– எஸ்ஸார்சி
(குறுநாவல்)
அவனும் அவளும் மும்பை சென்று வந்தார்கள். விடுப்புச்சலுகைப்பயணம் என்கிற அந்த வசதியை பயன்படுத்திக்கொண்டுதான். மைய அரசின் ஒரு அலுவலகத்தில் அவன் பணி புரிவதாலே அவர்கள் தந்த சலுகை. நான்காண்டுகளுக்கு ஒரு தடவை பறந்து விரிந்த இந்த இந்திய தேசத்தில் எங்கேயாவது ஒரு ஊருக்கு குடும்பத்தோடு சென்று திரும்பலாம்.
குடும்பம் என்பது எது என்கிற வினாவுக்கு ச்சரியாக விடை தெரிந்திருக்க வேண்டும். தெரியாவிட்டால் கூட அப்படி ஒன்றும் பாதகம் இல்லை. நீட்டி முழக்கி வியாக்கியானங்கள் செய்வதற்கு எல்லாம் அரசாங்க அலுவலகங்களில் எப்போது பஞ்சம் வந்திருக்கிறது.
விடுப்புச்சலுகைப்பயணம். அப்படி ஒரு பயணம் போய் வந்த பின்னே கட்டம் கட்டமாய் குறுக்கும் நெடுக்கும் கோடு போடப்பட்ட சாணி நிற விண்ணப்பத்தை தேடிப்பிடித்துத் தெரிந்தவர்கள் துணைகொண்டு ஏற்ற இறக்கத்தோடு வளைத்து வளைத்து நிரப்பி க்காலத்தே அந்தக்கணக்குப்பிரிவுக்குச் சமர்ப்பிக்கும் சூட்சுமம் தெரிந்திருக்க வேண்டும்.
பயணச்சீட்டு வாங்க ச்செலவிட்ட பணம் என்கிறவகையில் ஒரு நூறு உரூபாய் மைய அரசாங்கத்திடமிருந்து பெற்றுவிடலாம் என்றால் அதற்கு ப்பயணச்செலவோடு இன்ன பிறவும் கூட்டிப்பார்த்தால் பத்துமடங்குக்கு வந்துவிடும். அது பற்றி எல்லாம் யாருக்குத்தான் என்ன. இப்படியாக இந்த விடுப்புச்சலுகைப்பயணம் எடுத்துக்கொண்டு ஒருவன் ஊர்ச்சுற்றி வந்துதான் தீர வேண்டும் என்று கட்டாயம் இல்லையே.
அவனுக்கு சங்கு வளவதுரையனோடு இலக்கிய நட்பு இருந்தது. சங்கு என்னும் பெயரில் ஒரு இலக்கியச்சிற்றிதழை கடலூர் கூத்தப்பாக்கத்திலிருந்து அந்த வளவதுரையன் தான் நடத்திக் கொண்டுவருகிறார். அந்த நண்பனின் மூத்த பையனுக்கு மும்பையில் பெரிய கம்பனி ஒன்றில் வேலை. அவன் சொந்த வீட்டோடு மும்பையில் இருந்தான். அவன் வசதி இத்யாதிகள் கேட்போர் பொறாமைப்படும் அளவுக்குமே இருந்தது. டோம்பிவிலி த்தமிழர்களின் பாலாஜி கோவிலுக்கு அருகே அவனுக்கு மூன்றரைகள் கொண்ட பெரிய வீடு. மும்பைக்கு யாத்திரை போன அவனுக்கும் அவளுக்கும் மும்பையில் வைத்து அந்த நண்பனின் பையன்தான் ராஜோபசாரம் செய்தான். இந்த ஜன்மத்தில் அப்படியொரு அன்பின் மரு உருவத்தை இனி அவன் எங்கே கண்டுபிடிப்பது.. எல்லாவற்றிற்கும் ஒரு ராசி வேண்டும் என்பார்கள். அது இருந்திருக்கலாம். ஆகத்தான் இருவரும் அந்த டோம்பிவிலி யில் மூன்றரை கொண்ட அவ் வீட்டிற்கு விருந்தினராகப் போய்வந்தார்கள்.
அவனுக்கும் அவளுக்கும் மும்பையில் அப்படிபோய்ப் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது. தமிழ் நாட்டின் ஒரு குக்கிராமத்து செல்லியம்மன் கோவிலிலே கால்பங்குக்கு வரும் அந்த மஹாலட்சுமிக்கோவில், உள்ளூரில் வட்டிக்கு விட்டு தொழில் நடத்தும் சேட்டு ஒருவரின் தலையணை பரப்பிக்கொண்ட அடகுக் கடையை நினைவுக்குக்கொண்டுவரும் சின்ன சித்திவிநாயகர் கோவில், குடல் பிரட்டும் கீக்கிடமானதொரு மீன்பண்ணை, அண்ணாந்து பார்த்து விட்டு அவரவர் தத்தம் வேலையை மட்டுமே கவனிக்கும் ஒட்டும் உறவும் இல்லா நரிமன்முனை, அங்கங்கே எட்டி எட்டி கரையைத்தொட்டுப் பார்க்கும் கருப்புத்தண்ணீர்க் கடல், தேசலாகிப்போன மிருகங்களை இன்னும் விடாமல் இம்சித்து இம்சித்து வருவோரும் போவோரும் ரசிக்க மட்டுமே (அது என்ன ரசனையோ) நிர்வகிக்கப்படும் ஒரு புராதன ஜூ, வேர்த்து விருவிருக்க ச்சென்றுவிட்டு இன்னது இது என்று புரியாமலே தலையை ஆட்டி விட்டு சென்றுதிரும்பும் எலிபெண்டா குகை. அத்தீவுக்குப் போய் வர காய்ந்துபோனதொரு படகுச்சவாரி , மும்பைக்கு ப்புதியதாக வருவோர் முறைத்து முறைத்து ப்பார்க்கமட்டுமே எழுந்துள்ள சிவாஜி முனை, வயிறு பசித்தால் வெல்லம் கரைத்து விடப்பட்டு ஜீவன் என்று ஏதும் இல்லாச் சாம்பார் பரிமாறும் சைவ ஔட்டல்கள், வேறு என்ன மும்பையில் இருக்கிறது. அதுதான் பிடிபடவில்லை. அது இருக்கட்டும் விடுங்கள்.
அவர்கள் தங்கியிருந்த அந்த டொம்பிவிலி வீட்டில் மரக் கட்டில் ஒன்றினை அவள் நோட்டம் விட்டாள். அத்தனை வேலைப்பாடு. அத்தனை அழகு. கட்டிலுக்கு கீழே தள்ளு பலகைகொண்டதொரு அறை. இப்படியும் இப்படியும் அது நகர்ந்து தலையணை போர்வை என எல்லாவற்றையும் தன்னுள்ளே வைத்துக்கொண்டு அப்போதைக்கு அப்போது உறங்குவோர்க்குக் கொடுத்து உதவியது. அம்மரக் கட்டிலின் கச்சிதமான ஒரு கீழ்தள அமைப்பினைப் பார்த்து அவள் அசந்து போனாள். இப்படியொரு வசதியுடன் ஒரு மரக் கட்டில் தன் வீட்டிலும் இருக்கத்தான் வேண்டும் என்று அப்போதே தீர்மானம் செய்துகொண்டாள்.
, ‘நம்ம வீட்டில் தான் கட்டில் இருக்கே’ அவளுக்குப்பதில் சொன்னான்.
‘ இருக்கு. அது இரும்பிலேதான் இருக்கு. தகரம்னு சொல்லணும். உக்காந்தா எழுந்தா டபுக்கு டுபுக்குன்னு ஒரே சத்தம். என்னா நாராசம். கோடையிலே பாத்தா தோசக்கல்லாட்டம் காயும் மழைகாலத்திலே சில்லுன்னு ஆளைக்கொல்லும் என்னா இரும்புக் கட்டிலு. அந்த தலகாணி போர்வயை எல்லாம் வேற எடத்திலதான கொண்டுபோயி வக்கிணும். இங்க பாருங்க தள்ளு கதவு, அப்படியும் இப்படியும் தள்ளுனா போதும் தலகாணி போர்வ சமுக்காளம் எல்லாத்தையும் அசமடக்கி வச்சிடலாம் வேணுங்கிறது எடுத்துக்கலாம். கட்டிலு மேல தூங்குறவன் ஒரு தொந்தரவு இல்லாம அவன் பாட்டுக்குத்தூங்கலாம்.’
‘ ஆமாம். அதற்காக அங்க அங்க பார்த்தது எல்லாம் வாங்கிடத்தான் வேண்டுமா’
‘ வாங்கிடத்தான் வேண்டும்’
அவள் சொன்னாள். இனி பேசிப்பயன் இல்லை. எத்தனை வேகமாக அவன் வேண்டாம் என்றாலும் அத்தனை வேகமாக அவள் வேண்டும் என்பாள். இது ஒன்றும் புதிய செய்தி இல்லை. ராமாயண நாயகன் ராமன் கூட மாய மான் உனக்கு வேண்டும நான் போய் பிடித்து வரட்டுமா என்று சீதாபிராட்டியிடம் கேட்டிருந்தால் அது எதற்கு வீண் வேலை உங்கள் தகுதிக்கு ஒரு சிங்கத்தை அல்லவா நீங்கள் பிடித்துக்கொண்டு வரவேண்டும் என்று சொல்லி இருப்பாள், ஆனால் ராமாயணக்கதை வேறு விதமாகத்தானே போகவேண்டும் என்று விதிக்கப்பட்டு இருக்கிறது.
மும்பைப்பயணம் முடிந்துஅவன் தன் அலுவலகத்தில் தன் சக நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும் சமயம் மரக்கட்டில் ஒன்று வாங்க வேண்டும் என்றான்.
‘ அந்த காலத்திலேயே அத வாங்குலயா’ கனமான வினாதான்.
‘ வாங்கினேன். அது இரும்புக்கட்டில்’
‘ சரிதான். கட்டிலுன்னா அது மரத்தில இருக்கணும்’ என்றான் நண்பன்.
‘ அதுதான் பாக்குறேன்’
‘ நம்ம கையில ஒரு ஆசாரி இருக்குறான். ஜாமான் வாங்கி குடுத்தம்னா உங்க வீட்டுல வச்சி செய்யச்சொல்லுலாம். கட்டிலுக்குக் கூலி என்னான்னு பேசிக்குவோம்’
‘ ரொம்ப சரி’’ மகிழ்ச்சியாக இருந்தது அவனுக்கு..
‘ நாம நல்ல மரமா வாங்கி செய்யச்சொன்னா அதனொட தரமே வேறதான்’
‘ அது தான் சரின்னு படுது’
‘ ஆசாரி நாளைக்கு காலையில உங்கள பாப்பாரு. நான் அனுப்பி வக்கிறேன் சொச்சத்தையும் அவருகிட்ட பேசிக்கிடுங்க’
‘ நல்லா வேல தெரிஞ்சி செய்யுற ஆசாரியா இருக்கட்டும்’
‘ அப்பிடி தரம் இல்லாத ஆளை நான் அனுப்பிவைப்பனா.சரியாபோச்சி. சாரு என்னப்பத்தி என்னதான் தெரிஞ்சி வச்சி இருக்கிறீங்க. எத்தினி வருஷமா பழகுனாலும் ஒருத்தற ஒருத்தர் புரிஞ்சி வச்சிக்கலன்னா அது எப்படி சொல்லுங்க’
‘ அதுக்கு சொல்லுல’
‘ பின்ன எதுக்கு அப்படிப் பேசுறீங்க’
‘ என்னுமோ சொல்லுணும்னு தோணிச்சி அதான் சொல்லிப்புட்டன்’
‘ பேசத்தெரியாத ஆசாமின்னு ஊருக்கே தெரிஞ்சி கெடக்குது. ஒண்ணு குடுத்துட்டு நாலு வாங்கிகறதுதான் உங்களுக்கு வழக்கமா போச்சி’
‘ இண்ணைக்கு நேத்து சேதி இல்ல இது’
, ‘ பிரம்ம லிபிக்கு திருத்தம் இல்லே. கெடக்கு விடுங்க. நான் நாளைக்கே ஆசாரிய அனுப்பி வக்கிறன்’
அலுவலக நண்பன் பேச்சை முடித்து வைத்தான்.
அனுக்கு ப்பிரச்சனை இனிமேல்தான் தொடங்கப்போகிறதா, அல்லது சாமர்த்தியமாக ஏதும் செய்து விட்டோமா என்கிற சந்தேகம் வந்தது.
அவன் தன் மனைவியிடம் ஆசாரி வரப்போவதை சொல்லி வைத்தான். சொந்தமாய் ‘மரம் இத்யாதிகள் வாங்கிக்கொடுத்து நாமே ஆசாரி வைத்து கட்டில் செய்யப்போகிறோம்’
‘ நம் வீட்டிலேயா’
‘ ஆமாம். அதுதான் வலுவா இருக்கும் நல்லாவும் ஒழைக்கும்னு சொல்லுறாங்க’
‘ யாரு சொன்னா’
‘ ஆபீசு க்காரங்கதான்’ பதில் சொன்னான்.
‘ வர்ர ஆசாரி எப்பிடி அவுரு செய்யிற வேல எப்பிடி இருக்கும் எல்லாம் விசாரிச்சிங்களா’
‘ அதெல்லாம் விசாரிக்காமலா’ பொய் சொன்னான்.
மறுநாள் காலை வழக்கம்போல் விடிந்தது. சொல்லி விட்டுப்போனபடியே அந்த நண்பன் அனுப்பிய வைத்த ஆசாரி அவன் வீட்டில் காபி சாப்பிடும் நேரத்திற்குச்சரியாக வந்தான்.
‘ கட்டிலு செய்யுணும்னு சொல்லி அனுப்பினாரு. நம்ம டெலி போன் ஆபிசுலே வேல பாக்குற இவுறு. நீங்க தானே சாரு அது’
‘ கரைக்டா கண்டு பிடிச்சி வந்துட்டீங்க’
‘ பின்ன என்ன சாரு பம்பாயி சிங்கப்பூர்னு பட்டணம்னு சுத்தி சுத்தி வேல பாத்து இருக்கேன்’
‘ மரம் எங்க வாங்குணும்’ அவன் பிரச்சனையை ஆரம்பித்தான்.
‘ வழக்கமா அந்த சேட்டு கிட்டதான் வாங்குறது’.
‘ கூட நான் வரணுமா’
‘ சரியா போச்சி நீங்க வராம கதை எப்பிடி ஆவுறது. எசமானரு போவாத காரியம் ஏடாகூடம்ல’
‘ நான் பத்துமணிக்கு ஆபிசுல இருக்குனுமே’
‘ அம்மாம் நாழி அங்க என்னா செய்யுறம்’
‘ சரக்க பாக்கறம் கணக்கு வழக்கபாக்கறம் கெளம்புறம் அப்புறம் என்னா வேல இருக்கு’
‘ இதுல என்னா வழக்கு அது இதுன்னு’
‘ சும்மா பேச்சுக்கு அப்பிடி சொல்லுறது’
‘நான் பயந்துட்டேன்’
‘ சும்மா பேசுற வார்த்தையில என்னா இருக்கு. நெருப்புன்னா சுட்டுமா. நீங்க ஆபிசு கெளம்பி வர்ர மாதிரி வாங்க நானு சேட்டு மரவாடில இருக்குறன்’
‘ சரி ‘ என்றான். ஆசாரி தனக்கு ஏதோ சவுகரியம் செய்துவிட்டதாக அவன் உணர்ந்தான்.
அவன் மனைவி உள்ளிருந்து வெளியே வந்து நின்று கொண்டு பேச ஆரம்பித்தாள்.
‘ என்னா ஆசாரி கட்டிலுன்னா எப்பிடி தலகாணி போர்வ இதுவ எல்லாம் அப்பிடியே கீழயே வச்சிகிற மாதிரி வசதி இருக்குணும்’
‘ எப்பிடி சொல்றீங்க’
‘ அதான் நான் மும்பையில பாத்தன். அந்த கட்டிலு. அப்பிடியே கட்டில்ல படுத்துக்கற அந்தப் பலகாயுக்குக்கீழ ஒரு ரூம்பு மாதிரி இப்படியும் அப்படியும் தள்ளுறாப்போல ஒரு சொருவு கதவு இருந்துச்சி அது மாதிரிதான் செய்யுனும்’
அவள் முடித்துக்கொண்டாள்.
ஆசாரி எதுவும் பேசாமல் இருந்தான்.
அவன் ஆசாரி முகத்தையும் அவள் முகத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான்.
பேச்சு ஏதோ சிக்கலில் மாட்டிக்கொண்ட மாதிரி தெரிந்தது.
‘ என்னா பேச்ச க்காணும், நுரையா அடங்கிபோச்சி’’ அவள் ஆசாரியிடம் கேட்டாள்
‘ இதுல என்னா இருக்கு எப்பிடி கேக்குறீங்களோ அப்பிடி’
‘சரி‘ நானு மரவாடியில அய்யாவ பாக்குறன்’
ஆசாரி கிளம்பினான்.
அவனுக்கு ஆசாரி தன் வீடு வந்து கட்டில் பற்றி பேசிய வுடனேயே கட்டிலில் கால் நீட்டி படுத்துக்கொண்டு காற்று வாங்குவதாகவே உணர்ந்தான்.
பத்துமணி அலுவலகத்துக்கு எப்போதும் பத்து நிமிடம் முன்னதாக கிளம்பினால் போதும். அலுவலகம் அவ்வளவு அருகில் இருந்தது. வேலை செய்யும் அலுவலகம் வெகுஅருகில் இருப்ப்து ஒருவனுக்கு எவ்வளவோ சவுகரியம் என்று மட்டும் நினைத்துவிட வேண்டாம் .
அவன் ஒன்பது மணிக்கே புறப்பட்டான். ஒரு பத்தாயிரம் ரூபாயை சட்டைப்பையில் எடுத்துவைத்துகொண்டான். தனது டிவி எஸ் வண்டியை கிளப்பினான். பணம் பையில் இருப்பது தெரிந்தோ என்னவோ வண்டி ஒரே உதையில் ஸ்டார்ட் ஆனது.
கோர்டர்ஸ் வாயிலில் இரும்பு கேட் பெரிய ராட்சசன் கணக்குக்கு இருந்தது. அந்த ஜோடிக்கதவுகள் மூடப்பட்டதே இல்லை. அவன் இங்கு குடி வந்து இந்தப் பத்தாண்டுகளில் ஒரு தடவைக்கூட சாத்தி மூடாத ஒரு கதவினை ச்செய்து வைப்பது எதற்கு என்று எண்ணினான். இது அரசாங்க க்கட்டிடம் ஆக இதெல்லாம் சகஜமப்பா என்று முடிவுக்கு வந்து மெயின்ரோடுக்கு ச்செல்லும் கப்பிச் சாலையில் வண்டியைத்திருப்பினான்.
தெரு திருப்பத்தில் வள்ளலார் நகர் என்று எழுதிய சிமெண்ட் பலகை நின்றுகொண்டிருந்தது. அதனில் வள்ளலார் என்ற பெயரை தார் பூசி யாரோ அழித்துவிட முயற்சித்துத் தோற்றுப்போய் இருக்கிறார்கள்.
வள்ளலாரைப்பிடிக்காதவர்கள்கூட இந்த உலகத்தில் இருப்பார்களா என்ன. யோசித்துக்கொண்டே மெயின் ரோடுக்குச்செல்லும் பாதையில் வண்டியைச்செலுத்தினான்.
பிணம் அறுக்கும் அலுவலகம் வாயிலில் ஒரே கூட்டமாக இருந்தது. எதிரே இருக்கும் பெரிய மருத்துவ மனையின் இன்னொரு பகுதி இது. ஏதேனும் விபத்து நிகழ்ந்து யாரேனும் இறந்துபோயிருக்கலாம்
ஒரு நடுத்தர வயதிருக்கும் பெண் கீழே விழுந்து புரண்டு புரண்டு. அழுதுகொண்டிருந்தாள். செத்த பிணத்திற்கு சாகப்போகிற ஒரு பிணம் அழுகிறது என்று சித்தர்கள் ஆகாயம் பார்த்து பாடிக்கொண்டிருக்கலாம். சாவு சாவுதானே. இழப்பின் வலி சாமான்யமானதுவா என்ன. எதோ அவன் மனம் பேத்திக்கொண்டே இருந்தது.
மெயின் ரோடின் திருப்பத்தில் ஒரு கருமாரிம்மன் கோவில் இருந்தது. அதற்கு முன்பாக வண்டியை நிறுத்தினான். கை யெடுத்துக்கொம்பிட்டான். எல்லாம் நல்ல படி நடக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்தான்.’ இப்படி எல்லாம் பிரார்த்தனை செய்வது அறிவு பூர்வமான ஒன்றா என எண்ணிப்பார்த்தான். எல்லாம் தெரிந்த கடவுளுக்கு நாம் ஏன் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று எதோ ஏதோ சொல்லிக்கொண்டான்.
தரையில் வீழ்ந்தும் நெடுஞ்சாண் கிடையாகக் கும்பிட்டான். தெரிந்தவர்கள் யாரேனும் தன்னைப்பார்க்காமல் இருக்கவேண்டுமே என்று குரங்கு மனம் எச்சரித்தது.
என்ன பிரார்த்தனை பலமா இருக்கு என்று யாரேனும் கேட்டுவிட்டால் என்ன பதில் சொல்வது..
படேல் மரவாடி விளம்பரப்பலகை முன்பாக வண்டியை நிறுத்தி இறங்கினான். சேட்டும் ஆசாரியும் உள்ளே தயாராய் இருந்தார்கள்.
அது என்னவோ தங்கம் இரும்பு சிமென்ட் பெயிண்ட் எல்லாம் இங்கே சேட்டுக்கள் மட்டுமே வைத்து வியாபாரம் செய்கிறார்கள். வாழைப்பழம் பூ வெற்றிலை இட்டலிக்கடை வைக்கமட்டும் வருவதில்லை. எங்கே சுற்றினாலும் இப்படி மட்டுந்தானே இருக்கிறது கதை.
‘ வாங்க சார்’ சேட்டு உள்ளே அழைத்தார்.
ஆசாரி மவுனமாய் சிரித்துக்கொண்டிருந்தான்
சட்டைப்பையில் பத்தாயிரம் இருப்பதை அவன் உறுதி செய்துகொண்டான். அது பத்திரமாகவே இருந்தது.
எல்லாரும் வாங்கா வாங்க, வருக வருக என்பதெல்லாம் அதன் பொருட்டுமட்டும்தான் என்பது தெரிந்தவன்தானே அவன்.
‘பின்பக்கமா போவும் அங்கதான் மரம் கெடக்கு. இதுல ஒண்ணு பாக்குணும் குஜராத் தேக்குன்னு ஒரு மரம் இருக்கு அது தான் ரொம்ப பெஸ்ட். அதுலய வேணுங்கற உருப்படிய எடுத்துகுங்க’
‘தேக்குல செய்யுலாம்னு பாக்குறன்’
‘ அது சும்மாங்க அது அழவு வலுவுங்கறது இல்லே தெரிதா’
‘ எல்லாரும் அதுதானே வாங்குணும் சொல்றாங்க’
‘ எல்லாரும் ஒண்ணு சரின்னு சொன்னா அது சரியா’
இதற்கெல்லாம் அவனிடம் எங்கே பதில் இருந்தது. பதில் சொல்லத்தெரிந்திருந்தால் எங்கெங்கோ போயிருக்கமுடியும்தான். திரு திரு என்று விழிக்கத்தொடங்கினான்.
ஆசாரி ஆரம்பித்தான்.
‘ நாமதான் சொல்லுணும் சேட்டு. அவுங்க என்னத்தை கண்டாங்க. சாணிய சின்ன சின்னதா உண்டி இது மருந்துன்னு சொன்னாலும் வாங்கி சாப்புடற ஜனமாச்சே ’ சொல்லிசிரித்துக்கொண்டான்.
சேட்டு அவனை ஒருமுறை பார்த்துக்கொண்டார். அவர் ஏதும் சொல்லாதமாதிரியும் ஆச்சாரி மட்டுமே இப்படி சொல்வதாயும் அந்த பார்வைக்கு யாரும் வசனம் சொல்லிவிடலாம்.
‘ குஜராத் பூவரசுலயே வேல செஞ்சி புடுவம்’
அவன் வேண்டா வெறுப்பாய் சரி என்றான்.
‘ ஒரு சேதி இண்ணைக்கு ச்சாயந்திரம் ஒரு லோடு வருது. அது நல்ல சரக்கு. கொஞ்சம் பொறுத்துகுங்க. ஆனது ஆச்சி போனது போச்சி. நாளைக்கி வேலய ஆரம்பிச்சிபுடுவம்’
மணி பத்தை தொட்டுக்கொண்டிருந்தது. இனி அவனுக்கு அங்கு நின்று பேச நேரம் இல்லை என்பது ஆசாரிக்கும் சேட்டுக்கும் தெரிந்த விஷயமே.
இது தான் தக்க தருணமென ஆசாரி வாங்க வேண்டிய லிஸ்டை எடுத்து நீட்டினான்
லிஸ்டை கையில் வாங்கிய சேட்டு இப்படியு அப்படியும் தலையை ஆட்டி ஏதோ கணக்கு போட்டு விட்டு
‘ ஒரு பதினஞ்சி வரும். அதுக்குள்ளறதான் வரும். கையில இருக்கறது கொடுத்துட்டுப்போங்க சொச்சத்தை அப்புறம் பாத்துக்கலாம்’
அவன் தன் கை வசமிருந்த பத்தாயிரத்தை சேட்டிடம் கொடுத்துவிட்டு,
‘ ஆசாரி சொல்ற ஜாமானுவ கொடுங்க பாக்கி பணம் நான் கொடுத்துடறேன்’
‘ எனக்குத்தெரியாதா என்னாங்க இது’
சேட்டு சொல்லி முடித்தார்.
அவன் பெரிய விடுதலை கிட்டிவிட்டதாய் எண்ணி தன் அலுவலகம் நோக்கி வண்டியில் புறப்பட்டான்.
அலுவலக வாயிலில் நின்றுகொண்டிருந்த அவன் நண்பன்,
‘ஆசாரி இண்ணைக்கு உங்க வூட்டுக்கு வந்தாப்புலயா’
அவன் நண்பன் தான் கேட்டான்.
‘மரவாடிக்கு ப்போயிட்டுதான் வர்ரேன்’ அவன் பதில் சொன்னான்.
‘ சாருன்னு சாருதான். எதுலயும் சோடயில்லை’
நண்பன் சொல்லி சிரித்துக்கொண்டான்.
மதியம் உணவிற்கு தன் வீடு நோக்கி நடந்தான். தன் வீட்டு வாயிலில் ஒரு மினி லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் பின்பக்கக்கதவைத்திறந்து கொண்டிருந்தான் காக்கி சட்டை போட்டிருந்த மினி லாரிக்காரன்.
வண்டியின் உள்ளே மரச்சட்டங்கள் அடுக்கப்பட்டிருந்தன.
‘யாரு வீட்டுக்கு இதுக எல்லாம்’
‘ சி ரெண்டு வீட்டுல இந்த சரக்க இறக்குணும்னு ஆசாரி சொன்னாரு’
‘ அப்ப நம்ப வீட்டுக்குத்தான்’
‘ ரொம்ப நல்லது சாரு, செத்த ஒரு கை போடுங்க சட்டுனு இறக்கிடலாம்’
சம்பாஷணை முடிந்தது. அவனும் வண்டிக்காரனும் வண்டியில் இருந்த மரச்சட்டங்களை அவன் வீட்டு முன்பக்கமாக இறக்கி அடுக்கினர்.
‘ இது என்ன ஏகத்துக்கு இருக்கும் போல’ அவன் மனைவி ஆச்சரியத்தோடு அந்த மரச்சட்டங்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
வேலை முடிந்தது. மினி லாரிக்காரன் தன் கைகளை க்கழுவினான். துடைத்துக்கொண்டான்
‘சாருக்கு பசி யா இருக்கும் நா வேற தொந்தரவு கொடுத்துட்டென். ஆசாரி வரன்னாரு . ஆனா வருல. நீங்க இப்ப வருலன்னா எனக்கு ரெம்ப செருமம்’
‘ யாரூட்டு வேல. நம்ப வேலதானே’ அவன் பதில் சொன்னான்.
‘ நா கெளம்புணும் ஜோலி கெடக்கு. ரூவா முந்நூறு எடுங்க’
‘ எதுக்கு’
‘ எதுக்கா லாரி வாடவதான் சரக்க சும்மா எடுத்தாருவாங்களா’
‘ ஆசாரி என்கிட்ட எதுவும் சொல்லுலயே’
‘ சொல்லுலன்னா அப்ப சும்மா போவுறதா நா’
‘இல்ல எதுக்கும் ஒறு மொறன்னு இருக்குல்ல’
‘ என்னா மொறண்ரீரு’
மரியாதை இறங்கிக்கொண்டது.
‘காசி கொடுக்கலன்னா. நானு சரக்க அள்ளி வண்டிலபோட்டுகிட்டு பூடுவேன். என்னா வெளயாட்டு வேலயா’
‘ போயேன். எல்லாம் அப்பிடியே அவிஞ்சி பூடுமா என்ன’
அவன் மனைவி வீட்டு உள்ளிருந்து வேக வேகமாக வந்தாள்.
‘ இந்தா உன் பணம். எடுத்துக. கெளம்பு. ஏன் வெட்டி பேச்சு எல்லாம்.’
அவன் முந்நூறு ரூபாயைப்பெற்றுக்கொண்டான். லேசாகச் சிரித்து முடித்தான்.
‘ரொம்ப கஸ்டம் அம்மா உங்க பொழப்பு’
அவன் மனைவியிடம் அந்த மினிவண்டிக்காரன் இறங்கிப்பேசினான்.
‘காசு வந்துபோச்சில்ல அப்புறம் என்னா செத்த பேச்சி கெளம்பு கெளம்பு’
அவன் மினிலாரிக்காரனை விரட்டினான்.
‘ ஆசாரி நாளக்கி காலயில வருவாரு. இந்த சேதிய சொல்ல சொன்னாரு. இந்தாங்க மரவாடிக்காரன் சீட்டு இதுல சட்டங்க எத்தினி என்ன என்ன அளவு எல்லம் எழுதி இருக்கு. இது பத்திரம். ஆசாரிகிட்ட கொடுத்துடணும்’
அவன் மனைவியிடம் அந்த சீட்டை நீட்டிக்கொடிருந்தான் லாரிக்காரன்.
‘அவுரு கிட்டயே அதக் கொடு’ என்றாள் அவன் மனைவி.
அவன் அதனை வாங்கி பத்திரமாக த்தன் சட்டைப்பையில் வைத்துக்கொண்டான்
‘நா வரங்கம்மா’ என்றான். லாரிக்காரன் அவன் தன் வண்டி நோக்கிப்புறப்பட்டான்.
வீட்டில் மரச்சட்டங்களின் ஆக்கிரமிப்பாக இருந்தது. ஏதோ தேர் ஒன்று செய்ய வாங்கிய மரச்சாமான்கள் போலத்தான் அவை காணப்பட்டன. புது மரத்தின் நெடி. அவை அறுப்புக்குள்ளானதால் இன்னும் நெடி கூடித்தெரிந்திருக்க வேண்டும். அவன் தேக்க மரத்தில்தான் கட்டில் செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டான். குஜராத் பூவரசு என்று பெயர்கொண்ட மரச்சட்டங்களே இப்போது அவனுக்கு முன்னால் சட்டமாய் அமர்ந்திருந்தன.
‘ இதெல்லாம் குஜராத் பூவரசு உனக்குச்சொல்லணுமே மறந்து போனேன்’
‘ ஏன் தேக்குல செய்யுறேன்னுதான் ஆரம்பிச்சிங்க’ அவள் மெதுவாக ஆரம்பித்தாள்.
‘ நான் எதுல ஆசைப்பட்டாலும் அது போயி வேறயாதான் முடியுது, என் நேரம்’
‘ வாங்கியாச்சில்ல இப்புறம் அது இதுன்னு பேசி ஆவுறது என்னா’ அவளே நொந்துகொண்டாள்.
‘ யாரு எது சொன்னாலும் அதுதான் நமக்கு நல்லதுன்னு எடுத்துகிடறேன். என்னை அதிலேந்து மாத்திகிட முடியலை. தேக்கு மரம் வாங்கணும்னுதான் மரவாடிக்குப் போனேன் ஆனா ஆசாரியும் மரவாடி சேட்டும் குஜராத் பூவரசு ரொம்ப நல்ல மரம்னு சொல்லிட்டாங்க’
‘பூவரசு வேற தேக்கு வேறதானே’
‘ ஆமாம்’
‘ இப்பயும் ஆமாம் சொல்றீங்க அதான் உங்ககிட்ட கோளாறு. ரெண்டு மரமுமே ஒண்ணு மாதிரிதான். இதுலயும் ஒண்ணு செஞ்சி பாப்பம் இதுல என்னா வந்துதுன்னு சமாளிக்கக்கூடாதா’
‘ இனிமேலுக்கு போயி நான் வித்த கத்துக முடியுமா’
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டேதான் இருந்தார்கள்.
மறுநாள் காலை சொன்னதுபோலவே ஆசாரி அவன் வீட்டு வாயிலில் வந்து நின்றுகொண்டான்.
‘ மரம் இன்னும் சைசு பண்ணணும் அத இழைப்பு போடணும் பட்டறைக்குப்போறம் நம்ப’
‘ இப்பயா’
‘ஆமாம் அது அது வேல ஆவுணும்ல’
அரை மனதோடு சரி என்றான்.
‘ மினி லாரி வருது. தே வந்துடும். மரத்த எடுத்து வெளிய வையுங்க. வேல கெடக்கு’
‘ என்னா ஆசாரியாரே இது தேக்கு இல்லயாமே. சாரு சொன்னாரு’
‘ ஆமாம் இந்த மரத்துல ஒரு வேல செஞ்சிப்பாருங்க. அப்புறம் தெரியும்‘ தேக்கு கீக்குல்லாம் இது கிட்ட பிச்ச வாங்குணுமாச்சே. சேட்டு ன்னா சும்மா ஆளா. அவுங்க வூட்டுல எல்லாமே இந்த பூவரசு மரமேதான். நீங்க எதை கண்டிங்க’
அவள் எதுவும் பேசாமல் இருந்தாள். அவன் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டான்.
வீட்டு வாயிலில் அந்த மினிலாரி வந்து உறுமிக்காட்டியது.
அதே மினிலாரிக்கரன்தான், முதல் முறை அவன் அங்குவந்து மரம் இறக்கிச்சென்றதாகவோ எல்லாம் அவன் இப்போது காட்டிக்கொள்ள வே இல்லை. புதியதாய் தான் வருவதுபோல் நடந்துகொண்டான்.
‘ மரத்த அள்ளி போடுங்க’ அந்த மினிலாரிக்காரன் கட்டளை இட்டான்.
அவை அத்தனையும் சமத்தாய் ஏறி வண்டிக்குள் அமர்ந்து கொண்டமாதிரியே இருந்தது.
‘ ஒரு முந்நூறுலாரிக்காரன் கிட்ட கொடுத்துடுங்க’ ஆசாரி சொன்னான்.
‘ தூரம் எவ்வளவு அது இதுன்னு ஒண்ணும் கிடயாதா’
‘உண்டு’
‘ அப்புறம்.’
‘ இப்ப மரவாடிய தாண்டி நாம போறம். இன்னும் கூடக்கேக்கணும். நம்ப ஆளு அதான் ரேட்டு கொறச்சித்தர்ரம்’
அவன் மனைவி முந்நூறு ரூபாயை ஆசாரியிடம் கொண்டு தந்தாள்.
மினிலாரிக்கரன் இப்படியும் அப்படியும் பார்த்துக்கொண்டே அதனை க்கையில் வாங்கி சட்டைப்பையில் வைத்துக்கொண்டான்.
‘ நா கெளம்புறென். பட்டறை வேலைக்குக்கூலி ஆயிரத்துக்குள்ள வரும்’
‘ ஆயிரமா’
‘ அதுக்குள்ளதான் வரும். நாம மரத்த சைசு பண்ணினா ஆவுறகதயா எம்மாம் கூலி ஆவும்தெரியுமா சொன்ன பயந்துபுடுவீங்க.’
‘ எப்ப திரும்பறது’
‘ போன வேல ஆன அப்பறம். நமக்கு வேற வேல என்னா இருக்கு அங்கே’
‘ திரும்பி வர மினிலாரிக்காரனுக்கு வாடகை தரணுமில்ல’
‘ ரைட்டா’
‘ அதே முந்நூறுதானே’
‘ ஆமாம்’
மினி லாரி புறப்பட்டுப்போனது. ஆசாரியும் இடத்தைக்காலி செய்துவிட்டுப்புறப்பட்டான்.
ஒரு வேலயும் லேசாக முடிந்துவிடுவதாக இல்லை. அதன் அதனுள்ளும் ஆயிரம் சிடுக்குகள் வைத்துக்கொண்டே அவை பிறக்கின்றன.
டெலிபோன் கோர்டர்சில் அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் அவன் ஏதோ கப்பல் ஒன்று செய்து வியாபாரம் ஆரம்பித்துவிடுவானோ என்கிற விதமாகப்பார்த்தனர். இந்த வகைக்கான வேலைகளை ஒருவன் மறைத்து வைத்துக்கொண்டு செய்துவிட முடியுமா என்ன. அவன்
அன்று அலுவலகம் சென்றான். அவனின் நண்பன் வழக்கம்போல் அவனிடம் கேள்வி ஆரம்பித்தான்.
ஆசாரி வந்துபோனது, மரம் வாங்கியதை பட்டறைக்கு ஏற்றிச்சென்றது எல்லாம் சொல்லி முடித்தான்.
‘பட்டறைக்கு நீங்கபோயி வாங்க’
‘ எல்லாம் ஆசாரி பாத்துகுவாருல்ல’
‘ வெவரம் இல்லாம பேசுறீங்க சாரு. பண்டம் நம்புளுதுல்ல ஒரு வேலய நாம கூடவே இருந்து பாத்தா எப்பிடி. அது அதுக்கு ஒரு மரியாதை இருக்குல்ல’
‘ இந்நேரம் வேல முடிஞ்சி திரும்பற நேரம்னு நெனக்கிறன்’
‘ நீங்க ஒண்ணு சாரு. பட்டறைல ஜே ஜேன்னு கூட்டம் இருக்கும். போனா சட்டுனு திரும்பி வர்ர காரியம் இல்லே கரண்டு சுகுரா இருக்கணும்ல’
‘ அப்ப லன்ச் இடைவெளியில நா போயி பாக்குறேன்’.
‘ போங்க போயி பாருங்க. அது ரொம்ப முக்கியம்’
வண்டியை எடுத்துக்கொண்டு மதிய உணவு இடைவேளையின் போது அந்தப் பட்டறை நோக்கிப்புறப்பட்டான். மரங்கள் மட்டுமே ஒரு மகாஅசுரனின் பசிக்குக் காத்து க்கிடக்கும் விலங்குகள் போல் பட்டறையின் வாயிலில் படுத்துக் கிடந்தன.
பட்டறையில் வேறு எதுவும் அரவம் இல்லை. அரை டிராயர் போட்டுக்கொண்டு சில சிறுவர்கள் இரைந்துகிடக்கும் மரத்துண்டுகள் பொறுக்கிக்கொண்டு இருந்தனர். அவர்களின்தலை முடி காய்ந்து கிடந்தது.
‘ அடுப்புக்கு பொறுக்கறம்’
யாரும் அவர்களை க்கேட்கவே இல்லை. அவர்களேதான் அவனிடம் சொல்லிக்கொண்டார்கள்.
‘ எங்க தம்பி யாரையும் காணும்’
‘ இப்ப கரண்டு இல்ல அதான் போயி இருக்குறாங்க’
‘ இல்லயே நா பொறப்படகுள்ள இருந்தது’.
‘ அது சின்ன கரண்டு சாரு. இது பெரிய கரண்டுல்ல’
சிறுவன் பொட்டில் அறைந்த மாதிரி பதில் சொன்னான். கொண்டு வந்த பைகளை நிறப்பிக்கொண்டு அந்தச் சிறுவர்கள் புறப்படத்தயாராயினர்.
பட்டறையின் ஆட்கள் தூரத்தில் வருவது தெரிந்த சிறுவர்கள் ஔட்டம் பிடிக்க ஆரம்பித்தனர்.
‘ அங்க யார்ரா ஔடுறது தோ வர்ரன் பாரு அந்தாண்ட இந்தாண்ட ரவ நவுறப்பிடாதே உடனே கழுவு மாதிரில்ல வந்துபுடுறீங்க’
சொல்லிக்கொண்டே வந்தார் ஒரு பட்டறை ஆள்.
‘ என்னா சேதி ‘ அவனிடம் கேட்டார் அந்த பட்டறை ஆள்.
அந்த மனிதரின் தலைமுடியெல்லாம் கலைந்து அவை மீது ஒரே மரத்தூளாகக்கிடந்தது. அவர் முழங்கால் அளவுக்கு ஒரு காக்கி டிரவுசர் போட்டுக்கொண்டிருந்தார். அவரின் கால்களை ச்சுற்றி க்கொண்டு ஒரு பூனைக்குட்டி விளையாடிக்கொண்டு இருந்தது. அவர் தன் கால்களை இங்கும் அங்கும் மாற்றி மாற்றி வைத்துக்கொண்டார். பூனை நகரவே இல்லை.
‘ இல்ல ஆசாரி இங்க வந்தாரு. ஒரு கட்டிலு செய்ய க்குடுத்து இருக்கன். சட்டம் சாமானுவ மினிலாரியில் ஏத்திவுட்டன் இண்ணைக்குக் காலையிலதான்’
‘ இங்கதான் கெடக்கும். ஆமாம் ஒரு மினி லாரி இண்ணைக்கு காலையில வந்துது’
‘ அதுவாதான் இருக்கும்’
‘ இங்கதான் எங்கனா மரத்தை எறக்கிப்போட்டுடிருப்பாரு. ஆசாரி வந்தாதான் கதை சரியாத் தெரியும். இடையனுக்குத்தான தன் உருப்பிடி எதுன்னு புரியும். இப்பக்கி இங்க கரண்டும் ஒரு பேசுலதான் இருக்கு. நீங்க சாயந்திரம் வந்திங்கன்னா அந்த விவரம் தெரிஞ்சிக்கலாம். நானும் கேட்டு வக்குறன்’
அவனுக்கு ஒரு சந்தேகம். இங்கு ஜெனரேட்டர்கள் எல்லாம் வைக்க மாட்டார்களோ. இந்தக்கேள்வியை அந்த பட்டறை ஆளிடம் கேட்கலாமா என்று யோசித்தான். கேட்டால் அது அதிகமாக இருக்குமோ என முடிவுக்கு வந்து அங்கிருந்து புறப்பட்டான்.
மதிய உணவுக்கான இடைவெளி முடிந்து வெகு நேரம் ஆகியிருந்தது. எப்போதும் அவனுக்கு அலுவலகத்தில் வேலை நெருக்கடி. அன்று மதியம் சாப்பிடாமலேயே அவன் பட்டறைக்குச்சென்றதோடு தன் பணிக்குத் திரும்பினான்.
- பசித்தவனின் பயணம் – நாஞ்சில் நாடன் சிறுகதைகள்
- ஏகப்பட்ட கேள்விக்கு ஒரு வார்த்தையே பதில்
- நினைவுகளின் சுவட்டில் – 86
- எழுத்தாளர்களின் ஊர்வலம் (பாகம்..2)
- எல்ரெட் குமாரின் ‘ முப்பொழுதும் உன் கற்பனைகள் ‘
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை –
- சேத்தன் பகத்தின் ‘ ரெவல்யூஷன் 2020 ‘
- பிரகாஷ்ராஜின் ‘ டோனி ‘
- மயிலு இசை விமர்சனம்
- பஞ்சதந்திரம் தொடர் 31- பாருண்டப் பறவைகள்
- கலங்கரை விளக்கு
- வேதனை விழா
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 7) எழில் இனப் பெருக்கம்
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 31
- பழமொழிகளில் ஒற்றுமை
- மரணம்
- அகில நாடுகளில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?
- இன்றைய பள்ளிக் கல்வி முறையும் ஒரு வகுப்பறைக் கொலையும்
- கனவுகள்
- பட்டறிவு – 1
- தற்கொலையிலிருந்து கொலைக்கு …
- இஸ்லாத்தின் உடனான மார்க்ஸிய உரையாடல்
- குருதி சுவைக்கும் வாழ்வு எனக்குறியது.
- ஐங்குறுப் பாக்கள்
- ஐசிஐசிஐ வங்கியின் மென்பொருள் பாதுகாப்பானதா…?
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 11
- இவள் பாரதி கவிதைகள்
- முன்னணியின் பின்னணிகள் – 27
- Kalachuvadu to publish a collection ancient Chinese poems in Tamil
- தமிழகத்தின் ஹம்ஸா கஷ்காரியும் சவுதி அரேபியாவின் மனுஷ்யபுத்திரனும்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 54