ஹரி சங்கர் & ஹரீஷ் நாராயணனின் ‘அம்புலி ‘ ( முப்பரிமாணம் )

This entry is part 9 of 35 in the series 11 மார்ச் 2012

சின்ன வயதில் மைடியர் குட்டிச்சாத்தான் பார்த்து ரசித்த இனிய நினைவுகளோடு பார்க்கப் போன படம்.

கொஞ்சம் வேர்வுல்ப், கொஞ்சம் கிங்காங், எழுபதுகளில் காட்டப்பட்ட கிராமம், பெல் பாட்டம், பியட் கார், சின்ன வயது ஹாரிஸ் ஜெயராஜ் போல ஒருவன், சின்ன வயது மனோபாலா போல ஒருவன், அதீத மேக்கப்புடன் ஒரு நடிகை, மேக்கப்பே இல்லாமல் ஒரு நடிகை, பாக்யராஜ் பாணி பாடல்கள், ஹிட்ச்காக் பின்னணி இசை. இதையெல்லாம் மிக்சியில் போட்டுக் கலக்கினால், மொக்கையாக ஒரு படம் வரும். அதற்கு அம்புலி என்று பெயர்.

SAW காலேஜில் படிக்கும் அமுதன், பாரிவேந்தன். அவர்கள் காதலிகள் பூங்காவனம், மலர். விடுமுறையில் கல்லூரிக்கு அருகில் இருக்கும் பூமாடசோலை(!) கிராமத்தில் இருக்கும் காதலிகளைப் பார்க்க வரும் இருவரும், அம்புலி எனும் மனித மிருகத்தைப் பற்றி அறிகிறார்கள். சூரிய கிரகணத்தில் கருவுற்ற தாய் ( உமா ரியாஸ்கானுக்கு இனிமேல் கர்ப்பிணி பெண் பாத்திரம் தான் என்று முத்திரை குத்தி விட்டார்கள் போல) வெளியே வர, மிருகமாக பிறக்கும் குழந்தை அம்புலி. பகலில், குகையில், இருட்டில் வாழும். இரவில் மனித வேட்டையாடும். மூட நம்பிக்கையாகிவிடுமோ என்று கொஞ்சம் விஞ்ஞானப் பூச்சு. மரபணு மாற்றம், நேர்நெத்தால் மனிதன் என்று ஏதேதோ கதை விடுகிறார்கள். காட்டில் வாழும் செங்கோடன் ( பார்த்திபன் – ஆயிரத்தில் ஒருவன் பாதிப்பு ) அம்புலியின் அண்ணன். அவன் துணை கொண்டு அமுதனும் பாரியும் அம்புலியை வெல்வது. கிளைமேக்சில் வரும் ராணுவம் அம்புலியை சிறை பிடிப்பது. டேராடூன் போகும் வழியில் அம்புலி தப்பிப்பது.. அம்புலி இரண்டாம் பாகம்? ஊறுகாயாக மருத்துவச்சி கலைராணி, ஜெகன்..

முப்பரிமாணக் கண்ணாடி இரு வண்ணம் கொண்டது. ஒரு பக்கம் சிவப்பு. ஒரு பக்கம் நீலம். எதுவுமே தெளிவாக இல்லை. ஐந்து ரூபாய் கண்ணாடிக்கு டப்பாசீட் ஐம்பது ரூபா! கொடுமைடா சாமி. குட்டிச்சாத்தானில் ஐஸ்கிரிமையும், பலுனையும் நெருக்கத்தில் காட்டினார்கள். குழந்தைகள் ரசித்தார்கள். இதில் அது கூட இல்லை. கலர் பேப்பர் துண்டுகளை தூவுகிறார்கள். மற்றபடி எல்லாம், சோளைக்கொல்லை, நடிப்பவர்களின் முதுகு, பின்னந்தலை.. அஷ்டே! எழுபதுகளில் நடக்கிற கதை என்பதால், பெல்பாட்டம் போட்டு பழைய மெட்டுகளில் ராவுகிறார்கள். இசை வெங்கட் பிரபு ஷங்கர். மங்காத்தாவும் நண்பனும் மான நஷ்ட வழக்கு போடலாம், பெயரை இழிவு படுத்தியதற்கு.

ஒரே ஒரு வசனம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ‘ ஊருக்கே ஊதுபத்தி விக்கற எனக்கே தூபம் போடறியா? ‘ மற்றதெல்லாம் சராசரிக்கும் வெகு கீழே. மூன்று வயது குழந்தைக்கான மிருகப் புதிர் அட்டையை, முதன் முதலில் கலைத்துப் போட்டு, குழந்தையை சேர்க்கச் சொன்னால், கன்னபின்னாவென்று ஒரு உருவம் வருமே, அதை விடக் கேவலமாக இருக்கிறது கதையும் திரைக்கதையும். இதில் தமிழின் முதல் 3 டி படம் என்று ஏகத்துக்கு விளம்பரம் வேறு.

ஒரு கோடியில் படம் எடுத்துவிட்டு, இன்னொரு கோடியை விளம்பரத்துக்கு செலவழித்தால், கண்றாவிப் படத்தைக் கூட, பத்திரிக்கைகள் கலைப்படம் என்று ‘கவர்’ செய்யும். நன்றி விசுவாசம். இன்னும் சொல்ல வேறு என்ன இருக்கிறது.

#

கொசுறு

இனிமேல் முப்பரிமாணப் படம் பார்க்க விரும்பும் ரசிகர்கள், சொந்தக் காசில், நல்ல கண்ணாடி வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. பேம் மல்டிப்ளக்சில் கொடுக்கப்படும் கண்ணாடியைப் போடாவிட்டால் பார்வை பிறழ்கிறது. போட்டால் படமே பிறழ்கிறது. தொடர்ந்து இந்தக் கண்ணாடியை பயன்படுத்தினால், 3 டி என்ன, ஒரு ‘டி’யே தெரியாது. அப்புறம் கொம்புடன் கமல் போல ‘ அந்திமழை பொழிகிறது ‘ பாட வேண்டியது தான்.

அரங்கில், சீட்டுக்கு வந்தே தீனி தருகிறார்கள். இரண்டு சமோசா ( 45 ரூபாய் )வில் தக்காளி சாஸ் பாக்கெட்டை பிதுக்கி, படம் பார்த்துக் கொண்டே, இருட்டில் சாப்பிட்டேன். வெளியே வந்தவுடன் தான் தெரிந்தது, வெள்ளைச் சட்டையில், சிகப்பு சாஸ், ‘ 3 டி ‘ எபெக்டுடன் இருந்தது!

#

Series Navigationபின் நவீன திரைப்படங்கள்: எம் ஜி சுரேஷின் கட்டுரையை முன்வைத்து. .தொடரால் பெயர்பெற்ற தும்பி சேர்கீரனார்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *