மனக்கட்டுப்பாடு தியானத்திற்கு உதவாது-ஜே.கிருஷ்ணமூர்த்தி – பகுதி 3

author
0 minutes, 7 seconds Read
This entry is part 15 of 40 in the series 12 பிப்ரவரி 2012

மாயன்

இனிவரும் புது எண்ணங்களை சேகரிக்காமல் இருப்பது என்பதில் ஒரு கேலிக்கூத்து இருக்கிறது. எண்ணங்களில் புதுசு என்பதே இல்லை. அது தொடர்ச்சியாகவே இயங்கும் தன்மை கொண்டது. அதனால் அவை பழசின் பாதையிலேயே வருகிற எண்ணங்களாக இருக்கும். ஆக வருவது எல்லாமே பழையவைகளின் ஒரு புது தோற்றமே. வெகு அபூர்வமாகவே, வெகு வெகு அபூர்வமாகவே மனம் தன் தடத்தை விட்டு நிச்சலனமாக இருந்து பின்னர் வேறு தடத்தில் இருக்கும்போது இந்த வாழ்வில் புது சிந்தனைகள், கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.

மற்றபடி பழைய கள் புதிய மொந்தையில்தான். நீங்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டீர்கள். அதில் உங்கள் ego வும் இருக்கிறது. ஏனெனில் நான் புதிய சிந்தனைகள் வருவது இல்லை என்றவுடன் நீங்கள் சிந்திக்கவேயில்லை என்றல்லவா கூறுகிறேன். அதனால் உங்கள் ego தூண்டப்பட்டு நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

ஒப்புக் கொள்ளாதது நல்லதுதான்.. ஒப்புக் கொண்டுவிட்டால் நம்பிக்கை வந்துவிட்டது என்று அர்ததம் அப்போது அதற்கு மேல் தியானம் கிடையாது.

நீங்கள் உங்கள் மனதை பிரித்துப் பார்த்து அதன் மூலம் பழையவைகளை அறியலாம்.அதற்கு இனி வருகிற எண்ணங்களே உதவும். ஏனெனில் அவைகள் பழையவைகளின் சாயலிலேயே வரும்.

ஒரு ராஜா கச்சேரிக்குப் போனார். மிகப் பிரபலமான நல்ல வித்வானின் கச்சேரி. நல்ல கூட்டம். எல்லாரும் தலையை ஆட்டி ஆட்டி, தொடையில் தட்டி, சபாஷ் போட்டு கேட்டார்கள். கச்சேரி முடியப் போகும் தருவாயில் ராஜா ஒருத்தனை கூப்பிட்டு இவ்வளவு நேரம் பாடியும் கொஞ்சம் கூட களைப்படையாமல் அவர் இருக்காரு. நான் அப்பவேயிருந்து கவனிச்சேன். அவரு ஏதோ அடிக்கடி எடுத்து வாயில போட்டுக்கறாரே அது என்னன்னு கேட்டு நமக்கும் வாங்கி வை என்றார்.

ராஜாவின் மனநிலை உணவில் இருந்தது .அதைத்தான் கவனித்திருக்கிறார். நாமும் அப்படித்தான். நம் ஆழ்மனதில் என்ன இருக்கிறதோ அதன்படி அதன் பாதையில் அதன் தடத்தில் மட்டுமே வருகிற எண்ணங்கள் நமக்கு வருகின்றன. ஆக புதிய எண்ணங்கள் பழைய சாயலிலேயே வருகின்றன.அதே தடத்தில் புதிதாக (!) வருகிற எண்ணங்களை கவனித்தால் அது ஆழ்மனதை புரிந்து கொண்டதாக ஆகிவிடாதா? .

ஏன் இப்படி தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவானேன் என்றால் உங்கள் ஆழ்மனதை உங்களால் நேரடியாக அறியவே முடியாது. மறைமுகமாகவே அறியமுடியும்.

மறுபடியும் படியுங்கள்.

ஆழ்மனதில் என்ன இருக்கிறதோ அதன்படி அதன் பாதையில் அதன் தடத்தில் மட்டுமே ‘புதிதாக (!) வருகிற எண்ணங்கள்’ நமக்கு வருகின்றன. ஆக புதிய எண்ணங்கள் பழைய சாயலிலேயே வருகின்றன அதே தடத்தில் வருகிற எண்ணங்களை கவனித்தால் அது ஆழ்மனதை (ஏற்கனவே இருக்கிற எண்ணங்களின் தொகுப்பை) புரிந்து கொண்டதாக ஆகிவிடாதா?

சேகரிப்பவன் கவனமாக, ‘தேர்ந்து எடுக்காத தன்மையோடு’ கூர்மையாக, வந்துகொண்டிருக்கிற எண்ணங்களை கவனிக்கும்போது நீங்கள் அறிந்த உங்கள் மேல் மனம், நீங்கள் அறியாத உங்கள் ஆழ்மனம் – அதன் அடுக்குகள் எல்லாம் விடுபட்டு வெளிவர ஆரம்பிக்கின்றன்.

எண்ணங்கள் எண்ணங்களே. அவை மேல்மன எண்ணங்களாக இருந்தால் என்ன? ஆழ்மன எண்ணங்களாக இருந்தால் என்ன?

ஜியாக்ரபிக் சானலில் ஒரு ஆவணப்படம். காட்டு எறும்புகளைப் பற்றியது. லட்சக் கணக்கில் ஊர்ந்து செல்லுகிறது. தடத்திலேயே. திடீரென்று கடும் மழை. காட்டாறு உருவாகி பெருக்கெடுத்து ஓட, இந்த எறும்புகள் சட்டென்று ஒன்றை ஒன்றை ஈர்த்துக் கொள்ள ஒரு எறும்புப் பந்து உருவாகிவிட, அந்த பந்து தண்ணீரில் மிதக்க ஆரம்பித்துவிடுகிறது. எண்ணங்கள் ஆழ்மனதில் இப்படித்தான் கட்டி தட்டிப் போய் இறுகிப் போய் இருக்கின்றன. அப்படி இருப்பதனால் அதை மனம் (ஆழ்’மனம்’) என்கிறோம்.

தேர்ந்து எடுக்காத தன்மை வேண்டும். ஒரு நல்ல உதாரணம் சொல்ல வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது ‘தேர்ந்து எடுப்பதில்லை’. ஆகவே ஆழ்மனம் விடுபட்டு (எதனிடமிருந்து என்றால் தன் கட்டுகளிலிருந்தே விடுபட்டு) கனவுகளாக வருகின்றன.

கனவுகளில் லாஜிக் இருந்ததே கிடையாது. அது அப்படித்தான். ஆழ்மனதில் லாஜிக் என்பதே கிடையாது. வெறும் எண்ணங்களே. அங்கே சமூக கட்டுப்பாடுகளே கிடையாது. தனிமனிதனாக நீங்கள் உங்களுக்கு விதித்த கட்டுப்பாடுகளும் கிடையாது. நெல்லிக்காய் மூட்டை அவிழ்ந்த மாதிரி…அவை எட்டுதிசைகளிலும் ஒடுகிறமாதிரி இயங்கும்…நீங்கள் தேர்ந்து எடுக்கும் போது ஆழ்மனம் அடைபட்டுவிடுகிறது.

அப்படியானால் கனவின்போது தியானம் நடக்கிறதா என்று கேட்டால் அப்போது ‘கவனிப்பு (பிரக்ஞை)’ இல்லை. தியானத்திற்கு ‘தேர்ந்து எடுக்காத தன்மை வேண்டும். எண்ணங்களை கூர்ந்து கவனிக்கிற தன்மையும் வேண்டுமே! (Choiceless Awareness).

Choiceless – தேர்ந்து எடுக்காத தன்மை

Awareness – கவனித்தல் குறிக்கோள் இல்லாமல்.(பிரக்ஞை)

இந்த சுத்திகரிக்கப் பட்ட மனம் தேவையாய் இருக்கிறது தியானத்திற்கு. காலியான மனம் தேவை.

எனக்கு காலியான மனம் தேவை என்று பார்க்க ஆரம்பித்தீர்கள் என்றால் போச்சு. அது தப்பாட்டம். ஏனெனில் ஒரு குறிக்கோளுடன் ஆரம்பிக்கிறீர்கள். ஆழ்மனம் விடுபட இயலாது. இது சரி, இது தவறு, இது அப்படி, இது இப்படி,இது வேண்டும்,இது வேண்டாம் என்று ஆரம்பிக்கிற மனம் -பிரித்துப் பார்க்கிற மனம்- அதையே பிடிப்பாகக் கொண்டுவிட Self reveleation நடப்பதில்லை. விடுபடுதல் நடக்காது.

மனதின் மேல் மட்டத்திலும் மட்டுமல்ல ஆழ்மனதிலும் தேர்ந்து எடுக்காமை நடக்க வேண்டும். மேல் மனம் கரைய கரைய ஆழ்மனமும் விடுபடுகிறது. அப்போது மேல் மனம் ஆழ்மனம் என்ற பாகுபாடே தேவைப்படாது. அது நம் தகவல் தொடர்புக்காக நாம் பிரித்து வைத்துக் கொண்டது. கட்டி தட்டிப் போனது ஆழ்மனம், அலைந்து கொண்டே இருப்பது மேல்மனம் என்று நாம் பிரித்து வைத்துக் கொண்டோம். (ஆழ்மனமே மேல் மனதின் அலைச்சலுக்கு ஒரு காரணம் என்றாலும்)

இப்படியான எண்ணங்களை கவனித்தல் நடக்கும்போது நாம் கடந்தகாலத்தின் பிடியில் இருந்து விடுபடுகிறோம். இதில் நாம் என்று நான் மஞ்சள் கலரில் எழுதியிருப்பதே கடந்தகால எண்ணங்களின் பொட்டலம் தானே. ஆக கடந்தகாலமே அதிலிருந்து விடுபடுகிறது. கடந்தகாலமே தன்னிலிருந்து விடுபடுகிறது.

குழப்பமாயிருக்கிறதா? அது நல்லதுதான்.

அது சரி. ஆசையே துன்பத்திற்கு காரணம். ஆசையை அடக்கு என்றெல்லாம் புத்தர் சொன்னார். துறவிகள் எல்லாம் சொன்னார்களே என்றால் ஆசை என்று வந்தவுடன் ‘தேர்ந்து எடுக்கிறீர்கள்’. எனக்கு அது வேண்டும் என்று. அப்போது ‘எது வேண்டாம்’ என்ற எண்ணமும் வருகிறது.

இந்த இரட்டைத் தன்மை எண்ணங்களின் பிறவிக் குணம். இரட்டை இரட்டையாகவே வரும். தேர்ந்து எடுக்க ஆரம்பித்ததுமே மனம் (இதுவரை சேகரிக்கப்பட்ட எண்ணங்களின் பொட்டலம்) தேர்ந்து எடுக்கப்பட்ட தடத்தில் அதாவது ஆசையின் பாதையில் pattern ல் போக ஆரம்பிக்கிறது. அதனால் சொன்னார்கள் ஆசையே துன்பத்திற்கு காரணம்.

ஆசை மட்டுமல்ல ஒரு முடிவு எடுத்து தீர்மானமாக நடை போடுவதும் ஆழ்மனம் (இறுகி கட்டி தட்டிப் போன எண்ணங்களால் ஆனது) தன்னிலிருந்து விடுபட தடையாய் இருக்கும். Will power என்பது ஒரு வகை ஆசையே!

ஆக இந்த விடுபடல் இல்லாமல் தியானம் என்பதோ ஜே.கே சொல்கிற ‘உண்மையை அறிதல்’ என்பதோ சாத்தியமேயில்லை.

சரி, முயற்சியின் மூலம் இதை அடையலாமா என்றால் முயற்சி என்றதும் எந்த திசையில் போவது என்ற கேள்வி வருகிறது. அப்போதே நீங்கள் தேர்ந்து எடுக்க ஆரம்பிக்கிறீர்கள். அப்போதே மனம் தன்னை விடுவித்துக் கொள்ள தடை ஏற்பட்டுவிடுகிறது.

மனதில் எல்லா அடுக்குகளும் ஒருவிதமான அமைதியில் இருக்க (அது புயலுக்குப் பின் சட்டென்று ஏற்படுகிற ஒரு வித அமைதி. இது உதாரணம்தான் ) அதுவே உண்மையை கண்டறிய ஏதுவான சூழ்நிலை (மனதில் ஏற்படுகிற சூழ்நிலை என்பதை வெளிச்சூழ்நிலை என்று பொருள் கொள்ள வேண்டாம்).

அது சரி மனம் என்பதே எண்ணங்களால் ஆன பொட்டலம் என்னும் போது எண்ணங்கள் விடுபட்டால் அப்போது மனம் என்ன ஆகும். அது இல்லாமலே ஆகும். ஏனெனில் அது எப்போதும் இருந்ததில்லை.(மேலே சொன்ன உதாரணத்தில் எறும்புப் பந்திலிருந்து எறும்புகள் விடுபடும்போது. அதன்பின் பந்து என்று ஒன்று கிடையவே கிடையாது. அதற்கு முன்பும் கிடையாது. எறும்புகள் மட்டுமே இருந்தன)

எண்ணங்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கிறது தலைக்குள். அவற்றின் போக்குவரத்தை நாம் மனம் என்று அழைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

மனம் அல்லாத நிலையை புத்தர் நிர்வாணம் என்றார். ஆடைகள் இல்லாதது உடல் நிர்வாணம் எனில் எண்ணங்கள் இல்லாதது இந்த நிர்வாணம். எண்ணங்கள் எப்படி இல்லாது போகும் எனில் …கேள்வியை மாற்றிக் கேளுங்களேன்.

எண்ணங்கள் எப்படி இருக்கின்றன. என்று? குறிக்கோள் இருக்கும்போது

குறிக்கோள் எப்படி வருகிறது? ஆசை இருக்கும்போது.

ஆசையை ஒழிக்கலாமா? ஆக ஆசையை ஒழிப்பதை ஒரு குறிக்கோளாக ஆக்கிக் கொண்டு விட்டீர்கள்…பிறகு எப்படி?

ஆசையை ஒழிக்க, சம்மணம் போட்டு உட்கார்ந்து, உடலை வளைத்து உடற்பயிற்சி செய்து, மூக்கை பிடித்து பயிற்சி செய்து..- .இதெல்லாம் எண்ணங்களை ‘தேர்ந்து எடுக்காமல்’ கவனிக்கும் நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லவே!

தேர்ந்து எடுக்காமல் எண்ணங்களை கவனித்தல் என்பது மனதை சுத்திகரித்தல்.மறுபடி ஜே.கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு வருவோம்.

ஐயா! நான் பலவருடங்களாக தியானம் செய்துகொண்டு வருகிறேன். இது சம்பந்தமான புத்தகங்கள் நிறைய படித்து ஒரு சில நியமங்களை பின்பற்றி வந்திருக்கிறேன். ஒரு ஆசிரமத்துக்கு சென்று பல மணி நேரங்கள் தியானம் பயின்றிருக்கிறேன்.

பார்த்தீர்களா நான் எவ்வளவு தியாகம் செய்திருக்கிறேன் ஆன்மீக வாழ்விற்காக என்ற மனப்பான்மை எல்லாம் என்னிடம் இல்லை. எவ்வளவு சந்தோஷங்களை இழந்திருக்கிறேன் என்று கண்ணீரோடு உருகுகிற மனம் என்னிடம் இல்லை. இவ்வளவு வருடங்களுக்கு அப்புறம் என் மனம் என் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சில சமயங்களில் கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறது.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் தியானம் செய்வதில் ‘பெரு மகிழ்ச்சி’ எல்லாம் ஒன்றும் எனக்கு புலப்படவேயில்லை. சுயமாக நான் எனக்கு விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகள் என்னை கொஞ்சம் கடுமையானவனாகவே ஆக்கியிருக்கிறது.

இப்போது எனக்கு அவநம்பிக்கை வருகிறது. கடவுள் என்று கற்பிக்கப்பட்டவை மீது கடுமையான அவநம்பிக்கை வருகிறது. இவ்வளவு நாள் அப்படி நம்பிக்கை இருக்கிற சமூகத்தில்தான் வாழ்ந்து வருகிறேன். ஆனாலும் நான் என்ன செய்ய…?

இதற்கான அவரின் பதிலையே இந்தக் கட்டுரையாக நான் இங்கு தந்துள்ளேன். இதை இன்னொரு உதாரணம் மூலம் பார்க்கலாம்.

இன்னொருவர் வேலைக்கு போய் சம்பாதித்து கல்யாணம் செய்து பிள்ளை குட்டி பெற்று அவர்களை வளர்த்து ஒரு வட்டத்துக்குள் சுற்றி சுற்றி வந்து நிற்கிறார். எனக்கு எண்ணங்களால் தொல்லை என்கிறார். அவரும் இப்படியே இருக்கிறார். இவரும் இப்படியே இருக்கிறார். அவர் இருப்பது ஒரு வட்டம். இவர் இருப்பது இன்னொரு வட்டம்.

எண்ணங்கள் எண்ணங்களே! அவை நல்லவைகளாய் இருந்தாலும், கேவலமானவைகளாக இருந்தாலும் கொடூரமானவைகளாக இருந்தாலும், புனிதமானவைகளாக இருந்தாலும்,சொகுசு வாழ்க்கையில் உதித்தாலும்,கஷ்டப்படுகிற வாழ்க்கையில் உதித்தாலும்.

நீங்கள் எந்த வட்டத்தில் இருந்தால் என்ன?. வட்டத்தில் இருக்கிறீர்கள்.

உடனே அப்ப சமூகத்தில் நான் எப்படி வேணுமானாலும் இருக்கலாமா என்றால் இந்தக் கட்டுரை முதலில் இருந்து படிக்கப்பட வேண்டும் என்று பொருள்.

(ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ‘Commentaries on Living-I என்ற நூலின் ஒரு கட்டுரையின் அடிப்படையில்…)

Series Navigationகம்பன் கழகத்தின் பொங்கல் விழாஅகர முதல “எழுத்தெல்லாம்”….(ரஜினி விருது விழா)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *