ச.முத்துவேலின் கவிதைத்தொகுப்பு “மரங்கொத்திச் சிரிப்பு” : இனிய தொடக்கம்

This entry is part 9 of 36 in the series 18 மார்ச் 2012

பாவண்ணன்

கடந்த நான்காண்டுகளாக சிற்றிதழ்களிலும் வலைப்பக்கங்களிலும் தொடர்ந்து கவிதைகளை எழுதி வருபவர் முத்துவேல். இடைவிடாத வாசிப்புப்பயிற்சியாலும் எழுத்துப்பயிற்சியாலும் நல்ல கவிதைமொழி அவருக்கு வசப்பட்டிருக்கிறது. வாழ்வின் இருப்பைப்பற்றிய கேள்வியும் தேடலும் இயல்பான வகையில் அவர் கவிதைகளில் வெளிப்படுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இத்தகுதியே இத்தொகுதியை வாசிப்புக்குரியதாக ஆக்குகிறது.

தொகுப்பில் மீண்டும் வாழ்தல் என்ற தலைப்பில் ஒரு கவிதை உள்ளது. பழகிப்போன ஒரு வாழ்க்கைமுறையை விட்டுவிலகி இன்னொரு வாழ்க்கைமுறையோடு ஒன்றிப்போவதையே முத்துவேல் மீண்டும் வாழ்தல் என்று குறிப்பிடுகிறார். இக்கவிதையின் வாசிப்பனுவபத்தை முக்கியமாகக் கருதுகிறேன். அலுப்பும் களைப்புமாகவே நாட்களைக் கடத்திக்கொண்டு இருப்பவர்களின் எண்ணிக்கை மிகுந்துபோன இத்தருணத்தில் இக்கவிதையின் முக்கியத்துவம் கூடுதலாகிறது. பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவன் கண்டடையும் ஒரு புதிய காட்சியைச் சித்தரிக்கிறது கவிதை. ஒரு மஞ்சள் மலரில் அமர்ந்திருந்த வண்ணத்துப்பூச்சி அதே செடியின் இன்னொரு மலரில் அமர்ந்து தேனை உறிஞ்சுவதைப் பார்க்கும் தருணம்தான் அது. பலரும் பார்க்கக்கூடிய காட்சிதான். அவரே கூட இதற்குமுன்னால் பலமுறை இக்காட்சியைப் பார்த்திருக்கக்கூடும். ஆனால் வாழ்வில் ஒரு முக்கியமான திருப்பத்தில் இருக்கும்போது பார்வையில் படும் அக்காட்சி புதிய பொருளோடு தோற்றமளிக்கிறது. வாழ்வின் இச்சையைத் தூண்டுவதோடு மட்டுமன்றி வாழ்வின் ஆனந்தத்தையும் கோடிட்டுக் காட்டிவிட்டுச் செல்கிறது.

வாழ்வின்மீது தீராத ஆசைகொள்ளும்வகையில் ஒரு காட்சி எப்படி நம்மை வசப்படுத்துகிறது என்றொரு கேள்வியை முன்வைத்து யோசிக்கும்போது பல விடைகளை நம்மால் கண்டடையமுடியும். ”காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும், காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும், காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும், காண்கின்ற இக்க்காற்றெல்லாம் யானே என்னும்” என்னும் நம்மாழ்வாரின் வரிகள் காட்டுவது ஒரு விடை. ’பார்த்த இடத்திலெல்லாம் உனைப்போல் பாவை தெரியுதடி” என்கிற பாரதியாரின் வரி காட்டுவது மற்றொரு விடை. “எங்கெங்கு காணினும் சக்தியடா” என்னும் பாரதிதாசனின் வரி வழங்குவது மற்றுமொரு விடை. யான் என்றாலும் சரி, அவள் என்றாலும் சரி, சக்தி என்றாலும் சரி, மூன்றின் வழியாகவும் நாம் உணரத்தக்க உண்மை சக்தியின் ஊற்றுக்கண்கள் எங்கெங்கும் நிறைந்துள்ளன என்பதுதான். பார்க்கவிரும்பும் ஆர்வமும் தேடலும் உள்ள கண்களுக்கு அவை தட்டுப்படும். அந்த ஊற்றுக்கண்களே நம் நெஞ்சில் ஆனந்தத்தை நிரப்புகின்றன. அந்த ஆற்றலே நம்மை வழிநடத்துகின்றன. அதுவே நம்மை ஆனந்தத்தில் திளைக்கவைக்கின்றன. சிலர் தமக்குரிய ஊற்றுக்கண்களை உடனடியாகக் கண்டடைந்துவிடுகிறார்கள். பலர் அருகிலிருந்தும் காணாதவர்களாக எங்கே எங்கே என்று அலைந்தலைந்து நிராசையில் களைத்துப் போய்விடுகிறார்கள். தண்டாமரையின் உடன்பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்போல.

முத்துவேலின் கவிதையில் வாழ்தலின் விருப்பத்தையும் ஈடுபாட்டையும் தூண்டும் காட்சியைக் கண்டவரைப்பற்றிய சித்திரத்தை அசைபோடும்போது இவ்வரிகள் நெஞ்சின் ஆழத்திலிருந்து மேலெழுந்து வருகின்றன. சமீபத்தில் ஜெயமோகன் ஒரு கட்டுரையில் மனம் சோர்ந்திருந்த ஒரு தருணத்தில் சூரியோதயப்பொழுதில் இலைவிளிம்பில் ஒளியையேற்று நெளியும் ஒரு புழுவைப் பார்த்து தான் அடைந்த ஆற்றலைப்பற்றிக் குறிப்பிட்டிருந்த்தும் நினைவுக்கு வந்தது..

தொகுப்பின் இன்னொரு முக்கியக்கவிதை “நீ-யும்” உறவுகளிடையே நசுங்காமலும் தன்னை விட்டுக்கொடுக்காமலும் பழகும் லாவகத்தை ஒவ்வொருவரும் எப்படியோ கற்றுக்கொள்கிறோம். விலகாமலும் நெருங்காமலும் அமர்ந்து குளிர்காய்வதுபோல. வாழ்வின் கலை என்பதே இந்த லாவகத்தில் கைதேர்வதுதானே என்றுகூட பல சமயங்களில் தோன்றுகிறது. நுட்பமான லாவகத்தோடு அந்த உறவுகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம்தான் என்ன என்று சில சமயங்களில் கேள்வி எழலாம். மனிதன் ஒரு சமூகவிலங்கு என்பதுதான் அதற்கான எளிய பதில். உறவுக்ளின் வண்ணங்களோடும் கோலங்களோடும்தான் ஒட்டமுடியவில்லையே தவிர, உறவுகளோடு பிரச்சனையில்லை. இப்படி பிரித்தறிந்து நெருங்கி உறவாடும் லாவகத்தால் அன்பைத் தக்கவைத்துக்கொள்ளமுடிகிறது. நீ-யும் என்கிற சொல்லில் உள்ள அழுத்தம் முக்கியமானது. கவிதையைப் பகிர்ந்துகொண்டிருந்தவன் ஏற்கனவே அந்த லாவகத்தில் தேறிவந்தவன் என்ற குறிப்பு மறைபொருளாக இருப்பதை அறியமுடிகிறது.

ஒரு எலக்ட்ரீஷியனின் பிரபஞ்ச தரிசனம் என்னும் கவிதையை மீண்டும் வாழ்தல் கவிதையின் தொடர்ச்சியாகக் கருதலாம். “மீண்டும் வாழ்தல்” பாத்திரத்துக்கு பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த தரிசனம் எலக்ட்ரீஷியன் பாத்திரத்துக்கு தொடக்கத்திலேயே அபூர்வமான வகையில் சித்திக்கிறது. அறியத் தொடங்கும் ஒவ்வொன்றும் முதலில் அறிதலின் ஆச்சரியத்தை வழங்குகிறது. பிறகு ஆனந்தத்தை வழங்குகிறது. நாளடைவில் அதுவே பிரபஞ்ச தரிசனமாக மாற்றம் பெறுகிறது. முத்துவேல் கவிதையை இப்படி விரித்துப் பொருள்கொள்வதில் எத்தகைய தடையும் இல்லை.

முத்துவேலின் சில காட்சிக்கவிதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. கழுத்தில் சுருக்குக்கயிற்றின் தடம் பதிந்த ஒருத்தியின் சித்திரம் முத்துவேலின் வரிகளில் ஓர் ஓவியத்தன்மை பெற்றிருக்கிறது என்றே சொல்லவேண்டும். ஏன் அந்தத் தடம்? மரணத்துக்காக முயற்சி செய்தவளா? தற்கொலையிலிருந்து மீட்கப்பட்டவளா? மரணத்தின் புள்ளிவரை சென்று மீண்டதால்தான் பார்வையில் படுகிறவர்கள்மீது பரிவும் அன்பும் சுரக்கிறதா? அல்லது இயல்பிலேயே அன்பு நிறைந்தவளா? குழந்தையை இழந்தவளா? குழந்தையே இல்லாதவளா? இப்ப்டி அடுக்கடுக்காக எழும் கேள்விகளின் தொகுப்பே அக்கவிதையைச் சுவைக்கத் தூண்டுகிறது. கேள்விகளைத் தூண்டும் இன்னொரு கவிதை வாய்ப்பு. ஊர் எல்லையில் உள்ள பெயர்ப்ப்லகையைச் சித்தரிக்கிறது அக்கவிதை. வரும்போது இனிதே வரவேற்கிறது, போகும்போது இனிதே வழியனுப்புகிறது. பெயர்ப்பலகைக்கு அப்படி ஒரு வாய்ப்பு அபூர்வமாக அமைந்திருக்கிறது. மனிதர்களிடம் ஏன் அப்படி இனிதாக வரவேற்று, இனிதே வழியனுப்பும் பண்பு வாய்க்கப் பெறவில்லை என்கிற கேள்வியை இக்கவிதையின் இறுதிவரி தூண்டிவிடுகிறது. மனிதர்களிடம் உள்ள அந்தப் போதாமை என்ன? எது அவனைத் தடுக்கிறது?

இத்தொகுப்பின் கவிதைகள் நல்ல முயற்சிகள் என்பதிலும் இவை வாசிக்கத்தக்கவையாக உள்ளன என்பதிலும் எந்தச் சந்தேகத்துக்கும் இடமில்லை. சில கவிதைகளில் பிசிறுகள் உள்ளன. மேலெழும்ப முடியாத பலவீனமும் உள்ளது. முத்துவேல் தன் விடாமுயற்சி வழியாக அவற்றை விரைவிலேயே கடந்துசெல்வார் என்று நம்புகிறேன். முத்துவேலுக்கு என் அன்பான வாழ்த்துகள்.

(சமீபத்தில் உயிர் எழுத்து பதிப்பகத்தின் வெளியீடாக ’மரங்கொத்திச் சிரிப்பு’ என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் ச.முத்துவேலின் கவிதைத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரை)

Series Navigationஆற்றைக் கடப்போம். ! ஆற்றலோடு கடப்போம். !! ( அம்பையின் ஆற்றைக் கடத்தல் வெளி ரங்கராஜனின் நாடகம் .. எனது பார்வையில்மனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம். ஷாரு ரெங்கனேகர். தமிழில் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன். நூல் பார்வை
author

பாவண்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *