பள்ளிப்படை

This entry is part 27 of 28 in the series 29 ஏப்ரல் 2012

இச்சிறுகதை எழுத தகவல் தந்து உதவிய  சில குறிப்புகள்:—-.
1)=  ’உடையாளூரில் பள்ளிப்படையா?.— கட்டுரை எழுதியது இரா.கலைக்கோவன்.—– நன்றி வரலாறு.காம்.இணையதளம்
2) =நன்றி— தமிழர் பார்வை இணைய தளத்தில்— கருவூர் தேவரின் சாபம் பற்றி மூத்த பத்திரிகையாளர் திரு அய்யப்பன் அவர்களின் தகவல்.
3)= ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?.இணையதள ப்ளாக் ல் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு திரு. நிர்மல் அவர்கள் ஒரு கடித வடிவில் விவாதித்த ஒருகட்டுரை
4) =‘ சோழர்கள் ‘வரலாற்று நூல் எழுதியது  கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி அவர்க
______________________________________________________
அரவிந்தனோ அல்லது அவன்  நண்பன் மணியோ வரலாற்றை முதன்மைப் பாடமாக எடுத்து படித்தவர்கள் இல்லை. இருவரும் கணினி பொறியாளர்கள்… காதில் குண்டலம் போல எந்நேரமும் செல் ஸ்பீக்கரை மாட்டிக் கொண்டு , ,நுனி நாக்கில் ஆங்கிலத்தை   மென்று மென்று துப்பி, பெண் சிநேகிதிகளுடன் ஊர் சுற்றி,   சிஸ்லர், பிட்சா, பர்கர், கேஎஃப்சீ பக்கெட் சிக்கன், போர்க் என்று எல்லா அசைவ வகையறாக்களையும்,தின்றுத்  தின்று, பியர், குடிச்சி இளவயசிலேயே   தொப்பை போட்டுவிட்ட, சென்னை வாழ், கணினியைக் கையாளும், இளைஞர்கள்..
சற்று வித்தியாசமாய் இவர்கள் இருவரும் இப்போது இருபது நாட்களாய்  சுற்றி கொண்டிருப்பது ராஜராஜ சோழன் கல்லறை இருக்கிற இடம் தேடி..  சீரியஸாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ராஜராஜனின் கல்லறை இருக்குமிடம் தெரியவில்லை என்ற விஷயமே சமீபத்தில்தான். இவர்களுக்குத் தெரிந்தது… இவர்கள்.பொதுவாகவே சரித்திர நாவல்களைப் படிப்பதில் ஆர்வமுடையவர்கள்தான்  என்றாலும்,  சமீபத்தில் பொன்னியின் செல்வனை முழுமையாகப் படித்து முடித்தவர்கள் என்பதைத் தவிர இவர்களுக்கும் ராஜராஜ சோழனுக்கும் எவ்வித கொள்வினை குடுப்பினையும் கிடையாது. கை நிறைய சம்பளமும், இளமையும்,வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்புமே இப்போது இவர்களை ராஜராஜ சோழனின் கல்லறையைத் தேடவைத்திருக்கிறது என்றால் மிகையில்லை. முதற் காரியமாய் கே.என்.நீலகண்ட சாஸ்திரி எழுதிய ‘சோழர்கள்’-இரண்டு வால்யூம்களையும் வாங்கிப் புரட்டஆரம்பித்திருந்தனர்.
“ ஹேய்!அரவிந்தன்! எப்படிய்யா தேடப்போறோம்?..அதுக்கு .கல்வெட்டுகளையெல்லாம் படிக்கத் தெரியணும்பா…பிராமி எழுத்தை படிப்பியா நீ?.வட்டெழுத்து?,பிராகிருத எழுத்து .தெரியுமா?.வீரமாமுனிவர்ங்கிற இத்தாலிக்காரர் சொல்லிக்குடுத்த தமிழ் தான மச்சீ நமக்கெல்லாம்  தெரியும் அத்தையே நாம தங்லீஷா மாத்தி டுடே நோ மழை,நோ குளிர்னு பீட்டர் வுட்டுக்கிட்டிருக்கோம். ..”—
“ஹேய்! நோ ப்ராப்ளம்யா..  கல்வெட்டுகளை க்ளோசப்ல  போட்டோ எடுத்துக்குவோம். யாராவது ஒரு கல்வெட்டு ஆராய்ச்சியாளரைப் புடிச்சி படிக்கச் சொல்லி  ஹிண்ட்ஸ் டெவலப் பண்ணிக்கலாம்.. ஓகேவா?…”
முதற்காரியமாக நெட்டில் தடவினார்கள்.. அப்.ப்.பா1 ராஜராஜ சோழனைப் பற்றி எவ்வளவு தகவல்கள்?. கொட்டிக் கிடக்கின்றன.ஃபேஸ்புக், ப்ளாக்,  ட்வீட்டர், எல்லாவற்றிலும் தகவல்கள். நம் மக்கள் மனங்களில் இன்னமும் அருண்மொழித்தேவன் எனும் ராஜராஜ சோழன் ஹீரோவாக உலவிக் கொண்டிருக்கின்றான்னு தெரியுது..” கும்பகோணம் .அருகில் உடையாளூர் என்ற ஊரில் ராஜராஜ சோழனின் பள்ளிப்படைக் கோவில்  இருக்கு மச்சி போய் பார்! “– என்று ப்ளாக் ல் ஒரு தகவல்….( மன்னர்களின் சமாதி  மேல் கட்டும் கோவிலைத்தான் பள்ளிப்படைக் கோவில் என்பார்களாம்.). உடையாளூர் போய் வந்திட்றதே சரி  என்று கிளம்பிவிட்டார்கள், கும்பகோணத்திலிருந்து   ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உடையாளூர் உள்ளது என்ற தகவலுடன்..“
காலை பத்து மணிக்கெல்லாம் கும்பகோணம் போயாச்சு. ஏதோ ஒரு கபேயில் டிபன் முடித்து விட்டு, அங்கிருந்து வாடகைக் கார் பிடிக்க, . .வழியெங்கும் பச்சைப் பசேலென்று வாழையும், தென்னையும், பசுமைப் பாய் விரித்து அலையும் நெற்பயிர்களும் கண்களுக்கு குளிர்ச்சியாய் இருந்தது..உடையாளூரில் இறங்கி நடந்தார்கள். வாழை சாகுபடி இங்கே பிரதான விவசாயம் போல, வாழை தார் ஏற்றிய மினி லாரிகள் வரிசையாக போய்க் கொண்டேயிருந்தன.  . அவர்கள் அங்கங்கே விசாரித்துக் கொண்டு நடக்க, அங்கிருந்த பெரியவர் ஒருத்தர்,நான் காட்டுகிறேன் என்று  கழனிகள் வழியே அவர்களை அழைத்துச் சென்றார்
..இருவருக்கும்  உள்ளே சற்று பரபரப்பாய் இருந்தது.பொன்னியின் செல்வன் நாவலின் தாக்கம், இன்னும் உள்ளே அலையடித்துக் கொண்டிருக்கிறது.,,வல்லவரையன் வந்தியத்தேவன், அருண்மொழித்தேவன், குந்தவை, ஆதித்த கரிகாலன், நந்தினி, பழுவேட்டரையர்,ஆழ்வார்க்கடியான் நம்பி, .அப்ப்ப்பா! எத்தனை எத்தனை உயிர்த்துடிப்பான பாத்திரங்கள்?. இதுதான் ராஜராஜ சோழனின் கல்லறை என்று அவர் காட்டிய இடத்தைப் பார்த்து விட்டு மனசு வெறுத்துப் போய் நின்றார்கள்….அது ஒரு ஓலைக் குடிசை. உள்ளே சிவலிங்கம் ஒன்று பாதி புதைந்த நிலையில் இருந்தது.. கழி ஒன்று நடப்பட்டு,அதில் ஒரு போர்டு தொங்குகிறது..அதில் ராஜராஜ சோழனின் உருவம் பெயிண்ட்டால் வரையப்பட்டு கீழே ராஜராஜ சோழனின் கல்லறை என்று  எழுதப்பட்டிருந்தது. கீழே விளக்கேற்ற ஒரு மாடம்., அவ்வளவே.
இதுவா அந்த மாமன்னன் ராஜராஜ சோழனின் சமாதி? தன் கட்டட கலையால் உலகையே பிரமிக்க வைத்த பிரகதீஸ்வரர் ஆலயத்தை நிர்மாணித்த ராஜராஜனின் கல்லறையா இது?.தமிழகம், கேரளம்,ஆந்திரம், கர்நாடகம், கோவா,இந்தோனிஷியா,பர்மா,இலங்கை,அந்தமான்,நிகோபார் தீவுகள் என்று ஒரு பரந்த சாம்ராஜ்ஜியத்தை முப்பது ஆண்டு காலம் கட்டியாண்டவனும்,இந்தியாவின் முதல் கப்பற்படையைத் தோற்றுவித்தவனும்,சிவநெறிச்செல்வன்,திருமுறை கண்ட சோழன்,மும்முடிச் சோழன் ,சிவபாதசேகரன், இராசகண்டியன்,நித்யவிநோதன் போன்ற நாற்பத்திஐந்து பட்டப் பெயர்களைக் கொண்டவனுமான அருண்மொழித்தேவரின் கல்லறையா இது?..அரவிந்தனும்,மணியும் பேசத் தோன்றாமல் நின்றனர்..
” என்ன தம்பீ! சந்தேகமா இருக்கா?. .நீங்க ராஜராஜன் கல்லறையைப் பத்தி ஆராய்ச்சி பண்றவங்களா?.”.
“. ஆமாங்கய்யா!. ஆனா இதுவா கல்லறைன்னு  சந்தேகமா இருக்கு.. அவர் புள்ள ராஜேந்திர சோழன் அப்பாவை குருவா மதிச்சவன்.. இவ்வளவு சிம்பிளா  அடக்கம் பண்ணியிருக்கமாட்டானே. அதனாலதான். தமிழ்நாட்டு தலைவர் ஒருத்தர் கூட கல்லறை எங்க இருக்குன்னு தெரியலையேன்னு சொல்லியிருக்கார் போல.”
“ ஆம்மாம்பா. படிச்சேன் இன்னும் சில பேர்கூட இந்த கல்லறை பத்தி சந்தேகம் கிளப்பியிருக்காங்க,,தெரியும். அதெல்லாம் தப்புப்பா. எது எப்படியிருந்தாலும் நீங்க   கல்லறையைத் தேட்ற வேலைய விட்ருங்கப்பா..அது பத்தி ஒரு சாபம் இருக்கு.”.
”என்னய்யா சாபம் கீபம்னு கதை வுட்றீங்க?..”
அந்தப் பெரியவர் சீரியஸாக பேச ஆரம்பித்து விட்டார். குரலில் ஒரு அழுத்தம் தெரிந்தது.
” தம்பீ! இது கேலி பண்ற விஷயமில்லை. ராஜராஜன் அரசசபையில்  ராஜகுருவாயிருந்த கருவூர் தேவர் விட்ட சாபம். அது.. ஒரு கோவத்தில ராஜராஜன் அழியட்டும், அவன் ஆட்சி அழியட்டும்னு சபிச்சிட்டாராம். அந்த சாபம் தான்  இன்னைக்கு வரைக்கும்  ஆட்டிப் படைக்குது.  .இங்க பெரிய கோவிலுக்கு வந்து போன பிற்பாடுதான் இரண்டு பெரிய அரசியல் தலைவர்கள் இறந்து  போனாங்கப்பா.. அதனாலதான் இப்ப இருக்கிற மந்திரிங்க,,பெரிய அதிகாரிகள்லாம் கூட யாரும் இந்தப் பக்கமே எட்டிப் பார்க்கிறதில்லை.. முன்ன ஒருக்கா .இந்தக்  கல்லறையை ஆராய்ச்சி பண்ற ஆளுங்க  பொக்லைன் மிசின் மூலம் கல்லறைய  தோண்ட ஆரம்பிச்சவுடனே ஒரு மந்திரிய திருவாரூர்ல வெட்டி கொன்னுட்டாங்க தெரியுமா?.
அபசகுனம்னு  அப்பவே தோண்டியதை மூடிட்டாங்க. இதை ஆராய்ச்சி பண்ண வர்றவங்கள்லாம் அல்பாயுசுல போறதா இங்க  ஒரு நம்பிக்கை இருக்குப்பா.. நான் சொன்னதை அலட்சியமா நெனைக்காதீங்கப்பா. ரெண்டு பேரும் சின்ன வயசா இருக்கீங்க. வாணாம் வுட்ருங்க. மீறி தேடிப் போனீங்கன்னா பத்து பதினஞ்சி  நாளைக்குள்ள உங்களுக்கு ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடக்கும். அப்ப தெரிஞ்சிக்குங்க..”.
இருபத்தியோராம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு மூடநம்பிக்கையா?. .கல்லறையை சுற்றிச்சுற்றி  நாலைந்து புகைப் படங்கள் எடுத்துக் கொண்டு  பஸ்ஸில் ஊருக்கு கிளம்பி விட்டார்கள்..
“. இதெல்லாம் சுத்த வுடான்ஸ்.. கதை கட்டி வுட்றதுன்னா தமிழனுக்கு அல்வா சாப்பிட்ற மாதிரியாச்சே. .”–– என்றான் மணி..
.”அத விட்றா. ராஜராஜன் ஆளு பலான விஷயத்தில படு சூப்பராமே.  .பதினைஞ்சி பொண்டாட்டியாம்டா. எப்பிட்றா?. .உம்.ம். எப்பா கொடுத்து வெச்சவன்.”—-அரவிந்தன் சொல்லிவிட்டு சிரித்தான்.
“  அது வாய்ப்பா தண்டனையா?ன்னு ராஜராஜனைக் கேட்டால்தானே தெரியும். ஹும்! ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற நம்முடைய மரபுக்கு முன்மாதிரியா அவன் வாழல பார்த்தியா?.அத யோசிக்க மாட்டியா?. ”
“ஆமா இப்படியே பேசிட்டிரு.இன்னைக்கு வரைக்கும் நாட்டை ஆள்ற எந்தத் தலைவர்ங்க அந்த விஷயத்தில முன்மாதிரியா வாழ்ந்திருக்காங்க. சொல்லு..?உறுப்பினரா சட்டசபையில உட்கார்ந்துக்கிட்டு நாட்டைப் பத்தி பேசாம, செல்லில் ப்ளூ ஃபிலிம் பாக்கற தலைவருங்கடா நமக்கு……”— பஸ்ஸில்  இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருந்த  அந்த நொடியில் தான் அவர்கள் போய்க் கொண்டிருந்த பஸ் விபத்தில் சிக்கியது.. திண்டிவனம் பாலத்தைக் கடக்கும் போது, திடீரென்று குறுக்கே பாய்ந்து வந்த வேனை தவிர்க்கும் பொருட்டு டிரைவர் சடர்ன் பிரேக் அடித்ததில் பஸ் தாறு மாறாய் ஓடி, சாலையோர மரத்தில் முட்டிக் கொண்டு நின்றது.
நிறைய பேருக்கு அடி. சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அரவிந்தனுக்கு தலையில் ஆழமான வெட்டு காயம்.ஆறு தையல் போடவேண்டியிருந்தது. மணிக்கு தொடையில் ஆழமான காயம்.. இருவரும்  பத்து நாட்கள் லீவு போட்டுவிட்டு அறையிலேயே ரெஸ்ட் எடுக்கவேண்டியதாகிவிட்டது . அப்படியும் மணிக்கு இன்னும் ஆறவில்லை.  நல்ல வேளை  தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு. அரவிந்தனுக்கு உடையாளூர் பெரியவர் சொன்ன சாபம் உள்ளே நெருடிக் கொண்டிருந்தது.
இருவருக்கும் உடல் தெளிந்து, பழையபடி வேலைக்குப் போக ஆரம்பித்த பின் வந்த ஒரு சனிக்கிழமை மாலையில்,  மணியினுடைய உறவுக்காரர் ஒருத்தர் மணியின் உடல் நலனை விசாரிக்க வந்திருந்தார்.. வரலாற்று பேராசிரியராம்.அவர் ஒரு தகவல் சொன்னார்.. சமீபத்தில் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் சிலர் உடையாளூரில் போய்  ஆய்வு செஞ்சி உடையாளூரில் இருப்பது  ஒரு கல்லறையே இல்லை. அதுக்கான  எந்தவித தகவலும்  இல்லைன்னு     சொல்லியிருக்காங்க. உடையாளூரில் இருப்பது. பள்ளிப்படைக் கோவிலே இல்லையாம்.. ஆதாரமாக அவங்க வெச்சிருக்கிற ஒரு கல் தூணில் பொறிக்கப்பட்டுள்ள குறிப்பு, , அது என்னான்னா?.  ராஜராஜனின் மாளிகையின் முன் பக்கம் இடிந்துப் போயிருந்ததை  தன் சொந்த செலவில் பழுது பார்த்தவர்களைப் பற்றி கூறும் நினைவுத்தூணாம் அது….
”ஆஹா! நாம மட்டும் இப்ப  கல்லறையை கண்டுபிடிச்சிட்டோம்னா அது எவ்வளவு பெரிய க்ரெடிட் நமக்கு?.”– அரவிந்தன்.
.           அன்றைக்கு .மணி,காலையில் சற்று சீக்கிரமே எழுந்து விட்டான். வேறொரு கம்பெனியில் மார்க்கெட்டிங்   செக்‌ஷனில் அவனுக்கு எட்டு மணிக்கு இன்டெர்வ்யூ இருக்கிறது. எழுந்து குளித்து ரெடியாகி, சொல்லிக் கொண்டு கிளம்ப, அரவிந்தன் அறைக்குப் போய் லைட்டைப் போட்டவன், ஐயோ! கண்கள் பிதுங்க ,சத்தமில்லாமல் உறைந்து நின்றான்.கத்த வாய் வரவில்லை. கைகால்கள் தந்தியடிக்கின்றன.. அரவிந்தன் தூங்ககிக் கொண்டிருக்க, அவன் தலைமாட்டில் மினுமினுவென்று ஒரு பெரிய  நல்லப்பாம்பு.   ரொம்ப பெருசு. ஆறடி நீளம் இருக்கும்., ராஜநாகம் மாதிரி சைஸ். நகர்கிறது. இவன் உள்ளே போன அதிர்வில் அது தலையைத் தூக்கி விட்டது. தயாராய் நிற்கிறது. சின்ன சலனம் ஏற்பட்டாலும் போச்சு. அடித்துவிடும் அரவிந்தன் காலி.  இவனுக்கு .வேர்த்து ஊற்றுகிறதுகடவுளே! அவன் அசையாம இருக்கணுமே…எதையாவது செய்தாக வேண்டும். ஐயோ! அரவிந்தா! மெதுவாக பக்கத்திலிருந்த பெரிய ரைட்டிங் பாட் ஐ எடுத்துக் கொண்டான். மின்னல் வேகத்தில் அரவிந்தனுக்கும் பாம்புக்குமிடையில் செருகும் போதே
”பாம்பு..பாம்பு!.”—கத்திக் கொண்டே அரவிந்தனை எட்டி உதைக்க, அவன் அலறியடித்து எழுந்தோட, அதற்குள் பாம்பு ஆக்ரோஷமாய் இரண்டு மூன்று தடவை ரைட்டிங் பாடைக் கொத்தியது.. பேடை கீழே போட்டுவிட்டு இருவரும்  ஓடி, கத்திய கத்தலில்,செக்யூரிட்டிகளும், தோட்டக்காரன்களும், ஓடி வந்தார்கள். சுதாரித்து  அடிப்பதற்குள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அது எகிறி சன்னல் வழியாக தோட்டத்திற்குள் பாய்ந்து விட்டது. . இருவருக்கும் ரொம்ப நேரம் நடுக்கம் நிற்கவில்லை.
” ஐயோ!,நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?..உடையாளூர் பெரியவர் சொன்ன மாதிரி நடந்துடும் போலிருக்கே. மணி! ராஜராஜன் கல்லறையைத் தேட்றத இத்தோட ட்ராப் பண்ணிடுவோம்..இந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு நாம வந்து நாலு வருஷம் ஆகுது.. கிரவுண்ட் ஃப்ளோராக இருந்தாலும், இதுவரைக்கும் ஒரு சின்ன பூரானைக் கூட நாம பார்த்ததில்லை. .இப்ப மட்டும் ஏன்?. .பஸ் ஆக்ஸிடெண்ட் ஆனதில் கூட அந்த சாபத்தின் இன்வால்வ்மெண்ட் இருக்கும்னு தோணுது..  ஐயய்யோ!. இனிமேஇந்த ஆட்டத்துக்கு  நான் வரலடாப்பா. நீ தேட்றதுன்னா அது உன்னிஷ்டம்..”
மணி சிரித்துவிட்டான். அவன் சற்று முற்போக்கு சிந்தனை உள்ளவன்…
”இந்த மூட நம்பிக்கைகளை நம்ப ஆரம்பிச்சிட்டியா?.கண்றாவி. அப்பார்ட்மெண்ட்ஸைச் சுத்தி நிறைய  மரம்,செடிகொடிகள் இருக்கு. அப்பார்ட்மெண்ட்ஸ் கேம்பஸுக்குள்ளேயும்  பெரிய தோட்டம்,. அப்புறம்  பாம்பு வர சான்ஸ் உள்ள இடம்தானே இது? ஃப்ரிட்ஜ்ல பியர் இருக்கு பாரு போய் அடிச்சிட்டு பேசாம படு சரியாயிடும். ..”
“இப்படி முரட்டடியா பேசாதடா. நல்லவங்க மனசொடிஞ்சி விட்ற சாபத்துக்கு ஒரு பவர் இருக்கும்.  எப்பவும் வழவழப்பான தரையில் பாம்பு வராது. டைல்ஸ் பதித்த நம்ம வீட்டுக்குள்ள எப்படி வந்துச்சி?. அதுவும் பெட்ரூம் வரைக்கும்..”
“ சரி..சரி எப்பவும் இந்த மாதிரியான மூட நம்பிக்கைகளுக்கு பலம் ஜாஸ்தி. ஆமாம் ராஜராஜன் அழியட்டும்,அவன் ஆட்சி அழியட்டும்’-இதுதான கருவூரார் போட்ட சாபம்.?.இப்ப  சொல்றத நல்லா கவனி. ராஜராஜன் முப்பது வருசங்கள் சிறப்பா ஆண்டு முடிச்சிட்டு, அப்புறமும் கொஞ்ச நாள் வாழ்ந்துதான் செத்தான் சரியா?.. அவனுக்குப் பின்னால ராஜேந்திர சோழன் முப்பத்தியிரண்டு வருசங்கள் இன்னும் சிறப்பா ஆண்டிருக்கான்,..அதுக்குப் பின்னால வந்த சோழர்கள் இருபத்தியாறு வருசங்கள் ஆண்டாங்க புரிஞ்சிதா?. அதுக்கப்புறம் இருநூத்தியெட்டு வருசங்கள் ஆண்டது குலோத்துங்க சோழனும் அவன் வாரிசுகளும். ஸோ கருவூர் தேவரின் சாபம் ராஜராஜனுக்கோ, அவன் வம்சத்துக்கோ பலிக்காத போது .. இன்னிக்கு ஆயிரம் வருசங்கள் கழிச்சி அந்த வம்சத்துக்கு கொஞ்சங்கூட சம்பந்தமே இல்லாத உனக்கு வந்து பலிச்சிடும்னு பயப்பட்றியே. ,.வெக்கமா  இல்லே?.” .
அன்றைக்கெல்லாம் இருவரும் பேசிப் பேசி தெளிந்து, பின்பு, ராஜராஜ சோழன் கல்லறையைத் தேடும் வேலையைத் தொடர்வது என்று தீர்மானித்தார்கள்.  சரி எங்கேன்னு தேட்றது?.எதுவும் புரியாமல் அடுத்த சில நாட்கள். ஆபீஸ் போய் வந்துக் கொண்டிருந்தார்கள். அன்றிரவு மணியின் அந்த உறவுக்கார பேராசிரியரிடமிருந்து கால்.
“ஹலோ! மணி! ஒரு தகவல் சொறேன்,. கேட்டுக்கோ.. ராஜராஜ சோழன் தன் கடைசி காலத்தில குந்தவை, வீட்டில் இருந்ததாக செவி வழி செய்தி இருக்காம். அந்த கோணத்தில தேடுங்க. உங்க மூலமாவது அந்த நல்லது நடக்குதா? பார்ப்போம்..”
ஒரு விஷயத்தை நிஜமான அர்ப்பணிப்போடு செய்கிற போது அது சம்பந்தமான செய்திகள் வலியவே நம்மை வந்து சேர்கின்றன. அவர்கள் சுறுசுறுப்புடன் ஆரம்பித்து,.எஸ்! சீக்கிரமே கண்டுபிடித்துவிட்டார்கள்.. ,.வடாற்காடு மாவட்டத்தில் பிரம்மதேசம் என்ற ஊரையும் அதைச் சுற்றியிருந்த கிராமங்களையும் குந்தவையின்  கணவன் வாணர்குல   வந்தியத்தேவன் என்ற குறுநில மன்னன் ஆண்டுவந்தான் என்று குறிப்பு  கிடைத்தது..இது அவர்களுக்கு புதிய செய்தி. இது அவர்களுடைய ஏரியா. .அரவிந்தனின் ஊர் தென்னம்பட்டு.கிராமம்.  பிரம்மதேசத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரம். மணி –ராந்தம் கிராமம்-15.கிலோமீட்டர். ஆஹா! வந்தியத்தேவன் நம்ம ஊர் ஆளா?.குறும்பும்,கேலியும்,கிண்டலும் ,சமயோசிதமும் ,வீரமும்,விவேகமும் கொண்ட அந்த வாலிபன் நம்ம பக்கத்து ஆளா? குந்தவை நம்ம ஊர் மருமகளா?.
அவர்கள் இப்படி பெருமையுடன் பேசிக் கொண்டிருந்த போது சடக்கென்று அரவிந்தனுக்கு ஒரு விஷயம் பொறி தட்டியது. அவன் ஊருக்கு அருகிலுள்ள  கல்பட்டு என்ற கிராமத்துக்கும் பிரம்மதேசத்திற்குமிடையில் ஒரு கோவில் இருக்கிறது, சந்திரமவுலீஸ்வரர் கோவில். சின்ன வயசில் அப்பா கூட்டிப் போயிருக்கிறார். மடவளம் கோவில் என்று சொல்வார்கள்.அது ஏதோ ஒரு ராஜாவுடைய கல்லறை என்று அப்பா சொன்னது .அவன் நினைவுக்கு வந்தது. ஆனால் எந்த ராஜா/ என்று அவருக்குத்  தெரியவில்லை. ஏதோ  ஒத்துப் போகிற மாதிரி இருந்தது.,. அது ஏன்  ராஜராஜனுடைய கல்லறைக் கோவிலாக இருக்கக் கூடாது?.
” லாஜிக் உதைக்குதே.. பிள்ளை ராஜேந்திர சோழன் தலைநகரத்தை விட்டுட்டு இங்க அடக்கம் பண்ண விட்டிருப்பானா?.”
“இருக்கட்டும். போய் என்னான்னுதான் பார்ப்போமே.?. ஏதாவது தகவல் கிடைக்கலாம்..”  .
மறு நாளே அரவிந்தனின் ஊருக்கு கேமராவுடன் கிளம்பிவிட்டார்கள்.இரவு தென்னம்பட்டில் தங்கிவிட்டு,  மறுநாள் காலை கிளம்பி சந்திரமவுலீஸ்வரர் கோவிலுக்குப் போவதாய் ப்ளான்.,அம்மா அந்நேரத்திற்கு எங்கியோ தேடிப் பிடிச்சி வாங்கி மீன்    குழம்பு வைத்திருந்தாள்.காரசாரமாக அருமை, சுவையாக இருந்தது. மணி சப்புக் கொட்டி சாப்பிட்டான். .அன்றிரவு ஊரிலிருக்கும் சில வயசானவர்களிடம் விசாரித்ததில், ஏதோ ஒரு அரச குடும்பத்து  சமாதின்னு கேள்வி என்றார்கள்.. ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தப் போகிறோம் என்று மனசு  குதியாட்டம் போட்டது. இரவு நன்றாக தூங்கினார்கள். அரவிந்தனுடைய கனவில் கவர்ச்சிக் கன்னி நந்தினி வந்து போதையுடன் சிரித்தாள். ஆதித்த கரிகாலரும், பழுவேட்டரையரும் நந்தினி பொருட்டு சண்டையிட்டுக் கொண்டிருக்க, ஊடே அரவிந்தன் ஓசைப் படாமல் நந்தினியிடம்..டேஷ்…..…டேஷ்…..
விடிந்ததும் சோப்புப் பெட்டி,டவலுடன், அவர்கள் ஏரிப்பக்கம் கிளம்பினார்கள். கிராமம், காலைக்கடன் கழிக்க, குளிக்க, மக்கள் ஏரிப்பக்கம், பம்ப்செட் பக்கம் என்று  ஒதுங்குவதுதான் வழக்கம்.. அரை கிலோமீட்டருக்கு மேல் நடக்க வேண்டும்.ஏரிக்குக் கீழே கழனிகளில்  முட்செடிகள் மண்டிக்கிடக்க, தரிசாய்  விரிந்தோடுகிறது. ஏரியில் தண்ணீர் இருப்பு தாராளமாய் ஒரு போகத்துக்குப்  பாயும்., இருந்தும் வெள்ளாமை நடக்கவில்லை. பாதி நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்கள் வளைத்து,  ப்ளாட் போட்டு, கலர் கலராய் கற்கள் நட்டு, முப்பதடி தெரு, ஒவ்வொரு மனையிலும் இரண்டிரண்டு தென்னம்பிள்ளைகள், முகப்பில்  பெரிய ஆர்ச் ,என்று ஷோ பண்ணி வைத்திருந்தார்கள்.சீக்கிரத்தில் மனை வாங்குகிறவர்களுக்கு பதிவுக் கட்டணம் ஃப்ரீ கூடவே ஒரு கிராம் தங்கம் என்று தூண்டில் அறிவிப்பு வேறு. மிச்சத்துக்கு  வெள்ளாமை கட்டுப்படி இல்லை என்கிறது உழவர் கூட்டம். மொத்தத்தில் அவ்வளவு பெரிய ஏரியின் கீழே ஒரு நெல்மணி கூட  உற்பத்தியில்லை.. அரசின் இலவசங்களினால் மக்களிடம் உழைப்பு குறைந்து சோம்பல்  மிகுந்து விட்டதோ?. இந்த அதிகாலை நேரத்தில் விளையாத கழனிகளில்  மக்கள் எரு இட்டுக் கொண்டிருந்தார்கள்.. இப்படி கொஞ்சங் கொஞ்சமாய் விவசாயம் அருகிக் கொண்டே வருவதை அரசு கவனத்தில் கொண்டிருக்கிறதா?.. அவர்கள்  எதிர் காலத்தில் வரப்போகும் உணவுப் பஞ்சத்தைப் பற்றி கொஞ்ச நேரம் பேசினார்கள்.,அடுத்து சினிமா என்று தொட்டு கடைசியில் ராஜராஜனிடம் வந்து நின்றார்கள்….
“சோழர்களில் ராஜராஜ சொழனின் ஆட்சிதான் பொற்காலம்னு வரலாற்று ஆசிரியர்களெல்லாம் சொல்றத  கவனிச்சியா? .பதவியே வேண்டாம், அண்ணன் ஆதித்த கரிகாலன் ஆளட்டும்னு  ஒதுங்கிப் போன ஆள் பின்னாளில் எவ்வளவு சிறப்பா ஆண்டிருக்கிறார் பாரு .”—என்றான் அரவிந்தன். மணி அதற்கு பதில் சொல்லாமல் அமைதியாக நடந்தான்.
“என்னடா? பதிலைக் காணோம்..”
“ ஃபூல்! பொற்கால ஆட்சின்னா என்ன அர்த்தம் தெரியுமா?. தொண்டைமான் மட்டுமில்ல, தோட்டியும் சுபிட்சமாய் வாழ்ந்திருக்கணும்.மக்கள் அப்படி வாழ்ந்தாங்களா?—மணி சற்று காட்டமாகக் கேட்டான்..
“பின்னே? .வரலாற்றாசிரியர்கள் எல்லாரும்  பொற்காலம்னு சும்மா மேலோட்டமா சொல்லிட்டுப் போயிடல, புரியுதா?… தென் இந்தியா மட்டுமில்லே இந்தியாவுக்கே ராஜராஜன் காலம் பொற்காலம்தான்டா..”
மணி அரவிந்தை எரிச்சலுடன் பார்த்தான்.
“நீ எதையும் மேலோட்டமா பாக்கறவன்டா.. நீ மட்டுமில்லை ராஜராஜ சோழனின் காலம் பொற்காலம்னு கொண்டாட்ற தமிழர்களும்,வரலாற்றாளர்களும் ஆட்சியில்  வெள்ளாளர்களுக்கும், பிராமணர்களுக்கும், இருந்த ஆதிக்கத்தையும்,
மரியாதையையும், ஒடுக்கப்பட்ட இனத்தின் தீண்டாச் சேரியையும் வசதியாக மறைச்சிட்டாங்க. ஒரு வரலாற்று ஆசிரியர் இதையெல்லாம் தெளிவா சொல்லியிருக்கிறார்.படிச்சிருக்கேன்.”
“ மனசில இவ்வளவு எரிச்சல் வெச்சிருகிறவன் அப்புறம் எதுக்கு ராஜராஜனின் பள்ளிபடைக் கோவிலைக் கண்டு பிடிக்க எங்கூட வந்து மெனக் கெட்றியாம்?.”—அரவிந்தன் குரலில் உஷ்ணம் ஏறியது.
“முட்டாளே! அது உனக்கோசரம்தான். ஒரு சரித்திர கால சின்னத்தை தேட்றோம் அதான் என் இண்ட்ரஸ்ட்… எதையும் ஆழ்ந்து பார்.. மேல்தட்டு மக்களுக்கு   நிறைய கிராமங்கள் இனாமா தரப்பட்டிருக்கு. அவைகள் அகரம்,மங்கலம்,அக்கிரஹாரம் , பிரம்மதேயம் என்ற பெயர்களால் அழைக்கப் பட்டன…”.
“மணி!  உன்னுடையது சரியான பார்வை இல்லை. அதை சாதின்ற குறுகிய கண்ணோட்டத்தில பார்க்காம, சான்றோர்களையும்,சிறந்த கல்வியாளர்களையும் ராஜராஜ சோழன் கவுரவிச்சான்னு எடுத்துக் கொள்ளணும். அதுதான் உண்மையுங் கூட…”
“இது பூசி மழுப்பும் வேலை.நெசவாளி, தட்டார், வண்ணார், குயவர், உழவர், கூலிக்காரர்கள்  இப்படி உழைக்கும் மனிதர்களுக்கு வரி மேல் வரி போட்டு கசக்கிப் பிழிந்தான். ஏராளமான பெண்கள் தேவரடியார்களாக ஆக்கப் பட்டனர். ராஜராஜ சோழனின் பொற்கால ஆட்சியில் பொதுவுடமை கொள்கை ஏன் அமுல் படுத்தப் படவில்லை?,என்று அபத்தமா நான் கேக்கலடா.. வர்ணாசிரம முறை கொடி கட்டிப் பறந்ததே அது ஏன்?. இதுதான் என் கேள்வி.”..
“மணி! நாம எடுத்திருக்கிற காரியத்திலிருந்து நீ பாதை மாறிப் போற. இதோ பார். இன்றைய சமூகப் பார்வையை வெச்சி  அன்றைய ராஜராஜ சோழனின் ஆட்சியை விமர்சிக்கக் கூடாதுடா. நியாயங்கள் காலத்துக்குக் காலம் மாறக் கூடியவை . ஏத்துக்கோ. அன்றைக்கு இருந்த மன்னர்களின் சர்வாதிகார ஆட்சிமுறையில்  இவன் ஆட்சி சிறந்ததாக இருந்தது. அவ்வளவுதான். நீ சொன்ன அத்தனை தப்புகளும் ராஜராஜன் காலத்தில் இருந்தாலும், அவன்தான் தனக்கு சமமாக மக்களை மதித்தான்.முதன்முதல் நில அளவையை செய்தான். எதிரி நாட்டிலிருந்து கொண்டு வந்த செல்வத்தை வைத்து பொதுநிதியம் ஏற்படுத்தி, அதிலிருந்து மக்களுக்கு கடனாக பணத்தைக் கொடுத்து பிழைக்க வழி செய்தான்.., தென் ஆசியா வரைக்கும் பெரிய சாம்ராஜ்ஜியத்தை தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்து, முப்பதாண்டு காலங்கள் நிலையான ஆட்சியைத் தந்த ,அருண்மொழித்தேவன் எனும் ராஜராஜன் ஒரு தமிழன் என்பதில் நாம பெருமைப் பட்டுத்தான் ஆவணும்.இப்படி  புறணி பேசித்திரியக் கூடாது….“.
மணி அவனை முறைத்தான்.
“ எப்படித்தான்  உழைப்பாளிகளின் உழைப்பை சுரண்டி வாழ்ந்த  ஒருத்தனுடைய ஆட்சி  காலத்தை பொற்காலம்னு உன்னால  வக்காலத்து வாங்க முடியுதோ.?.”
“டேய்! வாயை மூட்றா தெரியும். ராஜராஜனைப் பத்தி என்னா தெரியும் உனக்கு?.சும்மா அளக்கிறீயே..பொற்காலம்னு சொன்ன ஆராய்ச்சியாளர்களெல்லாம்  முட்டாள்களா?.’—அரவிந்தன் கோபத்துடன் கத்தினான்.
”ஓ! ஆயிரம் வருஷங்களுக்கு முன்ன இருந்தவனை குறை சொன்னதுக்கு இவ்வளவு ஆத்திரம் வருதே உனக்கு?.  இப்ப எனக்கு ஒரு விஷயம் தெளிவாயிடுச்சி. நீ அடித்தட்டு மக்களின் வேதனைகளை யோசிக்கிறவன் இல்லை., ராஜராஜ சோழனை நீ  கண்ணை மூடிக்கிட்டு நீ இவ்வளவு தூரம் தூக்கிப் பிடிக்கிறதுக்குக் ஒருவேளை .உன்  இன உணர்வுதான் காரணமோ?……”
“ இப்ப எதுக்கு சாதிய இழுக்கிற?..”
“டேய்! இங்க எது நியாயம், எது அநியாயம்?னு  தீர்மானிக்கிறது மனசாட்சி இல்லையே, சாதிதானே… உங்கிட்டயும் இப்ப அதான வேலை செய்யுது.?. ..”—சென்சிட்டிவ்வான அந்தப் புள்ளியை மணி தொட்டுவிட,அரவிந்தனுக்கு கோபத்தில் முகம் சிவந்து விட்டது..
”.இதுபோல் பேச எனக்கும் தெரியும். நீயுந்தான்  உழைக்கும் வர்க்கத்திற்காக நீ பேசல. .அந்த வர்க்கத்தில்  உள்ளடங்கியிருக்கும்  உன் சாதிக்காக பேசறன்னு சொல்லட்டுமா?…”
இப்படித்தான் வில்லங்கத்துடன் ஆரம்பித்தது அவர்கள் பேச்சு. அது  கிணற்றில் குளித்து விட்டு அவர்கள் வீடு திரும்பும் வரைக்கும் தொடர்ந்தது. மெதுவாக , வார்த்தைகள் தடிக்க ஆரம்பித்து. கோபத்தில் தன்னை மீறி இருவரும் சுடுஞ்சொற்களை வீச,,, ஒரு கட்டத்தில் இவன் சொன்னதை அவனும், அவன் சொன்னதை இவனும் தப்பர்த்தம் பண்ணிக் கொள்ள, மவுனமாக மனசளவில் பிரியும் கட்டத்திற்கு வந்து விட்டார்கள்… நீண்ட நாளைய நெருக்கமான  அவர்களின் நட்பு எந்த நிமிஷத்தில் விரிசல் கண்டது  என்று அறுதியிட்டு சொல்ல முடியாது. .ஆனால் பரஸ்பரம் வார்த்தைகளால் குத்திக் கொண்டதில்  சிதைந்தது. இன்றைக்கு சாதீயியத்திற்கு அவ்வளவு வலிமை இருக்கிறதா? இன்றைய இளைஞர்களிடமும், முற்போக்கு சிந்தனையாளர்களிடமும்  சாதி  இல்லை என்று சொல்லும் போக்கு இருந்தாலும்,, .அது ,.எல்லோரிடமும்  நீறு பூத்த நெருப்பாய் உள்ளே கனன்று கொண்டுதானிருக்கிறதோ?. என்று தோன்றுகிறது. மொத்தத்தில்  ராஜராஜனின் பள்ளிப் படைக் கோவிலைத் தேடும் வேலை  நிறுத்தப்பட்டு விட்டது என்பது  சோகமான ஒரு நிதர்சனம்., ஒரு வேளை இதுதான் சாபமோ?. மணி சொல்லிக் கொள்ளாமல் ஊருக்குக் கிளம்பிப்  போய்விட்டான்..
ஹும்!  பிரம்மதேசத்தில் ராஜராஜனின் பள்ளிப்படைக் கோவில்  இருக்கா இல்லையா?.இல்லையென்றால் அங்கிருப்பது யாருடைய கல்லறை?. அட! அந்த பேச்சை  விடுங்கப்பா.அது எப்படியும் போகட்டும்.,ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு அரசனால் கூட இன்றைக்கு நம்மிடையே சாதிகலவரத்தை தூண்ட முடிகிறது,  என்ற அளவில் நாம் பலவீனப் பட்டு, பிளவுப் பட்டு  கிடக்கிறோமே, அதுதான் இன்றைய  நம் கவலை. .ஹலோ!… ஹலோ!…..என்னது? ராஜேந்திர சோழனுடைய,… பள்ளிப்படைக் கோவில் புதூர்ல இருக்காமா? அதையும் ஆராயணுமா? அட போப்பா!. எவன்னா சாதி இல்லாத ராஜாவோட  கல்லறை இருந்தா சொல்லு இப்ப .போனை வையி..

…                             ____________________________

Series Navigationமுன்னால் வந்தவன்நியாயப் படுத்தாத தண்டனைகள்..!
author

செய்யாறு தி.தா.நாராயணன்

Similar Posts

7 Comments

  1. Avatar
    ganesan says:

    Narayannan like his frnd jayshree shankar reveals through this story that even though ppl are mingled like frnds everybody is having the caste feeling in their inner conciousness that too in computer ugam that is 21st century…he further induces ppl to search for Rajaraja cholan samadhi…hats off narayanan!

  2. Avatar
    Dr.G.Johnson says:

    PALLIPADAI by Cheiyaaru THEE.THA.NARAYANAN is a superb story written differently from the usual way of story writing. Because RAJA RAJA CHOLAN is involved in this story ther writer has done ample research through books and research articles and has also quoted the sources on which he has based his story. Of course KALKI’S PONNIYIN SELVAN too has a major role in this attempt. ARULMOZHITHEVAR as presented by KALKI is so popular that we are made to admire him. In this story two friends ARAVINTHAN and MANI set out to search the tomb of RAJA RAJA SOZHAN. They travel to UDAIYAALOOR, 6 km from KUMBAKONAM and were dismayed to see the sorry sight there.It was unbelievable that a great SOZHA king RAJA RAJAN was buried in that place in such an insignificant manner.The elderly villager who guided them there shocked them further by saying that whoever does research on RAJA RAJA’s burial place meets untimely death.The friends had no belief in such superstitious nonsense and return disappointed. Later on an argument arises about the glorious period or RAJA RAJA’s rule. Mani being a rationalist disagrees on the curse of Rajaguru KARUVOOR THEVAR saying that the SOZHA rule continued for a long period after RAJA RAJA. Later on they proceed to visit SANTHIRAMAVULEESWARAN TEMPLE IN BRAMMATHESAM in North Arcot district. But very unexpectedly an argument which arose about the golden era of RAJA RAJAN went on the lines of caste differences resulting in the breaking of their friendship. The arguments about RAJA RAJAN centres around his taxes on the poor, his encouragement of the Varanasramma and devedasi systems. Though close friends when it comes to caste the differeence still prevail and widens . This is the essence in this story. The involvement of RAJA RAJAN and facts stated about him are informative. That such a popular king of Tamil Nadu being buried in an unknown place is a mystery. His son RAJENDRA Sozhan should have built a monument for his illustrious father. Hence something is missing in history. The writer has done good research on this subject and he needs to be appreciated for his efforts. Though a fiction he has collaborated history in it. There is also the social problem of the age old caste in it. A very interesting story indeed! Congratulations!…Dr.G.Johnson.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *