இந்த வார நூலகம்

This entry is part 1 of 36 in the series 18 மார்ச் 2012

உயிர்மை மார்ச் இதழில், சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘ மூன்று பெண்கள் ‘ கதை. ஒரு நூறு வருட நம்பிக்கையை முன்வைத்து பின்னப்பட்டிருக்கிறது கதை. அதாவது, குழந்தையின்மை காரணமாக, தத்து கொடுக்கப்படும் பெண் குழந்தைகளுக்கும், குழந்தையில்லை என்பது மையக்கரு. நூறு வருடங்களுக்கு முன், நாயகி அமிர்தாவின் முப்பாட்டனோ அல்லது அதற்கு முந்தைய பாட்டனோ, சாரட் வண்டி ஓட்டும்போது, வேடுவப்பெண்ணின் குழந்தையை, வண்டிச் சக்கரம் ஏற்றிக் கொன்று விடுவதாகவும், அவள் விடுத்த சாபம் ‘ ஏழேழு சென்மத்துக்கும் உனக்கு சந்ததியில்லாமல் போகட்டும்’ என்பது தொடர்வதாகவும் கற்பனை. இதில் கதை சொல்லியாக அமிர்தாவின் கணவன். அவனது குடிகார அப்பா. பெண் பித்தன். தாயின் சாவுக்கே வராதவன். தன் திருமணத்திற்கும் அப்பா வரக்கூடாது என்று வேண்டும் மகன் என்று ஒரு கிளைக் கதை. முடிவில் அமிர்தாவும் கணவனும் தத்தெடுக்கச் செல்கிறார்கள். ஆண் குழந்தை தத்தெடுத்தால் சாபம் தீரும் என்று ஒரு தப்பித்தலுடன் கதை முடிகிறது.

அடுத்து குமாரநந்தனின் ‘ லக்கி ‘.விஜயலட்சுமி என்கிற லக்கி, மூன்றடி உயரமேயுள்ள  முனியப்பன் என்கிற கூலப்பாண்டியின் மனைவி. மோனிகா என்றொரு மகளும், வரது என்கிற மகனும் அவர்களுக்கு. கூலப்பாண்டி பேருந்துகளில் ஐஸ் தண்ணீர், கடலை பாக்கெட் விற்பவன். லக்கி ஊரில் இருக்கும் சிற்றுண்டி விடுதிகளில் பாத்திரம் கழுபுபவள். கூடவே கடையின் முன்வாசல்களை பெருக்குபவள். அவள் வேலை செய்யும் கடைகளில் வியாபாரம் பிய்த்துக்கொண்டு போகிறது. அதனால் அவள் பெயர் லக்கி ஆகிறது. நாளடைவில், சரக்குக் கடைகள் மூடிய பிறகு, வாங்கி வைத்த சரக்கு பாட்டில்களை விற்றால், லாபம் கிடைக்குமென அவள் அறிந்து கொள்ள, புது வியாபாரம் ஆரம்பிக்கிறது. அதனால் அவளும் குடிக்கு அடிமையாகி, வரதுவும் அப்படியே ஆகிப் போகிறான். கூலப்பாண்டி அவளைத் தன் வசம் இழுக்க, மை மந்திரம் என்று போகிறான். ஒன்றும் நடக்கவில்லை. கடைசியில் காவல்துறை, கறுப்புச்சந்தையில், இரவு பதினொரு மணிக்கு மேல் சரக்கு வித்ததற்காக, அவளை கைது செய்து, மூன்று மாதம் சிறையில் அடைக்கிறது. அப்புறம் அவள் அந்தப் பகுதிக்கு திரும்பவேயில்லை.

உயிர்மையில் இன்னொரு நல்ல பகுதி இமையம் மதிப்புரை. நூல் அபிலாஷின் ‘கால்கள் ‘ போலியோவினால் கால்கள் ஊனமான, வீல் சேரிலேயே, ஒரு அறைக்குள் அடைந்து கிடக்கும் மது என்கிற பெண்ணின் கதை. மனிதர்களையே பார்க்க முடியாத மது, அதற்காகவே அடிக்கடி கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டு, மருத்துவமனைக்குப் போவதும், அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் கூட்டத்தை பார்த்து சந்தோஷப்படுவதும் ஒரு ஊனமுற்ற பெண்ணின் மனநிலையை தெளிவாக படம் பிடிப் பதாகச் சொல்கிறார் இமையம். ஒரு வேலைக்காக மதுவின் 100 விழுக்காடு ஊனத்தை, ரூ 500/- லஞ்சம் வாங்கிக்கொண்டு, 48 விழுக்காடு என்று போலி சான்றிதழ் தரும் மருத்துவர் சொக்கலிங்கம், அமிர்தானந்தமயியின் அபூர்வ சிகிச்சை பற்றி பரவசப்படும் மதுவின் தந்தை, தன் மகளுக்கு அது பலிக்கவில்லையே எனக் கவலைப்படாத முரண் என்று பல தளங்களில் பயணிக்கறது நாவல். ஆனாலும் நாவல் முழுவதும் நிறைய பேச்சுதான் இருக்கிறது என்றும், ‘ நிறைய எழுதுவதை விட குறைவாக எழுதுவது நல்லது ‘ என்று அபிலாஷ¤க்கு அறிவுரையோடும் முடிக்கிறார் இமையம்.

சென்ற மாதம் போலல்லாமல் இந்த மாதம் கொஞ்சம் கூடுதல் நிறைவோடு இருக்கிறது உயிர்மை இதழ்.

புதியபார்வை மார்ச் 1-15 இதழில், ஆசுவின் ‘ பாழ்பட்ட காலத்தின் கதை ‘. ஆசு பல வருடங்களுக்கு முன்னர், ஒரு கவிஞராக எனக்கு அறிமுகமானவர். அவர் கதை எப்படி இருக்கும் என்கிற ஆவலில் படிக்கத் துவங்கினேன்.

வறண்ட பூமியில் வாழும் மனிதர்கள் பற்றிய கதை. அழகம்மாளுக்கு இரண்டு குழந்தைகள். பஞ்சம் பட்டினி. எப்போதாவது மாதா கோயில் மணியோசை கேட்கும். முண்டியடித்து போய் நின்றால், பாதிரியார் ஜெப வாசகங்களைச் சொல்லச் சொல்லி, கை நிறைய கோதுமை மணிகளைத் தருவார். அதுவும் இல்லாத காலத்தில், கோரைப்புற்களின் நடுவே கல்லி எடுக்கும் கொட்டிக் கிழங்குகள் தான் உணவு. அய்யா என்னும் வயதானவர் எப்படியோ நிறைய கிழங்குகளை அள்ளி விடுகிறார். ஒன்றிரண்டை வைத்துக் கொண்டு, அழகம்மாளுக்கும், பச்சிளம் குழந்தைக்குத் தாயான கனகத்திற்கும் மீதியை கொடுத்து விடுகிறார். அய்யாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும்போது, அழகம்மாள்தான் பணிவிடை செய்கிறாள். பாதிரியார் இறக்க, கோதுமை மணிகள் வரத்தும் நின்று போகிறது. அய்யா காசு கொடுத்து அழகம்மாளையும் குழந்தைகளையும் ‘ பட்டணம் போய் பொழச்சிக்கோ ‘ என்று அனுப்புகிறார். கவிஞர் கதை எழுதும்போது உவமைகள் ஏராளமாக வந்து விழுந்து விடும். அந்தக் குறை இந்தக் கதையிலும் உண்டு.

உமா சுப்பிரணியனின் ‘ மா ‘ இரண்டு வீட்டுக்கும் நடுவில் இருக்கும் மாமரம் வெட்டப் படுவதைப் பற்றியது. பாபு சிறு வயதில் விளையாடிய மரம். பலருக்கு நிழல் கொடுத்த மரம். வெட்டி விறகாக்கப்படும்போது ஏற்படும் சோகம் மென்மையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நல்ல கதை.

அமிர்தா இதழில் ஜெயந்தி சங்கரின் ‘ கடத்தல்காரன் ‘ மலேசிய மின்சார ரெயிலில் ஏறும் ஒரு சீனனின் நடவடிக்கைகள், உடை, பாவனை விஸ்தாரமாக எழுதப் பட்டிருக்கிறது. அவனது செய்கைகள், சந்தேகத்துக்குரியதாகவே இருக்கின்றன. ஆனால் உண்மையில் அவன் ஒரு டீசண்ட் பிச்சைக்காரன். ஒவ்வொருவரிடமும் சென்று, தன் நிலை கூறி, பண உதவி கேட்கிறான். ஒரு சீனனோ, மலேசியனோ, வெள்ளைக்காரனோ அவனுக்கு உதவுவதில்லை. கடைசியில் உதவுபவன் ஒரு இந்தியன்.

இந்த மாதம் இதழ்கள் கொஞ்சம் இலக்கியத்தன்மையுடன் இருந்தன என்பது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.

#

Series Navigationஇந்தியாவின் வறுமைக்கோடு- கோட்பாட்டு விளக்கமும் ஹர்ஸ் மந்தரின்# கட்டுரையும்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *