நன்றி. வணக்கம்.

This entry is part 5 of 45 in the series 4 மார்ச் 2012

மெல்பேர்ணில் தமிழ்ப்பாடசாலைகள் களை கட்டத் தொடங்கின. இந்தத் தடவை பேச்சுப்போட்டிக்குரிய விடயதானத்தை மாணவர்களும் பெற்றோரும் தெரிவு செய்யலாம் என்று நிர்வாகத்தினர் சொல்லியிருந்தார்கள். இந்த மாற்றம் மோகனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஒவ்வொரு தடவையும் பாரதியார், திருவள்ளுவர், நாவலர் என்று நிர்வாகம் எழுதிக் கொடுத்ததை – மாணவர்கள் ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ எழுதி ஒப்புவிப்பார்கள். ஒவ்வொரு வருடமும் இரண்டாவது அல்லது மூன்றாவதாக வரும் மகனை இந்தத்தடவை முதல் ஸ்தானத்திற்கு உயர்த்தி விடலாம். புரட்சிகரமான வசனங்களாக எழுதி புழுதி கிழப்பிவிட வேண்டும். எழுத்தும் இயக்கமும் – மோகன்; பேச்சு விமேஷ் என்றாள் மனைவி வேணி.

இன்ரநெற்றில் பத்துக் கட்டுரைகளை வாசித்து, பதினொன்றாவதை சிருஷ்டி செய்தான் மோகன். “பெண்ணியம், பன்னிரண்டு வயதுப் பிள்ளைக்கு ஏற்றது அல்ல!” என்று முடிந்த முடிபாகக் கூறிவிட்டாள் வேணி. அதைப் பற்றியெல்லாம் மோகன் கவலைப்படவில்லை. பிள்ளையை முதலாவது இடத்திற்கு வரச் செய்வதே அவனது குறிக்கோள். எழுதிய பேச்சைத் திரும்ப வாசித்துப் பார்த்ததில் தனக்கும் விளங்கவில்லை என்றான் மோகன். அப்படி என்றால் வெற்றி நிட்சயம் என்றாள் வேணி.

மகன் விமேஷ் கஷ்டப்பட்டு நாள்தோறும் பாடமாக்கினான். நடுச்சாமத்தில் எழுப்பி – தட்டிக் கேட்ட போதெல்லாம் தொனி தவறாமல் சுருதி பிசகாமல் பேசினான் அவன். எத்தனையோ பிள்ளைகள் தமிழை ஆங்கிலத்தில் எழுதி வைத்து, ‘எனக்கு தமில் நன்றாக வரும்; ஆனால் வராது’ என்று சொவது போல் அல்லாமல் தன் மகன் தமிழிலேயே பேசுவதையிட்டு பெருமிதம் கொண்டான் மோகன். தொடக்கமே கதிகலங்கிப் போக வேணும். பூமியிலே யாவரும் சமம் என்பதை வலியுறுத்தும் வகையில் ‘பொதுவான வணக்கம்’.

போட்டி வந்தது. பெற்றோரை சுதந்திரமாக விட்டதால் பங்குபெறும் மாணவர் தொகை உயர்ந்திருந்தது. ‘நாரதர்’ கோபாலும் தனது மகனைக் கூட்டிக் கொண்டு வந்திருப்பதாக குண்டொன்றைப் போட்டாள் வேணி. கோபாலின் இரண்டு பிள்ளைகள் மோகனின் பிள்ளைகளுடன் பாடசாலையில் படிக்கின்றார்கள். போட்டி போடுகின்றார்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் மோகனுக்கும் கோபாலுக்குமிடையே ஒரு பிரச்சினை நடந்தது. நடந்து முடிந்த தரம் 12 பரீட்சையில் மோகனின் மகளுக்கு நல்ல புள்ளிகள் கிடைத்திருந்தன.
“என்ன உங்கடை பிள்ளைக்கு பெரிசா றிசல்ஸ் சரிவரவில்லைப் போல கிடக்கு” என்றான் மோகன்.
“உங்கடை பிள்ளை ஏழாம் வகுப்புப் படிக்கேக்கையே விடிய ஐஞ்சு மணிக்கு எழும்பி படிக்கத் தொடங்கி விட்டாள். ஒவ்வொரு பாடத்துக்கும் இரண்டு மூண்டு இடங்களிலை ரியூசன். 12ஆம் வகுப்புப் படிக்கேக்கை கேட்கவே தேவையில்லை. ஒவ்வொரு பாடத்துக்கும் மூண்டு நாலு இடம் போயிருப்பாள். பிள்ளை நித்திரை கொண்டாளோ தெரியாது” கோபத்தில் கத்தினான் கோபால்.

“ஏன் கோபப் படுகிறியள் கோபால்? பரீட்சை எண்டது இப்ப போட்டி. போட்டி இறுதியிலை ஆர் வெற்றி பெறுகின்றார்கள் என்பதுதான் முக்கியம். எப்படிப் பரீட்சைக்குத் தயார் செய்தார்கள் என்பது முக்கியமல்ல. எங்கடை பிள்ளைக்கு படிக்கிறதெண்டா ‘கிறேஷி’. படிக்குதுகள்” பணிவாகச் சொன்னான் மோகன்.
“அப்பிடியில்லை. உங்களிட்டைப் பணமிருக்கு. ஆடுறியள்.”
“இல்லைக் கோபால், பரம்பரையிலும் தங்கியிருக்கு.” கோபாலும் மனைவியும் படிக்கவில்லை என்பதைப் குத்திக் காட்டினான் மோகன்.
சண்டை வலுத்தது. கொஞ்ச நாட்களாக இரண்டு குடும்பங்களிற்கிடையேயும் தொடர்பில்லை. இப்போதுதான் பகைமை மறந்து பழகத் தொடங்கியிருந்தார்கள்.

விமேஷ் பேசும் முறை வந்தது. அவனிற்கு வணக்கத்திற்குப் பிறகு எதுவுமே வர மறுத்தது. சபைக் கூச்சத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டான். பலமுறை முயற்சி செய்து பார்த்தான். ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. ருஷ்யப்புரட்சி… சீனப்புரட்சி… ஒன்றுமே செய்ய முடியாமல் திக்கு முக்காடினான். ‘ஞான்சி ராணி இல்லையேல்’ மேடைத் திரைச்சீலைக்குள் ஒளித்து நின்று அடியெடுத்துக் கொடுத்துப் பார்த்தான் மோகன். ‘ஞாபகம் இல்லையே!’ என்று விமேஷ் மனம் சொன்னது. அவன் எப்படித்தான் இந்தப் பேச்சை முடித்து வரப்போகின்றான் என வேணியும் மோகனும் பயந்தார்கள். புலம் பெயர்ந்த நாட்டில் பிள்ளைகள் எதை மறந்தாலும் ‘நன்றி. வணக்கம்’ என்று சொல்வதை மறக்க மாட்டார்கள். அதை அவர்கள் சொல்லும் ‘ஸ்ரைல்’ – “நன்றி, வணக்கம்”. அது அவனுக்கு இப்போது கை கொடுத்தது. சொல்லிவிட்டு ஓடி வந்துவிட்டான் விமேஷ்.

தலையைக் குனிந்தபடி மோகனும் வேணியும் நின்றார்கள். எப்போது முடியும் என்று காத்திருந்தார்கள்.

கூட்டங்களுக்கு விழாக்களுக்கு போவதில் சில சங்கடங்கள் உண்டு. வேண்டுமென்றே ‘சிண்டு’ முடிவதற்கென சிலர் வருவார்கள். ‘நாரதர்’ கோபால் கூட அப்பிடித்தான். நாரதர் வீட்டிற்கு இன்னமும் போகவில்லை என்று மோகனுக்கு நினைவு படுத்தினாள் வேணி.

நாரதர் கலகங்கள் நன்மையில்தான் முடியும். ஆனால் இந்த நாரதர் கிழப்பும் கலகங்கள் ஒருபோதும் நன்மையில் முடிந்ததில்லை. இன்றைய விமேஷின் பேச்சை நாரதர் நிட்சயமாக கூறு போட்டு விடுவார். நிகழ்ச்சி முடிந்து போகும்போது நாரதர் வாசலுக்கு சமீபமாக யாரையோ ‘கடிப்பதற்காக’ நின்றார்.
“மாணவர்களை சுயமாக எழுதி பேச வைக்க வேணும் எண்டு நீங்கள் நினைச்சியள்! இப்ப பார்த்தியளோ பேரிடியை… பெண்ணியம், பின் நவீனத்துவம் அது இதெண்டு பிள்ளைகளுக்கு உதவாத தலைப்புகளிலெல்லாம் பேசுகின்றார்கள். மாணவர்கள் எங்கே சுயமாக எழுதுகின்றார்கள். திரும்பவும் பெற்றார்தான் எழுதிக் குடுக்கிறார்கள்.” பாடசாலை அதிபருடன் பேச்சுக் கொடுத்தான் கோபால். அதிபர் ஒன்றும் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டு நின்றார்.
“பிள்ளைகளை முன்னேற விடாமல் தடையாக இருப்பவர்கள் பெற்றோர்கள்தான்” தானே முடிவையும் சொன்னான் கோபால்.

“கொஞ்சம் உதிலை நிண்டு கொள்ளும் வேணி. ரொயிலற் போட்டு வாறன்” நேரத்தைத் தாமதித்தால் நாரதரைத் தவிர்த்து விடலாம் என்பது மோகனின் எண்ணம்.

நேரத்தைக் கடத்தினாலும் நாரதர் அவ்விடத்தை விட்டு நகர்வதாக இல்லை. நாரதர் வெளியே விஷயத்தை முடித்துக் கொண்டு, அவராகவே இவர்களைத் தேடி உள்ளே வருகின்றார். இதழ் பிரித்து ஏதோ சொல்ல விழைகின்றார்.

அதற்கிடையில் வேணி தன் இரு கரங்களையும் கூப்பியவாறே “நன்றி. வணக்கம்.” என்று சொல்லிக் கொண்டு, கதவை வேகமாகத் திறந்து நழுவினாள்.
“எட எனக்கு இது தெரியாமல் போயிற்றே” என்றார் மோகன்.
“இந்த விசயத்தில் எனக்கு, எனது மகன் விமேஷ்தான் குரு” என்றாள் வேணி. மகன் கிழப்பிய புழுதியில் குடும்பமே மறைந்து தப்பித்தார்கள்.

Series Navigationநன்றி கூறுவேன்…ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 9)எழில் இனப் பெருக்கம் ஓர் எச்சரிக்கை
author

கே.எஸ்.சுதாகர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *