முள்வெளி – அத்தியாயம் -3

This entry is part 2 of 41 in the series 8 ஏப்ரல் 2012

அறையின் மூன்று பக்கமும் பால்கனி. ஹாலிலிருந்தும் இரண்டு பால்கனிக்குக் கதவு உண்டு. அந்த இரண்டு பால்கனியில் மட்டுமே செடி கொடிகள். ஒரு பால்கனியில் பூந்தொட்டிகள், பூ பூக்கும் கொடிகள். இன்னொரு பால்கனியில் பூ இல்லாத செடி வகைகள், துளசி, போன்ஸாய் செடிகள், உயரமாக வளரும் வரை பால்கனியில் இருக்கும் மரக் கன்றுகள். மூன்றாவது பால்கனியில் நிறைய சிமெண்ட் நாற்காலிகள், சிமெண்ட் ‘பென்ச்’கள், அது அறையிலிருந்து மட்டும் தான் திறக்கும்.அறைக்குள்ளே புத்தக அலமாரி, மேஜை, கம்ப்யூட்டர், சிறிய திவான்.

இந்த வடிவத்தை ராஜேந்திரன் முன் வைத்த போது புதுமையானது என்பதாலேயே பிடித்துப் போனது. இப்போது மணிக்கணக்கில் உட்கார்ந்து எழுத, வாசிக்க, வெவ்வேறு படக் குழுக்களுடன் விவாதிக்க எவ்வளவு வசதியாக இருக்கிறது. இந்த அறையில் ‘டெஸ்க் டாப்’ கம்ப்யூட்டர், பிராட் பாண்ட், விவாதிக்க வருவோருடன் பேசும் போது ‘லாப் டாப்’ பயன் படுத்தினால் அது வயர்லெஸ் ‘பிராட் பேண்ட்’ டுடன் இணைந்து கொள்ளும். இவ்வளவு அக்கறையும் கற்பனையும் ஈடுபாடும் ராஜேந்திரன் மீது கவனத்தை ஈர்த்தன.

எத்தனையோ நாட்கள் நேரம் போவதே தெரியாமல் பேச வாய்த்தது. எழுத முடியும், எழுத வேண்டும் என்று ஒரு கதவை அவருக்குள் திறக்க முடிந்தது. ஒவ்வொரு கதையாக உருவாகும் போது அந்தக் குழந்தைத்தனமான சந்தோஷத்தைப் பார்க்கும் கொடுப்பினை இருந்தது. நல்ல நட்பாக இருந்த பின் என்ன ஆனது அவருக்கு? அழவே கூடாது என்னும் வைராக்கியத்தை உடைத்து விட்டாரே? துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் லதா. ராஜேந்திரனின் எண்ணை மறுபடியும் முயன்றாள். ‘ஸ்விட்ச்ட் ஆஃப்’. ஜெயகுமார் எண்ணில் பதிலில்லை. ஜெயகுமார் சற்று நேரத்தில் அழைத்தார். “ஸாரி மேடம்”.

“இட்ஸ் ஓகே. டிஸ்கஷன் எப்படிப் போயிட்டிருக்கு?”

“டிஸ்கஷன்னு ஸீரியஸா செய்யலை மேடம். டைரக்டர் அவுட் டோரிலேயிருந்து இன்னும் வரலே. ஸ்கிரிப்ட்டை ராஜேந்திரன்னு ஒருத்தர் டைரக்டர் கிட்டே கொடுத்துட்டாரு. ஸார் வந்ததும் ஒர்க் ஸ்டார்ட் ஆகிடும் மேடம்”

” அப்போ என்னதான் பண்ணிக்கிட்டுருக்கீங்க?”

“மொதல்ல லொகேஷன் எத்தனையின்னு தெரிஞ்சா ஒரு எஸ்டிமேட் போடலாமின்னு. செந்திலின்னு ஒரு பையன் இந்த பிராஜட்ல அஸிஸ்ட் பண்ணறாரு”

“ஆளு எப்டி?”

“சுமாரா இருப்பான்”

“சரி இன்னிக்கி நான் ரெவ்யூ பண்ணறேன்”

“எங்கே வரட்டும் மேடம்?”

“பிறகு சொல்றேன்”

“ஐயா, செல்லாயிக் கிழவி வந்திருக்கு”

“உள்ள வரச் சொல்லு”

“கூட ஒரு ஆளும் இருக்காரு”

“அவரையும் வரச் சொல்லு”

சிறிது நேரத்தில் செல்லாயி மட்டும் தான் உள்ளே வந்தார்.

“என்ன விஷயம்மா? ஆரைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்க? உம்மவனா?”

“இல்லீங்கைய்யா. ஆரோ பெரிய இடத்துப் பிள்ளே. நம்ம கோயிலுல இருந்தவரை என் கிட்டே கொண்டு வந்து விட்டுட்டாங்க. பயந்த மாதிரி இருக்காரு. எதுவும் பேச மாட்டேங்கறாரு”

உடையார் எழுந்து வெளியே வந்தார். ராஜேந்திரன் ஒரு நாற்காலியில் எங்கோ நிலைத்த பார்வையுடன் இருந்தான்.

“பையில சட்டையில ஏதேனும் விலாசம் இருந்ததா?”

“இல்லீங்கைய்யா?”

“மொபைலு?”

“இருந்திச்சி. ஆனா அதுக்குள்ளே ஏதோ கார்டு இருக்கும் அது இல்லேயின்னு பெரியசாமி மவன் ராச வேலு பாத்திட்டு சொன்னான்.”

“போலீசில சொல்லி விசாரிக்க ஏற்பாடு பண்ணறேம்மா… சரியா?”

“கால் போன போக்கில எங்கிட்டாச்சும் போயிடுது தம்பி”

“இந்த மாதிரி ஆளுங்க ரொம்ப தூரம் போவ மாட்டாங்க. நீங்க நம்ப பசங்க கிட்டே சொல்லுங்க. தேடிக் கொண்டாந்திடுவாங்க. எப்படியும் அவங்க குடும்பம் கொஞ்ச நாளிலேயே தேடி வந்திடுவாங்க. கவலப் படாதீங்க.”

“கும்புடறேன்யா” செல்லாயி நகர்ந்தார்.

மிகவும் சிறிய கோயில். சுவரின் மீது இடது பக்கம் மதுரை வீரன் சாமி இரு மனைவிகளுடன். வலது பக்கம் கருப்பண்ணசாமி படம். கீழே இரும்பு ஆணிகள் பதித்த ஒரு ஜோடி இரும்பு செருப்புகள். வலது பக்கம் கூர்முனை நம்மைப் பார்க்கும் படி வைக்கப் பட்ட ஆளுயுற அருவாள். அதன் உள் வளைவு முனைப் பகுதியில் எலுமிச்சம் பழம் அழுத்தி வைக்கப் பட்டிருந்தது, அதனருகில் திரிசூலமிருந்தது. கற்பூரம் எறிந்து முடிந்த கருப்புப் படிந்த வெண்கலத் தட்டிலிருந்த திருநீறை ராஜேந்திரன் முகத்திலிட்டு, கொஞ்சம் திருநீறை விரலில் வைத்து அவன் முகத்தில் ஊதினார் செல்லாயி. ‘ஆரோ செய்வெனை வெச்சதில நீங்க சிரமப்படறீங்க. வாங்க தம்பி’ என்று கையைப் பிடித்து அழைத்துச் சென்றார். குளத்தை ஒட்டி ஓரிரு ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. ஒரு மாடு படுத்துக் கொண்டிருந்தது. பறவைகள் மரங்களையோ மாடங்களையோ நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தன.

ஜெயகுமாரும் செந்திலும் அடையாறு காந்தி நகரில் அடையாறு நதியை ஒட்டி இருந்த ஒரு தெருவில் அந்தக் குடியிருப்பைக் கண்டு பிடிக்க சற்றே சிரமப் பட்டார்கள்.

மூன்றாவது மாடிக்குப் படிகள் ஏறிச் செல்வது அயர்ச்சியாயிருந்தது. சந்திரிகா.எம்.ஏ. தலைமை ஆசிரியை (ஓய்வு) அடையாறு மேல்நிலைப் பள்ளி என்று வீட்டின் கதவில் பதாகை கூறியது. கதவு திறந்த போது லதாவும் சந்திரிகா அம்மாளும் வரவேற்பறையில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தனர். ஜெயகுமார் சந்திரிகாவுக்கு வணக்கம் தெரிவித்தார். “மேடம் என்னோட டீச்சர். எனக்காக் நம்மோட ஸீரியல்ல நடிக்க ஒப்புக்கிட்டிருக்காங்க”. சந்திரிகா சற்றே குள்ளமாகவும் கருப்பாகவும் இருந்தார். குறிப்பாக லதாவின் நிறமே அவரை இன்னும் கருப்பாகக் காட்டியதாகத் தோன்றியது.

“மிஸ். முதல்ல நாங்க எல்லாருமே நீங்க எங்க ஸீரியலிலே நடிக்க ஒத்துக் கிட்டதுக்கு தேங்க்ஸ் சொல்றோம்.”

“அந்தக் காலத்தில உன்னை ஸ்கூலில டான்ஸூ, பாட்டுன்னு எவ்வளவு ஆட்டி வெச்சிருக்கேன். நவ் இட் இஸ் யுவர் டர்ன்”

“ஒவ்வொரு ஸீரியலிலே ஒரு ஷார்ட் ஸ்டோரி வர்ற மாதிரி ஓபனிங்க் ஸாங்க் ஒவ்வொரு தடவையும் ஒரு தமிழ் க்ளாஸிகல் ஸாங்க் வரும்”

“நான் வர்ற எபிஸோடுக்கு என்ன ஸாங்க்?”

“புல்லாய்ப் பிறவி தர வேண்டுமே” லதா தொடங்கினாள்.

“புனிதமான பல கோடி பிறவி தந்தாலும் பிருந்தாவனமதிலொரு புல்லாய்ப் பிறவி தர வேண்டுமே” சந்திரிகா தொடர்ந்தார்.

“எப்படி அந்தப் பழைய பாட்டையெல்லாம் இன்னும் ஞாபகம் வெச்சிருக்கே லதா?”

“எல்லாப் பாட்டுமே இன்டர் நெட்லே இருக்கு. நெறைய தடவை கேட்டு மறந்த அடியையெல்லாம் ஞாபகப் படுத்திக்கிவேன்”

“எனக்கு டீச்சர் ரோல் தானே?”

“இல்ல மிஸ். ஃபர்ஸ்ட் நான் ஸ்டோரியில நீங்க வர போர்ஷனை மட்டும் படிக்கறேன். அதிலேயே புரியும். டைட்டில் நெடுஞ்சாலை”. உடனே செந்தில் கையில் இருந்த பிரதியை லதாவிடம் நீட்டினான். லதா படிக்கத் துவங்கினாள்.

இரவு மணி பன்னிரண்டு. மார்கழி மாதப் பனி அடர்ந்த காற்றில் அந்த ஜீப்பின் முன் விளக்குகளின் ஒளி வழக்கத்தை விட மங்கலாகவும் மேடு பள்ளங்கள் நிறைந்த அந்த கிராமத்துச் சாலையில் ஆடி அசைந்த படியும் விழுந்தது. பூச்சிகள் அந்த வெளிச்சத்தில் புகுந்து மறைந்தன.திடீரென வண்டி நின்றது. ” ஏ கெளவி நில்லு”

கிழவி கையில் லாந்தர் விளக்கு. குளிருக்கு இதமாகவோ என்னவோ சிறுவன் தலையின் பின்புறம் ஒரு சாக்குப் பை முதுகு வரை தொங்கிக் கொண்டிருந்தது.

“நடு ராத்திரியிலே எங்கேம்மா போறே?” ஜீப்பிலிருந்து குரல் அதட்டியது.

“கும்புடறேனுங்க சாமீ… மெட்ராஸுக்குப் போன இவனோட அண்ணன் இன்னும் வரலீங்க. அதான் லாந்தர் எடுத்துக் கிட்டு ரோடு வரையில போயிப் பாத்துட்டு வரலாமின்னு..”

“ஆம்பளப் பய வரலேயின்னு கெளவி நீ கெளம்பிட்டியாக்கும்”… “பக்கத்தில வா” கிழவி பயந்த படி ஜீப் அருகில் சென்றார். சட்டைப் பையிலிருந்த போலீஸ் டிரைவர் ஒரு போட்டோவை எடுத்துக் கொடுக்க “டார்ச்சை அடி” என்றார் இன்ஸ்பெக்டர். “இந்த ஆளை உங்க ஊரில எங்கேயும் பாத்தியா?” தாடியும் மீசையுமாய் ஒரு போட்டோ. ” இல்லீங்க ஸார்”. “சரி. போ”.

சந்திரிகா குறுக்கே ஏதோ கூற முயன்றார். லதா படிப்பதை நிறுத்தி விட்டு ‘முழுசா படிக்கப் போறதில்லே. உங்க ஸீன் இன்னொண்ணு வரும். அதைப் படிக்கறேன்.” என்று தொடர்ந்து படித்தாள்.

ஒரு வழியாக தேசீய நெடுஞ்சாலை நெருங்கியது. வாகனங்கள் இரைச்சலும் விளக்கொளியும் அவ்விருவரும் இது வரை நடந்து வந்த நிசப்த சூழலுக்கு முற்றிலும் மாறாய் இருந்தன.

சாலையை நெருங்க நெருங்க தங்களைப் போலவே இன்னும் பலர் விரைந்து கொண்டிருப்பது தெரிந்தது. “டேய் சின்னா, இப்பதான் வர்றியா?” பரிச்சயமான குரலைக் கேட்டு பேரன் திரும்பினான். அது அவனது பள்ளித் தோழன் அடைக்கலம். அவன் தலையின் மீது பெரிய தேக்ஸா.

“உள்ளே என்ன தண்ணியாடா?” என்றான் சின்னா.

“இல்லடா அரிசி” என்றான் அடைக்கலம். அவனும் இன்னும் பலரும் தலைச்சுமையுடன் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

ஆயா சின்னய்யன் கையைப் பற்றியபடி மேடான தேசீய நெடுஞ்சாலையை மூச்சு வாங்கியபடி அடைந்தார். ஒரு லாரி புளிய மரத்தின் மீது மோதி முன் பக்கம் மோசமாகச் சிதைந்திருந்தது. ஒற்றை முகப்பு விளக்கு மட்டும் இன்னும் எரிந்து கொண்டிருந்தது. அதன் மேலிருந்த கயிறுகள் அறுந்து தொங்க மூட்டைகள் சரிந்து கீழே கிடந்தன. ஓரிரு மூட்டைகளிலிருந்து அரிசி கொட்டியபடி இருந்தது. நிறைய இரண்டு சக்கர வாகனங்கள். அவற்றின் மீது ஒரு மூட்டையையே ஏற்றும் முயற்சியில் பலர். ” மினி வேனெல்லாம் திரும்பிப் போப்பா. ஆளுக்கு ஒரு மூட்டையின்னு அள்ளிக்கினா ஓகே”. ஒருவர் உரத்த குரலில் கத்தினார்.

” இந்த லாந்தரைப் புடி” என்று அவனிடமிருந்த சாக்குப் பையை வாங்கி ஆயா கூட்டத்தில் புகுந்தார். சின்னா லாரியின் முன் பக்கத்தைப் பார்க்க நகர்ந்தான். முன் பக்கத்தை நெருங்கும் போது படுத்திருந்த யாருடைய காலையோ இடறி விட்டதாகத் தோன்றியது. லாந்தரை கீழே வைத்து விட்டு குனிந்து பார்த்தான். லாரி டயருக்குக் கீழே ரத்த வெள்ளத்தில் ஒரு பிணம் தெரிந்தது.

Series Navigationஅன்புத் தம்பி புனைப் பெயருக்குசந்திரா இரவீந்திரன் ‘நிலவுக்குத் தெரியும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு
author

சத்யானந்தன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    punai peyaril says:

    நீங்க சினிமாக்காரரா…/ சும்மா ஒரு ஆர்வமே…. மற்றபடி நீங்க ரொம்ப நல்லவரு,அதனால் தான் “அடையாறு காந்தி நகரில் அடையாறு நதியை ஒட்டி..” என்று சாக்கடையாகிப்போனதை நதி என்று இன்னும் சொல்கிறீர்கள்… உண்மையிலேயே அந்த தெருவில் ஒரு சினிமாக்கார் இருக்கார்…

    1. Avatar
      sathyanandhan says:

      My dear friend, I am basically a writer. I had scripted long back one short film for Doordharshan based on a short story by me.Except that I dont have any contact with film media 2. All the characters in this novel are imaginary. This novel is depicting almost all sections of society besides main characters. Regards. Sathyanandhan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *