தமிழ் ஸ்டூடியோவின் குறும்படங்கள் திரையிடல்

This entry is part 13 of 35 in the series 11 மார்ச் 2012

ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட, உலகத் திரைப்படங்களின் திரையிடலில், கொஞ்சம் புரொஜெக்டர் சொதப்பியதால், இம்முறை திரையிடும் முன்பு, ஒரு வெள்ளோட்டம் பார்த்துக் கொண்டார்கள். அப்படி ஓட்டிய குறும்படம் பொன். சுதா இயக்கிய, எழுத்தாளர் அழகியபெரியவனின் சிறுகதையான ‘ நடந்த கதை ‘

கீழத்தெரு தலித்துகளால் செருப்பு போட முடியாத அவலம். மேட்டுத்தெரு வாசிகளின் அதிகாரம், அகங்காரம். கதை நாயகன் செருப்பு போட முடியாத வெறுப்பில், கோயில் வாசலில் கிடக்கும் செருப்புகளை, யாரும் பார்க்காத போது லவட்டி, பொட்டல் காட்டில் திசைக்கொன்றாய் வீசி எறிகிறான். செருப்பு போட வேண்டும் என்பதற் காகவே ராணுவத்தில் சேருகிறான். மேட்டுத்தெருவில் பூட்சுடன் நடக்கிறான். தடுக்கும் மேட்டுக்குடி மக்களை, ராணுவ வீரன் பயிற்சிக்கு தடையாக இருந்தால், போலிசில் பிராது கொடுப்பதாகவும், சுடவும் தயார் என்று மிரட்டுகிறான். பேரனுடன், செருப்புடன் நடக்கும் ராணுவ வீரனின், வயதான காலத்தின் ப்ளாஷ் பேக்காக விரிகிறது படம். அறிவுமதியின் வர்ணனையுடன் கூடிய படம். அதை தவிர்த்திருந்தாலும் புரிந்திருக்கும். நேர்த்தியாக எடுக்கப்பட்ட குறும்படம்.

ராஜபாண்டியின் குறும்படம் ‘ வசந்தம் ‘ எச் ஹை வி நோயால் பாதிக்கப்பட்ட லாரி டிரைவர் மாணிக்கம், நாட்டாமையால், குடும்பத்துடன், ஊரிலிருந்து ஒதுக்கி வைப்பது பற்றிய கதை. அவர்களை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என்பதற்காக, ஊரின் பள்ளி வாத்தியார் அவர்கள் வீட்டில் ஒரு வாரம் தங்குவதும், கடைசியில் அவர் மயக்கம் வந்து வீதியில் விழுவதும், ஊரே அவருக்கும் எய்ட்ஸ் என்று சொல்வதும், அது இல்லை வெறும் காய்ச்சல் என்று அவர் புரியவைப்பதுமான படம். பரவாயில்லை ரகம்.

சைமன் ஜார்ஜின் ‘ பூச்சாண்டி ‘ மெரினா கதை. ஊரை விட்டு ஓடிவந்த சிறுவனைச் சூழும் நகரத்து ஆபத்துகள். இடையில் புகுந்து காப்பாற்றும் சுண்டல் விற்கும் சிறுவன். யாரையும் நம்பாத சிறுவன், கடைசியில் சுண்டல் சிறுவனை நம்பும் பாசிட்டிவ் தாட். பிச்சைக்காரனாக்க பிடித்து இழுக்கும் பீச் ரவுடியிடம், சண்டை போட்டு காப்பாற்றும் போலியோவினால் கால் ஊனமான ஒரு கதாபாத்திரமும் இப்படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஒரே களம். திரும்பத்திரும்ப நான்கைந்து பாத்திரங்கள் என்பதால் படம் முழுவதும் மத்தியான மெரினா வெக்கை.

ஒரு சிறுவனுக்கு பல் பிடுங்குவதைப் பற்றி, நல்ல நகைச்சுவையுடன் சொல்லும் படம் ‘கும்மாங்குத்து ‘ அதற்கு சப்டைட்டில் ‘ நாக்(கு) அவுட்’ டாக்டர் சிவபாலசுந்தரம் எடுத்திருக்கும் இப்படத்தின் கேமராமேனும் இவரே. சோனி ஹாண்டிகேமில் ஷ¥ட் பண்ணியிருக்கிறார். வெள்ளைச் சீருடை, வெள்ளைச் சுவர்கள், எடுத்த இடமெல்லாம் வெள்ளை டியூப்லைட்டுகள். படமே வெளுத்துப் போய் தெரிந்தது.

பல் வலியில் அவஸ்தைப்படும் ஏழு வயது சிறுவனை, டாக்டரிடம் கூட்டிக்கொண்டு வரும் தந்தை. வழியில் அவனைத் தாஜா செய்ய, அவர் வாங்கித்தரும் ஒரு பை நிறைய விளையாட்டுச் சாமான்கள், தின்பண்டங்கள். ஊசி போட்டபிறகும் ஐஸ்கிரிம் கேட்கும் சிறுவனின் நச்சரிப்பு. பல் பிடுங்கப்பட்ட ஒருவர் ( அவரும் டாக்டராம் ) சிறுவனிடம் ‘ஒன்றும் வலியில்லை ‘ என்று சொல்லிவிட்டு, வெளியில் போய் வலியால் துடிக்கும் சூப்பர் காமெடி பீஸ். கடைசியில் டாக்டர் இல்லாமலே, கோபத்தில் அப்பா விடும் கன்னக்குத்தால், வெளியில் விழும் பல். குறும்படக்காரர்கள் நினைத்ததை எல்லாம் எடுத்து விடவும், எடுத்ததை எல்லாம் சேர்த்துவிடவும் கொள்ளும் ஆர்வம் இதிலும் தெரிகிறது. காட்டியதையே காட்டுவதில் கொஞ்சம் சலிப்பு. நல்ல எடிட்டர் வேண்டும் டாக்டரின் அடுத்த குறும்படத்துக்கு.

பெஸ்ட் ஆப் தி லாட் சரத் ஜோஷியின் ‘ மெசய்யா ‘. பி எம் டபிள்யூ நிறுவனத்தின் வைஸ் பிரசிடெண்ட்டுக்கு தினமும் தண்ணியடிக்க வேண்டும். ஆஸ்திரேலியா விசா கிடைக்குமா கிடைக்காதா என்கிற மன உளைச்சல் வேறு. இரவு பதினொரு மணிக்கு எல்லா பாரும் க்ளோஸ். டாஸ்மாக் கடையும் மூடியாச்சு. கறுப்புச் சந்தையில் ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் சரக்கும் அவர் பிராண்ட இல்லை. நடுவில் போலிஸ் ரோந்து. அதனால் கிடைத்த சரக்கை எடுத்து போக முடியாத திண்டாட்டம். கடையின் அட்டாச்சுடு பாரில் குப்பைக் கூளங்களுக்கு நடுவே ‘ தண்ணியடிக்கும் ‘ அவருக்கு ஒரே கம்பெனி தேசப்பன் என்கிற சிறுவன். மீன் பிடிக்கப் போன தந்தையை கடல் போலீஸ் பிடித்துக் கொண்டு போக, சிறுவன் அனாதைகள் கேம்பில். நடுவே அவனைக் காட்டுக்கு அழைத்துப் போய் ஏதேதோ செய்யும் மொட்டை. பாதி இரவில் ஆஸ்திரேலியா விசா கிடைக்காத சோகம் பிஎம்டபிள்யூவுக்கு. கூடவே செல்போன் எடுக்காத அக்கா, நண்பி, உயிர்(!) தோழன் என்று ஏகத்துக்கு வெறுப்பேற்றல். சிறுவன் சொல்கிறான்: ‘என்னா சார் வேணும்? மூணு வேளை சாப்பாடு. எங்க வேணா தூங்கலாம். நெனச்சா வெளியில போலாம். இதவிட என்ன சார் வேணும்? ‘ தெளிவு பிறக்கிறது அய்யாவுக்கு. மறுநாள் பள்ளி விண்ணப்பத்தோடு, தேசப்பாவைத் தேடுகிறான் ஹீரோ. அவனைக் காணவில்லை. மறுபடியும் விடுதி ஆட்கள் பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள். சிறுவனுக்கு பல கொடூரங்கள் நடந்திருக்கலாம் என்கிற நாயகனின் கற்பனை பயத்தோடு முடிகிறது படம்.

குறும்படங்கள் பெரிய படங்களைப் போல தீர்வு சொல்வதில்லை போல. எல்லாமே பார்வையாளனின் கற்பனைக்கு. கருத்துப் பரிமாற்றத்தில் ஏதேனும் சூப்பர் முடிவு கிடைத்தால், அதையே திரைப்படமாக எடுத்துவிடலாம் என்கிற எண்ணம் கூட இருக்கும். இன்னொன்று திரைப்படம் போலல்லாமல் சமரசமே இல்லை இவர்களிடம். ஒரு படைப்பாளியின் கர்வத்தோடு, என் படம் இப்படித்தான் என்று வாக்குமூலம் கொடுக்கிறார்கள். இவர்களே வியாபார மாரத்தானில் எப்படியெல்லாம் மாறிப் போகிறார்கள் என்று நாம்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே!

#

கொசுறு

தமிழ் ஸ்டூடியோ சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்டதாம். ஒரு கிளப்பாக அமைப்பு இருக்கவேண்டும் என்கிற விதி இருப்பதால், ஆரம்பித்த அருணே தலைவர் ஆகிவிட்டார். மீண்டும் இந்த வருடம் தேர்தல் உண்டாம். சிறு பத்திரிக்கை போல குழு மனப்பான்மை குறும்படக் கூட்டத்திலும் உண்டு. புதியவர்களை அதிகம் பேச விடாமல், பழக்கமானவர்களையே திரும்பத் திரும்பப் பேசச்சொல்லும் தலைவர், நிகழ்வின் சுவாரஸ்யம் பற்றி அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அடுத்த மாதம் முதல் இந்த அமைப்பு எழும்பூருக்கு ( அருங்காட்சியகம் எதிரில் ) இடம் பெயரப் போகிறது.

கே கேநகர் முனுசாமி சாலையில் இருக்கும் தமிழ் ஸ்டூடியோ லேப் கட்டிடம், நடிப்பு பயிற்சிக் கூடம் நடத்தும் ஜெயராவுக்கு சொந்தமானதாம். இங்கு நடிப்புப் பயிற்சி பெற்றவர்கள், இயக்குனர்களைத் தேடிப் போவதில்லை. இயக்குனர்களை வரவழைத்து, ஜெயராவே நடிகர்களின் தனித்திறமையைக் காட்டுகிறார். அதற்கப்புறம், இருக்கும் கதைக்கு தோதானவர்களை, இயக்குனர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நல்ல ஏற்பாடு. இல்லையென்றால் ‘சர்வர் சுந்தரத்தில் ‘ நாகேஷ் நடித்துக் காட்டியது போல் ஆகியிருக்கும்.

#

Series Navigationபோதலின் தனிமை : யாழன் ஆதிமொட்டுக்கள் மலர்கின்றன
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *