சேத்தன் பகத்தின் ‘ ரெவல்யூஷன் 2020 ‘

This entry is part 7 of 31 in the series 19 பிப்ரவரி 2012

3 இடியட்ஸ் மற்றும் நண்பன் தழுவலுக்கு சொந்தக்காரர் சேத்தன் பகத். கரீனா கபூரைப் பார்க்க, ஆமீர்கானும், தமிழில் விஜய்யும், புரொபசர் வீட்டுக்குச் செல்வது உட்பட சில காட்சிகள் இவர் கதையிலிருந்து சுட்டதுதான். அதைப் பற்றி ஒரு சர்ச்சை எழுந்து, அமைதியாக செட்டில் ஆகிப் போனது படம் வெளிவந்தவுடன்.
இந்த முறை கொல்கத்தா போன என் மகள், பிடித்துக் கொண்டு வந்த புத்தகம் தான் இது. அப்படிப் படித்ததுதான் காலேட் ஹொசைனியின் இரண்டு நாவல்கள். இப்போது சேத்தன் பகத். கொல்கத்தாவில் அடிக்கடி புத்தகக் கண்காட்சி நடக்கிறது போல. அதிலும் பாதி விலைக்கு நல்ல புத்தகங்களைத் தருகிறார்கள். கம்யூனிஸ்ட் ஆட்சியில் விளைந்த நன்மையாக இருக்கலாம். எண்டே கேரளாவில் எப்படியென்று தெரியவில்லை. அங்குதானே படித்தவர்கள் அதிகம். ஒருவேளை படித்தவர்கள் எல்லாம் படிப்பவர்கள் இல்லை போல.
அவருடைய ப்ரோலாகே சுவாரஸ்யமாக இருக்கிறது. சேத்தன் ஒரு கல்லூரிக்கு ( கங்காடெக் ) எம்பிஏ பிளாக்கைத் திறந்து வைக்க, வாரனாசிக்கு வருகிறார். உரை முடிந்தவுடன், ஸ்தாபனர் கோபால் மிஷ்ராவின் வற்புறுத்தலுக்கிணங்க, கொஞ்சமாய் தண்ணியடிக்கப் போகிறார். கொடுத்த விஸ்கி அவருக்குப் பிடிக்கவில்லை. பீர் இருக்கிறதா என்று கேட்கிறார். ப்ரைஸ் டேக் பாத்திரம் போல ( நண்பன் படம் ) விஸ்கி பாட்டிலின் விலையைச் சொல்லிக்கொண்டே கோபால் ஐந்து ரவுண்டு போய் மட்டையாகிவிடுகிறார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து, நினைவு வந்தவுடன் கிளம்ப யத்தனிக்கும் பகத்திற்கு, தன் காதல் கதையைச் சொல்கிறார் கோபால். கதை ‘நான்’ பாணியில் கோபால் கோணத்தில் சொல்லப்படுகிறது.
பொதுவாக ஆங்கில நாவல்களை படித்துப் பழக்கப்பட்ட எனக்கு, பகத் ஒரு சுவாரஸ்ய மான கதை சொல்லியாகத் தெரிகிறார். இந்தப் புத்தகம் பிடித்தால், அவருடைய மற்ற நான்கு புத்தகங்களையும் வாங்கிப் படித்துவிட வேண்டியதுதான்.
காலேட் ஹொசைனியைப் போல பகத்தும், தன் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களைக் கொண்டே கதை பின்னுகிறார் என்று தோன்றுகிறது. இது எவ்வளவு நாள் வரும் என்று ஒரு கேள்வியும் எழுகிறது.
பின் அட்டை சொல்கிறது, கதை இரண்டு பையன்களைப் பற்றியது என்று. ஒருவன் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி கோடீஸ்வரன் ஆகிறான். இன்னொருவன் ஒரு சமூக மாற்றத்தைக் கொண்டு வருகிறான். இதில் சுவாரஸ்யமான விசயம், இருவரும் ஒரே பெண்ணைக் காதலிக்கிறார்கள்.
முழுவதும் படித்துவிட்டு விரிவாக எழுதுகிறேன். காத்திருக்க முடியாதவர்களுக்கு:
ரூபா பதிப்பகம், 7/16, அன்சாரி சாலை, புதுதில்லி-110002. விலை : ரூ 140.00.

போஸ்ட் ஸ்கிரிப்ட் ஆப் சேத்தன் பகத் நாவல்

போகிற போக்கில் சேத்தன் ஒரு கூக்ளி போட்டிருக்கிறார் முதல் மூன்று பக்கங்களில். கோபால் சொல்கிறார் ‘ நான் இன்ஜினியரிங் காலேஜின் படியையே மிதித்ததில்லை. ஆனாலும் இன்று நான் பெரிய காலேஜுக்கு உரிமையாளன் ‘ சேத்தனுக்கு தமிழ்நாட்டைப் பற்றித் தெரியுமா என்று தெரியவில்லை.
இங்கு ஒரு காலத்தில் நிஜத் தலைவனுக்கு நிழல் தாதாவாக இருந்தவர் தான் நிகர்நிலைப் பல்கழகத்திற்கு உரிமையாளர். பிச்சுவா பக்கிரி பொறியியற்கல்லூரி நடத்துபவர். ‘ ழ ‘ வே வராத ( அப்போது ஆங்கிலம் என்ன பாடுபடும் என்று யோசியுங்கள் ) மறத்தமிழ்(!) நடிகர் கணக்கில்லா பொறியாளர்களை உருவாக்குபவர்.
#

Series Navigationமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை –பிரகாஷ்ராஜின் ‘ டோனி ‘
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *