மொழியின் எல்லையே நம் சிந்தனையின் எல்லை!

This entry is part 25 of 41 in the series 8 ஏப்ரல் 2012

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் – அண்ணன்
வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்!

கவிஞர் கண்ணதாசனின் இனிய கவிமொழியில், டி.எம்.சௌந்தரராசன் அவர்களின் தேனினும் இனிய குரலில், பாசமலர் எனும் திரைப்படத்தின் பிரபலமான பாடல் இது. இந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தபோது, நண்பர் கேட்ட ஒரு கேள்வி என்னை சிந்திக்க வைத்தது. ”ஒரு தங்கை உறங்குகிறாள், ஆனால் கவிஞர் மலரைப்போல் தங்கை உறங்குகிறாள் என்று சொல்லாமல் ஏன் மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் என்று சொல்ல வேண்டும்” என்ற வினாவை எழுப்பினார். இத்தனை ஆண்டுகளாக இப்பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் எமக்கு இப்படி ஒரு ஐயம் எழுந்ததே இல்லையே….. சிந்திக்க ஆரம்பித்தேன்…. அதற்கான வண்ணமிகு காட்சி அழகாக எம் எண்ணத்தில் உதித்தது.

கவின்மிகு மலர்வனம்
மதிநுதல் மங்கையவள்
வண்ணமிகு மலர்மஞ்சமதில்
சயனம் கொண்டுள்ளாள்
பாசமிகு தமையனவன்
நேசமிகு சகோதரியின்
அமைதியான நித்திரைக்காக
காவல்காத்து நிற்கிறான்
மலர்க்கூட்டத்தை மொய்க்கும்
வண்டுகளின் ரீங்காரம்
இன்னிசை கீதமாய்
தாலாட்டாய் இசைக்கிறது.
அம்மயக்கத்தில் மலர்களும்
கிரக்கமாய் துவண்டு கிடக்கிறது
அம்மலர்களை ஒத்ததாம்
மங்கையவள் வதனம்…….

இதுவே என் பதிலாய் என் நண்பருக்கு நான் விளக்க அவருடைய சிந்தையோ வேறு திசை நோக்கி பயணிக்கிறது. அதாவது, பொதுவாக மங்கையரின் ஒவ்வொரு அங்கத்தையும் ஒவ்வொரு மலருக்குச் சமமாய் வர்ணிப்பது கவிஞர்களின் வழமை. அவ்வகையில் அல்லி மலர் போன்ற கண்களையும், எள் மலர் போன்ற நாசியும், தாமரை மலர் போன்ற மலர்ந்த முகமும், ரோசா இதழ்களும் ,இப்படி ஒரு மலர்க்கூட்டமாகத் தம் தங்கையின் காட்சி அவனுக்குக் கிடைப்பதாலேயே, மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் என்றானாம்…… என்னே கற்பனை பாருங்கள்!

இதுதானே நம் செம்மொழியின் சீர்மிகு வளமை. மொழிவளம் இருந்தால் எப்படி வேண்டுமானாலும் பொருளில் புகுந்து விளையாடலாமே! இதற்கு நமக்கு வேண்டியதெல்லாம் சிந்தனா சக்தி அல்லவா? இந்த சிந்தனையை இப்போது எந்த மொழியில் கொண்டுவரப் போகிறோம் என்பதுதான் கேள்வி. அவரவர் தாய்மொழியில் சிந்திக்கும் வேளையில் மட்டுமே நம் சிந்தனையின் எல்லை பரந்துபட்டுக் கிடக்கும். வேற்று மொழியில் சிந்திக்கும் பொழுது அச்சிந்தனை குறுகிய எல்லைக்குள் முடங்கிவிடலாம். ஒருவர் எவ்வளவுதான் வேற்று மொழியிலும், சிறந்து விளங்கினாலும் தத்தம் தாய்மொழியில், பிறந்தது முதல் பேசிப் பழகிய மொழியில் சிந்திக்கும் போது நம் சிந்தனா சக்தியின் எல்லை விரிவடைகிறது என்பதை உணர இயலும்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
வாளொடு முன் தோன்றிய மூத்த குடி
நம் தமிழ் மொழி என்பார் பரிமேலழகர்!

2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் நம் இந்திய நாட்டைப்பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ் பெயர்கள் காணப்ப்படுவது இதற்கு ஓர் சான்று. 2300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழில் எழதப்பட்ட சில கல்வெட்டுகள் உள்ளன. 2400 ஆண்டுகளுக்கு முன்பே, பாணினி காலத்திலேயே தமிழில், ‘நற்றிணை’ எனும் ஈடற்ற இலக்கண நூல் தோன்றியுள்ளது. 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, சிறிதும் சிதையாத நிலையில் முழுமையாக நமக்குக் கிடைத்துள்ள பொக்கிசம் ‘தொல்காப்பியம்’ ஒன்றே. அதற்கு முன்பும், ’அகத்தியம்’ எனப்படும் இலக்கிய நூல் 3500 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப் பெற்றதாக நம்பப்படுகிறது. சிலர் 5000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்றும் கூறுகிறார்கள்.

செருமனி நாட்டின் முதல் எழுத்து வடிவம் கி.பி.8ம் நூற்றாண்டிலும், பிரெஞ்சு மொழியின் எழுத்து வடிவம் 9ம் நூற்றாண்டிலும், உருசிய மொழியின் எழுத்து வடிவம் 10ம் நூற்றாண்டிலும், இலத்தீனிலிருந்து பிறந்த இத்தாலி மொழியும் 10ம் நூற்றாண்டில்தான் எழுத்து வடிவம் பெற்றுள்ளது. ஆனால், நம் அன்னைத் தமிழ் மொழியோ, கி.மு.2ம் நூற்றாண்டின் முன்பே, முதல் எழுத்து வடிவமான தொல்காப்பியம் கிடைத்துள்ளது.

உலகில் முதன்முதலில் தோன்றிய நாடு தமிழகமும் அதை அடுத்த கடல் கொண்ட தென்னாடுமே என்கின்றனர் நில ஆய்வாளர்கள். இளங்கோவடிகள், “பதியெழ் அறியாப் பழங்குடியினர்” என காவிரிப்பூம்பட்டிணத்து மக்களைக் கூறுவதும் இதற்கான சான்றாக அமையும். ஆதியைக் கண்டறிய முடியாத அளவிற்கு காலம் கடந்த மொழியாக நம் தமிழ் மொழி இருப்பது மிக ஆச்சரியம் அல்லவா.

சங்க காலத்தில் காதலையும், வீரத்தையும் நம் தமிழர் பண்பாட்டின் ஒருங்கிணைந்த இரு கூறுகளாகக் கொண்டு வாழ்ந்துள்ளனர். அக வாழ்க்கை – தலைவன், தலைவி, குழந்தைகள், உற்றார், பெற்றார் என குடும்ப வாழ்க்கை. புற வாழ்க்கை என்பது வீரத்தை எடுத்துரைக்கும் வாழ்க்கையாக இருந்துள்ளது. இதற்கான சான்று, அகநானூறு மற்றும் புறநானூற்றுப் பாடல்கள்.

மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
என்பார் ஐயன்.

இன்று கனடா, பிரான்சு, ஆத்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சுமார் 30 நாடுகளில் நம் தமிழர்கள் வாழுகின்றனர். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், சூரினாம், மாலத்தீவுகள், மொரீசியசு, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் காடாய்க்கிடந்த பூமியை செப்பனிட்டு விவசாய பூமியாகச் சிறக்கச் செய்த வல்லமை பெற்றவர்கள் நம் தமிழர்கள் அன்றோ! நெடிதுயர்ந்த அழகான கட்டிட வடிவமைப்புகளிலும் நம் தமிழர்களே சிறந்து விளங்கியுள்ளதையும் வரலாறு கூறுகின்றது. சீன யாத்ரீகர் யுவான் சுவாங் முதல் கால்குவெல், ஜி.யு போப் வரையுள்ள பல்வேறு நாட்டு அறிஞர்கள், மொழி, மத வேறுபாடின்றி, தமிழின் பண்பட்ட மற்றும் அதன் தொன்மையை போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

பின்னை நின்றென்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவஞ் செய்திலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே. -திருமூலர் 10 பா.20

தமிழ் மொழியின் பெருஞ்சிறப்பிற்கு உரிய முதன்மையான நூல்களைத் தொகுத்து உரைக்கும் பழம்பாடல் ஒன்றுள்ளது. அப்பாடலில் திருமூலரின் திருமந்திரமும் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சைவத்திருமறைகளுள் பத்தாம் திருமறையாக இடம்பெற்றுள்ள இம்மகா தெய்வ நூல் 3000 ஆண்டுகள் வாழ்ந்த சித்தர் பெருமான் திருமூலர் ஆண்டிற்கொரு பாடலாக முத்து முத்தாகத் தொகுத்த தெயவ காவியமாகும். இந்நூலில் இல்லாத வாழ்வியல் தத்துவங்களே இல்லை என அருதியிட்டுக் கூறலாம். ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்றும்,

அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே.

என்பதனை,
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
என்ற ஐயன் வள்ளுவனின் வாக்கும் , கடவுள் அன்பாய் இருக்கிறார், (யோவான் – 48- விவிலியம்) என்று அனைத்து மதத்தினரும் அன்பையே பிரதானமாகக் கொண்டு வாழ்ந்த நம் தமிழர் பாரம்பரியத்தை தெள்ளென விளக்குவதாக அமைந்துள்ளது.

திருமூலர் திருமந்திரத்தில் 3000 ஆண்டுகளுக்கும் முன்னரே அறிவியல் நோக்கில் சிந்தனையைச் செலுத்தி, சாதனைகள் படைத்துள்ளது ஆச்சரியப்படத்தக்க செய்தியன்றோ? நம் தாய்த்திருமொழியான தமிழ் மொழியில் அறிவியல் ஞானமும் பெற இயலும் என்பதற்கான சிறந்ததோர் சான்று அன்றோ அவர்தம் பாடல்கள்! மிகச் சிறந்த காட்டுகள் பல உள்ளன. குழந்தைகள் ஊனமாகவும், மனநலம் பாதிக்கப்பட்டும் பிறப்பதற்கான காரணத்தைக் கூட ஆய்ந்தறிந்து அதைத் தவிர்ப்பதற்கான உபாயமும் ஓர் தமிழ் சித்தர் வழங்கியுள்ளார், அதுவும் விஞ்ஞானம் என்ற ஒன்று அறியப்படாத 3000 ஆண்டுகளுக்கு முன்னர் என்றால் ஆச்சரியமாக அல்லவா உள்ளது.

இன்றைய அறிவியல் விண்ணளாவ உயர்ந்திருந்தாலும், கருவின் பாலினத்தைத் தேர்வு செய்யும் உபாயம் அறிந்திலோம் நாம். ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ வேண்டியதைப் பெற்றுக் கொள்ளும் வழியை இன்றளவும் கண்டிலோம். ஆயின் திருமூலர் அதற்கான உபாயம் ஓர் பாடலில் சொல்லியிருக்கிறார் பாருங்களேன்… ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா..

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகுந்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.

பொருள் – கூட்டுறவின்போது ஆண் பண்பு மிகுந்தால் சிசு ஆணாகும், பெண் பண்பு மிகுந்தால் சிசு பெண்ணாகும். ஆண் – பெண் இரண்டொத்துப் பொருந்தில் அலியாகும் அதாவது, ஆண் , பெண் குணம் இரண்டும் சமமாகின் அது அலியாகுமாம். பெண்ணின் நீக்க நிலைக்குக் கடந்த பூமானாகில் உலகை ஆளத்தக்க குழவியாகுமாம். மேலும், கூட்டுறவின் போது தாழ்ச்சி மனப்பான்மையிருந்தால் சுக்கிலம் பாய்வது நின்றுவிடும் என்கிறார்…… கருவில் ஆண், பெண் மாற்றம் அமைவது அழகாகக் கூறப்பட்டுள்ளது காண்க!

உலகமயமாக்கலின் இன்றைய நிலையின் அதிகபட்ச விலையாக நம் தமிழ்த்திருமொழியை கொடுக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது,தவிர்க்க இயலவில்லை. உலகம் முழுவதும் தற்போது 6000 மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் அடுத்த நூற்றாண்டில் 12 மொழிகள் மட்டுமே வளமையாக வாழப்போகிறது என்றொரு ஆய்வறிக்கை அச்சமூட்டுகிறது. இதில் இன்னொரு அதிர்ச்சியான தகவல், அப்பட்டியலில் தமிழ் மொழி இல்லை. நம் நாட்டில் மொத்தம் வழக்கில் உள்ள 18 மொழிகளில், இந்தி மற்றும் வங்காளி மொழி மட்டும்தான் எஞ்சி நிற்கலாம் என்கிறது அந்த ஆய்வறிக்கை. மொரீசியசு நாடு இதற்கு ஒரு சான்று. இன்றும் பலர் தமிழ் பெயர்களுடன் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், இவர்கள் தமிழர்களாயினும் தமிழ் மொழி பயன்பாடு அறவே நின்றுபோய் உள்ளது. காலப்போக்கில் அழிந்து போய் உள்ளது.

அமெரிக்கப் பழங்குடியினர், யூதர்கள், ஆர்மீனியர்கள், ஈழத்தமிழர்கள் போன்றவர்கள் தங்கள் மொழியைக் காக்க அரும்பாடுபட்டு அதில் ஓரளவிற்கு வெற்றியும் கண்டுள்ளனர். ஒரு மொழி முற்றிலும் அழிவது என்பது அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவரால் மட்டுமே ஆகக் கூடியது அல்லவா….

தாய்மொழியில் ஒரு நுணுக்கமானச் செய்தியை திறம்பட வெளிப்படுத்த வேண்டுமானால் குறைந்தது, 7000 முதல் 8000 வரையிலாவது சொற்கள் தெரிந்திருக்க வேண்டுமாம். அப்போதுதான் நாம் நினைக்கும் ஒரு செய்தியை தெளிவாக அடுத்தவருக்கு உணர்த்த இயலும். குழந்தைப் பருவத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் வாய்ப்பைப் பொறுத்து நாம் ஒரு சொல் தொகுதியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். அது அவரவர் சூழலுக்கேற்றவாறான அளவுகோளில் அமையலாம். இன்றைய சூழலில் ஒரு தமிழருக்கு அதிகபட்சமாக 3000 முதல் 4000 சொற்களின் தொகுதியையே பெற்றுள்ளார்களாம். நம் அகரமுதலியே, மிகச் சொற்பமான 16,000 வார்த்தைகள் மட்டுமே கொண்டதாக இருக்கிறதாம். நம் தமிழ் மொழியின் சொற்களின் தொகுதியைக் கூட்டிக் கொள்வதே இன்றைய அத்தியாவசியத் தேவையாக உள்ளது. இன்று பெரும்பாலான அறிஞர்கள், ஒரு செய்தியை தெளிவுபடுத்த விரும்பினால், அதனை முதலில் ஆங்கிலத்தில் பயின்று, பின் சிரமப்பட்டு அதனை தமிழில் புரிந்து கொண்டு வெளிக்கொணரும் நிலையே உள்ளது. இந்த நிலை மாறுவதற்கான முயற்சியை நம் அறிஞர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதே எம் போன்ற சாமான்யர்களின் பெரும் விருப்பாக உள்ளது. நம் தமிழ் அன்னையின் இன்னுயிரைக் காக்க வேண்டியச் சூழலில் நாம் இருக்கிறோமோ என்ற அச்சம் மேலோங்குகிறது. நம் குழந்தைகளின் நிலையை இன்று காணும்போது அந்த அச்சம் பன்மடங்கு அதிகரிக்கிறது. அதற்கான காரணம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

ஒப்பிலக்கணம் கண்ட கால்குவெல் போப், நம் தமிழ் மொழியை செம்மொழி என்று நிறுவிய பரிதிமாற்கலைஞர், சங்க இலக்கியங்களை ஓலைச்சுவடிகளிலிருந்து, அச்சு வடிவம் பெறச் செய்த உ.வே,சாமிநாத ஐயர், சி.வை.தாமோதரம் பிள்ளை போன்ற நம் தமிழன்னைக்கு அணிகலனாக இருந்த சான்றோர்களை எண்ணி கைகூப்பித் தொழுவோம்! நம் செம்மொழித் தமிழை அறிவியல் தமிழாகக்கட்டிக் காக்கும் உறுதி கொள்வோம்!

படத்திற்கு நன்றி :

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:TamilGodessIdol.jpg

Series Navigationபுதுப்புனல் விருது 2012 ஏற்புரை – நானும் என் ஸ்குரூ டிரைவரும்மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -20
author

பவள சங்கரி

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *