் குய்பருக்கு வந்தனம். அவர் ஆம்ஸ்தெர்தாம் கிளம்பிப் போனார். அதற்கு அடுத்த நாள் என்னுடன் சாப்பிட வெளியே வர ரோசி தலையாட்டினாள். ஒரு சிறப்பான ஏற்பாடாக இருக்கட்டும், என ‘சோகோ’வுக்கு ஒரு சாரட் பிடித்து சாப்பிடப் போனோம்.
”உன் தடித்தாண்டவராயன்… போயாச்சா?”
”ம்” எனச் சிரித்தாள்.
அவளை இடுப்போடு சேர்த்து இழுத்துக்கொண்டேன். (இந்த மாதிரி குதிரைவண்டிப் பயணங்களில் இடுப்பை இப்படி வளைத்து இழுத்துக் கொள்வது கிளுகிளுப்பானது மாத்திரம் அல்ல, வண்டி தூக்கிப் போடுகிற போடில், அவசியமானதும் கூட. இதை வேறொரு இடத்தில் கூட குறிப்பிட்டிருக்கிறேன். இந்தக் காலத்தில் டாக்சிகளில் இப்படி ஒட்டி உரசி உல்லாசமாய்ப் போக முடியாது. பாந்தமாயும் இராது. சொல்ல வந்த இடத்தில் இது இடைப்புகுந்து விட்டது. ஆனாலும் சொல்ல வேண்டியிருக்கிறதே.)
அவளை இடுப்போடு வாரியெடுத்து முத்தமிட்டேன். வசந்தத்தில் பூத்த புத்திளம் மலராய் அந்த இதழ்கள். விடுதிக்கு வந்து சேர்ந்தோம். என் தொப்பியையும், கோட்டையும் கழற்றி கொண்டியில் மாட்டினேன். (அந்தக் கோட்டு மகா நீளம். இடுப்புப் பக்கம் இறுக்கிப் பிடித்திருந்தது. கழுத்துப் பட்டியிலும், கைப்பகுதியிலும் வெல்வெட் வைத்துத் தையல்பாடுகள். அம்சமான உடை.)
”ஏய் உன் மேல்கோட்டைக் கழற்று.”
”இல்லை. அதைக் கழட்டாமலேயே இருக்கேனே…” என்றாள் அவள்.
”உடம்பு சூடாயிரும். நாம வெளிய போறதுக்குள்ள தடுமன் பிடிச்சிக்கும்…”
”அட பரவாயில்லை. இப்பதான் முதன் முதலா இதை மாட்டிக்கிட்டிருக்கேன். அருமையா இருக்கில்லியா? இந்தக் கையுறை கூட நிறப் பொருத்தத்தில்…”
அந்த மேல்கோட்டை கவனித்தேன். கம்பளிக்கோட்டு அது. கரும் பழுப்பாய் ஒரு நிறம். சேபிள் என்கிற உயர் ரகமோ? இராது என்று நினைத்துக் கொண்டேன்.
”ரொம்ப ஒசந்த சரக்கு மாதிரி இருக்கே. எப்பிடிக் கிடைச்சது?”
”நேத்து நாங்க வெளிய போனபோது ஜாக் குய்பர் வாங்கித் தந்தார், அவர் கிளம்பு முன்னால்.” அந்த கம்பளியின் மென்மையை அளைந்தபடியே பேசினாள். பிரியமான பொம்மையுடன் சிரிக்கும் குழந்தையாய் இருந்தாள்.
”இது என்ன விலை இருக்கும் சொல்லு?”
”தெர்ல.”
”இருநூத்தி அறுபது பவுண்டு. என் மொத்த ஜீவிதத்திலேயே இத்தனை துட்டுப்போட்டு ஒரு சாமான் நான் அனுபவிச்சதே இல்லை, தெரியுமா? ஐயோ வேணாம், இது ரொம்ப அதிகம்னேன். அவர் கேட்டாத்தானே? இந்தா வெச்சிக்கன்னு என் கைல அழுத்திட்டாரு.”
க்ளுக்கென கண் மின்ன சிரித்தாள். என் முகம் இறுகிப்போனதை உணர்ந்தேன். முதுகுமண்டலத்தில் ஒரு சிலீர்.
”திரிஃபீல்ட் அதை வேடிக்கையா எடுத்துக்குவாரா, யாரோ ஒரு ஜாக் குய்பர் இத்தனை விலையுள்ள ஒரு சாமானை உனக்கு வாங்கிக் குடுத்தார்னால்?” முடிந்த வரை குரலை எகிற விடாமல் சாதாரண பாவனை கொண்டுவர முயல்கிறேன்.
அவள் கண்களில் குறும்பாய் ஒரு மின்னல்.
”உனக்கு டெட்டைத் தெரியாது. டெட்டுக்கு இதெல்லாம் தெரியாதுன்னு உனக்குத் தெரியாதுன்றேன். அவர் இதையெல்லாம் கவனிக்கவே மாட்டார். அவராண்ட அதை நான் சொல்லணுமானால், ஒரு அடகுக்கடையில் 20 பவுண்டுக்கு வாங்கினதாச் சொல்வேன். நம்பிருவார். அதைத் தாண்டி எதும் யோசிக்கத் தெரியாது அவருக்கு.”
முகத்தை அதன் கழுத்துப் பட்டியில் தேய்த்துக்கொண்டாள். ”எவ்வளவு மெத்துனு இருக்கு. பார்த்தாலே ரொம்ப தரம் ஒஸ்தின்னு காட்டிருது.”
சாப்பிடுகிறாப் போல குனிந்துகொண்டேன். என் முகத்தின் கடுமையை அவள் பார்க்க வேண்டாம். என்னவோ வாய் அளைந்தாப்போல ஒரு விஷயம் மாற்றி இன்னொன்றாய் உழப்பிக் கொண்டிருக்கிறேன். நான் அப்படி என்ன பேசுகிறேன் என்பதையும் கூட ரோசி கண்டுகொள்ளவில்லை. அவள் மனசில் அந்த புதிய கம்பளி கோட்டு, அதன் பெருமை. நிமிடத்துக்கொரு முறை பார்த்துக்கொண்டாள் கையுறைகளை. அதை அடிக்கடி பார்க்கிறாப் போல கைகளை மடியில் போட்டிருந்தாள். ஒரு சாவகாசமான பரிவுடன் ஆசையுடன் ரசித்து திருப்தியுடன் இருந்தாள்.
என்ன அல்பப் பிறவி இவள், முட்டாள் என்று எனக்குள் குமுறியது.
”தேன் குடிச்ச நரியாட்டம்?” என்றேன் அடக்க முடியாமல்.
சிரித்தாள். ”எனக்கே அப்டிதான் தோணுது.”
260 பவுண்டு பெரிய தொகை எனக்கு. அட ஒரு கம்பளிக் கோட்டு, அதுக்கு எந்த மடையனாவது இத்தனை துட்டு கொடுப்பானா? எனக்கு ஒரு மாசத்துச் செலவே 14 பவுண்டுதான். அப்படியொண்ணும் கஞ்சப் பிசினாறி வாழ்க்கை அது என்று சொல்ல இயலாது. சட்டென கணக்குப் பார்க்கத் தெரியாத என் வாசகருக்கு இதையும் சொல்வேன், அதாவது என் செலவு, வருடம் முச்சூடும் ஆனாலும் 168 பவுண்டு. அத்தனையே.
இத்தனை ஒசத்தியான ஒரு சரக்கை வாங்கி, அதையும் ஒருத்தர் பரிசு என்று தந்துவிட்டுப் போகிறார். அட அதுக்கு என்னடா அர்த்தம்? ராத்திரிக்கு ராத்திரி அவர் ரோசியோட தான் படுத்துப் புரண்டிருக்கிறார். லண்டனின் மொத்த நாளின் குத்தகை. திரும்ப ஊருக்குக் கிளம்புகையில் பணம் தருகிறாப் போலவா இது? அதை எப்படி அவள் ஏற்றுக் கொண்டாள்? அது அவளுக்கு இழுக்காகவே படவில்லையா? அந்தாள் மூஞ்சியும் முகரையும், அப்படியொரு ஆள் கிட்டேயிருந்து இத்தனை ஒசத்தியான ஒரு பரிசுப்பொருளை வாங்கிக்கறதே அசிங்கம் இல்லியா?… ஆ அவளைக் கேட்டால், அவர் அப்படியொண்ணும் விகாரம் இல்லை, என்கிறாள்…
”எத்தனை அபிமானத்துல இப்பிடியொரு பரிசு தந்தார் பார்த்தியா? பொதுவாக யூதர்கள்… ப«££பகாரிகள்.”
”அவருக்கு அது கட்டுப்படியாகுது” என்றேன் நான்.
”ஆமாமாம். அவர்கிட்ட இல்லாத பணமா? ஊருக்குப் போறதுக்கு முன்னால எனக்கு எதாவது தரணும்னு சொன்னார். என்ன வேணும் சொல்லுன்னு கேட்டார். ஒரு கம்பளிக்கோட்டு, அதற்கு பொருத்தமாய் கையுறைகள்… போதும்னேன். ஆனால் டேயப்பா, இந்தமாதிரி ஒரு பொருள்… நான் எதிர்பார்க்கவே யில்லை. கடைக்குள்ள போனோம். எதாவது அஸ்திரகான் மாதிரி காட்டச் சொன்னேன். (அஸ்திரகான் – குறும்பாட்டு சருமம்.) ஆனால் அவர்தான், சேபிள் எடுங்க, விலையப் பத்திக் கவலை இல்லேன்னார். இதைப் பாத்தமா, எடுத்துக்கன்னு ஒரே பிடியா வாங்கி என் கைல வெச்சார்.”
அவளது வெள்ளை தேகம், அந்த பால் பாங்கான சருமம், அது அந்த கொழகொழா கிழட்டு குண்டு மனிதரிடம். அவரது காய்ந்து தொங்கிப்போன உதடுகளால் அவளை முத்தமிடுகிறார். இப்ப எனக்குத் தெரிகிறது, எந்த சந்தேகத்தை நான் நம்ப மறுத்தேனோ, அது நிசமாயிற்று. அதாவது, எப்ப அவள் குவின்டின் ஃபோர்டுடன், ஹாரி ரெட்ஃபோர்டுடன், லயோனல் ஹிலியருடன் வெளியே போனாலும்… கண்டிப்பாய் அவர்களுடன் படுத்து எழுந்திருக்கிறாள், என்னுடன் வந்தாப் போலவே.
எனக்குப் பேச்சே அடங்கிவிட்டது. எனக்குத் தெரியும், நான் பேசினால் அவளை அவமானப்படுத்தியதாகி விடும். எனக்கு ஏற்பட்ட வெட்கக்கேடு தான் அதிகம், பொறாமை அத்தனை இல்லை, என்று தோன்றியது. என்னை நல்லா அசட்டுக் குப்பனா ஆக்கிவிட்டாளே இவள். பற்களை நறநறத்தபடி வார்த்தைகளைக் கொட்டிவிடாமல் இறுக வாயை மூடிக்கொள்கிறேன்.

தொடரும்
storysankar@gmail.com

Series Navigationஇப்படியும்… பேசலாம்…..!எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *