நினைவுகளின் சுவட்டில் – 86

This entry is part 3 of 31 in the series 19 பிப்ரவரி 2012

நான் Illustrated Weekly of India வுடன் பரிச்சயம் கொண்டிருந்த காலத்தில் அதற்கு C.R.Mandy என்பவர் ஆசிரியராக இருந்தார். அதன் பெயருக்கு ஏற்பவே எந்தக் கட்டுரையானாலும் நிறைய படங்கள் உடன் பிரசுரமாகி இருக்கும். படங்கள் இல்லாத பக்கமோ கட்டுரையோ அதில் பார்க்கமுடியாது. நான் வாங்கத் தொடங்கிய போது அது 12 அணாவுக்கு விற்று வந்தது. 12 அணா என்பது முக்கால் ரூபாய். படம் என்றதும் ஓவியங்களின் கலர் பதிவுகளையும் முக்கிய மாகச் சொல்ல வேண்டும். நான் 1950 களில் தெரிய வந்த, வாழ்ந்த முக்கிய இந்திய ஓவியர்களையும் அவர்கள் ஒவியங்களையும் அறிமுகம் செய்து கொண்டதற்கும் மேலாக அவரகளது பாணியையும் பற்றி அதற்கான பின்னணி பற்றியும் தெரிந்து கொண்டதும், அந்தப் பத்திரிகை மூலம் தான். அந்தப் பத்திரிகை தவிர இது பற்றி எனக்குச் சொல்லும் பத்திரிகை அப்போது வேறு ஒன்றும் இருக்கவில்லை. இதன் தொடர்ச்சியாகத் தான் MARG என்ற காலாண்டு கலைப் ப்த்திரிகையும் எனக்கு தெரிய வந்தது. Two Leaves and a Bud, Untouchable போன்ற நாவல்கள் மூலம் பிரசித்தி பெற்ற ஆங்கில நாவலாசிரியரான முல்க் ராஜ் ஆனந்த்தின் ஆசிரியத்வத்தில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகை அது. அது பற்றித் தெரிய வர எனக்கு அதிக காலம் ஆகவில்லை. ஏதோ ஒன்றின் இழை கிடைத்தால் அதைப் பற்றிக்கொண்டு நகர்ந்தால் மற்றவையும் பரிச்சயம் கொள்ளும். . மார்க், கலைத்துறையின் எல்லா விகாசங்களையும் தன் அக்கறையாகக் கொண்டிருந்தது. ஓவியம், சிற்பம், கலம்காரி, கோவில்கள், நடனம், சங்கீதம் வங்க காலிகாட், ஒரிய பட்கதா காங்கரா, பஹாரி, ராஜஸ்தானி, மொகல் என்று பலவும் எனக்கு அறிமுகமாகின. நேரில் பார்த்து அனுபவம் பெறுவது பின்னால் சித்திக்கிறதோ என்னவோ, அவற்றைப் பர்றிய விவரங்கள், புகைப்படங்கள், பின்னணியாக உள்ள வரலாறு என்று எதெதெல்லாம் எழுத்து மூலமும், புகைப்படங்கள் மூலமும் சாத்தியமோ அந்த சாத்தியங்களை எனக்கு மார்க் பத்திரிகை தந்தது. மெலட்டூர் பாகவத மேளா பர்றி நான் முதலில் அறிந்து கொண்டது ஈ. கிருஷ்ண அய்யர் மார்க் பத்திரிகையில் எழுதியதிலிருந்து தான். தாசிகள் ஆடிய சதிரிலிருந்து ருக்மிணி அருண்டேல் மீட்டெடுத்த வடிவம் தான் பரதநாட்டியம் என்றும் அவருக்கு அக்காலத்தில் எழுந்த எதிர்ப்புகளையும், ஈ. கிருஷ்ண அய்யர் சென்னை சபா ஒன்றில் பெண் வேஷம் போட்டுக்கொண்டு பரதம் ஆடிய விவரங்களை புகைப்படங்களோடு எனக்குச்சொன்னது மார்க். இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம்.

இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா ஓவியங்களின் கலர் பதிவுகளை மாத்திரமே பிரசுரம் செய்தது. ஹுஸேன், பிரன் டே, கே. எச் ரஸா, எஃப் என் சூஸா (F.N. Souza) அக்பர் பதம்ஸீ லக்ஷ்மண் பய், ஸ்ரீனிவாச ரெட்டி, ஜமினி ராய், கல்யான் சென், ஸைலோஷ் முகர்ஜி, நந்தலால் போஸ், பினொத் பீஹாரி முகர்ஜி,, ஜெஹாங்கீர் சபாவாலா, ஜியார்ஜ் கெய்ட் என்னும் சிங்கள ஓவியர் (இவரை அக்காலத்தில் சிலோனின் பிக்காஸொ என்று அழைப்பார்கள், லக்ஷ்மன் பையின் ஓவியக் கண்காட்சியில் எப்போதும் சிதார் அல்லது புல்லாங்குழல் இசை கேட்டுக்கொண்டே இருக்கும். கண்காட்சி ஹாலில் சும்மா உட்கார்ந்திருப்பது போர் அடிக்கிறது என்று இப்படிச் செய்கிறாரென்று நினைப்பேன். பின்னர் தான் அவருக்கு சங்கீதத்தில் இருந்த ஆழ்ந்த ஈடுபாடு தெரிந்தது. இதெல்லாம் பின்னர் தில்லியில் நான் தெரிந்து கொண்டது சிந்தாமணி கார் என்னும் வங்காள சிற்பி, ராம் கிங்கர் பெய்ஜ் என்று இன்னொருவர். இவர் எனக்கு மிக பிடித்தவர். சந்தால் வாழ்க்கையை சிற்பமாக வடித்தவர். Expressionist school –ஐச் சேர்ந்தவர். iஇதற்கு நேர் எதிரான சிற்பங்களை உருவாக்கியவர் சிந்தாமணி கார். பளிங்குக் கல்லில் வழித்துவிட்டதான அழகான தோற்றங்களாக உருவங்களை வடிப்பவர். இப்படி பலர் அப்போதைய கலை வானில் புகழ் பெற்றிருந்தவர்கள். ரவீந்திர நாத் தாகூர் ஒரு ஒவியரும் கூட என்பது எனக்கு வீக்லி பத்திரிகை மூலம் தான் தெரிந்தது. தன் முதிர்ந்த வயதில் அறுபதிலோ என்னவோ தான் ஓவியங்கள் வரையத் தொடங்கினார். அவரது ஓவியங்களில் ஒரு கனவுலகமும், ஒரு mystic quality யும் இருக்கும். இன்னும் பலர் பெயர்கள் இப்போது நினைவுக்கு வர மறுக்கிறது. சைலோஸ் முகர்ஜியின் ஓவியங்கள் சிறியவை வாட்டர் கலரினால் ஆனவை. வாட்டர் கலரைத் தவிர வேறு எந்த சாதனத்தையும் தொட்டாரா என்று தெரியவில்லை. ஆனால் நீர் வன்ணத்திலேயே அவரது வங்க கிராமத்துக் காட்சிகளே பார்த்து விட்டு நகர விடாது. வர்ண பதிப்பில் பார்த்த இந்த ஒவியங்களை மார்க் பத்திரிகையில் நிறைய படங்களோடும் இன்னும் விரிவாக அறிய முடிந்தது. ஒரு இதழில் கோவா வைச் சேர்ந்த ஓவியர்களைப் பற்றி விரிவாக எழுதப்பட்டிருந்தது அவர்களது ஓவியங்களுடன்.
மேலே சொன்ன லக்ஷ்மன் பாய், சூஸா எல்லாம் கோவாவைச் சேர்ந்தவர்கள். அந்த இதழில் சூஸாவின் மற்ற ஓவியங்களோடு அவர் தன்னை நிர்வாணமாக வரைந்த ஒரு ஓவியமும் இருந்தது. அதைப் பார்த்த என் அன்றைய நண்பர்கள், மணி, பஞ்சாட்க்ஷரம் எல்லாம் கட கட வென்று சிரிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்கள் சிரிப்பு அடங்க வெகு நேரம் ஆகியது என்பதோடு வருகிறவர்களிடமெல்லாம் “நம்ம சாமிநாதன் ஆர்ட் எல்லாம் படிக்க ஆரம்பிச்சுட்டான் தெரியுமா உங்களுக்கு? என்ன ஆர்ட் தெரியுமா,? காமிக்கறேன் பாருங்க” என்று அந்த கலாட்டா கொஞ்ச நாளைக்கு நடந்தது. இதைப் போல் இன்னொரு ஒவியர் ஓவியங்களையும் நான் சில வருஷங்கள் கழித்து தில்லி ஜெய்ப்பூர் ஹவுஸில் இருக்கும் மாடர்ன் ஆர்ட் காலரியில் பார்த்தேன். அவர் பெயர் அம்ரித் ஷேர் கில். ஹங்கரியில் வசித்த ஒரு இந்திய சீக்கியர் அவர் தந்தை. ஹங்கரிய தாய். பாரிஸில் ஓவியம் பயின்ற அவர் தன் தந்தை நாட்டை பார்க்க வந்தவர் இங்கு தன் 28-29 வயதில் பிரசவத்தில் இறந்து போனார். இவரிலிருந்து தான் இந்திய நவீன ஓவிய வரலாறு தொடங்குகிறது என்று சொல்ல வேண்டும்.

அவரைப் பற்றி நான் தில்லி வாசம் தொடங்கிய பின் தான் நியாயமாகப் பேசியிருக்க வேண்டும். ஆனால் இப்போது பிரஸ்தாபிக்கக் காரணம், ஜெய்ப்பூர் ஹவுஸில் உள்ள மாடர்ன் ஆர்ட் காலரியில் அவருக்கு என ஒரு தனி ஹாலே இருக்கிறது. அதில் அவர் ஓவியங்களில் ஒன்று ஒயிலாக ஒரு சாய்வு சோஃபாவில் நிர்வாணமாக படுத்திருக்கும் சுய சித்திரம்..

ஒரு நாள் உள்ளே போய்விட்டு வந்த ஒருவர் ரகசியமாக தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் சொல்லிக்கோண்டிருந்தார். “இங்கே எல்லாரும் பெரிய மனுஷங்களாகத் தெரியறாங்க. ஆனால் உள்ளே போனா ரொம்ப ஆபாசமா துணியே இல்லாத பொம்பள படம் எல்லாம் வரைஞ்சிருக்காங்க. அதை எல்லாரும் கூட்டம் கூட்டமா பாக்கறாங்க” என்று தன் பண்பாட்டுச் சீற்றத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். இன்று இப்போட்ஜி அதைப் பற்றி நினைவு வந்ததும் எனக்குத் தோன்றுகிறது இவர் நேர்மையான மனிதர். மக்பூர் ஃபிதா ஹுசேன் என்னும் இந்தியாவின் மிகப் புகழ் பெர்ற ஒவியரை, தன்னை இந்திய வன்முறையாளர்கள் சிலர் நாடு கடத்திவிட்டார்கள் என்று சொல்கிறவரை நினைத்துக்கொண்டால், தன்னையே நிர்வாணமாக வரைந்த அம்ரித் ஷேர் கில்லும் சரி, எஃப் என் சூஸாவும் சரி நேர்மையானவர்கள். உண்மையான ஓவியர்கள். கலைஞர்கள். ஆனால் இந்திய நாகரீகமும், அரசியல் கோட்பாடும் தரும் கருத்து செயல் சுதந்திரத்தைப் பயன்படுத்துக்கொண்டு ஹிந்து தெய்வங்களை நிர்வாணமாகவும் கேலியாகவும் தீட்டும் ஹுசேன தனக்குத் தரப்பட்ட சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதில் தயங்குவதில்லை. அவர் வீட்டு ப் பெண்களை மிகக் கவனமாக ஆடையோடுதான் வரைந்திருப்பார். முகம்மது நபி சார்ந்த பெண்களை அப்படி வரைந்து தான் கலைஞன் என்னும் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தமாட்டார். கலைஞர் என்ற போர்வையில் ஒரு ஓரத்தில் அவர் ஆளூமையில் மறைந்திருப்பது ஒரு கோணல் புத்தி கொண்ட கெட்ட எண்ணம் (perversion) எந்த மதத்தினரானாலும் சரி, எந்த நாட்டவரானாலும், எந்த நாகரீகத்தை சேர்ந்தவரானாலும் சரி, பொதுவான ஒரு நீதி, தர்மம், “நீ உனக்கு எடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தை மற்றவர்க்கும் அளிக்கவேண்டும். மற்றவர்க்கு நீ அளிக்காத சுதந்திரத்தை அனுபவிக்க உனக்கு உரிமை யில்லை” You have no right to do to others what you don’t want others to do to you) இது பரஸ்பரமான விஷயம். இதெல்லாம் இப்போது சில வருஷங்களாக நடந்து வரும் ஒரு நேர்மையின்மையைச் சுட்டும் சந்தர்ப்பம் சூஸாவின் நிர்வாண் சுயசித்திரதைப் பற்றச் சொல்ல வரும் போது நேர்கிறது. அன்று என் நண்பர்கள், பஞ்சாட்சரம், மணி போன்றோருக்கு (இன்னும் யார் யாரொ நினைவில் இல்லை) எனனை வைத்து தமாஷ் பண்ணத் தான் தோன்றியது. அதில் நான் இரையானது நண்பர்களின் கேலிக்கிரையானது ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை. சந்தோஷமான நாட்கள் அவை. என் உலகம் விரிந்து வந்த நாட்கள்.

இன்னொரு சம்பவமும் எண்பதுகளில் பரவலாகப் பேசப்பட்ட ஒன்று. எழுதப்பட்டதல்ல. அதனால் இதற்கு நிரூபணம் ஒன்றும் என்னிடம் இல்லை. தில்லிநேஷனல் ட்ராமா ஸ்கூலில் பயின்ற ஒரு பெண். மிகச் சிறப்பாக நான் பார்த்த நாடகங்களில் நடித்த பெண். மிக கலகலப்பான, (chirpy and bubbly) பெண். ஒரு மிகப் பெரிய நாடறிந்த குடும்பத்துப் பெண். பின்னால் பெண் சுதந்திரத்தில் செயல்படும் பெண். அவர் ஹுஸேனின் ஸ்டுடியோவுக்குச் சென்று அவர் ஓவியங்களைப் பார்வையிட்டு வரும் போது, ஒரு ஓவியத்தைச் சுட்டிக் காட்டி “இது எனக்கு வேணுமே, என்ன விலை சொல்கிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஹுஸேன், “உங்களிடம் நான் பணம் ஏதும் வாங்கிக் கொள்ளவில்லை. நீங்கள் எடுத்துச் செல்லலாம். ஆனால் உடைகளின்றி என் முன்னால் ஒரு முறை நில்லுங்கல் நான் உங்களை அப்படிப் பார்க்க விரும்புகிறேன்” என்றாராம். அதற்கு அந்தப் பெண், “அட இவ்வளவு தானா, சந்தோஷமாக” என்று சிரித்துக்கொண்டே ஹுஸேனுக்கு அவர் விரும்பிய தரிசனம் கடாட்சித்துவிட்டு, அந்த ஓவியத்தை எடுத்துக்கொண்டு வந்தாராம்.

ஓவியக் கல்லூரியின் மாணவர்களுக்கும் ஓவியர்களுக்கும் நிர்வாணமாகப் போஸ் கொடுக்கும் பெண்களைக் காண்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இது சகஜமான ஒன்று.
இந்த சம்பவத்தைச் சொன்ன என் நினைவுக்கு வந்த காரணம், ஹுஸேனின் ஆளுமையும் மன அமைப்பும் எத்தகையது என்று சொல்லத் தான்.

இத்தோடு ஹுசேனின் ஆளுமையில் காணும் இன்னும் சில விசித்திர தனிப்பட்ட குணங்களையும் சொல்ல வேண்டும். தில்லியில் கனாட் சதுக்கத்தில், செருப்பில்லாமல் எந்த வித பந்தாவும் இல்லாமல் நடைபாதைகளில் செல்வதைப் பார்த்திருக்கிறேன். வெகு சாதாரன டீக்கடைகளில் சாதாரண எளிய மக்களுடன் பெஞ்சில் உட்கார்ந்து டீ சாப்பிடுவதையும் பார்த்திருக்கிறேன். மற்ற ஓவியர்கள், அப்ஸ்ட்ராக்ட், தந்திரம், சர்ரியலிஸம், என்றெல்லாம் பாரிஸ் நியூயார்க் ஃபாஷன்களுக்கேற்ப தம்மைப் புதுப்பித்துக்கொண்டிருந்தாலும் ஹுஸேன் தன் figurative style-ஐ விட்டு நகர்ந்தவரில்லை.

இந்த நாட்களில் ஒரு முறை நாங்கள் எல்லாரும் (தேவ சகாயம், பஞ்சாட்சரம் மணி, வேலு, ஜியார்ஜ் இத்யாதி கணங்கள் எல்லாம்) கல்கத்தா சென்றோம். ஊர் சுற்றிப் பார்க்க. அதில் கல்கத்தாவின் விக்டோரியா மெமோரியல் ஹாலும் அடங்கியது. அதில் தான் முதல் தடவையாக கம்பெனி ஓவியங்கள் என்று அறியப்படும் டேனியல் சகோதரர்களின் ஓவியங்கள் ஒரு காலகட்டத்திய ஆவணங்களும் அகாடமிக் ஒவியங்களும் ஆகும். அத்தோடு ஒரு தனிக்கூடமே ராஜா ரவி வர்மாவின் ஓவியங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அவருடைய ஓவியங்களையும் அவற்றின் மூல உருவில் பார்ப்பது அதுவே முதன் முறையாகும். அவரது என்ன, எந்த ஓவியத்தையும் அதன் மூல உருவில் பார்க்கக் கிடைத்தது அப்போது தான்.

அதற்குப் பிறகு இரண்டாண்டுகளின் முடிவில் வேலை தேடிக்கொண்டிருந்த போது கல்கத்தாவுக்கு ஒரு நேர்காணல் விஷய்மாகப்போனேன். அப்போது தில்லியில் தொடங்கப்பட்ட லலித் கலா அகாடமி ஏற்பாடு செய்திருந்த முதல் National Art Exhibition கல்கத்தவுக்கும் வந்திருந்தது. அங்குதான் முதன் முதலாக, ஹுஸேன் இன்னும் மற்ற இந்திய ஒவியர்களின் படைப்புகளை அதன் மூல உருவில் பார்க்கும் முதல் சந்தர்ப்பம் கிடைத்தது. ஹுஸேனின் வர்ணத் தேர்வு மிகப் புகழ் பெற்றது. அவரது மஞ்சளும் நீலமும் கரிய பழுப்பின் இடையே செய்யும் ஜாலத்தைக் காண முடிந்தது. இதைப் பற்றியெல்லாம் பின்னர் சொல்வேன்.

.

Series Navigationஏகப்பட்ட கேள்விக்கு ஒரு வார்த்தையே பதில்எழுத்தாளர்களின் ஊர்வலம் (பாகம்..2)
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

3 Comments

 1. Avatar
  மலர்மன்னன் says:

  ஹுசைன் வெறும் நிர்வாணமாகக் கூட அல்ல, மிகவும் வக்கிரமான கோலங்களில் ஹிந்து தெய்வங்களை வரைந்து தமது மன வியாதியை வெளிப்படுத்தியவர். ஹிட்லரை நிர்வாணமாக வரைந்தவர். ஏன் என்று கேட்டதற்கு அவ்வாறு வரைவது தமது எதிர்ப்பின்/ வெறுப்பின் அடையாளம் என்று தம்மை மறந்த நிலையில் உண்மைக் காரணத்தை ஒப்புக் கொண்டுவிட்டார். ஆக, அவர் ஹிந்து தெய்வ வடிவங்களை எந்த நோக்கத்துடன் வரைந்தார் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. இயல்பான நிர்வாணம் நமக்கு அந்நியம் அல்ல. அதை நாம் அழுக்கான மனதுடன் பார்ப்பதில்லை. ஆனால் வக்கிரமான உணர்வுடன் வெளிப்படுத்தப்படும் நிர்வாணம் நமக்கு ஏற்புடையது அல்ல. ஹுசேன் வக்கிரமான கோணங்களில் அவரே ஒப்புக்கொண்டபடி தமது வெறுப்பை வெளிப்படுத்தும்விதமாக ஹிந்து கடவுள் உருவங்களை வரைந்ததால்தான் அவரைக் கண்டிக்க வேண்டியதாயிற்று. வழக்குகளை எதிர்கொள்ள அஞ்சி அவராகவே நாட்டைவிட்டு ஓடி முகமதிய நாட்டில் தஞ்சம் புகுந்தாரேயன்றி அவர் உயிருக்கு ஹிந்துஸ்தானத்தில் ஆபத்து ஏதும் இருக்கவில்லை. குறுக்கு விசாரணையில் தமது முகமூடி கிழிபட்டுவிடுமே என்று அஞ்சிய நெஞ்சுரம் இல்லாத வெகு சாதாரண நபர். பெண்களை வெறும் அழகுப் பொருளாகவும் போகப் பொருளாகவும் கருதிய அற்ப சுபாவி. மும்பையில் ஒருமுறை அவரைச் சந்தித்தபோது எவ்வளவு பணம் கொடுத்தால் முகமதுவின் மகள் ஃபாத்திமா வின் நிர்வாணச் சித்திரம் வரைந்து கொடுப்பீர்கள் என்று கேட்டேன். முகம் பேயறைந்தது போலாகி பேட்டியை ரத்து செய்துவிட்டார். நான் பேட்டி எடுக்க முனைந்தது ஒரு கல்கத்தா இதழுக்காக. ஆனால் அவர் ஒரு சிறந்த ஓவியர் என்பதுதான் எனது கருத்தும். அவர் வரைந்த குதிரைகளை நான் மிகவும் நேசிக்கிறேன். வர்ணங்களின் லட்சணம் அறிந்தவர். என்ன செய்வது, திறமை இருக்கிற இடங்களில் சில வக்கிர புத்திகளும் இடம் பெற்றுவிடுகின்றன.

 2. Avatar
  மலர்மன்னன் says:

  நான் கேட்டது ஃபாத்திமா ஒட்டகத்தின் திமில் மீது உட்கார்ந்த கோலத்தில் போவதுபோன்ற சித்திரம். அதனால்தான் ஹுசேன் மிகவும் பதட்டமாகிவிட்டார்! என்ன செய்வது, நமக்கு எவரையும் அவமதிக்கும் நோக்கம் அறவே இல்லை. ஆனால் தவறை உணர்த்த அவ்வாறு அவர்களின் மனப் போக்கின் பிரகாரமே கேட்டால்தான் அவர்களுக்கு உறைக்கிறது. என்னுடைய ஆயுதம் எது என்பதை எனது எதிரிதான் நிர்ணயிக்கிறான் என்று நான் சொன்னால் ஹிந்து தர்மத்தையும் ஆபிரகாமிய மதமாக்காதே என்கிறார்கள்! அவ்வாறு நான் கேட்கும்வரை மிகவும் உல்லாசமாகவும் எகத்தாளமாகவும் பேசிக் கொண்டிருந்த ஹுசேன், கலைஞன் மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்றெல்லாம் அளந்துகொண்டிருந்த ஹுசேன், நான் அப்படிக் கேட்டதும் முற்றிலும் தமது சுய ரூபத்தைக் காட்டிவிட்டார். அதையே ஒரு பேட்டிக் கட்டுரையாக எழுதிக் கொடுத்தபோது அதை வெளியிட அஞ்சி நிராகரித்துவிட்டது புகழ் பெற்ற ஸ்டேஸ்மன் பத்திரிகை! இதுதான் நமது மீடியாவின் லட்சணம்!
  – மலர்மன்னன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *