மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 16

This entry is part 18 of 45 in the series 4 மார்ச் 2012

போங்கடா பன்னாடை பசங்களா! ராட்சசனுமில்ல பூதமுமில்லை. அநேகமாக எந்த ராசாவாவது படையெடுத்துவரலாம். கேட்டால் கோவணத்தை அவிழ்த்துகொடுங்க அதைத் தவிர கொடுக்கறதுக்கு என்ன வைத்திருக்கிறோம். நமக்கு கோழி, பன்றி உயிரு மயிரு எல்லாமொன்றுதான்

17 சின்னான்தான் முதன்முதலாகப் பார்த்தான்.

காலை தகப்பன் தொப்புளான் ஆண்டைவீட்டுக்குப் புறப்பட்டு போனதும் மண்னாங்கட்டி செய்த முதல் வேலை கவிழ்த்துவைத்திருந்த கூடையைத் திறந்துவிட்டது. கோழிகள் குப்பைமேட்டை நோக்கி ஓடின. குடிசையின் பின்புறம் பூசனிக்கொடிகளைத் தாண்டிச் சென்று பன்றிகள் அடைத்துவைத்திருந்த பட்டியைத் திறந்துவிட்டுத் துரத்தினாள். இனி முழுப்பொழுதும் அவை கோரைகாட்டில் கொட்டிக் கிழங்குகளைத் தோண்டிக்கொண்டிருக்கக்கூடும். அந்தி சாய்ந்ததும் தகப்பன் வீடு திரும்புவதற்கு முன்பாக அவற்றை பட்டியில் அடைக்கவேண்டியது மூத்தவன் வேலை. இனி மண்ணாங்கட்டி நாள் முழுதும், தேசம்மா பண்ணைவேலைகள் முடிந்து முதல் சாமத்தில் திரும்புவரை, ஒரு வயது தம்பியை சுமந்து திரிய வேண்டும். குழந்தையை இவளிடம் ஒப்படைத்தபோது “பொழுதுக்கும் என்னால் அவனை சுமந்துகொண்டு சுற்றிவரமுடியாதெனச் சொல்லிப்பார்த்தாள். தேசம்மாள் அதைக்காதில் வாங்காதவள்போல கிளம்பிப்போனாள். இடுப்பில் தம்பியைச் சுமந்துகொண்டு சினேகிதர்களைத் தேடிபோனாள். அவர்கள் இவளைத் தேடி எதிரே வந்தார்கள். முதலில் பையன்கள் பறித்துக்கொடுத்த அரளிப்பூவைப் பெண்கள் தலையில் சூடிக்கொண்டார்கள். அங்கிருந்து கும்பலாக தெற்கு திசையிலிருந்த கால்வாயைத் தேடி போனார்கள். சிறிது நேரம் வாய்க்காலில் இறங்கி ஒருவர்மீது ஒருவர் நீரை வாரி இறைத்தார்கள். பின்னர் ஒரு பக்கமாக தேங்கிநின்ற நீரில் பாத்திக்கட்டி தண்ணீரை வடிகட்டிய பின்பு சேற்றில் துள்ளிய கெண்டையையும் கெளுத்தியையும் பிடித்து வரப்பில் போட்டார்கள். இடுப்பில் கொஞ்சம் கூடுதலாக துணி சுற்றியிருந்தவர்கள் அவற்றை மடியில் கட்டிக்கொண்டார்கள். இரு நாய்கள் சேர்ந்திருந்த காட்சியை காண நேர்ந்தது. கல்லால் அடித்தபடி நாய்கள் இரண்டையும் துரத்திக்கொண்டு வடதிசைக்காய் ஓடினார்கள். பிறகு நின்றார்கள்.

– தோப்புக்கு பக்கம் போய் விளையாடலாமா? மண்னாங்கட்டியைபார்த்து சின்னான் கேட்டான்.

– எதுக்கு? – மண்னாங்கட்டி அச்சத்துடன் கேட்டாள்

– வெள்ளாடலாம்..

– நான் வரலை. அம்மாந்தூரமெல்லாம் நன் வரமாட்டேன். நீங்கவொண்ணா போங்க

அவளுக்கு சித்தியும் தகப்பனும் ஈச்சம்புதருக்குக்குப்பின்னே விளையாடியது நினைவுக்கு வந்தது. எங்க சித்தி அஞ்சாறுமாசமா பேயறைஞ்சு கிடக்ககிறாள்.

அவளுக்கு வேறுகாரணங்களும் இருந்தன. ஒருவயது தம்பி மூக்கொழுக இடுப்பில் தோளைப்பற்றிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அவனை சுமந்துகொண்டு அத்தனைதூரம் நடக்க அவளுக்கு முடியாது. மூச்சுவாங்கும்.

– .ம் ஹ¥ம்..பெண்பிள்ளைகள் அனைவரும் பேசிக்கொண்டதுபோல தலையாட்டினார்கள்.

– போங்கடீ நாங்க போறோம். நீங்க வேணுமானா இருங்க.. வெள்ளையன் ராசுவைத் தொடர்ந்து ஓடினான்.

மண்ணாங்கட்டியோடு ஒதுங்கி நின்ற பெண்பிள்ளைகள் யோசிப்பதுபோல நின்றார்கள்.

– நானும் ஆம்பிளை பசங்களோடு போறேன். மண்ணாங்கட்டியின் பதிலுக்குக் காத்திராவதள்போல வீரம்மா மௌனத்தை உடைத்தாள்.

இடுப்பில் சுற்றியிருந்த கந்தையை தொட்டுப்பார்த்துக்கொண்டே, ‘நில்லுங்கடா நாங்களும் வறோமென்று ஓடினாள். மண்ணாங்கட்டி சிறிது நேரம் அசையாமல் மண்ணைப் பெருவிரலால் கிளறிக்கொண்டு நின்றாள். சேரிக்கு திரும்பிநடக்கலாமாவென யோசித்தாள். தலையை உயர்த்தி பெண்பிள்ளைகள் ஓடுவதை ஓர் அதிசயம்போல கண்கள் விரிய பார்த்தாள். எதையோ தான் இழப்பதுபோல உணர்ந்தாள். முழங்கைகொண்டு மூக்குச்சளியைத் துடைத்துக்கொண்டிருந்த சின்னானை தோளுக்கு மாற்றிக்கொண்டு மணலில் கால் புதைய நடக்கலானாள். நொய்மணல் காலைசுட்டது. நிற்பது, நடப்பதென்று முன்னேறினாள். சிறிதும் நடந்திருப்பாள். சுடுமணலில் உட்கார்ந்தாள், வெகுதூரத்தில் பையன்கள் முதலிலும் பெண்கள் அடுத்தும் சரிவில் இறங்கிக்கொண்டிருந்தனர்.

ஓடிய சின்னான் மூச்சிறைக்க நின்றான். எதிர் திசையில் கையைக் காட்டிக்கொண்டு ஏதோ சொல்லவந்தான். அவன் கைகாட்டிய திசையைப் பார்த்தார்கள். தூரத்தில் பூமியும், வானமும் சேருமிடத்தில் அடர்ந்த புகைஎழுவதுபோல தெரிந்தது. கதம்பமான இரைச்சல் ஏதோ வெள்ளம் வருவதுபோல. ஓரிரு நொடிகள் நின்று காட்சியில் இலயித்துகொண்டிருந்த பையன்களின் முகத்தில் சட்டென்று அச்சம் கவ்வியது. சிநேகிதர்களிடம் விளக்கிச் சொல்ல நேரமில்லை, பின்புறம் கால்கள் தொட ஓடினான். அவன் திரும்பி ஓடுவதை தாமதமாகத்தான் சிநேகிதர்கள் விளங்கிக் கொண்டிருக்கவேண்டும். அவர்கள் ஓடத் தொடங்கியபோது சேரிக்குள் இருந்தான். குடிசைகளில் முடங்கிகிடந்த கிழங்கட்டைகளிடம் சின்னத் தம்பி ஆரம்பித்துவைத்ததை மற்றபையன்கள் முடித்துவைத்தார்கள். பெண்பிள்ளைகள் வாய் திறக்கக்கூடாதென்பதால் அமைதியாகக் பையன்கள் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தார்கள். கிழவன் எட்டியானிடமிருந்து அலட்சியமாக பதில் வந்தது.

– போங்கடா பன்னாடை பசங்களா! ராட்சசனுமில்ல பூதமுமில்லை. அநேகமாக எந்த ராசாவாவது படையெடுத்துவரலாம். கேட்டால் கோவணத்தை அவிழ்த்துகொடுங்க அதைத் தவிர கொடுக்கறதுக்கு என்ன வைத்திருக்கிறோம். நமக்கு கோழி, பன்றி உயிரு மயிரு எல்லாமொன்றுதான்.

ஆனாலும் வேடிக்கைப்பார்க்க பையன்களைத் தொடர்ந்து, சேரியில் வேலையின்றி வீட்டில் முடங்கிக்கிடந்வர்கள் வந்தார்கள். சேரியின் மூத்தகிழவன் எட்டியான் கூட தடியூன்றிக்கொண்டு புறப்பட்டு வந்தார். சேரி கலவரப்பட்டது. நடவு வேலையிலிருந்த பெண்களும், களையெடுத்த பெண்களும், மரத்தில் ஏனைகட்டி அதில் போட்டிருந்த சிசுவிற்கு பாலூட்ட நிழலைத் தேடிக்கொண்டிருந்த பெண்களும் வடக்குத்திசைக்காய் வேகமாய் காலெடுத்து நடந்துபோகும் கூட்டத்தைக் காரணம் கேட்டு அலுத்துப்போனார்கள். இசை பாட்டு பாடிக்கொண்டிருந்த ஆனந்தாயிக்கு கோபம் வந்தது.

– ஏண்டி சிறுக்கிகளா, அப்படி அங்கே என்ன நடக்குது? ஏனிந்த ஓட்டம் சொல்லித் தொலையுங்களேன்.

– கிழவி எதற்காக இந்த கூச்சல் போடற. வடக்கேயிருந்து செஞ்சி இராசா வராராம். பார்க்கலாம்னு போறோம்.

– அடியே அரசனை நம்பி புருஷனை கைவிட்டுட வேணாமடி. வேண்டு மானா செஞ்சி ராசாவை எனக்குப் படிவாராண்ணு கேட்டுவா. கிழவன் செத்த நாளா சும்மா கிடக்கேன்.

– பொக்க கிழவி இசைபாட்டுக்கு இறங்கி வருவாரா ராசா? அவருக்கு தாசி மீனாம்பாள் பொண்ணுபோல எல்லாம் இளசா இருக்கோணுமே. பாட்டு மாத்திரம் இளசாயிருந்தா போதுமா? -தாழமடலை தலையில் வைத்துக்கொண்டே கழனியில் இறங்கிய பார்வதம் கேட்டாள்.

மணல் மேட்டிலிருந்து பார்க்க வடதிசையில் இறையெடுத்தும் திரும்பும் எறும்புப்புள்ளிகள்போல தலைகள் தெரிந்தன. கண்கள் கூசின. ஆகாயத்தில் சூரியன் வெள்ளித் தட்டுபோல பிரகாசித்துக்கொண்டிருந்தான். பூமி கொதிநிலைக்கு வந்துவிட்டதென்று உணர்ந்ததைப்போல எஞ்சியவெப்பம் காற்றில் ஒளிந்து தகித்தது. பரிவாரம் நெருங்க மனிதர்கள் விலங்குகளென பேதம் செய்து கண்கள் பார்த்தன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஊற்றுநீர்போல மன்னர் பரிவாரம் சுரப்பதும் முன்னேறுவதுமாக இருக்கிறது. கானல் நீரொத்து அலையலையாய் மெல்லிய துள்ளளுடன் முன்னேறிய வரிசை, நேரம் ஆக ஆக திரையை விலக்கிக்கொண்டு நிழலுருவங்களாக வெளிப்பட்டன. வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த குடியானவர்களில் ஒருவர்; என் வாழ்நாளில் சேர்ந்தாற்போல இவ்வளவு வீரர்களையும், விலங்குகளையும் கண்டதில்லை என்றார். இதென்ன படை சோழமன்னன் சிதம்பரத்திற்கு விஜயம்செய்தபோது கடல்போல ஆர்ப்பரித்துக்கொண்டு வந்ததை என் பாட்டன் நேரில் கண்டிருக்கிறார். அதை பலமுறை எங்களிடம் சொல்லியுமிருக்கிறார். சாமியாடி கூட கேட்டிருக்கிறான், உண்மையா இல்லையா? பக்கத்தில் நின்றிருந்த சாமியாடி என்ற தன் சினேகிதனை சாட்சிக்கு அழைத்தான் ஒருவன்.

தள்ளி நில்லுங்கள் குதிரைகள் யானைகளென்று அடுக்கடுக்காய் வருகின்றன. யானைகள் மிரண்டால் ஆபத்து. ஏதோ நாம்தான் காரணமென்பதுபோல தண்டித்தாலும் தண்டிப்பார்கள் எதற்கும் வழிவிட்டு தள்ளி நில்லுங்கள். வயதான ஆசாமியின் குரலை ஆமோதிப்பது போல இரண்டு குதிரைகள் பாய்ந்துவந்தன. குதிரைகளிலிருந்த படியே தள்ளி நில்லுங்கள் தள்ளி நில்லுங்கள் என்று ஆணையிட்டார்கள். ஏய் உங்களைத்தான்! முன் வரிசையில் நின்றிருந்த இரண்டு இளைஞர்கள் தலையை உயர்த்தினார்கள். தலையில் கட்டியிருக்கிற உருமாலையை இடுப்பில் கட்டிக்கொண்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்துங்கள் என்றார்கள். அவர்களுக்கு இந்தப் புதிய உத்தியோகம் தந்த மகிழ்ச்சியை இடுப்பில் துண்டைக்கட்டிய தோரணையிலும் கண்களில் திடீரென்று எண்ணையிட்டதுபோல பரவிய பளபளப்பிலும் விளங்கிற்று.

அரசர் பரிவாரம் சிதம்பரத்தின் எல்லையைத் தொட்டிருந்தது. தெருவெங்கும் குடியானவர்கள் நீர்த் தெளித்து கோலம் போட்டிருந்தார்கள். முன்னதாக பறை அடித்து அரசர் வருகையை ஊர்மக்களுக்குத் தெரிவித்திருந்தார்கள். தெருவெங்கும் மாவிலை தோரணங்கள். குருத்தோலை பின்னல்களும் சடைசடையாய் தெருக்களை அலங்கரிந்திருந்தன. தோரணவாயில்களென்று கருதப்பட்ட தெருமுனைகளில் கம்மபங்களை நிறுத்தி வாழைமரங்களை குலைகளுடன் கட்டியிருந்தனர். இளநீர் குலைகளும் பனங்குலைகளுங் கூட கட்டிதொங்கவிட்டிருந்தனர். பெண்கள் காலையிலிருந்தே ஏதோ திருவிழாவுக்குக் கிளம்புவதுபோல தஙகளை அலங்கரித்துக்கொண்டு சாளரங்களிலும் சன்னல்களிலும் தெருக் கதவில் ஒளிந்தும் காத்திருந்தனர். ஆண்களும் பட்டுபீதாம்பரம் உத்தரீயம், மார்பில் சந்தணமென்று வளையவந்தனர். அண்மைக்காலங்களில் தொண்டைநாட்டில் பெருகியிருந்த நாயக்கரின மக்களில் சிலர் நெற்றியில் திருநாமத்தை குழைத்துப்போட்டுக்கொண்டு, நாங்கள் செஞ்சி நாயக்கருக்கு உறவுகளெனக் காட்டிக்கொண்டனர். பல்போன கிழங்கள் வெற்றிலை உரலுடன் காலையிலேயே திண்ணையில் இடம்பிடித்து காத்திருந்தனர்.

குதிரைகளின் குளம்படிகள், காளைகளின் சலங்கையொலி, வண்டி அச்சுகளில் சுழலும் குடங்களின் கரடுமுரடான சத்தங்கள், தொடர்ந்து கர்ப்பிணிப்பெண்களை அச்சப்தத்தை கேட்டால் ஆபத்து என எச்சரிக்கும் கிழங்களின் குரல்கள். தூசிமண்டலத்துக்கிடையில் வேலேந்திய காவலர்கள் நடந்துவந்தார்கள். சீராக எடுத்துவைத்த வீரர்களின் காலடிகளால் தில்லை தெருக்கள் ஒர் அடி கீழே இறங்கிப்போனதாக அதற்க்குப்பின் வெகுநாட்கள் தில்லைமக்கள் புலம்பியிருக்கிறார்கள். அவர்கள் இடுப்பில் தார்பாய்ச்சிய வேட்டியும், தலைப்பாகையும் அணிந்திருந்தார்கள். அவர்கள் பின்னே குதிரைகள், மெலிந்த கால்களை துடிப்பாக எடுத்துவைத்து நடந்தன, முன்வரிசையிலிருந்த ஆறுகுதிரைகளும் செம்மண்நிறத்தில் இருந்தன., பட்டுகொண்டு அலங்கரிக்கப்பட்ட அவற்றின் தலைகளில் மெல்லிய வென்சிறகுகள் கொத்தாக சிரித்தன. முகத்திலிட்ட கடிவாளம் புதுபொலிவுடனிருந்தது. அதன் வார்கள் வேலேந்திய காவலர்களின் நரம்பேறிய கைப்பிடிக்குள் நுழைந்து புறப்பட்டன. அவர்கள் ஆறூபேரும் செஞ்சி நாயக்கரின் ஆபத்துதவிகள் படையைச் சேர்ந்தவர்கள். அவர்களைத் தொடர்ந்து இரண்டு வரிசையில் வேலை உயர்த்திப்பிடித்தபடி குதிரைவீரர்கள். குதிரைகள் கால்களைச் சொடக்குபோட்டு நடக்கும்போது வீரர்களின் கைகளிருந்த வேல்கள் அளவாய் உயர்ந்து அடங்குவதை சிலர் ரசித்தனர். பட்டு பீதாம்பரம் உடுத்தி வேதகோஷங்களை எழுப்பிக்கொண்டு பார்ப்பனர்கள் வந்தார்கள். அவர்கள் பின்னே கம்பீரமாக அசைந்துவரும் ஓர் ஆனை. சரிகைவேலைப்பாடுகொண்ட சிவப்பு பட்டிலான துணி அதன் முதுகை அலங்கரிந்திருந்தது. முகத்தில் பொன்மஞ்சளில் ஒரு நெற்றிப்பட்டம் சுற்றிலும் வெண்முத்துகள்கோர்த்த அலங்காரவேலைகள். முதுகுக்கு மாலையிட்டதுபோல பளபளத்துத் தொங்கிக் கொண்டிருந்த பித்தளை சங்கிலியில் இருமுனைகளிலும் வெண்கல மணிகள். அவற்றின் நாக்குகள் ஆனை காலெடுத்து வைக்குந்தோறும் கணீர் கணீரென்று அடித்து கூட்டத்தை பிரமிக்கவைத்தன. முதுகிலொருவன் நடுவில் திருநாமமும் இருபக்கமும் சங்கு சக்கரம் தரித்த பதாகையொன்றை ஏந்திவந்தான். பதாகைக்கு குடைபிடித்தபடி, மற்றொருவருனும் ஆனையில் அமர்ந்திருந்தான். அவனுக்கு முன்பாக பக்கத்திற்கு மூவரென கொம்பூதிகள். அவ்வப்போது அவர்கள் எக்காளமிட்டனர். ஒன்றன் பின் ஒன்றாக அலங்கரிந்த பல்லக்குகள். சிதம்பரத்தில் பல்லக்குகளைப் பார்த்து பரிச்சயமானவர்கள் முன்னால் வருவது சோழகனாருடையது, இரண்டாவது பல்லக்கு ராஜகுருவுடையது, அதோ அது பிரதானியுடையது என்று கூறி கூட்டத்தில் தாங்கள் எல்லாம் அறிந்தவர்கள்போலக் காட்டிக்கொண்டார்கள்.

திடீரென்று ஒரு குரல் உரத்துக்கேட்டது:

– வெண்குட்டம்பிடித்த அந்த ஆசாமியை வரிசையில் சேர்க்காதீர்கள்.

எதிர்வரிசையிலிருந்து வந்த குரலைக்கேட்டு, கூட்டத்தில் முன்வரிசையில் நின்றவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். கறுப்பு அங்கியும் தலையில் அதே நிறத்தில் வினோதமானதொரு தலைப்பாகையும் அணிந்திருந்த மனிதனைக் கண்டு வந்த வார்த்தை அது.

– யாரய்யா நீர்? தள்ளிப்போ வேறு எங்கேனும் போய் நில்.

பிரச்சினைக்குரிய மனிதர் தலையாட்டினார், பின்னர் மறந்துபோனதை நினைவுபடுத்திக்கொண்டவர்போல மெல்ல சிரித்தார். பெற்றோர்களின் தோள்மீதமர்ந்து ஊர்வலத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பிள்ளைகள் சிலர் கொல்லென்று சிரித்தனர்.

கூட்டத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டு இரு வீரர்கள் தொடர குதிரையில் வந்த இளைஞன், அம்மனிதருக்கு நேராக குதிரையிலிருந்து சட்டென்று குதித்தான். மிகவும் இளம் வயதினனாக இருந்தான். பூனை ரோமங்கள் உதட்டில் தலைகாட்டியிருந்தன. இளம்பெண்ணுகுரிய மெலிதான் உதடுகள், அடர்த்திக்காணாத புருவங்கள். சிவப்பாகவும் களையாகவுமிருந்தான்.

கூட்டத்தில் அந்நியப்பட்டிருந்த மனிதரைப்பார்த்து வணங்கினான். பின்னர் அவரிடம்:

– நீங்கள் வெளிதேசத்தவரென்று நினைக்கிறேன். நீங்கள் பாதரே பீமாண்ட்டாதானே?

– நீங்கள்?

– எனது பெயர் வேங்கடவன். கொள்ளிட பாளயக்காரரின் மகன். எங்கள் ஒற்றர்கள் நீங்கள் யாரென்ற தகவலைத் தெரிவித்திருந்தனர். கைதுசெய்வதென்றுகூட தீர்மானித்திருந்தோம். பின்னர் உங்களால் ஆபத்தெதுவும் மன்னருக்கு வராதென்பதை உறுதிசெய்துகொண்டு அந்த எண்ணத்தைக் கைவிட்டோம். எனக்கு உங்களோடு பேச நிறைய இருக்கிறது. மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கரின் சிறப்பு விருந்தாளி நீங்கள். உங்களுக்கு வேண்டிய உதவிகள் செய்யுமாறு செஞ்சியிலிருந்து மன்னர் புறப்படும்முன்னரே திருமந்திர ஓலைநாயகத்திடமிருந்து ஆணை எங்களுக்கு வந்துவிட்டது.

– மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் வாழ்க! கிருஷ்ணபுர பெருந்தகை வாழ்க! என்ற குரல்கள் மன்னர் பல்லக்கு நெருங்கிக்கொண்டிருப்பதை தெரிவித்தது. வேங்கடவனும், பாதரே பீமாண்ட்டாவும் ஒதுங்கிநின்றார்கள்.

(தொடரும்)

Series Navigationபிரக்ஞை குறித்தான ஒரு வேண்டுகோள்வியாசனின் ‘ காதல் பாதை ‘
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *