பஞ்சதந்திரம் தொடர் 33- பாருண்டப் பறவைகள்

This entry is part 37 of 45 in the series 4 மார்ச் 2012

ஹிரண்யனின் மனவருத்தம்

தென்னாட்டில் பிரமதாருப்யம் என்றொரு நகரம் இருக்கிறது. அதன் அருகாமையில் ஒரு சிவன்கோயில் உண்டு. அதை ஒட்டினாற்போல் இருந்த ஒரு மடாலயத்தில் பூடகர்ணன் என்றொரு சந்நியாசி இருந்து வந்தான். சாப்பிடுகிற வேளையில் பிச்சைப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவன் நகரத்திற்குப் போவான். சர்க்கரையும் வெல்லப் பாகும் மாதுளம் பழமும் கலந்த, வாயில் வைத்தவுடன் கரைகிற, பல இனிய தின்பண்டங்களைப் பாத்திரத்தில் நிறைத்துக் கொண்டு மடத்துக்குத் திரும்பி வருவான். பிறகு விதிமுறைப்படி அவற்றை உண்பான். மிகுதி உணவை வேலைக்காரர்களுக் கென்று அந்தப் பாத்திரத்திலேயே வைத்து மூடி மறைத்து சுவற்றில் ஒரு முளையில் தொங்கவிடுவான். நானும் என் பரிவாரங்களும் அதைத் தின்று பிழைத்து வந்தோம். இவ்விதமாகப் பல நாட்கள் சென்றன.

எவ்வளவோ முயற்சித்து மறைத்து வைத்தபோதிலும், அந்த உணவை நான் சாப்பிட்டுவிடுவதைக் கண்ட அந்தச் சந்நியாசி என்மீது வெறுப்பும் பயமும் கொண்டான். சோற்று மூட்டையை இடம் மாற்றியும் உயர உயர மாட்டியும் பார்த்தான். எல்லாம் வீண். நான் அதைச்சிரமமின்றி எட்டிப் பிடித்துச் சாப்பிட்டு வந்தேன்.

பிறகு ஒருநாள் பிருஹத்ஸ்பிக் என்ற முனிவர் ஒருவர் தீர்த்தயாத்திரை போகிற போக்கிலே அங்கு வந்து சேர்ந்தார். பூடகர்ணன் அவருக்கு நல்வரவு கூறி உபசாரங்கள் பல செய்தான். அவருடைய களைப்பைப் போக்கினான். இரவிலே இருவரும் படுக்கையில் படுத்துக்கொண்டு அறவழிப்பட்ட பல கதைகளை ஒருவர்க்கொருவர் சொல்லிக்கொள்ளத் தொடங்கினார்கள். பூடகர்ணனின் நினைவெல்லாம் எலியைப் பற்றித்தான் இருந்தது. பிளந்த மூங்கில் கழி ஒன்றைக் கையில் கொண்டு பிச்சைப் பாத்திரத்தை அடிக்கடி தட்டிக்கொண்டிருப்பதிலேயே அவனுடைய மனம் லயித்திருந்தது. கதை சொல்லும் தபஸ்விக்கு அவன் சரியாகப் பதில் சொல்லவில்லை.

ஆகவே, விருந்தாளிக்குக் கோபம் வந்துவிட்டது. ‘’பூடகர்ணனே, உனக்கு என்மேலிருந்த அன்பு போய்விட்டது என்பதைத் தெரிந்து கொண்டேன். என்னிடம் நீ மனம்விட்டுப் பேசவில்லை. இரவு வேளையாயிருந்தாலும் பரவாயில்லை. இப்பொழுதே உன் மடத்தைவிட்டு வேறு எங்காவது போய் விடுகிறேன்.

‘’வாருங்கள்! உள்ளே வாருங்கள்! இப்படி ஆசனத்தில் உட்காருங்கள்! சௌக்கியம்தானே? உங்களைப் பார்த்து எத்தனையோ நாட்களாயிற்றே! என்ன சேதி? ஏன் இப்படி இளைத்து விட்டிருக்கிறீர்கள்? உங்களைப் பார்த்ததில் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா?’’ இப்படித்தான் அன்புள்ளவர்கள் விருந்தாளிகளிடம் பலவாறான ஆதரவு மொழிகள் பேசுகின்றனர். இப்படிப்பட்டவர்களின் வீட்டுக்குத்தான் மன நிம்மதியோடு நண்பர்கள் போகத் தகும்.

விருந்தாளி வந்ததும் மேலும் கீழும் பார்க்கிறவனுடைய வீட்டுக்கு யார் விருந்துண்ணச் செல்கிறானோ அவன் கொம்பில்லாத மாடுதான்.

அன்பு கனித்த வரவேற்பு இல்லாத வீட்டுக்கும், இனிய சொற்கள் வழங்கி உபசரிக்காத வீட்டுக்கும், நல்லதையும் கெட்டதையும் மனம்விட்டுப் பேசாத வீட்டுக்கும், போகாதே!

என்று பழமொழிகள் கூறுகின்றன. கேவலம் இந்த ஒரு மடத்துக்குச் சொந்தக்காரன் என்ற மமதையால் நீ நமது நட்பை மறந்துவிட்டாய். இந்தப் பழமொழிகளின் உண்மையைப் புரிந்துகொள்ளாமற் போய்விட்டாய்! நீ மடத்தில் இருந்து வருகிறாய் என்றாலும் உண்மையிலேயே நீ நரகத்தில்தான் இடம் பிடித்துக்கொண்டிருக்கிறாய். எப்படி என்றால்,

நரகத்திற்குச் செல்ல உனக்கு விருப்பமா? இதோ ஒரு வழி சொல்கிறேன். ஒரு வருஷத்திற்குப் புரோகிதனாயிரு! நரகத்துக்குப் போய் விடலாம். இன்னும் சடுதியிலே போய்ச் சேர விருப்பமா? அப்படியானால், நீ மூன்று நாட்களுக்கு ஒரு மடத்துக்குத் தலைவனாயிரு! போய்ச் சேர்ந்து விடலாம்.

என்றொரு பழமொழி உண்டு. என்ன இரங்கத்தக்க மடமை! இதைப் பற்றி வருந்த வேண்டியிருக்க நீ கர்வப்படுகிறாயே!’’ என்று சொன்னார் முனிவர்.

பூடகர்ணன் இச்சொற்களைக் கேட்டு பயந்து போய்விட்டான். ‘’அப்படிச் சொல்லாதீர்கள், சுவாமி? உங்களைவிட நெருங்கிய நண்பர்கள் எனக்கு வேறு யாருமில்லை. நான் கவனிக்காமல் இருந்ததற்குக் காரணம் சொல்கிறேன். கேளுங்கள். இங்கே ஒரு துஷ்ட எலி இருக்கிறது. எனது பிச்சைப் பாத்திரத்தை எவ்வளவுதான் உயரத்தில் மாட்டித் தொங்கவிட்டாலும், அது எகிறித் குதித்து ஏறி மீதம் வைத்த உணவையெல்லாம் தின்று விடுகிறது. வேலைக்காரர்களுக்கு உணவே இல்லாமல் போய்விடுகிறது. அதனால் மடத்தைத் துப்புரவாக வைத்துக்கொள்ளும் வேலைகளைச் செய்ய அவர்கள் மறுக்கிறார்கள். எனவே எலியை பயமுறுத்துவதற்காக நான் பிச்சைப் பாத்திரத்தை மூங்கில் கழியால் அடித்தவாறிருக்கிறேன். இதுதான் விஷயம். இன்னொன்றும் சொல்ல வேண்டும். தான் குதிப்பதைக் கண்டால் பூனையும் குரங்கும்கூட வெட்கித் தலை குனியும் என்ற பூரிப்புடன் இந்த எலி திரிகிறது’’ என்றான் பூடகர்ணன்.

‘’அதன் வளை எங்கிருக்கிறது என்று கண்டுபிடித்தாயா?’’ என்று கேட்டார் முனிவர். ‘’இல்லை, சுவாமி!’’ என்றான் பூடகர்ணன்.

‘’அதன் தானியக் குவியலுக்கு மேலேதான் வளையும் இருக்க வேண்டும். அதன் வாசனையை முகர்ந்துதான் எலி இப்படித் துள்ளிக் குதிக்கிறது. ஏனெனில்,

பணத்தின் வாடை பட்டால் சரி, அதுவே மனின் தேசுவைத் தூண்டிவிடப் போதுமானது. தியாக புத்தியும், தர்ம சிந்தனையுமுள்ளவன் பணத்தை அனுபவிக்கவும் செய்கிறான் என்றால், பிறகு சொல்ல வேண்டியதில்லையே!

காரணமில்லாமல் சாண்டிலித்தாய் எள்ளுக்குப் பதிலாக தேய்க்காத எள்ளை அவள் பெற்றுக்கொண்டதற்குக் காரணம் ஏதாவது இருக்கத்தான் செய்யும்.
என்றொரு வாக்கு உண்டு’’ என்றார் முனிவர்.

‘’அது எப்படி?’’ என்று பூடகர்ணன் கேட்க, முனிவர் சொல்லத் தொடங்கினார்:

Series Navigationவிஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தொன்பது”சா (கா) யமே இது பொய்யடா…!”
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *