நீலகேசி காட்டும் உயிர்ஓர்மை (அல்லது) முக்கூட்டு மருந்து

This entry is part 29 of 42 in the series 25 மார்ச் 2012

இணைப்பேராசிரியர், மா. மன்னர்கல்லூரி(த), புதுக்கோட்டை.

ஒற்றுமை என்பது உலக ஒற்றுமை, நாட்டின் ஒற்றுமை, இனத்தின் ஒற்றுமை, குழுவின் ஒற்றுமை என்று பகுக்கப் பகுக்க சிறுபிரிவாய் குறுகும் தன்மையை உடையது. இச்சிறு சிறு பிரிவுகள் ஒன்றாக்கப் பெற்றால் மட்டுமே உலக ஒற்றுமை என்பது பெறப்படும். ஆனால் இனத்தால், மொழியால், நிறத்தால் பாகுபட்டு நிற்கும் சமுகத்தை எவ்வளவுதான் ஒன்றிணைத்தாலும் அது தன்னுடைய இயல்பான பிரிதலை நோக்கியே செல்லும். இந்தப் பிரிதலைத் தடுத்து ஒற்றுமையை நிலைநாட்ட இந்தியத் தத்துவங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிதான் உயிர் பற்றிய ஒருமைச் சிந்தனையாகும். மண்ணுலகில் பிறக்கின்ற எல்லாமும் உயிர் பெற்றிருக்கும் என்றும், அந்த உயிர் அனைத்துப் பிறவிகளிலும் ஒரே தன்மையது என்றும், பிறவிகள் அனைத்தும் பிறவாமை ஆகிய பேரின்ப நிலையை அடைய முயல்கின்றன என்று காட்டி இந்தியத் தத்துவங்கள் பாகுபாடின்மைக்கான விதையை விதைக்கின்றன. இதன்முலம் ஒரே நிலைப்பட்ட உயிர் பற்றிய தத்தவக் கருத்தை இந்திய தத்துவங்கள் வளர்த்தெடுக்க முயன்றன.

சமண சமயமும் உயிர் பற்றிய பல தத்துவக் கருத்துகளை எடுத்துரைக்கின்றது. சமண சமயத்தின் அடிப்படைக் கருத்துக்களை எடுத்துக் கொண்டுப் படைக்கப்படும் தமிழ் இலக்கியங்கள், காப்பியங்கள் உயிர் என்பதை உணர்த்தி அதன் ஓர்மை அடிப்படையில் உலக உயிர்கள் அனைத்தையும் ஒரே இயல்பினவாகக் கருதும் நன்முறைக்கு இட்டுச் செல்கின்றன. எனவே பாகுபாடு என்பது மறைந்து அனைத்து உயிர்களும் ஒரே திறத்தன என்னும் பொதுமை கிடைத்து விடுகின்றது. இதற்குள் இந்திய ஒருமைப்பாடும் செழித்தோங்குகின்றது. உலகமே கண்டு வியக்கின்ற இந்த ஒற்றுமைத் தன்மை இந்தியத் தத்துவப் போக்கின் வெற்றியாகின்றது.

நீலகேசி ஐஞ்சிறுக்காப்பியங்களுள் ஒன்றாகும். இது குண்டலகேசி என்ற பெருங்காப்பியத்தில் வலியுறுத்தப்படும் பௌத்த மதக் கருத்துகளுக்கு எதிர்நிலையில் நின்று அக்கருத்துகளின் வலுவின்மையை எடுத்துரைப்பதற்காக செய்யப் பெற்றுள்ளது. இதனை யாத்தவர் பெயர் தெரியவில்லை.

நீலி என்ற பேயின் தீத்தன்மையைப் போக்கி அதனை வழிப்படுத்தி, முனிச்சந்திர பட்டாரகன் என்ற துறவி சமணசமயக் கருத்துக்களை அப்பேய்க்கு அறிவிக்கும் நிலைப்பட்டதாக இக்காப்பியம் செய்யப் பெற்றுள்ளது. இதன் காரணமாக நீலகேசி புதுப்பிறவி பெற்று அப்பிறவியில் சமணசமயக் கருத்துகளைக் கற்றுத் தெளிந்து, அவற்றை எல்லா இடங்களிலும் வெற்றி பெறச் செய்துப் பரப்பினாள் என்பது இக்காப்பியத்தின் நிலைக்களனாகும்.

எனவே சமண சமயம் சார்ந்த காப்பியமாக நீலகேசி விளங்குகின்றது. இந்த நீலகேசிக் காப்பியத்தில் உயிர் பற்றிய கருத்துக்களை முனிச்சந்திர பட்டாரகன் என்ற துறவி தருமவுரைச் சருக்கத்தில் அறிவிக்கிறார். இக்கருத்துகள் உயிர்களாகப் பிறந்த அத்தனைக்கும் பொதுவான தன்மையனவாக அமைகின்றன. உயிர் பற்றிய சமண சமயத்தின் கருத்துக்களை இப்பகுதி வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது. அவை பற்றிய செய்திகளைத் தொகுத்து உயிர் ஓர்மையை இக்கட்டுரை உணர்த்தி நிற்கின்றது.

“பிறப்பு என்பது வேதனை பெரிதுடைத்து” என்று நீலகேசி உரைத்து அதில் இருந்து விடுதலை பெற துறவியிடம் வழி கேட்கின்றாள். துறவி பிறவியைப் பற்றியும், அப்பிறவியில் பிறக்கும் பிணிகள் பற்றியும், அந்தப் பிணிகளை அழிக்கும் மருந்து பற்றியும் உனக்கு நான் உரைக்கின்றேன் என்று கூறி உயிர் பற்றிய செய்திகளைக் கூறத் தொடங்குகின்றார். இவ்வாறு இக்காப்பியத்தில் உயிர் ஓர்மை பற்றிய சிந்தனைகள் தொடங்கி வைக்கப்படுகின்றன.

உயிர்களில் நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்ற நான்கு வகைகளை நீலகேசி எடுத்துரைக்கின்றது. நரகர் என்போர் இருளிருள், இருள், புகை, சேறு, மணல், பரல், மணி என்ற ஏழு வகைப்பட்ட உலகில் அழுந்திக் கிடக்கிறவர்கள். இவர்கள் முன்று காற்று வளையங்களால் இயங்கக் கூடியவர்கள். விலங்குகள் நிலங்களில் நிலைந்து நிற்பன, இயங்குவன என்று இருவகைப்படுவனவாகும். இவை ஐயறிவுயிர் என்று பாகுபடுத்தப்படுகின்றன. இவை பல காலின, எட்டில் இருந்து இரண்டு இரண்டாக கால்களைக் குறைவாகப் பெற்றன, தவழ்வன, ஊர்வன, பறப்பன என்று கடல் அளவினைவிட அளவில் பெரிய பரப்பின. மக்கள் என்போர் போகம் பெற்றோர், தீவில் வாழ்வோர், கோமான், குற்றம் நிரம்பியோர், தவந்தலை நின்றும் தவத்தின் பயனை அடையார் என்று ஐவகைப் பட்டோர் ஆவர். தேவர் என்போர் பவணர், வியந்தரர், சோதிடர், கற்பர், வேமானியர் என்று ஐவகைப்படுவர்.

இந்நால்வகையினரும் தத்தம் பிறப்பில் பெறும் துயரங்களும் நன்மைகளும் அடுத்தடுத்து நீலகேசியில் எடுத்துரைக்கப் பெறுகின்றது. நரகர் என்போர் உயிரினங்களைக் கொன்றதற்காக நெருப்பில் வீசப்படுவர் என்பது போன்றதான பல துயரங்கள் விவரிக்கப்படுகின்றன. விலங்குகள் ஒன்றினைக் கண்டு ஒன்று பயப்படும். மக்களுக்கு வரும் துன்பம் அடக்கமில்லாதவர்க்கு வரும் துன்பம், அனைவருக்கும் வருந்துன்பம் என்று இருவகைப்படும். தேவர்கட்குத் துன்பமில்லை.

இத்துயரங்களில் இருந்து விடுபட வேண்டுமானல் அதற்கு ஒரே வழி முக்கூட்டு மருத்தினைக் கைக்கொள்ளல் வேண்டும் என்ற பதிலை நீலகேசி தருகின்றது.

பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி
தீர்தற்கு உரியதிரி யோக மருந்திவை
ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார்
பேர்த்தபிணி யுள்பிற வார்பெரி தின்பமுற்றே
( நீலகேசி தருமவுரைச்சருக்கம், பாடல் எண். 116)
என்ற பாடல் முக்கூட்டு மருந்து என்ற ஒன்றினை அறிமுகப்படுத்துகின்றது. இந்தத் திரியோக மருந்தினைக் கைக் கொண்ட உயிர்கள் பிறவாமை என்ற பேரின்பத்தைப் பெறுகின்றன என்ற தெளிவினைத் தரும உரையாக நீலகேசி தருகின்றது.

இப்பாடலில் சுட்டப்படும் ஓர்தல் என்பது நன்ஞானம் எனப்படும். தெளிவு என்பது நற்காட்சியாகும். ஒழுக்கம் என்பது நல்லொழுக்கம் ஆகும். இவை பற்றிய சிறு விளக்கங்கள் பின்வருமாறு.

நன்ஞானம்
` ஊனத்தை இன்றி உயிர் ஆகியஉள் பொருள்கள்தான் நற்கு உணர்தல்’ ஞானம் எனப் பெறும். உயிர் பற்றிய அறிவே நன்ஞானம் என்படுகின்றது. இந்த உயிர் பற்றி அறிந்து கொள்ள அளவைகள் உள்ளன. இந்த அளவைகள் காட்சி, காட்சியல்லாதது என இருவகைப்படும். காட்சி என்பது ஐவகைப்பட்டது. பொறிக்காட்சி, மானதக் காட்சி, அவதிஞானக் காட்சி, மனப்பரியாய ஞானக் காட்சி, கேவல ஞானக் காட்சி என்பன அவையாகும். காட்சியில் அளவை என்பதும் ஐவகைப்படும். அவை நினைவு, மீட்டுணர்வு, ஊகம், அநுமானம், முனிவர் மொழிந்த ஆகம மெய்மொழி என்பனவாகும். இவ்வளவைகளோடு வைப்பு, நயன், புகுவாயில் என்பன குறித்து அறிதலும், ஒப்பற்ற குணமும், மார்க்கணையையும் பெறலும் ஆகியவற்றால் நன்ஞானம் பெறலாம் என்கிறது நீலகேசி.

நற்காட்சி
கடவுள், ஆகமம், பொருள், அளவை, நிகழ்ச்சி, இலிங்கம், சாரித்திரம், பலம் என்ற எட்டுப் பொருள்களையும் மனத்துள் வைத்து, மீட்சி இல்லாததாய் உந்திய இன்ப வெள்ளத்தை பெறும் வேட்கையே நற்காட்சி ஆகும். இக்காட்சியைப் பெறுவதற்குத் தடையாக உலகமுடம், பாசண்டி முடம், தேவமுடம் என்ற முன்று முடங்கள் அமைகின்றன. இவற்றில் இருந்துத் தப்பி அன்பு, அச்சம், ஆசை ஆகியன கடந்து, போலித்துறவினையும், போலி தத்ததுவங்களையும் விலக்கி, எட்டுவகைப்பட்ட செருக்குகளில் இருந்து நீங்குதலே நற்காட்சி பெற்றார் இயல்பு ஆகும். ஐயுறாமை, வேட்கையுறாமை, உவர்ப்புறாமை,மயங்காமை, செய்குற்றம் நீக்கல், திரிந்தாரை நிறுத்தல், காதலுடைமையும், அறங்காட்டலும் என்ற எட்டும் நற்காட்சியின் உறுப்புகள் ஆகும். இவை கைகூடின் நற்காட்சி கிட்டும்.

நல்லொழுக்கம்
நல்லொழுக்கம் என்பது அருகக் கடவுள் திருவாய் மலர்ந்தருளிய மெய்மைகளை உணர்தலில் தொடங்குகின்றது. மேலும் நற்காட்சி, நன்ஞானம் ஆகியனவற்றோடு ஒருவன் இரண்டறக் கலந்து, அருகசிந்தனையை ஏற்படுத்திக் கொண்டு, இவை என்றும் உள்ளத்தில் இருந்து நீங்காமல் ஒழுகுகின்றவன் நல்லொழுக்கம் பெற்றவனாகின்றான். துறவொழுக்கம் பேணுதல், அடங்குதல், பொறுமை முதலிய நல்லறங்களைப் பெற்றிருத்தல், நல்ல நினைவுகளை நினைத்தல், இரு வகைப்பட்ட தவங்களைத் தாங்குதல், உற்றநோய் நோன்றல் ஆகிய எட்டும் நல்லொழுக்கத்தின் இலக்கணம் ஆகும்.

நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் ஆகிய முன்றும் பிறவிப் பிணியைத் தேய்க்கின்ற முக்கூட்டு மருந்தாகும். இம்மருந்தினை உண்பதால் ஏற்படும் பயன்கள் பின்வருமாறு.

யோகம் இவற்றை உடனுண்ட உயிர்களெல்லாம்
மாக விசும்பினவர் தம்மொடு மன்னரும்மாய்
போக நுகர்ந்து பொருந்தா வினைபுல்ல லின்றி
ஏகநல் லின்ப மியைந்தால்இழ வில்லை நல்லாய்
( நீலகேசி தருமவுரைச்சருக்கம், பாடல் எண்.126)

ஏக நல்லின்பம் என்ற நிலையை உயிர் அடையவேண்டும் என்பதற்கான தேடலாக இப்பகுதி நீலகேசியில் அமைக்கப் பெற்றுள்ளது. ஏக நல்லின்பம் என்ற ஒன்றே உலக உயிர்களுக்கான ஓர்மைச் சிந்தனையாகும். இந்த ஓர்மையை அடையச் செய்யும் நன்முறையைக் காட்டுவதாக நீலகேசி விளங்குகின்றது.

Series Navigationமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 12) எழில் இனப் பெருக்கம்
author

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *