முன்னுரை:
மனம் என்பது யாது?
அதன் ஸ்தூல வடிவம் யாது? அதெற்கென ஸ்தூல வடிவம் இருக்கிறதா? மூளையும் மனமும் ஒன்றா?
மூளை நம் உடல் உறுப்புகள் அனைத்தையும் இயக்கும் தலைமையகம். அறிவியக்கத்தின் கட்டுப்பாட்டையும் அதுவே கட்டுப்படுத்துகிறது.
உதாரணமாக, எது நல்லது எது கெட்டது எனத் தீர்மானிக்கிற திறன் மூளைக்கு உண்டு. எதனால் நன்மை விளையும்;எதனால் தீமை விளையும் எனத் தீர்மானிக்கவும் மூளையால் முடியும். அவ்வாறெனில் மனம் எனத்தனியே என்ன …?
மிக எளிது. அது ஸ்தூலமற்ற, எண்ணம் மற்றும் சிந்தனைகளை கட்டமைக்கும் செயலியக்கம்.
எதனால் நன்மை விளையும்;எதனால் தீமை விளையும் எனத் தீர்மானிக்க மூளையால் முடியும். ஆனால் தீமை தரவல்லதை தவிர்க்கச் சொல்வது மனம். அல்லது இயலாது தோற்றுப்போவது மனம்.
அதனால் தான்,
மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
என்றான் வள்ளுவன்.
எளிதாக, மனத்தில் மாசு இல்லாது இருக்குமானால் உலகத்து அறங்களுள் சிறந்ததாக அது இருக்கும்.
அவ்வாறெனில் , மூளயை அறிவின் முதிர்ச்சிக்கு அழைத்துச் செல்வது எவ்வளவு அவசியமோ அந்த அளவு, அதனினும் அதிகமாக மனத்தின் முதிர்ச்சிக்கு முக்கியமும் அவசியமும் உள்ளது என்பதை உணர முடியும்.
இந்நிலையில், மனம் குறித்தும் அதனைத் தெளிவுறு நிலையில் வைத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும், வடிவுடையானின்,’மனம் ஒரு வெற்றுக் காகிதம்’ என்னும் நூல் எளிமையாகவும் ஆழமாகவும் சொல்கிறது.
யோகா/ தியானம்:
யோகா இன்றைக்கு பரவலாகவும், பலராலும் பயன்படுத்தப்படும் வார்த்தை. உடலையும் மனத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கான வழிமுறையாக அறிமுகமாகி அறியப்பட்டு வருகிறது. தியானம் என்பது பெரும் ஞானிகள் ஆற்றும் காரியம் என்பது போன்ற மாயையும் உளது. இரண்டுக்குமான வேறுபாடு என்ன வென்பது பரவலான மக்கள் அறிந்திராத செய்தி.
அது பற்றி எளிய விதமாக அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக வடிவுடையான் குறிப்பிடுகிறார்.
’யோகா ஒவ்வொருவரையும் தனக்குத்தானே எதிராக இயங்க வேண்டும் என்கிறது.
தியானம் அப்படியல்ல, தன்னைத்தான் நண்பனாக்கிக் கொண்டு இயங்குவதுதான் தியானம்.
யோகா தன்னைத்தான் வெல்வதே வெற்றி என்கிறது. தியானமோ நீ யாரையும் வெல்லத் தேவையில்லை என்கிறது.ஆம். உனக்கு இதுவரை கற்றுக்கொடுத்தவர்கள் உன்னிடம் இதைத்தான் சொல்கிறார்கள்.நீ உன்னை வெல்வதே முழுமையான வெற்றியென்று.
நீ உன்னையே வெல்வது என்றால் எப்படி?உன்வாழ்நாள் முழுவதும் உன்னையே உன் எதிரியாக்கிக் கொண்டு உன்னோடே போட்டியிட்டு தன்னைத்தானே துன்புறுத்தி மடிவதா?’
இந்த இடத்தில், வடிவுடையான் யோகாவுக்கும் தியானத்துக்குமான வேறுபாட்டைத் தெளிவு படுத்துவது குறித்தும், தியானமே சிறந்த மார்க்கம் எனத்தேர்வது குறித்தும் கவனம் கொள்ளவேண்டியுள்ளது.
‘நீ குழந்தைகளைப் பார்.அவர்கள் சிறந்த தைரியமானவர்கள்.ஆனால் அவர்களுக்கு எல்லாவற்றிலும் தன்னைத்தான் அடக்கிக் கொள்வதற்குக் கற்றுக்கொடுக்கிறாய்.நீ கற்றுக்கொடுப்பதை அவன் பழக்கமாக்கி கொள்கிறான்.’
”நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே”
குழந்தைகளுக்குக் கற்றுத்துரும் முறைமை பரிசீலனைக்குரியதா? மாற்றம் வேண்டுமெனில் அது பற்றிய தெளிவு மேலதிகமாக பேசவும் விவாதிக்கவும் வேண்டிய ஒன்று.
’பொறிவாயில் ஐந்தவித்தான்’ என்பார் திருவள்ளுவர்.
புலனடக்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக போதிக்கப்பட்டுவரும் வாழ்வியல் கோட்பாடு.ஆனால் அதற்கு இணையாகவே அதனை அடக்காமல் தாண்டி செல்லுதல் சாலச் சிறந்தது என்னும் கருத்தியல் தடத்தை ஆதரிக்கிறார் வடிவுடையான்.
‘உடல் உறவு பாவம் என அடக்கிக்கொள்கிறார்கள். ஆனால் அடக்குதல் மூலம் அவர்கள் உள்ளே அடக்கப்பட்ட உணர்வை, எண்ணங்களால் அதிக சக்தி வாய்ந்ததாக சுழலச் செய்கிறார்கள்.’
மிகநுட்பமாக கவனிக்க வேண்டிய இடம். காமத்தை அடக்குவதா?கடந்து செல்வதா? அதாவது அனுபவித்து கடந்து செல்வதா?
அடக்குவதால் அவ்வுணர்வு உள்ளூர அதிகரித்துத்தான் போகும் என்னும் வாதத்தின்பாற் நிற்கிறார்,வடிவுடையான்.அதற்காக எவ்விடத்தும் கட்டற்ற பாலுறவை அவர் ஆதரித்துப்பேசவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சும்மா இருத்தல்:
’சும்மா இருத்தல்’ என்பது எப்போதும் அத்தனை மரியாதைக்குரிய சொல்லாடல் இல்லை. ஒருவன் மற்றவனைபார்த்து ‘என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ , கேட்டானாம். அதற்கு அவன் ‘அப்பாவுக்கு உதவியாக இருக்கிறேன்.’, என்று பதில் சொன்னானாம்.’அப்பா என்ன செய்கிறார்?’, ’அப்பா சும்மா தான் இருக்கிரார்.’ சும்மா இருத்த்ல் சுகமானதாக இருக்களாம். ஆனால் மரியாதையானது அல்ல.
வடிவுடையான் கூறும் ‘சும்மா இருத்தல்’ வேறானது. மனம் சார்ந்தது.
‘தியானத்தின் நோக்கமே எண்ணம் எழும் மையத்தை நோக்கிச் செல்வது தான்.எண்ணம் அடங்க வேண்டும் என்றால், நீ எண்ணம் எழும் இடம் நோக்கி பிரவேசிப்பதால் இயலும். எண்ணம் எழும் இடம்நோக்கி எப்படி பிரவேசிப்பாய்?அதுவே சும்மா இருத்தல்.சும்மாஇருத்தலின் பொருளை நீ புரிந்து கொள்.
அதன் பொருள் இது தான்.உன்மனதை நீவிலகி நின்று கவனித்தல்.அதுஎப்படி? நீ சற்று கவனித்துப்பார்.
’உன்மனத்தில் இருந்து எழும் எண்ணங்களை ஒரு மூன்றாவது மனிதனைப்போல் கவனி.அந்த எண்ணத்திற்கும் உனக்கும் எந்த்த்தொடர்பும் இல்லையென உறுதியாக கவனி.உன்மனம் எழுப்பும் எண்ணம் எல்லாம் படிப்படியாக அடங்கி, நீ ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுவிடுவாய்.அந்தத்தூக்கம் சிறிது நேரம்தான் நிகழும் .பின் நீ தூக்கம் கலைந்து எழும்போது மிகவும் புத்துணர்வு கொண்டவனாக இருப்பாய்.’
பல்வேறு எண்ணங்களாலும் சிந்தனைகளாலும் நிரம்பிஉள்ளம் மனத்தை வெற்றுக்காகிதமாக மாற்றும் தியானத்தை எளிய செயல்முறை விளக்கமாகவே எழுதியிருக்கிறார்,வடிவுடையான்.
தியானம்,அதன் முக்கியம், மனத்தை இறுக்கத்திலிருந்து எவ்விதம் தளர்த்துவது போன்ற விஷயங்களை அழகுபட விளக்குகிறார்.
நம்மால் உள்நுழைந்து புரிந்துகொள்ள முடியாத பகுதியெனப் பலரும் கருதும் யோகா, தியானம், மனம், மனத்தை நெறிப்படுத்தல் போன்ற விஷயங்களை எளிய அதே நேரம் மிக ஆழமாகப் பேசியிருக்கிறார்.
இந்தக்கட்டுரையில், காட்டியிருக்கும் மேற்கோள்கள் மிகச்சிலவே. நூல் முழுவதும் பயனுள்ள தர்க்க பூர்வமான அறிதற்கரிய கருத்துகள் விரவிக்கிடக்கின்றன.
படித்துத் பயன் பெறத்தக்க நூல்.
வெளியீடு:
கற்பகம் புத்தகாலயம்
50/18,ராஜாபாதர் தெரு,
பாண்டி பஜார்,
சென்னை-6000 017
———————————————————
==========தமிழ்மணவாளன்
——————————————————
- வைரமுத்து படைப்புகளில் கிராமப்புற மருத்துவம்
- அகநானூற்று ஔவையார் பாடல்களில் உளவெளிப்பாடுகள்
- கவிதைகள்
- கருவ மரம் பஸ் ஸ்டாப்
- கானல் நீர்..!
- ப.மதியழகனின் “சதுரங்கம்” : பிணங்கள் வாழும் வீட்டுக்குப் பயணிப்போம்
- ஜென் ஒரு புரிதல்- பகுதி 34
- பின் நவீன திரைப்படங்கள்: எம் ஜி சுரேஷின் கட்டுரையை முன்வைத்து. .
- ஹரி சங்கர் & ஹரீஷ் நாராயணனின் ‘அம்புலி ‘ ( முப்பரிமாணம் )
- தொடரால் பெயர்பெற்ற தும்பி சேர்கீரனார்
- குப்பை அல்லது ஊர் கூடி…
- போதலின் தனிமை : யாழன் ஆதி
- தமிழ் ஸ்டூடியோவின் குறும்படங்கள் திரையிடல்
- மொட்டுக்கள் மலர்கின்றன
- இராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம்
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -17
- புதியதோர் உலகம் – குறுங்கதை
- மெய்ப்பொருள், கனவு, குலவை, அகநாழிகை ,கணையாழி, துளிர், வணிகக் கதிர். — சிற்றிதழ்கள் ஒரு பார்வை
- கவிஞர் முடியரசனாரின் வாழ்வும் இலக்கியப் பணிகளும்
- “அவர் அப்படித்தான்…”
- வடிவுடையானின் ” மனம் ஒரு வெற்றுக் காகிதம் “
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 14
- செல்வாவின் ‘ நாங்க ‘
- அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினக் கண்காணிப்பும் பாதுகாப்பும்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 10)
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -3
- விஸ்வரூபம் – அத்தியாயம் எண்பது
- வழிச் செலவு
- கவிதைகள்
- பாராட்ட வருகிறார்கள்
- பஞ்சதந்திரம் தொடர் 34- சாண்டிலித்தாயின் பேரம்
- நிலவுக்குத் தெரியும் – சந்திரா ரவீந்திரன் அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்வு
- முன்னணியின் பின்னணிகள் – 31
- எனது இலக்கிய அனுபவங்கள் – 21 -எழுத்தாளர் சந்திப்பு – 8. தி.சு.சதாசிவம்
- தாகூரின் கீதப் பாமாலை – 3 உன்னைப் புறக்கணித்தவன்