இரயில் பயணத்தை அவன் என்றைக்குமே வெறும் இரயில் பயணமாய்ப் பார்ப்பது இல்லை. இரயில் பயணத்தை ஒரு தத்துவார்த்தமாகவே கண்டு அவனுக்கு விருப்பமாகி விட்டது. ஒரு ஆரம்பித்திலிருந்து ஒரு முடிவுக்குச் செல்லும் வாழ்க்கையைப் போல இரயில் ஊடறுத்துக் கொண்டு போகிறது என்று பல சமயங்களில் அவன் நினைப்பதுண்டு. இரயில் விரைந்து செல்லும் வழியெல்லாம் நில்லாக் காட்சிகளில் மனந் தோய்ந்து நிற்கும் புதிரை அவன் இரயில் பயணம் முழுவதும் விடுவித்துக் கொண்டே இருப்பதுண்டு. இரயில் நிற்கும் இரயிலடிகளை விட தான் செல்லும் இரயில் நிற்காது போகும் இரயிலடிகளின் மர்மத்தை இரயில் கடப்பதற்கு முன்னமேயே பிடிபடுவதற்கு முயற்சிப்பதாய் அவன் பார்வை அந்த இரயிலடிகளின் மேல் பாயும். அப்போது அவனுக்கு மட்டும் இரயில் ஒரு விநாடி நின்று போவது போல் அவனின் சிந்தையில் இரயில் கட்டுண்டு இருக்கும். இரயில் நிற்காத அந்த இரயிலடிகளில் ஆட்களில்லாது வெறிச்சோடிப் போய் இருக்கும் தனிமையில் எங்கிருந்தோ ஒரு நாய் ஓடி வந்து ஏதோ திசை நோக்கி, இருக்கும் தனிமையின் தொலைவை நீட்டிப்பது போல் தோன்றும் அவனுக்கு. அப்போதெல்லாம் அவ்வளவு பெரிய இரயிலில் தான் மட்டும் தனியாய்ப் பிரயாணம் செய்தால் தன் தனிமையில் இரயில் பயணமும் நில்லாக் காட்சியாய் ஓடிப் போவது இன்னும் துல்லியமாகும் என்றெல்லாம் உள் தர்சனம் செய்து கொண்டிருப்பான்.
இந்த இரயில் பயணம் அவன் வெகுகாலம் கழித்துப் போவதாக அவனுக்கு திடீரென்று நினைவு கொண்டது. மதுரைக்குச் செல்லும் வைகை விரைவு இரயில் வண்டி ஆயத்த நிலையில் புறப்படத் தயாராக இருக்கும். ஒரு மிக நீளமான இயந்திர நாய் பாய்ச்சலுக்குத் தயாராக இருப்பது போல் அவனுக்கு உள்ளத்தில் சிலிர்ப்பு ஏற்படும். ”இது என்ன? இந்தக் கடைசி நிமிஷத்தில் மூட்டை முடிச்சோடு ஏழு பேர்கள் வெளி கிரகத்திலிருந்து வந்து குதிப்பது போல் உள்ளே அவசர அவசரமாய் நுழைகிறார்களே. மனிதர்கள் ஏன் அவசரத்தையும் துரிதகதியையும் விரும்பி தழுவிக் கொள்கிறார்கள்? காலத்தையே கால்செருப்பாய் போட்டுக் கொண்டு ஆளாய்ப் பறக்கிறார்களோ?” என்று அவன் நினைப்புகள் ஓடிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் அவனிருக்கும் இருக்கைக்குப் பக்கத்திலேயும், எதிரேலேயும் என்று உட்கார்ந்திருப்பர். அது ஒரு பெரிய குடும்பமாயிருக்கும் எனறு ஊகிப்பதற்கு எந்தக் கால அவகாசமும் அவனுக்குத் தேவையில்லை. அவன் இருக்கைக்கு எதிரில் அமர்ந்தவர்கள் ஒரு இளைஞனும், இளம் பெண்ணும். அவர்கள் அண்மையில் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் என்று அவன் ஊகித்துக் கொண்டான். அந்த இளம் பெண் வகிடெடுத்த நெற்றியில் பொட்டு வைத்திருப்பாள். சல்வார் சூட் போட்டிருந்தாலும் கல்யாணம் செய்து கொண்டு விட்ட பின்னால் அது அவள் துடுக்குத்தனத்தைக் கொஞ்சம் குறைத்துக் காட்டுவது போல் இருக்கும் அவனுக்கு. இளைஞனிடம் ஒரு புது மாப்பிள்ளை முறுக்கு இருப்பதை அவன் அவளிடம் பேசும் காதல் கலந்திருக்கும் கண்களில் கொஞ்சம் கர்வம் கலந்திருக்கும் தோரணையிலும்- அவர்கள் அவளின் பெற்றோர்களாக இருக்க வேண்டும்- அவளின் பெற்றோர்கள் இருக்கும் இருக்கைகளிலிருந்து ஒதுங்கி வந்து மனைவியோடு அவன் எதிர் இருக்கைகளில் தேர்ந்தெடுத்து இளைஞன் அமர்ந்து கொண்டதிலிருந்தும் அவன் புரிந்து கொள்வதற்கு அரிதாக இல்லை. அவளுடைய பெற்றோர்களோடு அவளுடைய சகோதரன், அண்ணியும் அவர்கள் குழந்தையும் கூட வந்திருப்பார்கள்.
வைகை இரயில் வண்டி இறக்கை கட்டிப் பறப்பது போல் பறந்து கொண்டிருக்கும். ஒரு பறவை அதன் மேல் குறுக்கே பறந்து அதைக் கேலி செய்வது போல் இருக்கும். ஆரம்பத்தில் நீயா நானா என்று ஒரு இருக்கை வரிசையில் நான்கு பேர் உட்கார்ந்திருக்கும் இறுக்கமும் இட நெருக்கடியும் கொஞ்சம் குறைந்தது போலிருக்கும். பயணிகள் அவரவர் அவரவர் நினைவோட்டத்தில் இருப்பது போல் இருக்கும். இரயில் ஓட்டத்துக்கு இணையாய் எத்தனை நினைப்பு ஓட்டங்கள் என்று அவன் அதிசியித்துக் கொண்டிருப்பான். எதிரிலிருந்த குடும்பத்தின் செயல்பாடுகள் ஆரம்பமாகி விட்டன. தம் செயல்பாடுகளை மற்றவர்கள் கவனிப்பார்களே என்ற பிரக்ஞை குடும்பத்தினருக்கு இல்லாததே அவனை அவர்களின் செயல்பாடுகளைக் கவனிப்பதற்குத் தூண்டுதலாயிருக்கும். குடும்பத்தினர் இரைந்தும் சிரித்தும் பேசிக் கொண்டிருப்பது அவனுக்கு விகாரமாயும், இரயில் விரைந்தோடி இரையும் தாள கதியோடு ஒத்துப் போகாதது போலும் அவனுக்குத் தோன்றும். குழந்தையை வேறு சீண்டிக் கொண்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் வீட்டில் தங்கள் கொஞ்சாத கொஞ்சலும், சீண்டாத சீண்டலும் பெற்றோர்கள் இந்த மாதிரியான இரயில் பயணங்களில் மேற்கொள்வது பயணங்களில் நேரம் கிடைப்பதாலா அல்லது பயணத்தில் தம் பொழுது கழிவதற்கான ஏதுவாகவா என்று அவன் யோசிக்கலானான். குழந்தையோ அவர்களின் கொஞ்சலையும் சீண்டலையும் பிடிக்காதது போல சிணுங்கவும் குழந்தையின் தாய் குழந்தை தூங்கட்டுமென்று ஒரு சேலையை எடுத்து தன் இருக்கைக்கு மேலேயே தூளி கட்ட முயல்வாள். முடியாது திணற அவளின் கணவன் வெற்றிகரமாக தூளி கட்டி முடித்து விட்டு ஒரு பெருமிதம் கொள்வது போல் தன் மனைவியைப் பார்ப்பான்.
இரயில் ஓட ஓடக் காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கும். கொளுத்தும் வெயில் வேட்டி கருவேல முட்செடியில் சிக்கிக் கிழிபட்டுக் கொண்டிருக்கும். கூட்டமாய் இருக்கும் சில பனை மரங்கள் தள்ளி ஒரு பனை மரம் மட்டும் தனியாய்ச் சூரிய வெயிலைக் குடித்துக் கொண்டிருக்கும். இரயில் கழிவறைப் பக்கம் தன் அவலத்தைக் கூனிக் குறுகி முகத்தை எப்போதும் குறுக்கிய கால்களுக்குள் புதைத்துக் கொண்டு டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து கொண்டிருந்த இளமை பறி போன பிச்சைக்காரி எங்கே போனாள்? எங்கு போய்ச் சேர்வது என்று தெரியாமல் பயணிக்கும் அவளுக்கு எங்கு போய்ச் சேர்ந்தாலும் அங்கு போய்ச் சேர்வது தானா?. சாப்பாட்டுக்குத் தயாராகி விட்டிருக்கும் குடும்பம். சாதம் சாம்பார் , முட்டை, தயிர் என்று பரிமாறல்கள் தொடங்கியிருக்கும். தனியாய் அவன் எதிரில் இருக்கும் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் இளந் தம்பதிகளுக்கு முதல் பரிமாறல் நடக்கும். மற்றவர்களின் பசியைத் தூண்டி விடுவது போல் இருக்கும் அவர்கள் பரிமாறுவதும் உண்பதுமாய் இருப்பது. இந்தப் பசியாறலுக்கு முன்னமேயே குறுக்கும் நெடுக்குமாக வந்து போய்க் கொண்டிருக்கும் இரயில் காண்ட்டீன் ஊழியர்கள் பஜ்ஜி,பலகாரம் காபி, டீ என்று குடும்பத்தினரிடம் நடந்த வியாபரத்தில் அவர்களுக்குப் பழக்கமாகி விட்டனர். குழந்தை இன்னும் தூங்கிக் கொண்டிருப்பதை குடும்பத்தினர் தொல்லையில்லையென்று விரும்புவது போல் தோன்றும் அவனுக்கு. இளந் தம்பதிகள் தங்களுக்குள்ளேயே விடாது பேசிக் கொண்டே வந்து கொண்டிருப்பார்கள். குடும்பத்தில் பிறருக்கும் வேறு யாரிடமும் பேச வேண்டிய அவசியமின்றி விஷயங்கள் ஏராளமாய் இருக்க எப்படி அந்த விஷயங்கள் அவர்களுக்கு சுவாரசியமாகின்றன என்று ஆச்சரியப்படுவான். அதனால் தான் பேச முயன்றாலும் அது அவர்களுக்கு சுவாரசியமில்லாமலும், இடைஞ்சலாகவும் இருக்கும் என்ற காரணத்தால் அவன் அவர்களைக் கண்ணோட்டம் செய்வதையும் கூட ஒரு நாகரிகத்தோடு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தான்.
இப்போது இரயில் விழுப்புரம் இரயிலடியில் நெடுஞ்சாலையில் ஓடி ஒரு நாய் களைத்துப் போய் நிற்பது போல் நின்று கொண்டிருக்கும். அவனும், குடும்பத்தினரும் இருக்கும் இரயில் பெட்டியில் ஏறி உள்ளே ஒரு திருநங்கை நுழைவாள். அவளைத் தொடர்ந்து இன்னும் சிலர் நுழைவார்கள். அவள் வாளிப்பையும் வாயாடலையும் சேர்த்து கூட்டிக் கொண்டே நுழைவது போல் இருக்கும். அவளின் ஈர்ப்பு ஆணில் பெண்ணின் நிழலும், பெண்ணில் ஆணின் நிழலும் சேர்ந்த பரிமாணத்தில் அமைவதாயும் தன்னுள்ளிருக்கும் ஆண்மையும் பெண்மையும் கலந்து பிரக்ஞை வெளியில் பிரத்தியட்சமாய்க் காணும் பரவசமாய் அது மாறுவதாயும் அவன் உணர்ந்தான். அவளின் வாளிப்பில் இருக்கும் நேரடித்தனம் பொய்யானதென்பது அவள் வாழும் வாழ்க்கையின் உண்மையில் அடிபட்டுப் போகும் என்று நினைத்தான். அதே சமயத்தில் அவனுக்கு அவள் மேல் பயம் கொண்டது. அந்த பயம் அவளின் வசீகரத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் மாயையின் நிழலில் மனம் கொள்ளாது இருள்வதால் என்பதாலிருக்கும். மிகவும் கலகலப்பாக வந்து கொண்டிருக்கும் திருநங்கை கை தட்டுவாள். ஒவ்வொரு இருக்கையில் இருப்பவர்களிடமும் கை தட்டிக் காசு கேட்கும் அவளின் செயலை பிச்சை எடுப்பது என்ற ரீதியில் எடுத்துக் கொள்ள முடியாது என்று அவனுக்கு மனத்தில் படும். ஒரு பிரத்தியேகமான மன உடல் ரீதியில் தாம் வாழும் வாழ்க்கையின் அங்கீகரிப்பை இப்படி அவள் உரிமையோடு எதிர்பார்க்கும் விதமாகக் காலந் தோறும் பழகி விட்டாளோ என்று அவனுக்கு ஒரு ஐயம். அவள் தன்னை நெருங்கிக் கொண்டே இருக்கிறாள். ஏன் ஜ்வாலையை அள்ளிக் கொண்டு வருகிறாள்? எந்தக் காட்டைக் கொளுத்தப் போகிறாள்? என்று அவன் மனம் உன்மத்தம் கொள்ளும்.
அவன் இருக்கும் இருக்கை வரிசைக்கே வந்து விட்டாள். காம தேவன் இந்திரன் அவளிடம் எந்த வில்லைக் கொடுத்து விட்டுப் போனான்? அவள் கண்களில் முதலில் பட்டது அவனுக்கு எதிரே உட்கார்ந்திருக்கும் இளந்தம்பதியினர் தான். அவள் இந்திர வில்லைக் கண்களில் வளைத்துக் கைகளில் சொடுக்கி காண முடியாத மலர் பாணங்களை எய்வது அவர்களுக்குத் தெரியவில்லையா? அந்த மலர் பாணங்கள் அவர்கள் மேல் வாழ்வின் வசந்தங்களைப் பொழிந்து உன்மத்தம் கொள்ள வைப்பதை அவர்களுக்குப் புரியவில்லையா? அவள் கை நீட்டிக் கேட்பது காசுக்கா? இல்லை அது இந்திர வரமா? எத்தனை விநாடிகள் காத்திருக்கும் இந்திர வரம் என்பது போல் காதலில் தழுவத் தயக்கப்படுவது போல் இருக்கும் இளந் தம்பதிகளிடமிருந்து அவனிருக்கும் இருக்கை வரிசையில் வேறு யாரையும் அணுகாது நகர்ந்து போவாள் அடுத்த இருக்கை வரிசைக்கு அந்தத் திருநங்கை.
பெண்ணின் தந்தைக்கு என்ன யோசனையோ? நகர்ந்து போய்க் கொண்டிருக்கும் திருநங்கையை மறுபடியும் கூப்பிட்டார். அவளிடம் “நல்லா ஆசீர்வாதம் பண்ணுங்க; கூடிய சீக்கிரம் தாயும் பிள்ளையாகனும்? என்று சொன்னதும் அவள் கைகளை உயர்த்தி இளந்தம்பதியினரின் உச்சந் தலைகளின் மேல் சுற்றுகள் சுற்றி வாழ்த்துவாள். இந்திரன் வானிலிருந்து வாழ்த்தி திருநங்கைக்கு மந்திரத்தைச் சொல்லச் சொன்னது போல் அவனுக்குத் தோற்றம் கொள்ளும். இளம் தம்பதிகள் இன்னும் அழகாகிக் காதல் கொண்டு மயங்குவது போல் அவனுக்குத் தோன்றியதில் ஒரு வரம்பை மீறின அச்சமும் கூடும். மகிழ்ந்து போன பெண்ணின் தந்தை ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து வாழ்த்திய திருநங்கையிடம் கொடுத்தார். காற்றடைத்த பாலீதின் பை வெடித்தது போல் அவள் “கூலிக்காக நான் வாழ்த்திறதில்ல” என்று வெடித்து பெண்ணின் தந்தையை முகமெடுத்தும் பார்க்காமல் அடுத்த விநாடியே அவள் புறப்படப் போகும் இரயில் வண்டியிலிருந்து இறங்குவாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் தந்தையின் மனம் அதிர்ந்ததோ இல்லையோ அவன் மனம் அதிர்ந்தது. அவனின் ஆடைகளைத் திருநங்கை களைந்து எடுத்துக் கொண்டு போனது போல் அவன் அவனைக் கனவு போல் பார்ப்பான். மானம் ஆணுமல்ல; பெண்ணுமல்ல; ஆண் பெண் உறுப்புகளல்ல என்று பளிச்சென்று அவன் மனத்தில் ஒரு மின்னல் ஓடி இறங்கும். புறப்படும் இரயில் வண்டியும் ஒரு விநாடி அதிர்ந்து நின்று மறுபடியும் இரயிலடியை விட்டுப் புறப்பட்டது போலிருக்கும் அவனுக்கு. திருநங்கை மறையும் வரை இரயில் ஜன்னல் வழியே இரயில் நடைமேடையில் அவள் ஒருத்தி என்பது போல அவளைப் பார்த்துக் கொண்டே இருப்பான் அவன்.
- தாகூரின் கீதப் பாமாலை – 1 எங்கு போய் மறைந்தாள் ?
- அ. முத்துலிங்கம் – ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல்
- நினைவுகளின் சுவட்டில் – (87)
- பேரதிசயம்
- முனைவர் மு.வ நூற்றாண்டு விழா
- அப்பாவின் சட்டை
- புலம்பெயர்வு
- சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற காவல் கோட்டம்—-ஒரு ார்வை
- மானம்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 8) எழில் இனப்பெருக்கம்
- குரு அரவிந்தனுக்கு தமிழர் தகவல் இலக்கிய விருது – 2012
- ஜென் ஒரு புரிதல்- பகுதி 31
- பேஸ்புக் பயன்பாடுகள் – 3
- பட்டறிவு – 2
- பஞ்சதந்திரம் தொடர் 32- பாருண்டப் பறவைகள்
- முன்னணியின் பின்னணிகள் – 29
- பழமொழிகளில் துரோகங்களும் துரோகிகளும்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 1
- விவேக் ஷங்கரின் ‘ தொடரும் ‘ மேடை நாடகம்
- s. பாலனின் ‘ உடும்பன் ‘
- பாலாஜி மோகனின் ‘காதலில் சொதப்புவது எப்படி? ‘
- வுட்டி ஆலனின் ‘ மிட் நைட் இன் பாரீஸ்
- ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ‘ வார் ஹார்ஸ் ‘
- ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி
- வரலாற்றை இழந்துவரும் சென்னை
- எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.
- அணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள்
- இன்கம் டாக்ஸ் அரசு இணைய தளத்தில் 16A மாதிரி ஃபார்மில் தமிழன் குசும்பு…
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 12
- எழுத்தாளர்கள் ஊர்வலம் (3 ஆம் பாகம்)
- சந்ததிகளும் ரப்பர் உறைகளும்
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 15
- கவிதை
- கால காலன் “நெருஞ்சி” கவிதைத் தொகுதி எனது பார்வையில்
- ஆலமும் போதிக்கும்….!
- மீண்ட சொர்க்கம்
- அதையும் தாண்டிப் புனிதமானது…
- சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பிர்த்வ்ஸ் ராஜகுமாரன் – மீரான் மைதீன் பதிவுகள்
- இஸ்லாமிய அரசியலில் மாற்றுவாசிப்பு
- “தா க ம்”
- விளிம்பு நிலை மக்களின் உளவியல்: நீர்த்துளி: சுப்ரபாரதிமணியனின் புதிய நாவல்
- விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தெட்டு
- அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 4ஆம் கருத்தரங்க நிகழ்வு
- மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள்: கருத்தரங்கம்.
- உயிர்த்தலைப் பாடுவேன்!