மலைபேச்சு- செஞ்சி சொல்லும் கதை-21

This entry is part 21 of 44 in the series 15 ஏப்ரல் 2012

பாதரே பிமெண்ட்டா! எனது பேச்சின் முக்கியமான பகுதிக்கு வந்திருக்கிறேன். நான் காத்திருந்ததற்கு பலன் கிடைத்திருக்கிறது. கன்னிப்பெண்ணின் பிள்ளையை கடவுளாக ஏற்றுக்கொண்ட உங்களையன்றி வேறுயார் என்னையும் என்பிள்ளையையும் புரிந்துகொள்வார்கள் சொல்லுங்கள். நீங்கள் மட்டுமே சிசு வயிற்றுக்குள் வந்தவிதத்தைப்பற்றி கேள்விகேட்கமாட்டீர். அது தெய்வ குற்றமென்று நீங்கள் அறியமாட்டீரா என்ன?

23. எனது குரலை இனம்கண்டு புருஷ குரலா ஸ்த்ரீயின் குரலா என்று தீர்மானித்திருப்பீர்கள். பெண்சொல்லும் கதைக்கு பெண்ணைபோலவே வனப்பும் வசீகரமுமுண்டு. மாமாவைக் காட்டிலும் அத்தையோ; தாத்தாவைக்காட்டிலும் பாட்டியோ கதை சொல்லும்போதுதான் சொல்லப்படும் கதைக்கு ஒரு மகத்துவம் கிடைக்கிறது. கன்னிப்பெண்! மாங்கல்யத்தை கழுத்தில் தரிக்காத ஸ்த்ரீக்கள் கன்னிப்பெண்களெனில் நான் கூட கன்னிஸ்த்ரீ. பெண்டுகள் ருது நூல் சாஸ்திரம் படித்திருப்பீரா? படித்ததில்லையென்றாலும் குறையில்லை. ருது பலன் பார்த்த எங்கள் குடும்ப ஜோசியர்’சித்திரையில் புஷ்பவதியானவள் புருஷருக்கு ஆகாதப்பா’ என்றார். என்னால் புருஷருக்கு கேடு வருமோ வராதோ, எனக்கு வந்திருக்கிறது. எத்தனை நாட்களாக இங்கே கிடக்கிறேன்? எப்போதிலிருந்து கிடக்கிறேன். ஐப்பசியோ கார்த்திகையோ இரண்டில் ஏதோவொருமாதம். வியாழனோ வெள்ளியோ ஏதோவொருநாள். ஆனால் ஆண்டுகள் பலவாக இக்கிணற்றில் கிடக்கிறேன். இப்புவி நீரும் நெருப்புமாக கர்ப்பம் தரித்த நாளிலிருந்துவென தோராயமாக ஒரு நாளைச் சொல்ல முடியும். வயது வேண்டாம். எனது நாமகரணம் ம்.. அது கூட வேண்டாம். உங்களை சுற்றி அரணாக, கோட்டை சுவராக, வெளி மதிலாக, உள்மதிலாக, படிக்கல், கட்டுக்கல் தூண் தூலங்களென்று வடிவெடுத்த இம்மலையின் கற்களில் நானும் ஒருத்தி. ஊர் பேர் தெரியாத பெண்ணொருத்தியின் கதையென்றால் சுவாரஸ்யம் கெட்டுவிடுமாயின் எனது பெயர் கமலக்கண்ணி.

கொலைவாளின்றி, இரத்தம் சிந்தாமல் சாகவேண்டுமென சபிக்கப்பட்டவள். உயிரைப் பறித்துவிடலாமென தீர்மானித்தபிறகு இங்கேதான் முடிவாம். என்னை இரத்தபலிகொடுத்தால் பலனுண்டென பேசிக்கொண்டார்கள். தலையில் மஞ்சள்நீரைத் தெளித்து கொலைவாளினை ஓங்கியபோதுதான், பூசாரி பலி பொருளின் பரிசுத்தம் குறித்து யோசித்திருக்கவேண்டும். பெண்ணே நீ தீட்டு பட்டவளில்லையே? எனக்கேட்டான். பொய் சொல்லியிருக்கலாம். சோதித்துப்பார்ப்பார்களோ என்கிற அச்சம் காரணமாக, தலையாட்டினேன். வயிற்றில் பிள்ளை கிள்ளை வாங்கவில்லையே? என மற்றொரு கேள்வி. இம்முறை சோழிப்பற்கள் தெரிய சிரித்தான். அக்கேள்வி கேலிக்குறியதென்று அவன் நினைத்திருக்கவேண்டும். தங்கள் மீது இரத்தம் சிந்தப்போகிறதென எச்சரிக்கையாய் ஒதுங்கிநின்ற வேறு இரண்டுபேரும் தலையை ஆட்டி தொப்பை உதற சிரித்தார்கள். மரக்கிளையொன்றில் அமர்ந்திருந்த ஆந்தையொன்று ‘அலறிக்கொண்டு பறந்து போனதும் நினைவிலிருக்கிறது. .

இக்கிணற்றுக்குப் பெயர் மரணக்கிணறு. வாழ்ந்துகெட்டவளென்றால் பாழும் கிணறு. வாழாமல் கெட்டவளுக்கு நீரில்லாத கிணறு. சிரிப்பு வருகிறது. பயப்படாதீர்கள். கிணற்று சுவரில் மோதித் தெரிப்பதால், அமானுஷ்யமாக எனது குரல் ஒலிக்கிறது. மற்றபடி உங்களை பயமுறுத்துவதென்பதென்ற எண்ணங்கள் எனக்கில்லை. உங்களுக்கும் மரண தண்டனை தீர்ப்பெனில் நாளைக்கே எனது அனுபவம் உங்களுக்கும் ஏற்படலாம். சுற்றிலும் எலும்புக்கூடுகள், உடைந்தும், நொறுங்கியும் மண்ணிற் புதைந்தும் இருக்கின்றன. நீரிறங்க மலம்தள்ள மெல்ல உயிர் பிரியும். பிறகொரு நாள் பூர்வீகச் சொத்தை விருப்பம்போல ஆண்டு அநுபவிக்க வந்தவைபோல எறும்புகளில் ஆரம்பித்து வண்டுகளும் புழுக்களும் தேடிவரும், தின்று முடித்த மிச்சம் மீதிகளை இலைப்புழுபோல மண் தின்னும். அவைகளின் கவனத்திற்குத் தப்பிய சதையொட்டிய எலும்புகளும் கிடக்கலாம். கடந்த சில நாட்களாக அவற்றை நக்கித்தான் பசியாறுகிறேன். மனித எலும்புகளை கடித்து உறிஞ்சியிருக்கிறீர்களா? நீங்கள் மேட்டுக்குடி மக்களென்றால் வாய்த்திருக்காது. விளைந்தததையெல்லாம் அளந்துக் கொடுக்கும் குடியானவக் குழந்தைகள் வட்டிலை கையிலேந்தியபடி விரல் சூப்புவதற்கு பெயர் என்னவாம்? அது எலும்பை உறிஞ்சுவதுதான். சிற்சில சமயங்களில் எனது கைகளையோ கால்களையோ அசைக்கிற போது நீர்கலந்த களிமண்ணைப்போன்ற புழுத்த சதைத் துண்டங்களில் ஒட்டிக்கொள்கின்றன. இப்போதெல்லாம் அந்த துர்வாடை இல்லையேல் பசிமயக்கங்ககூட வர மறுக்கிறது.

இப்போதென்ன நேரம்? பகலுக்கும் இரவுக்கும் வேறுபாடுகள் தெரிவதில்லை. அமாவாசை இருட்டில் பௌர்ணமி நிலவுக்கு காத்திருப்பதை சாமர்த்தியம் என்பீர்களா, பைத்தியக்காரத்தனம் என்பீர்களா? முதல் நாள் கஷ்டமாகத்தானிருந்தது அடுத்துவந்த நாட்களில் இருட்டோடு பேசவும், விளையாடவும், சண்டைபிடிக்கவும் கற்றுக்கொண்டேன். பசிவேளைகளில் இருட்டைத்தான் கொறிக்கிறேன், உருட்டி விழுங்குகிறேன். ஓநாய்கள் போல சில நேரங்களில் இருட்டு, தமது நாவையும் குறியையும் தொங்கவிட்டபடி பச்சைக் கண்கள் மினுங்க என்னை வெறித்துபார்த்தபடி இருக்கிறது. ஓநாய்கள்மீது எப்போது பிரியமுண்டு, நாய்களைக் காட்டிலும் ஓநாய்கள் வீரியம் மிக்கவை. ஓர் ஆணிடம் பெண் எதிர்பார்க்கும் லஜ்ஜைக்குரிய அத்தனையும் இந்த ஓநாய்களிடம் இருக்கின்றன. குலைக்கிற நாய்களை வெறுப்பதுண்டு. இருட்டு ஓநாயாக அவதாரமெடுக்கிறபோது கால்களை அகட்டிக்கொள்கிறேன். சில நேரங்களில் சன்னியாசினிகளின் மனநிலைக்கும் ஆளாவதுண்டு. விருப்பமான பாடல்களை முணுமுணுக்கிறேன். அரிதாக மரணகிணற்றுக்குள் ஓளி இறங்கி என்னைத் தேடுவதுமுண்டு. அப்போதெல்லாம் நான் சொல்வதைக் காதுகொடுத்துக்கேடக யாரோ மரணக்கிணற்றின் கைப்பிடிச்சுவரில் எனக்காக காத்திருக்கிறார்களென்றும் நினைப்பேன்.. இன்றும் சற்றுமுன்னர் அதுதான் நடந்தது. இந்தபேச்சுகள் தாளிட்ட உங்கள் கதவுகளை தட்டுமென்கிற நம்பிக்கை, மாறாக அப்பேச்சுகள் விட்டில் பூச்சிபோல தீயிற் கருகினாலும் பாதகமில்லை.

நான் அழகி, உங்கள் கற்பனையில் வர்ணிக்கமுடியாத அழகி. அப்படித்தான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆணுக்கு ஆணாகவும் பெண்ணுக்குப் பெண்ணாகவும் மகளை வளர்த்தேனென்று சொல்கிற தகப்பன்மார்களை அறிவீர்களா? கவிஞரான என் தந்தையும் அப்படித்தான் வளர்த்தார். என்னசெய்வது படித்தது தமிழ். நாயக்கர் ஆட்சியில் தமிழைபடித்து என்னசெய்ய.? தந்தை ஒரு வேசையின் வீட்டில் சேவகத்திற்கு அமர்த்தினார்,ஊதியம். மரக்கால் நெல்லும் இரண்டு வேளை சோறும். கிழவன்கள் அலுத்துபோக இளம்வயது தீட்சிதன்மேல் காதல் என்றாள் அந்த வேசிப்பெண். தூதுபோனேன். தூதுபோனவள் அந்த உத்தியோகத்தைமட்டும் ஒழுங்காக பார்த்திருக்கலாம். வேசை ஒருத்தி ஆசைபட்ட ஆடவனிடம் எனக்கு மோகம் ஏற்படக்கூடாதா என்ன? உங்களுக்குப்புரிகின்றது அவனுக்கு புரியவில்லையே? எஜமானிக்கு துரோகம் இழைத்துவிட்டேனாம். குற்றத்தில் அவன் பங்கு எதுவுமில்லையாம். அவன் இறுக்கி முடிந்து வைத்திருந்ததை நான் அவிழ்த்து விட்டேனாம்.

பாதரே பிமெண்ட்டா! எனது பேச்சின் முக்கியமான பகுதிக்கு வந்திருக்கிறேன். நான் காத்திருந்ததற்கு பலன் கிடைத்திருக்கிறது. கன்னிப்பெண்ணின் பிள்ளையை கடவுளாக ஏற்றுக்கொண்ட உங்களையன்றி வேறுயார் என்னையும் என்பிள்ளையையும் புரிந்துகொள்வார்கள் சொல்லுங்கள். நீங்கள் மட்டுமே சிசு என்வயிற்றுக்குள் வந்தவிதத்தைப்பற்றி கேள்விகேட்கமாட்டீர். அது தெய்வ குற்றமென்று நீங்கள் அறியமாட்டீரா என்ன? சில கிழமைகளுக்கு முன்பு எனது வயிற்றினுள் கைகொண்டு கிளருவதுபோல இருந்தது. வலிகளென்று எதுவுமில்லை, ஆனாலும் அடிவயிற்றில் ஏற்பட்ட அதிர்வும் முதுகெலும்பில் எறும்புகள் ஊர்ந்ததுபோலநிகழ்ந்த அனுபவமும் எனக்குப் புதியன. பொதுவாக எனது சரீரம் குறித்து அக்கறையின்றியே இருந்துவந்திருக்கிறேன். விதை எனக்குள் முளைவிட்டிருகின்றதென்று தெரியும். உடம்பில் மாற்றங்களை எதிர்பார்த்ததில்லை. இயற்கையின் இந்த வித்தையை புரிந்துகொள்ளவும், பதற்றத்தில் மூச்சுத் திணறிக்கொண்டிருந்த மனதைத் தேற்றவும் சிரமமாகவிருந்தது. எனக்கே பசிக்கு உணவில்லாத நிலையில், வயிற்றிலிருந்த கரு எதைத் தின்று வளருமென்ற ஓயாதகேள்வி ஒவ்வொருமுறையும் வயிற்றைத் தொட்டு பதில் தேடும்.

நான் விழித்திருக்குபொழுதெல்லாம் பகற்பொழுதெனில், அவன் பிறப்பும் ஒரு பகற்பொழுதில் நிகழ்ந்தது. எஜமானியின் வீட்டில் என்னைப்போலவே இக்கட்டில் வீழ்ந்த பெண்ணின் பிள்ளைப்பேற்றை நேரில் கண்டிருந்த அனுபவம் கைகொடுத்தது.. பன்னீர்குடம், பிரசவவலி, எப்படி படுக்கவேண்டும், முக்கி குழந்தையைத் தள்ளவேண்டிய தருணம், தலையைப்பிடித்து தோள்களையும் அதிக வலியின்றி எப்படி கொண்டுவரலாம், தொப்புள் கொடியை வெட்டுவது எப்படி? என தெரிந்துவைத்திருந்தது ஒரு நாள் எனக்கே உதவுமென நினைக்கவில்லை. பிரசவத்திற்கு மரணகிணறு உகந்த இடமா சொல்லுங்கள். ஆனாலும் சுகப்பிரசவம். சிரிக்காதீர்கள்! மகன் பிறந்திருக்கிறான். என்னை அல்ல என் பிள்ளையைக் காப்பாற்ற முடியுமா?

[தொடரும்]

Series Navigationகாலப் பயணம்ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 19
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *