ப.செந்தில்குமாரி
முனைவர்ப் பட்ட ஆய்வாளர்,
அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)
கும்பகோணம்
சங்க காலத்தமிழகம் அரசியலால் சேர, சோழ, பாண்டிய vஎன மூவேந்தர்களின் பெருநாடுகளாகவும், சிறு குறுநிலங்களாகவும், பிளவுண்டு கிடந்தது. ஆனால் மொழியாலும், பண்பாட்டாலும் தமிழர்கள் ஒன்றுபட்டிருந்தனர். இந்த மூன்று பெருநாடுகளிலும் வாழ்ந்த புலவர்கள், மூவேந்தர்களையும் பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்ததை சங்க இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன.
சங்க இலக்கியம் பாடியவர்களில் பெயர் தெரிந்த புலவர்களாக 473 பேர் காணப்படுகின்றனர். இவர்களுடன் சேர, சோழ, பாண்டிய, தொண்டை நாட்டைச் சேர்ந்த புலவர்களும், புலவர்களுக்கு உரிய நாடு மற்றும் பெயர் தெரியாத புலவர்களும் அடங்குவர். சேரநாட்டுப் புலவர்கள் 24பேர்; சோழநாட்டுப் புலவர்கள் 57பேர்; பாண்டியநாட்டுப் புலவர்கள் 90 பேர்; தொண்டைநாட்டுப் புலவர்கள் 9 பேர்; எனக் காணக்கிடக்கின்றனர். இப்புலவர்களின் பெயர் தோற்றத்தினை ஆராயும் பொழுது அப்பெயர்கள் இயற்பெயர், ஊர்ப்பெயர், குடிப்பெயர், தொழில் பெயர், உறுப்பால் பெற்ற பெயர், சிறப்புப் பெயர் எனப் பலவாறாக பெயர் பெற்றுள்ளமையை அறிய முடிகிறது. இவ்வகையில் சங்க கால சோழநாட்டுப் புலவர்களின் பெயரால் அறியப்படும் சோழநாட்டு ஊர்களான அரிசிலூர், ஆடுதுறை, ஆர்க்காடு, ஆலங்குடி, ஆவூர், உறையூர், ஐயூர், கடலூர், காவிரிபூம்பட்டினம், கிடங்கில், குடவாயில், கோவூர், செல்லூர், முகையலூர், துறையூர், நல்லாவூர், மாங்குடி, வெள்ளைக்குடி ஆகிய ஊர்கள் பற்றிய வரலாறுகளை ஆய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
அரிசில்
அரிசில் என்னும் இவ்வூரைச் சேர்ந்த அரிசில் கிழார் என்ற புலவர் சங்க காலத்தில் வாழ்ந்துள்ளார். தமிழகத்து ஊர்கள் ஒவ்வொன்றும் பெரும்பாலும் ஏதோ ஒரு காரணம் பற்றியே பெயர் பெற்றிருக்கும். பொதுவாகத் தம்மைச் சார்ந்துள்ள மலை, காடு, ஆறு என்று இவற்றின் பெயர் அமைந்திருப்பது பெரு வழக்கமாகும். ஆற்றின் பெயரைத் தன்பெயராகக் கொண்டு ஊர்கள் பல நம் தமிழகத்தில் காணப்படுகின்றன. இவ்வாறு ஆற்றின் பெயரைப் பெயரெனக் கொண்ட ஊர்களுள் அரிசிலூரும் ஒன்றாகும். காவிரியில் பிரிந்து பாயும் ஆறுகளுள் அரிசிலாறும் இடம் பெறுகின்றது. அரிசிலாற்றங்கரையில் அரிசில் என்று பெயர் பெற்ற ஊர் இருந்ததாக பழந்தமிழ்ப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. அரிசிலாற்றைப் பற்றிய குறிப்பு சோழநாட்டுப்புலவர் பாடிய பாடலில் காணப்படுகின்றது என்பதை,
“ஏந்து கோட்டு யானை இசை வெங்கிள்ளி
வம்பு அணி உயர்கொடி அம்பர் சூழ்ந்த
அரிசில்” 1
என்ற பாடலின் வழி அறியலாம். இப்பொழுது அம்பர் என்ற ஊர் திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டத்திற்குக் கிழக்கே அரிசிலாற்றின் கரையில் அமைந்துள்ளது. சங்க காலத்தில் அம்பர் நகரம் கிள்ளி வளவனுக்குரியதாக இருந்துள்ளது. இவ்வூரைச் சூழ்ந்தே அரிசிலாறு அமைந்துள்ளது. பிற்காலத்தில் சுந்தரரால் தேவராம் பாடப்பெற்ற சைவத்தலங்களில் இந்த அரிசிலூர் ‘அரிசிற்கரைப்புத்தூர்’ என்று பாடப்பட்டுள்ளது. அது இப்பொழுது ‘அழகாபுத்தூர்’ என்றழைக்கப்படுகிறது. ‘அரிசிலாறு’ என்பது ‘அரசலாறு’ என்று இப்பொழுது வழங்கப்பட்டு வருவதனைக் காணலாம்.
ஆடுதுறை
ஆடுதுறை என்ற பெயருடைய ஊர்கள் பல தமிழகத்தில் உள்ளன. அவை, தென்குரங்காடுதுறை, வடகுரங்காடுதுறை, ஆவடுதுறை என்பனவாகும். ஆவடுதுறை என்ற பெயரே ஆடுதுறை என மாறி வந்துள்ளது. ‘திருவாவடுதுறைக்குச் சாத்தனூர் என்னும் பழம் பெயர் இருந்ததாக கல்வெட்டுகளும், திருத்தொண்டர் புராணமும் கூறுகின்றன. சாத்தனூர் என்பது ஊர்ப்பெயர் ஆவடுதுறை என்பது அவ்வூர்க் கோயிலுக்குப் பெயர். நாளடைவில் சாத்தனூர் என்பது மறைந்து போகவே கோயில் பெயரே ஊருக்கும் பெயராகிவிட்டது என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இவ்வாடுதுறையைச் சார்ந்தவராக ஆடுதுறை மாசாத்தனார் என்னும் புலவர் காணப்படுகிறார். இப்பொழுதுள்ள ஆடுதுறைக்கு அருகே, சாத்தனூர், திருவாவடுதுறை ஆகிய இரு ஊர்களும் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாம்.
ஆர்க்காடு
சோழ மன்னனுக்குரிய ஆத்தியைக் குறிக்கும் ‘ஆர்’ என்ற மரத்தால் பெயர் பெற்ற ஊர் ஆர்க்காடு ஆகும். ஆர்க்காடு என்ற ஊர்ப்பெயரே இன்று மாவட்டத்திற்கும் பெயராக வழங்கி வருகிறது. சங்க இலக்கியம் குறிக்கும் ஆர்க்காடு ‘அழிசில்’ என்ற குறுநில மன்னனுக்கு உரியதாய் இருந்துள்ளது. இப்பொழுது வடவார்க்காடு மாவட்டத்தில் பாலாற்றங்கரையில் இவ்வூர் காணப்படுகிறது.
“படுமணி யானைப் பசும்பூட் சோழர்
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்” 2
என்னும் அடிகள் ஆர்க்காடு சோழர்களின் நகரமாக இருந்தததைக் குறிப்பிடுகிறது. இவ்வூரைச் சேர்ந்தவராக ‘ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்’ என்னும் புலவர் காணப்படுகின்றார்.
ஆலங்குடி
ஆலங்குடி என்னும் பெயர் தாங்கிய ஊர்கள் பல நம் தமிழகத்தில் உள்ளன. இவ்வூரைச் சேர்ந்தவராக ஆலங்குடி வங்கனார் என்னும் புலவர் காணப்படுகிறார். இவர் பாடிய அகத்திணைப் பாடல்கள் யாவும் மருதத்திணையில் அமைந்த பாடல்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தொன்மைச் சிறப்புடைய ஆலங்குடி சோழநாட்டில் இரண்டு இருந்துள்ளன. அவை தஞ்சை மாவட்டத்து மேலைப்பெரும் -பள்ளத்துக் கல்வெட்டில் காணப்படும் ஆலங்குடியும், புதுக்கோட்டை ஆலங்குடியும் ஆகும். மேலைப்பெரும்பள்ளத்து ஆலங்குடி திருஞானசம்பந்தர் காலத்தில் ‘திரிவிரும்பூளை’ என்று வழங்கி வந்திருக்கின்றது. அவர்க்குப்பின் தோன்றிய சோழர்காலத்தில் அது சுத்தமல்லி வளநாட்டு முடிச்சோணாட்டு ஆலங்குடியான சனநாதச் சதுர்வேதமங்கலம் என வழங்கப்பட்டுள்ளது. பிறிதொரு கல்வெட்டில் இந்த ஆலங்குடியே சோழ வளநாட்டு வேளாநாட்டு ஆலங்குடி என்று கூறப்படுகிறது. மற்றதொரு ஆலங்குடி இராசராச வளநாட்டுப்புன்றிற் கூற்றத்து ஆலங்குடி என கல்வெட்டுகள் குறிக்கின்றன.
இந்த இரண்டு ஆலங்குடியுள்ளும், புன்றிற் கூற்றத்து ஆலங்குடியே ‘ஆலங்குடி’ என்ற பெயரளவில் தொன்மையுடையதாகத் தெரிதலால் இதுவே வங்கனார் புலவர் வாழ்ந்த ஊராகும் என்று கொள்வதற்கு இடமிருக்கிறது. வலங்கைமானுக்கு அருகில் அமைந்த ஆலங்குடி தேவராப்பாடல் பெற்றதும் சோழர் கால கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் இடம் பெற்ற பழமைச்சிறப்புடையதாகும்.
ஆவூர்
ஆவூர் எனப் பெயருடைய ஊர்கள் தொண்டைநாட்டிலும் சோழநாட்டிலும் உண்டு. பிற்காலச்சோழர், பாண்டியர் காலம் வரையில் சோழநாட்டு ஆவூர், ‘ஆவூர்க்கூற்றத்து ஆவூர்’ என்று விளங்கியிருந்தது. அது பிற்காலத்தே பசுபதி கோயில் என்ற பெயரை மேற்கொண்டமையால் ஆவூர் என்ற பழம் பெயர் மறைந்தொழிந்தது. ரா.பி. சேதுப்பிள்ளை இந்த ஆவூர் பற்றிய கருத்தைக் கூறுகிறார். பசுபதீச்சுரம் தான் ஆவூர் என்பது அவருடைய முடிவு. ‘அங்கிணர்க்கிடமாகிய ஆவூர்’ என்று சேக்கிழாரால் சிறப்பிக்கப் பெற்ற ஊரில் அமைந்துள்ளது பசுபதி என்று கூறுவதோடு ‘பத்திமைப்பாடல் ஆறாத ஆவூர்ப் பசுபதிஈச்சுரம் பாடு நாவே’ என்று அத்திருக்கோயிலைத் திருஞானசம்பந்தரும் பாடியருளியதை எடுத்துக்காட்டுகிறார். இவ்வூரைச் சேர்ந்தவர்களாக, ஆவூர் மூலங்கிழார், ஆவூர்கிழார் மகனார் கண்ணனார், ஆவூர்க்காவிதிகள் சாதேவனார் ஆகிய நால்வரும் காணப்படுவதை அறிய முடிகிறது.
உறையூ’’ர்’
சோழர்களின் தலைநகரமாக இவ்வூர் விளங்கியுள்ளது. இவ்வூருக்குக் கோழியூர் என்ற பெயருமுண்டு. கோப்பெருஞ்சோழனைப் புறப்பாடல் குறிப்பிடும் பொழுது ‘கோழியோனே கோப்பெருஞ்சோழன்’ என்று சுட்டுகிறது. உறையூரானது காவிரி நதிக்கரையில் அமைந்த செய்தியை,”
“காவிரிப்படப்பை உறந்தை அன்ன” 3
என்ற அகப்பாடலானது குறித்துள்து. உறையூரின் கிழக்கே திருச்சிராப்பள்ளியும், பிடவூரும் அமைந்துள்ளது. இவ்வூறையூரைச் சோழமன்னர்களுக்கே உரியதாக ‘மறம் கெழு சோழர் உறந்தை’, ‘வளம்கெழு சோழர் உறந்தை’ சோழர் அறம் கெழு நல் அவை உறந்தை என்று சங்க இலக்கியங்கள் பாடுகின்றன. உறையூரைச் சார்நதவர்களாக ஒன்பது புலவர்கள் காணப்படுகின்றனர்.
ஐயூர்
ஐ என்றால் அழகு. எனவே அழகிய ஊர் என்ற பொருளில் அமைந்து ஐயூர் எனப் பெயர் பெற்றிருக்கலாம். தலைவன் என்ற பொருளும் இருப்பதால் தலைவனின் ஊர் என்று பொருளிலும் அமைந்திருக்கலாம். ஐயூர் என்பது சோழநாட்டில் உள்ள ஊர் என்று குறிப்பிடுகிறார் ஆளவந்தார். இவ்வூரினை ஔவை சு.துரைசாமிப்பிள்ளை, பாண்டி நாட்டில் உள்ள ஊர் என்று சுட்டுகிறார். இவ்வூரைச் சேர்ந்தவர்களாக ஐயூர் முடவனார், ஐயூர் மூலங்கிழார் என இரு புலவர்கள் காணப்படுகிறார்கள்.
காவிரிப்பூம்பட்டினம்
சங்க கால சோழர்களின் தலைநகரமாகவும், துறைமுகமாகவும் இவ்வூர் இருந்துள்ளது. உருவப் பல்தேர் இளஞ்சேட் சென்னியின் தலைநகரமாகக் காவிரிப்பூம்பட்டினம் விளங்கியதை,
“பூவிரி நெடுஞ்சுழி நாப்பண், பெரும் பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன
செழுநகர்” 4
என்ற அகப்பாடலில் நக்கீரர் சுட்டியுள்ளார். கரிகால் பெருவளத்தான் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் சிறந்த துறைமுகமாக விளங்கியதைப் பட்டினப்பாலையும், பொருநராற்றுப்படையும் எடுத்துரைக்கின்றன. காவிரிப்பூம்பட்டினம், ‘காவிரி படப்பைப் பட்டினம்’ எனச் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகிறது. இவ்வூரைச் சேர்ந்தவர்களாக ஐந்து புலவர்கள் காணப்படுகின்றனர்.
கிடங்கில்
ஒய்மா நாட்டு நல்லியக்கோடன் ஆட்சி செய்த இவ்வூர் தென்னார்க்காடு மாவட்டம் திண்டிவனம் நகரத்தில் பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. அங்கே சிவன்கோவில் ஒன்று அமைந்துள்ளது. அதைச்சுற்றிலும் இடிந்த மதிற்சுவர்கள் காணப்படுகின்றன. அக்கோவிலில் கி.பி.11 முதல் 15-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சோழர், சம்புவராயர், விசயநகர வேந்தர் கால கல்வெட்டுகள் காணக்கிடைத்துள்ளன. அக்கல்வெட்டுகளில் ‘ஒய்மானாட்டு கிடங்கை நாட்டுக்கிடங்கில்’ எனும் ஊரில் அக்கோயில் இருப்பதாக கூறுகின்றன. இவ்வூருக்கு ஒரு கிலோ மீட்டர் வடக்கில் அமைந்த திண்டிவனத்தில் ஒரு சிவன் கோயிலுள்ளது. அக்கோயிலில் உள்ள சோழர்காலக் கல்வெட்டுகள் கி.பி.1300ம் காலத்தவையாம். அக்கல்வெட்டுகளும் ‘ஒய்மானாட்டு கிடக்கை நாட்டுக் கிடங்கிலான இராஜேந்திர சோழ நல்லூர்த் திண்டீசுரம்’ என்று குறித்துள்ளன. இச்சான்றுகளின் படி இன்றைய திண்டிவனம் நகரத்தின் பெரும்பகுதி கிடங்கிலே ஆகும். இக்கிடங்கில் நகரைச் சேர்ந்தவர்களாக மூன்று சங்கப்புலவர்கள் காணப்படுகின்றனர்.
குடவாயில்
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் குடந்தை, குடவாயில் ஆகிய யாவும் இன்றைய குடவாசலே என்று உ.வே.சா, பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், பெருமழைப்புலவர்சோமசுந்தரனார் ஆகியோர் குறிக்கின்றனர். இக்குடவாயிலைப்பற்றி,
“தண் குடவாயில் அன்னோள்””“ (அகம் – 44)
“தேர் வண் சோழர் குடந்தை வாயில்“ (நற்றிணை – 379)
“கொற்றச்சோழர் குடந்தை வைத்த நாடுதரு நிதி””“ (அகம் – 60)
என்று சங்க இலக்கிய அடிகள் குடவாயிலின் பெருமையினை பேசுகின்றன.
கூடலூர்
தென்னார்க்காடு மாவட்டத்தில் கடலோரத் தாலுக்காவாக இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரில் தென்பெண்ணை, கெடிலம், வெள்ளாறு என மூன்று ஆறுகள் ஓடுகின்றன. இவை கூடுமிடத்தால் கூடலூர் எனப் பெயர்பெற்று. பின் அப்பெயரே மருவி கடலூர் என அமைந்திருக்க வேண்டும். சங்க காலப் பல்கண்ணனார் என்னும் புலவர் இவ்வூரினராகக் கருதப்படுகிறார்.
கோவூர்
கோவூர் கிழாரின் பெயரால் அறியப்படும் இவ்வூர் சோழ நாட்டு ஊர்களுள் ஒன்று. நாகைக்கு அருகில் ‘கோகூர்’ என்று அறியப்படும் ஊரே சங்க காலத்தைச் சேர்ந்த கோவூராக இருக்கலாம் என்பது ஆய்வாளரின் கருத்தாகும்.
செல்லூர்
செல்லிக்கோமான் என்றழைக்கப்பட்ட ஆதன் எழினி என்னும் குறுநில மன்னனால் செல்லூர் ஆட்சி செய்யப்பட்டது. சோழநாட்டின் கீழைக்கடலோரம் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரின் கிழக்கே நியமம் என்ற ஊர் உள்ளது. இவ்வூரில் இளங்கோசர்கள் வாழ்ந்துள்ளமையை,
“அருந்திறற் கடவுட் செல்லூர்க் குணா அது
பெருங்கடல் முழக்கிற்று ஆகி யாணர்,
இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர்
கருங்கட் கோசர் நியமம் ஆயினும்”.” 5
என்னும் அடிகள் உணர்த்துகின்றன. இன்றும் காரைக்கால் அருகெ செல்லூர் என்ற ஊர் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
துறையூர்
தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முசிறித் தாலுக்காவில் இவ்வூர் காணப்படுகிறது. இவ்வூரைச் சேர்ந்தவராக ‘ஓடைகிழார்’ என்னும் புலவர் காணப்படுகிறார். இப்புலவர் வேள் ஆய் அண்டிரனைப்பாடும் பொழுது
“தண்புனல் வாயிற் றுறையூர் முன்றுரை” 6
என்று சிறப்பித்துப் பாடுகிறார்.
நல்லாவூர்
நல்லாவூர் சோழநாட்டைச் சேர்ந்த ஊராகும். இவ்வூரில் நல்லாவூர் கிழார் என்னும் புலவர் வாழ்ந்துள்ளார். இவ்வூரைப் பற்றி வேறொன்றும் அறிய இயலவில்லை. காரைக்கால் செல்லும் வழியில் எஸ்.புதூர் என்னும் ஊருக்கு அருகே நல்லாவூர் என்னும் ஒரு சிற்றூர் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாம்.
மாங்குடி
மாங்குடி என்ற பெயரில் தமிழகத்தில் பல ஊர்கள் உள்ளன. திருத்துறைப்பூண்டிக்கு அருகே மாங்குடி, மருதவனம் என இரண்டு ஊர்கள் உள்ளன. இவ்வூர்களைச் சேர்ந்தவராக மாங்குடி மருதனார் அறியலாகிறார்.
முகையலூர்
முகையலூர் என்பது சோழநாட்டைச் சார்ந்த ஓர் ஊராக இருந்துள்ளது. ஔவை.சு.துரைசாமிப்பிள்ளை முகையலூர் இடைக்காலத்தில் ‘முகலாறு’ என வழங்கி இப்பொழுது ‘மொகலாரென’ வழங்குகிறது என்கிறார். இவ்வூரைச் சேர்ந்தவராக சோணாட்டு முகையலூர் சிறுகருந்தும்பியார் என்னும் புலவர் காணப்படுகிறார்.
வெள்ளைக்குடி
வேங்கைமரம் எனப்பொருளுடைய சொல் ‘வெள்ளை’ என்பதாம். வேங்கை மரங்கள் அடர்ந்த குடியிருப்புகள் அமைந்த ஊர் வெள்ளைக்குடி எனப்பெயர் பெற்றிருக்கலாம் என்கிறார் ஆளவந்தார். இவ்வூரும் சோழ நாட்டைச் சேர்ந்த ஊராகும். நாகனார் என்னும் புலவர் இவ்வூரினார் ஆவார்.
இதுகாறும் சோழநாட்டு ஊர்களை ஆயுமிடத்து, அவை வரலாற்றுத்தொன்மை மிக்க சிறப்பு உடையதாகத் திகழ்ந்தமையை அறிய முடிகிறது. மேலும் ஊரின் அமைப்பும், அவ்வூரில் வாழ்ந்த புலவர்களும், அப்புலவர்களின் வழி அவ்வூரின் பெருமையினையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.
பயன்பட்ட ஆதாரங்கள்
-
நற்றிணை, பா. 141 : 9-11
-
அகம், பா. 227 : 5-6
-
மேலது பா.385 : 4.
-
மேலது பா.205 : 11-13
-
மேலது பா.90 : 9-12
-
புறம், பா.136 : 25.
-
டாக்டர். வேனிலா ஸ்டாலின், உரைவேந்தர் புலமையில் நற்றிணை
-
ஆர். ஆளவந்தார் இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள், தொகுதி– I
-
ஔவை சு. துரைசாமிப்பிள்ளை (உ.ஆ.), புறநானூறு மூலமும் உரைiuiuயும்.
- ஸ்ரீ கிருஷ்ண ஆலனஹள்ளியின் வனக்கோயில் (தமிழில் ராஜேஸ்வரி கோதண்டம்.) நூல் பார்வை
- வைரமுத்து படைப்புகளில் வாழ்வியல் சடங்குகள்
- சித்தர் பெயரால் சென்னையில் ஒரு பகுதி
- இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் குடும்பத்தலைவி சித்திரிப்பு
- சங்க கால சோழநாட்டு ஊர்கள்
- முள்வெளி- அத்தியாயம் -1
- என் சுவாசத்தில் என்னை வரைந்து
- ‘பெற்ற’ மனங்கள்…..
- பழமொழிகளில் அளவுகள்
- ஜீன்கள்
- நிழல்-பதியம் இணைந்து குறும்படப் பட்டறை
- இந்திய மொழி இலக்கியங்களை பிரெஞ்சு நண்பர்களுக்கு அறிமுகப் படுத்தும் ஒர் வலைப்பூ
- தில்லையில் கள்ள உள்ளம்…
- சோவின் ‘ என்று தணியும் இந்த சுதந்திர தாகம் _ மேடை நாடகம் (நகலச்சு)
- வெறும் தோற்ற மயக்கங்களோ?
- பஞ்சதந்திரம் தொடர் 36 – இரந்துண்ணும் நிலை எப்படி?
- குளவி கொட்டிய புழு
- அணு உலை எதிர்ப்பாளி ஞாநி பரப்பி வரும் தவறான கருத்துக்கள்
- காரைக்குடியில் கம்பன் விழா
- சிந்தனைக்கூடமா ? காசாப்புக்கடையா ?
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 16
- ஆணவம்
- தேவனும் சாத்தானும்
- சொல்லாமல் போனது
- காந்திகிராம ஃபோட்டோ ஒன்று – அம்மா, மாமாஜி படம்
- கொன்றை பூக்கள் உதிரத் துவங்கின…
- உஷாதீபனின் “தனித்திருப்பவனின் அறை” சிறுகதைத் தொகுப்பிற்கு எழுத்தாளர் திரு நரசய்யா அவர்கள் அளித்துள்ள முன்னுரை
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18
- நீலகேசி காட்டும் உயிர்ஓர்மை (அல்லது) முக்கூட்டு மருந்து
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 12) எழில் இனப் பெருக்கம்
- ஷண்முகராஜின் ‘ ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி ‘
- ரஸ்கோல்நிக்கோவ்
- இறையன்பு எழுதிய “ஓடும் நதியின் ஓசை”- விமர்சனம்
- பேனா பேசிடும்…
- என்னவென்று அழைப்பது ?
- ”கீரை வாங்கலியோ…கீராய்…!”
- கலாசாரத் தொட்டில்
- “ஊசியிலைக்காடுகள்”
- முன்னணியின் பின்னணிகள் – 33
- தாகூரின் கீதப் பாமாலை – 5 காதல் பித்து
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தி ரெண்டு
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 5