ஜெயமோகனின் அறம் – ஒரு பார்வை

This entry is part 41 of 42 in the series 29 ஜனவரி 2012

வளவ.துரையன்

ஒளிவிடும் இலட்சியவாதம்
’’உண்மை மனிதர்களின் கதைகள்’’ எனும் அறிவிப்புடன் வெளிவந்திருக்கும் ஜெயமோகனின் சிறுகதைத்தொகுப்பு ‘’அறம்’’ புத்தகத்தை நேர்த்தியான முறையில் வெளியிட்டிருக்கும் ‘வம்சி பதிப்பகத்திற்குப் பாரட்டுகள். ‘வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்’’என்றுவாழாமல் கிடைத்த வாழ்வை ஒரு இலட்சியத்திற்காக வாழ்ந்து காட்டியவர்கல்ளை அடையாளம் காட்டி இருக்கிறார்.
எவ்வளவு உயர்ந்த மனிதராக இருப்பினும் அவர் பற்றிய பதிவை பிறந்தது படித்தது செய்தது இறந்தது என்று எழுதினால் வாசிக்கத் தோன்றும்.அப்படி இல்லாமல் அவரின் ஆளுமைகளை வெளிப்படுத்தும் வ வண்ணம் சிறுகதைகளாக எழுதி இருப்பதில் ஜெயமோகனின் எழுத்தாற்றல் தெரிகிறது. எழுத்தளார்’, மிகவும் தாழ்த்தப்பட்டவர்கள், கால்நடை மருத்துவர், பசிப்பிணியால் பாதிக்கப்பட்டவர், நாட்டு நலனே கருதியவர், மருத்துவர், உலக நேயம் கருதுபவர் இப்படி பலவகைப் பட்டவர்களை ஜெயமோகன் அடையாளம் காட்டுகிறார்.
”அறம்” என்பது எல்லாத் துறைகளிலும் இயங்குபவர்கள் அவரவர் துறைக்கேற்பக் கடைப்பிடிக்க வேண்டிய நெறியாகும். எதிரியை மாய்க்க வேண்டி அவரைப் பாட்டுடைத் தலைவனாக வைத்துப் பாடிச் சாகடிப்பதைத் தமிழில் அறம் வைத்துப்பாடுதல் என்பது மரபு. (எ-டு- நந்திக்கலம்பகம் எழுந்த் கதை)
அறம் என்னும் சொல்லுக்கான இந்த இரு பொருள்களுமே புழங்குமாறு முதல் கதை எழுதப்பட்டுள்ளது. ”அந்தக் காலத்திலே ராயல்ட்டியெல்லாம் வராதோ.?” என்று கேட்க ” ராயல்ட்டியா.? அதெல்லாம் கெட்டவார்த்தைன்னா அப்ப.? என அந்த முதிய எழுத்தாளர் கூறுவது மனத்தை நோக வைக்கிறது.
திருவிதாங்கூரின் சாதிகளில் ”நாயாடிகள்” என்று ஒரு பிரிவு இருந்தது. இவர்கள் குறவர்களில் ஒரு பிரிவாகும். இச்சாதியினரைப் பற்றிய கதையாக “நூறு நாற்காலிகள்“ வந்துள்ளது. நாயாடிகளைப் பார்த்தாலே
“தீட்டு” கருதப்பட்டதால் அவர்கள் பகல் முழுவதும் மறைந்திருந்து இரவில் தான் வெளியில் நடமாடுவார்கள். கமுகுப்பாளையால் தங்கள் பிறப்புறுப்புகளை மறைத்து இருந்த அவர்கள் கையில் அகப்பட்ட எதையும் எலிகள், நாய்கள், பல்வேறு புழுபூச்சிகள், செத்த உயிரினங்கள் எல்லாம் தின்பார்கள்.
இந்த வகுப்பில் பிறந்த ஒருவர், நாராயண குருவின் சீடர் பிரஜானந்த்ர் மூலம் படிக்க வைக்கப்பட்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று பணியில் அமர்கிறார். ஆனால் அவருக்கு உரிய நாற்காலி மறுக்கப்படுகிறது. இறுதியில் அச்சாதியினரின் தாபங்கள் மட்கிமண்ணாக வேண்டுமெனில் “நூறு நாற்காலிகள் இன்னும் வேண்டும்” என்று கதை முடிகிறது.
தலித் இலக்கியம் என்னும் வகைக்கு அழகு சேர்க்கும் கதை இது. நாயாடிகளின் வாழ்முறைகளையும் சமூகம் அவர்களுக்கு இழைத்த அநீதிகளும் சரியாகப்பதிவு செய்யப்பட்டுள்ளன. சில இடங்கள் படிக்கப்படும்போது நெஞ்சு கனத்துக் குற்றவுணர்வு தோன்றுவது தவிர்க்க முடியாததாகிறது.
’மயில் கழுத்து’ தவிர எல்லாக் கதைகளுமே கதையின் ஏதோ ஒரு பாத்திரத்தின் வழியாகவும் சில நேரடியாக ஜெயமோகன் கூறுவதும் என்றும் அமைந்துள்ளன. மனிதர்கள் சுற்றுலப்பயணிகளாகக் காட்டுக்குள் சென்று செய்யும் கீழ்மைகளை ‘யானை டாக்டர்’ சிறுகதையில் பார்க்க முடிகிறது. 1923 முதல் 2002 வரை யானைகளுக்காகவே வாழ்ந்து மறைந்த டாக்டர் வி.கிருஷ்ண மூர்த்தி இதில் டாக்டராகவே படைக்கப் பட்டுள்ளார். தன் தாயின் காயத்திற்கு மருத்துவம் பார்த்த அவரை நினைவில் வைத்துக் கொண்டு குட்டி யானை அவரை நோக்கி முதுமலையிருந்து டாப்ஸ்லிப்பிற்கு வந்திருக்கிறது. யானை பற்றியப் பல செய்திகளைக் காட்டும் இக்கதை சுற்றுச் சூழலில் முக்கிய இடம் வகிக்கிறது.
’’கோமல் சுவாமினாதன்’’ பற்றிய கதையில் அவரை விட அவரின் முதுகுவலி ஆளுமை வகிக்கிறது. ‘’வலி ஒரு குழந்தை மாதிரி ஆயிட்டது. எப்பப் பார்த்தலும் மூக்கு ஒழுகிண்டு நை நைன்னு அழுதுண்டு இடுப்பிலே ஒக்காந்திருக்கு. ராத்திரியிலே திடீர்னு முழிச்சிண்டு படுத்தி எடுத்திடும். ஆனா இது என்னோட வலி, என் உடம்பிலே இருந்து வந்தது. அப்ப எனக்கு அது மேலெ ஒரு பிரியம் வரத்தானே செய்யும். சனியன் இருந்துட்ட்ப் போறது. வளத்து ஆளாக்கிடுவோம் என்ன?’’ என்று கோமல் கூறுவது போல் வலியையும் குழந்தையையும் உவமையக்கி எழுத ஜெயமோகனால் மட்டுமே முடியும். ஒரே ஒரு குறை கூற வேண்டுமானால் எழுத்தாளர் அறம் வைத்துப் பாடும் ஈற்றடி ‘’எட்டி எழுகவென்றறம்’’ என்று தளை தட்டுவதுதான்.
மொத்தத்தில் இலட்சிய வாதத்தை வாழ்க்கையில் கலந்து காட்டி ஜெயமோகன் வெற்றி பெற்றுள்ளார்.

(அறம்—-வெளியீடு: வம்ஸி புக்ஸ்; 19 , டி.எம்.சாரொன், திருவண்ணாமலை, பக்; 400 விலை; ரூ 250.

Series Navigationசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 53கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் 7
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *