அரிநெல் – பிச்சினிக்காடு இளங்கோ

This entry is part 15 of 36 in the series 18 மார்ச் 2012


ஐயன் வள்ளுவனின் இரட்டை வரிக் குறள்கள் சொல்லும் ஆயிரம் கருத்துகள் போல, ஔவைப்பிராட்டி திருவாய் மலர்ந்தருளிய ஒற்றைவரி ஆத்திச்சூடி சொல்லும் ஆயிரம் தத்துவங்கள் போல, சுருங்கச் சொல்லி விளங்கச் செய்யும் உத்தி மிக எளிதாக மக்கள் மனதில் பதியச் செய்யும் சிறந்ததொரு கலை. அந்த வகையில் நவீன கவிதைகள் அதுவும் ந்றுக்கென்று ஒரு சில வார்த்தைகளில் ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லி சுருக்கென்று உரைக்கச் செய்யும் கவிதைகள் இன்றைய நவீன அவசர உலகத்தின் வாசகர்களுக்கு சிறந்த விருந்துதான்! கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ இந்த உத்தியை மிக சாமர்த்தியமாகப் பயன்படுத்தி தம் கவித்துவத்தை வெளிப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளார்.

‘அரிநெல்’ என்ற கவின்மிகு தலைப்பின் தோன்றலின் கூற்றையும் அச்சொல்லின் பொருள் அளிப்பதன் மூலம் ஆரம்பித்திருக்கிறார்.

தொன்மைக்கும்
தொன்றுதொட்டுத் தொடரும்
வேளாண்மைக்கும்
உரிய சொல். என்ற பொருளும்,

அரிநெல் கசக்கி
நெல்லெடுத்துச் சேமித்து, பின்
விற்றுக் காசு பார்ப்பது
சின்ன வயதில்
ஒரு கொண்டாட்டம்.

விளைந்தவைதான்
ஆனாலும்
விளைச்சலுக்குரியவை
காரணம்
விதைப்பதற்குரியவை…
என்ற தன்னிலை விளக்கத்தையும் மிகத் தெளிவாகவே அளித்துள்ளார்.

எதார்த்தம் என்பது எப்போதும், எளிமையாகவும் உண்மையாகவும் இருக்கிறது என்று தாம் நம்புவதாலோ என்னவோ ,

மூழ்கி எடுத்த
முத்துக்கள் அல்ல
இயல்பாய் விட்ட
மூச்சின் எச்சம் ….. என்கிறாரோ…?

மிக எளிமையாக இத்தொகுப்பைப் படைத்ததன் காரணமாக,
பரிணாமமும், பரிமாணமும் தெரிந்திருந்தும் பரிமாறப்பட வேண்டியவை என்பதால் அத்துனை எளிமை என்கிறார்.

தன் சுவாசமாக இருப்பதும், உயிராக இருப்பதுவுமான கவிதை மானுடத்தின் மீது கொண்ட அதீத விசுவாசத்தின் காரணமாக , தன்னையே ஆசானாகவும், மாணாக்கனாகவும் ஆக்கிக் கொண்டமையையும் உணரச் செய்கிறார்.- நான்

’நடைமுறை’ எனும் கவிதையில்,

மனமெல்லாம்
அமாவாசை
முகமெல்லாம்
பௌர்ணமி
என்ற வரிகள் நம்மை பல்வேறு சிந்தனைகளுக்குள் ஆட்படுத்துவதைத் தவிர்க்க இயலாது.

அதே போன்று, ‘அறிவுரை’ எனும் கவிதை,

பார்க்கும் திசையெல்லாம்
போதிமரம்
புத்தனைக் காணோம்
என்று போகிற போக்கில் இன்றைய வாழ்க்கையின் யதார்த்தத்தை பதிவிட்டுச் சென்றிருக்கிறது.

‘எதார்த்தம்’ என்னும் கவிதையோ,

புதுச்செருப்போடு
ஆலயத்தில்
நினைவுக்கே
வரமறுக்கிறான் இறைவன்
என்று மத்தியதர மக்களின், மன ஓட்டத்தைப் படம் பிடித்துக் காட்டிச் சென்றுள்ளது!

‘இலக்கியம்’ –
கல்லாய்
இருந்த என்னைச்
சிலையாய்ச் செய்த
சிற்பி
என்றும்,

மௌனத்தின்
வெளிச்சம்
என்றும்,

கற்காலமாய் இருந்தேன்
நிகழ்காலத்தையும்
எனக்கு
நிரந்தரமாக்கிய வள்ளல்
என்றும் இப்படி பலவாறு தன்னிலை விளக்கமும் சுவைபட அளித்துள்ளது வாசகரின் வாசிப்பனுவத்திற்கும் சுவை கூட்டுவதாகவே அமைந்துள்ளது.

செடியும்,மலரும், வேர்களும் கூட மொழிபெயர்பின் மூலம் தங்களை படைப்பாளியாக்கிக் கொண்ட விதததை கவிஞர் வருணிக்கும் விதம் கரும்பின் சுவை – மௌனம்.

துன்பங்களால் துளையிடப்பட்ட புல்லாங்குழல் – இனிய கீதம் – சுவையான புனைவு!

இரண்டே வார்த்தைகளில்,இருபது அர்த்தங்களை உணர்த்தும் அற்புதம் எழுதுகோல்! – கை, நா.

தம் மொழி தாய்மொழியான விந்தையை விளக்கும் இனிமை – தாய்மொழி.

பூக்களிடம்
மூர்ச்சையாகிவிடுகிறோம்
பழங்களுக்குப்
பலியாகிவிடுகிறோம்
வேர்களை
நினைக்காமல்…….
பலவீனத்திலும் ம்னிதாபிமானத்தைக் கடைபிடிக்கும் இங்கிதம், சங்கீதமான பலவீனம்!

நம் செம்மொழியின் வல்லமையை பறைசாற்றும் விதமாக ஒரு பெரும் போராட்டத்தையே ஒரு சில வார்த்தைகளின் கூட்டமைப்பில் முடித்து வைத்த பாலஸ்தீனம் – இஸ்ரேல்

எது எல்லை
என்பதே தகராறு
இதயமில்லை
என்பதே கோளாறு

நிலவும், சூரியனும், நட்சத்திரங்களும், விண்மீன்களும், நிறைமதியும், இரவும், மலரும், மரமும் அனைத்தும் கவியின் புகழ்மாலையை புனை மாலையாய்ச் சூடி நாணி நின்று மேலும் அழகு சேர்க்கின்றன.

கவிதை எழுதுவது ஒரு கலை. கவித்துவம் என்பது படைப்பாளிகளின் வரப்பிரசாதம் என்பதெல்லாம் அனைவரும் அறிந்த உண்மை. ஆயினும் வாசகர்களின் புரிதல் மட்டுமே, அவர்களைச் சிந்திக்கச் செய்யும் அந்த வல்லமை மட்டுமே ஒரு படைப்பாளியை வெற்றியாளராக்கக் கூடியது. அந்த வகையில் நாலு வார்த்தைகளின் மூலமாக நாற்பது கருத்துகளைச் சிந்திக்கச் செய்திருக்கும் கவிஞரையும் வெற்றியாளர் என்று கருத வைத்துள்ளார்.

[நீ] நிராசை –

எலிகளின்
மூளையில்
இருட்டுக்கனம்
அணைநீர் மீது
அடங்காத் தாகம்

புலி பசித்தன்ன மெலிவில் உள்ளத்து
உரனுடையாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உளவாகியரோ” – என்ற புறப்பாடலை நினைவூட்டும் விதமாக அமைந்துள்ளது இக்கவிதை. எலி போன்று முயற்சி இல்லாதவரிடம் நட்பு கொள்வது நல்லதல்ல, என்பதாக விளக்கியிருக்கும் இப்பாடல் கவிஞரின் கருத்திற்கு கனமான ஒளியைக் கூட்டுவதாக அமைந்துள்ளது.

எளிமையின் வியப்பும், அக்கறையின் வர்ணமும் வரையறுக்கப்பட்ட விதம் கவிதைக்கு வலிமை!

“இன்னொருவரால் கட்டுப்படுத்தப்படுகிற,
இன்னொரு கையால் உருவாக்கப்படுகிற
மனம் தனது சுதந்திரத்தை
இழந்து விடுகிறது “
என்பார், வாழ்வியல் ஞானி, தத்துவமேதை ஜே.கே. என்கிற, ஜே.கிருஷ்ணமூர்த்தி.

பச்சைப் பொய் சொல்லும் கதையைக் கேட்டால், ஜே.கே சொன்ன தத்துவத்தை ஒப்பிட்டு நோக்க ஏதுவாகும்!

(பச்சைக்கிளி)
உணர்வுகள் ஊமை
சுதந்திரமோ நுடம்
கைதியைப்
பறவை என்கிறார்கள்.

நீ
நடந்தால்
அது
அபிநய பரதம்

ஆடினால்
அதுவே
எங்கள் கிராமியக் கரகம். என்று நதியை, ரதியாகப் பார்க்கும் கவிஞரின் நயமான சொல்லாடல்! ந[ர]தியே

பகட்டாயத் திரியும் இலட்சியவாதிகளை(?)
பக்குவமாய்ச் சாடும் கவி, இலட்சியம்.
மேடை மின்னலில்
சொகுசு விளைச்சல்
ஆனால்
பாதங்களுக்கடியில்
பத்திரமாக

அந்தியின் புனைவு அருஞ்சுவை!
இரவும்
பகலும்
முத்த ஒப்பந்தம்
முன்மொழியும் நேரம்.

’வாய்ச்சொல்லில் வீரரடி’ என்று சொன்ன மகாகவியை முன் மொழியும், புரட்சி.
நிலங்களில்லை
நிஜமாகவும் இல்லை
வாய்களில் மட்டும்.

மாதப்பசு
மடிசுரக்கும் நாளுக்காய்
கறவைக்காரனாய்
வேடம்.
பணி – நடுத்தர வர்க்க வாழ்வியல் வசந்தம்

மாதையும், மதுவையும் புதிய கோணத்தில் புனைவு – அதிசய மது!

பாரதி,பாரதிதாசன், பட்டுக்கோட்டை, கவியரசு கண்ணதாசன், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், கானக்குயில் பி.சுசீலா, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஆகிய நல் முத்துக்களனைத்தையும் சுவையாக வர்ணித்த கவிஞர், இறுதியாக தாய்த்திருநாட்டையும், வறுமைக் கோடுகளின் வரைபடத்தொகுப்பே இந்தியா என்ற நிதர்சனத்தின் அவலத்தையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார்.

சிறப்பங்காடியை, சிரிப்பழகிக்கு உவமையாக்கியது இனிமை.

வழமையாக கவிஞர்களின் பார்வைக்குத் தப்பாத பொய் முகம் – இக்கவிஞரின் பார்வையிலும்!

ஆழ்மனக்கடலின்
அறிவிப்புப் பலகை
ஒருபோதும் சரியாய்
அறிவிப்பதில்லை
முகமே முகமூடிதான்
முகமூடி தேவையில்லை.

அழகிய கட்டிடங்களைத் தன்னகத்தேக் கொண்ட, வண்ணமிகு வடிவழகையுடைய சிங்கப்பூர் துறைமுகமும் இவர் பார்வைக்குத் தப்பாமல் திருத்தலமாகியுள்ளது!

மூழ்கி எடுத்த முத்தல்ல
இயல்பாய் விட்ட
மூச்சின் எச்சம் – என்ற கவிஞரின் வாக்கே எளிமையான இத்தொகுப்பின் விளக்கமாய் அமைந்துள்ளது. கையடக்கமான வடிவமும், கவின்மிகு வர்ணமும், நயமான காகிதமும், வாசிக்கும் ஆவலைக் கூட்டுகிறது.

ஆசிரியர் – பிச்சினிக்காடு இளங்கோ
நூலின் பெயர் – அரிநெல்
பக்கங்கள் – 96
விலை – ரூ 80
சிங்கையில் – S$ 10

Series Navigationவனவாசம் -கண்ணதாசன் புத்தக விமர்சனம்வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் – 4-நீலமலையின் நினைவலைகள்
author

பவள சங்கரி

Similar Posts

2 Comments

  1. Avatar
    jayashree says:

    அருமையான தொகுப்பும்…வர்ணனையும்.
    …மிக்க நன்றி…மேடம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *