x
ஆறடி உயரத்தில் வெண்நிற ஆடையுடன் நின்றிருந்த அவ்வுருவத்தைப் பார்த்தபோது செல்லம்மாவின் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.ஏதோவொரு வெப்பம் தனிச்சையாக வந்து தாக்கியது.மேனி முழுவதும் சிலிர்த்தது.அத்தருணத்தில் தனக்குத் தோன்றிய உணர்வு எத்தகையானது என்பதை அவளால் பகுத்துப் பார்க்க இயலவில்லை.
அவ்வுருவத்தை தொடந்தாற்போல் சில நொடிகள் பார்க்கமுடியாமல் மெல்ல தலையைக் குனிந்துக்கொண்டாள்.சேலைத்தலைப்பை நன்கு இழுத்து முக்காடைச் சரி செய்தாள்.இதுவரையில் அதுபோன்ற ஒளிப்பொருந்திய கண்களை அவள் சந்தித்ததில்லை.தூரத்தில் இருந்து பார்த்தபோது அவை நட்சத்திரங்களாய் மின்னின…சற்று நெருங்கிய போதோ நிலவைப் போன்று தன்மையான ஒளியைச் சிந்தின.
அந்த உருவம் அவளை நோக்கி நடந்து வந்தது.இருப்பினும் அவளுக்கு அவ்வுருவம் நகர்ந்து வருவதுப்போலவே தோன்றிற்று.அருகில் வந்து நின்ற உருவத்தை அவளையறியாது நிமிர்ந்துப் பார்த்தாள்.அந்த உருவத்திற்கு உரியவர் மனிதரா அல்லது தெய்வப்பிறவியா என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல் தவித்தாள்.
அந்த கண்கள் அவளை கனிவாய் நோக்கியன.அவளுக்குப் மட்டும் புரியும் படி ‘ உன்னைக் கண்டுக் கொண்டேன்’ என்பதுப்போல் விழிகளை மலர்த்தியன.செல்லம்மா அந்த பார்வைக்கு கட்டுண்டதுப்போல் தனது பார்வையை விலக்க முடியாமல் அப்படியே நின்றிருந்தாள்.
இப்போது அவளால் அந்த உருவத்திற்குரிய முகத்தை நன்கு காண முடிந்தது.அகன்ற நெற்றியும் தடித்த புருவமும் ஒளி பொருந்திய பெரியக் கண்களும் நீண்டு உயர்ந்திருந்த நாசியும் வெண்நிற மீசையுடன் இணைந்திருந்த தாடியுமாய் ஒரு தெய்வீகத் தோற்றம்
.தாடிக்கும் மீசைக்கும் இடையில் சென்நிறத்தில் கனிவாய் அமைந்திருந்த அதரங்கள் மெல்ல அசைந்தன…!எதையோ அந்த உதடுகள் உச்சரித்தன என்பதை அவளால் உணர முடிந்தாலும் அவை உச்சரித்த சொற்கள் எவை என்பதை அவளால் அனுமானிக்க முடியவில்லை. தான் வேறொரு உலகத்தில் இருப்பதை மட்டுமே அவளால் உணர முடிந்தது.இனம் புரியாத பரவசத்தில் அவளின் விழிகள் இரண்டும் உப்பு நீரைச் சுரந்ததன..
“செல்லம்மா…”
சுய உணர்வுப் பெற்றுத் திரும்பினாள்.பெரிய ஆச்சி நின்றிருந்தாள்.இவளின் தோளின் மீது கைவைத்து “உள்ளே வா” என்றவாறு அழைத்துச் சென்றாள்.எதிர் வீட்டின் வாயலில் நின்றும் பின் அன்புத் ததும்ப தன்னை நோக்கிய வந்த அந்த உருவத்தை திரும்பிப் பார்த்தாள்.அவர் ஓரிரு மனிதர்கள் சூழ அவ்வழியே கடந்துப் போய்க்கொண்டிருந்தார்.
“என்ன அப்படியொரு பார்வை?பெண்ணுக்கு அடக்கம் வேண்டாமா?” என்று பெரிய ஆச்சி கடிந்துக்கொள்ளவும் செய்தாள்.
அவள் பேசாது பெரிய ஆச்சியின் பின்னால் நடந்தாள்.அவளின் மாமியாரான பெரிய ஆச்சி மலாக்கா கம்போங் பாலியில் அமைந்திருந்த பள்ளியில் மார்க்க கல்வியை போதித்துக் கொண்டிருந்தாள்.இந்திய மண்ணான நாகூரைச் சேர்ந்த பெரிய ஆச்சி, அரபு வணிக வம்சாவாளிகள் வழி வந்த முகம்மது இப்றாஹிம் மணம் புரிந்திருந்தாள்.
தமிழ் மணம் பரப்பிய அவர்களின் இல்லறம் வணிகம் கருதி கடல் கடந்து மலாக்காவில் தொடர்ந்தப் போது அவர்கள் ஈன்றெடுத்த முத்துதான் சேக் அப்துல் காதர்.அவர்களின் ஒரே வாரிசு!செல்லம்மாவின் மணவாளன்.
வீட்டினுள் நுழைந்த பின் செல்லம்மாவின் மனம் நிலைக்கொள்ளாது தவித்தது.அவர் என்ன சொல்லியிருப்பார்?சிந்தித்த வண்ணமிருந்தாள்.இரவானபோது அவளது கணவன் அருகில் வந்துப் படுக்கையில் விசுக்கென்று எழுந்து அமர்ந்துக்கொண்டாள்.
“என்ன செல்லம்மா” அப்துல் காதர் கேட்டார்.
“அவர் யார்?”
“யாரு?”
“வெள்ளை அங்கி, வெள்ளைத் தாடி..” மாலையில் அவர்களின் இல்லத்திற்கு எதிரே அமைந்திருந்திருந்த இஸ்மாயிலின் இல்லத்தின் முன் காண நேர்ந்த உருவத்தைப் பற்றிக் கேட்டாள்.
“ஒ..அவரா தீர்க்கதரிசி.பெயரு ஹபிப் அப்துல்லா.அரபு நாட்டிலிருந்து வந்திருக்கிறார்.மார்க்க சம்பந்தப் பட்ட சந்தேகங்களை கேட்டு தெரிஞ்சுக்க தினமும் அவரை பார்க்க கூட்டம் கூடுது.பலரின் பிரச்சனைக்கு தீர்வும் சொல்கிறாராம்”
அவள் அமைதியாக கணவனின் முகம் பார்த்தாள்.அவள் பார்த்த அந்த உருவத்தின் ஒளிப் பொருந்திய கண்கள் நினைவுக்கு வந்தது.
“செல்லம்மா,நாம் அவரைப் போய் பார்த்து நம்முடைய பிரச்சனையை சொன்னா என்ன?”
அவள் மௌனமாக இருந்தாள்.விழிகளில் தாரை தாரையாக நீர் வழிந்தது.
“சரி, நான் அதைப் பற்றிப் பேசவில்லை.விடு,அழுகையை நிறுத்து” காதர் வேறுப் பக்கமாய் திரும்பிப் படுத்துக் கொண்டார்.அவளும் படுத்துக் கொண்டாள்.கண்களில் வழிந்த நீர் மட்டும் நின்றபாடில்லை.
வெறும் ஏமாற்றங்களாலும் துயரங்களாலும் மட்டும் தனது வாழ்க்கை சூழப்பட்டுள்ளதை நினைக்கையில் விழிநீரை அவளால் நிறுத்த இயலவில்லை.மணவாழ்க்கையில் அவள் அனுபவித்திருக்கும் துன்பத்தின் சுமையை எந்த நிலுவையால் நிறுத்துவிட முடியும்?
கண்ணியமான வணிகனான அப்துல் காதருக்கு இரண்டாவது மனைவியான பெருமையும்,இல்லறத்தின் இனிமையையும் அணுஅணுவாக இரசித்து மகிழ முடியாத வண்ணம் துன்பம் அவளை அலைக்கழித்தது.
மலாக்கா மாநிலத்தில் அப்துல் காதர் வணிகனாக மட்டுமல்லாமல் அரசு கடிதங்கள் உட்பட் வணிகப் பத்திரங்களும் கணக்குகளும் தமிழில் எழுதி வந்தார்.தமிழ்மொழி வணிக மொழியாக கருதப்பட்டதால் தமிழ் எழுத படிக்கத் தெரிந்தவருக்கு மக்களிடையே நல்ல செல்வாக்கு இருந்தது.
மலாய்மொழியிலும் பாண்டித்துவப் பட்டவராக இருந்தானர்.பழைய எழுத்துக்களை படியெடுப்பது,பழைய மலாய் படைப்புகளைப் பாதுகாப்பதுப் போன்ற பணிகளில் ஈடுப்படுத்தியிருந்தார். கடாரத்திலும் அவர் நன்கு அறிமுகப்பட்டவராகவே இருந்தார்.அரசு ஆணையை மேற்கொண்டு அடிக்கடி கடாரம் சென்று வரும் சூழலும் அவருக்கு இருந்தது.
.அவரது முதல் மணவாழ்க்கை மாணமுறிவில் முடிந்தபோது அவர் கடாரத்தை சேர்ந்த செல்லம்மாவை இரண்டாவது மணவாழ்க்கைக்கு துணையாகத் தேர்ந்தெடுத்தார்.
ஆனால் செல்லம்மாவுடன் இணைந்து மகிழ்ந்த இல்லறத்தில் பூத்த மலர்கள் ஒவ்வொன்றும் உதிர்ந்துக்கொண்டே வந்தபோது தான், அவை தம்பதிகள் இருவரையும் அதிர வைத்தது.முதல் ஆண்குழந்தை பிறந்த ஆறுமாதத்திலும் அதையடுத்துப் பிறந்த மூன்று குழந்தைகளும் அதுபோன்றே ஒரு வயதிலும் இரண்டு வயதிலும் மூன்று வயதிலுமாக மரித்துப் போயின.
இருவரையும் அந்த சோகங்கள் துன்பத்தில் சோர்ந்துப் போக வைத்தன.அதிலும் வீட்டிலேயே வளைய வளைய வந்துக்கொண்டிருக்கும் செல்லம்மாவை நிலையை விவரிக்க தேவையில்லை.சுமந்து அனுபவித்த பரவசத்தையும் பெற்றெடுத்த பின் குழந்தையின் ஒவ்வொரு அசைவிலும் அழுகுரலிலும் கண்ட ஈடில்லா இன்பத்தை பறிக்கொடுத்து நிற்கும் அவல நிலை.செல்லம்மா ஒவ்வொரு பொழுதுகளையும் நாட்களையும் கண்ணீரில் தான் நகர்த்திக்கொண்டிருந்தாள்.
சில தினங்களாக தொடார்ந்தற்போல் எதிர்த்த வீட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தபோது செல்லம்மாவிற்கு வியப்பாக இருந்தது.மாலையில் தற்செயலாக அந்த உருவத்தை தரிசிக்க நேர்ந்தபோதுக் கூட அவளுக்கு அவரை பற்றி எதுவும் தெரியாமலேயே இருந்தது.
கணவன் அவரைப்பற்றி விரிவாக சொல்லுகையில் அவர் யாரென அறிந்துக்கொள்ள முடிந்தது. ஆயினும் அவர் சொல்வதுப்போல் உடன் பட மனம் மறுத்தது.அந்த அளவிற்கு அவள் நம்பிக்கையை இழந்திருந்தாள்.
அவள் பிறப்பில் ஒரு இந்துவாக பிறந்தப் போதிலும் திருமணத்திற்கு பின் இஸ்லாமியப் பெண்ணாகவே வாழ்க்கையை கணவனுடன் பகிர்ந்திருந்தாள்.பிறைச் சூடிய பெருமானை வணங்கியவளுக்கு பிறை சார்ந்து நாட்களை தொடங்குகின்ற மதமான இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதில் பிரச்சனை ஏதும் இருக்கவில்லை.
தொழுகையிலும் பிராத்தனையிலும் கிட்டாத பாக்கியம் யாரைப் பார்த்து எவ்வாறு கிடைத்திடும் என அவள் மனம் தளர்ந்திருந்தாள்.ஆனால் அவள் சற்றும் எதிர் பார்க்காத வண்ணம் மறுநாள் பொழுது விடிந்தது.
தம்பதிகளின் வாழ்க்கையில் நம்பிக்கையை கொண்டு வந்த அந்த இனிய காலைப்பொழுது ஹபிப் அப்துல்லாவிடம் இருந்து அப்துல் காதருக்கு வந்த அழைப்பிலிருந்து தொடங்கியது.கம்போங் பாலி மசூதியில் முக்கிய பொருப்பில் அவர் இருந்ததால் அது குறித்து தான் அபிபுல்லா தன்னை அழைத்துள்ளார் என அப்துல் காதர் நம்பினார்.
சாந்தமான முகத்தில் புன்சிரிப்பை ஏந்தி ஹபிப் அப்துல்லா அவரை வரவேற்றார்.தெய்வீகத் தோற்றத்தில் காட்சியளிக்கும் அவரின் அருகில் இருப்பதே அப்துல் காதருக்கு பரமானந்தமாக இருந்தது.
“காதர் உன்னை சந்தித்ததை இறைவனின் சித்தமாக கருதுகிறேன்.இப்படி அமர்”
அவரின் அன்பு, வார்த்தைகளில் இருந்த கனிவு அப்துல் காதரை மெய்சிலிக்க வைத்தது.
அவரின் அருகே அமர்ந்தது அவரது முகத்தின் கருணையை விழிகளால் பருகினார்.வியாபாரம்,மார்க்கம் பேசிவிட்டு அவர் அவனின் குடும்பம் தொட்டுப் பேச்சை எடுத்தார்.
“உன் மனைவியை ஓரிரு முறைப் பார்த்திருக்கிறேன்.முகத்தில் அளவில்லாத சோகம்.உள்ளுக்குள் இருக்கும் சோகம் கண்களில் நீராய் பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது.அப்படி என்ன துன்பம் அவருக்கு?”
“எங்கள் துன்பத்தை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.எந்த பெற்றோருக்கும் வர கூடாத நிலை.எங்களுக்கு பிறந்த குழந்தைகள் நான்கும் எங்களுடன் தங்கவில்லை.பிறக்கும் குழந்தைகளை ஒவ்வொரு முறையும் பறிகொடுத்து விடுகிறோம்.பல அலுவல்களிடையே நான் என் துன்பத்தை சிறிது நேரமாவதும் மறக்க முடிகின்றது.ஆனால் என் மனைவினால் அப்படியிருக்க முடிவதில்லை.அதான் துன்பப்படுகிறாள்.”அவன் பேசி முடித்து பெருமூச்சு விட்டார்.
அவர் மிகுந்த கரிசணையோடு கேட்டார்.சிறிது நேரம் இறுக கண்களையுக் மூடி அமைதியாக இருந்தார்.கண் திறந்தபோது அவரின் கண்களில் புத்தொளித் தெரிந்தது.
“இனி கலங்க வேண்டாம்.இறைவன் உங்களுக்காக கருணையைச் சுரக்கும் காலம் கனிந்துவிட்டது.விரைவிலேயே உன் மனைவி தாய்மை அடையப்போகிறார்.அவருக்கு ஆண் குழந்தைப் பிறக்கும்.நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கும்.அக்குழந்தைக்கு என் நாமமான அப்துல்லாவை வைக்க வேண்டும்”தீர்க்க தரிசனமாய் பேசினார்.
அவன் ஆனந்தத்தில் அதிர்ந்து பேசுவதற்கு வார்த்தைகள் இன்றி தவித்தார்.
“காதர் இது நிச்சயம் நடக்கும்!நீங்கள் இருவரும் கவலையை தகர்த்தெறியுங்கள்.”
அவர் கண்ணீருடன் நன்றி கூறி விடைப்பெற்று எதிரேயிருந்த தனது இல்லம் நோக்கி ஓடினான்.மனைவியிடம் அபிபுல்லா அப்துல்லா கூறியவற்றை சொன்னார்.
“உண்மையாகவா?”அவள் அழுதே விட்டாள்.
‘உண்மைதான் செல்லம்மா, அல்லாஹ் நமக்கு கருணை காட்டியுள்ளார்”மனைவியை அணைத்துக்கொண்டு ஆனந்த கண்ணீர் உகுந்தார்.
அந்த நிதர்சனம் நிகழ்ந்தது.அவள் கற்பமுற்றாள்.உடல் மெலிந்து,நடைத் தளர்ந்து கற்பமுற்ற பெண்ணுக்குரிய அனைத்து துன்பங்களையும் தாங்கி பிரசவ நாளை நெருங்கினாள்.
ஹபிப் அப்துல்லா பகர்ந்ததைப் போலவே ஆயிரத்து எழுநூற்று எண்பத்தாறில் செல்லம்மா ஓர் ஆண் மகவை ஈன்றெடுத்தாள்.தான் பத்துத் திங்கள் சுமந்து ஈன்ற மகன், நாளை சரித்திரத்தில் இடம் பெறக்கூடிய திறனைக் கொண்டிருப்பான் என செல்லம்மாள் உணர்ந்திருக்கவில்லை.இந்த மண்ணின் பெயர் நிலைக்கும் வரை மலாய் மொழியை உரைநடையில் எழுதி மலாய் மொழியின் நவீனத் தந்தை என்ற அழியா புகழை பெற போகின்றவனை தான் கைகளில் ஏந்தி நிற்கிறோம் என்பதை காதரும் அறியவில்லை.பின்னாலில் முன்சி அப்துல்லா என்றழைக்கப்பட்ட அப்துல்லாவின் ஜனனம் இவ்வாறே மலாக்கா கப்போங் பாலியில் நிகழ்ந்து, பொன் எழுத்துக்களினால் பொறிக்க காத்துக் கிடந்தது.
குறிப்பு: முன்ஷி அப்துல்லா பன்மொழி புலவர். அரபி,தமிழ்,மலாய்,இந்தி,சீனம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமைப் பெற்றிருந்தார்.மலேசியாவின் தேசிய மொழியான மலாய் மொழியை உரைநடையில் எழுதி நவீனப்படுத்திய மலாய் இலக்கியத்தின் முதல் கர்த்தாவென்பது சரித்திரம்.அரபு-தமிழ் கலப்பினத்தில் தோன்றிய அவரது மூதாதையர் வாணிபம் பொருட்டு மலாக்காவில் புலம்பெயர்ந்திட, அதன் வழி தழைத்த வம்சத்தில் தோன்றியவர். தமிழ் முஸ்லிமான சேக் அப்துல் காதருக்கும் கடாரத்தை சேர்ந்தத் தமிழ் பெண்ணுக்கும் பிறந்தவரே முன்ஷி அப்துல்லா.
அவரின் குழந்தைப் பருவம் துன்பம் நிறைந்தது.நோயில் அவதியுற்றும் தாய்க்கு பால் சுரக்காத்தால் பிற தாய்மார்களிடம் பால் அருந்தியும் நோயுற்ற காரணத்தினால் பல முறை பிறருக்கு தத்துக் கொடுக்கப்பட்டும் வளர்ந்துள்ளார்.தமிழ் கற்று இந்திய பாராம்பரியத்துடன் வாழ்ந்த அவரது மதி நுட்பமும் செற்கும் துணிச்சலும் தமிழ் புலவனுக்கே உரிய பண்புகளை கண்முன்னே கொண்டு வருகின்றன.அவர் இயற்றிய சுயசரிதையை வாசிக்கையில் அதில் மிளிர்ந்த தமிழ் பழமொழிகளும் சொற்சொடர்களும் உவமானங்களும் என்னை மகிழ்ச்சிக் கொள்ள வைத்தன.இருப்பினும் தனது தாய்மொழியான தமிழில் அவர் ஏதும் எழுதாதது, {தமிழ் மொழியிலான பஞ்சத்தந்திரக் கதைகளை இன்னொரு மொழியில் அவர் மொழிபெயர்ந்திருந்தாலும்} மனதிற்கு பெரும் சங்கடமாகவே படுகின்றது.
(முற்றும்)
- ரங்கராட்டினம்
- சே.ரா.கோபாலனின் “ மை “
- தாகூரின் கீதப் பாமாலை – 10 குழம்பிப் போன பயணி !
- ”கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார்”
- குறுந்தொகையில் வழிபாட்டுத் தொன்மங்கள்
- முள்வெளி அத்தியாயம் -6
- சாதி மூன்றொழிய வேறில்லை
- பணம்
- வாருங்கள்…! வடிவேலுவை மேடை ஏற்றலாம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 21
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 17) எழில் இனப் பெருக்கம்
- 2-ஜி அலைக் கற்றை ஊழலும் இந்திய ஜனநாயகமும்
- ரோஜா ரோஜாவல்ல….
- வேறோர் பரிமாணம்…
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –10
- விவேக் ராஜகோபாலின் “ குறுக்கு வழியில் ஒரு டிராபிக் ஜாம் “
- தங்கம் 4 – நகை கண்காட்சி
- பஞ்சதந்திரம் தொடர் 41-காக்கைகளும் ஆந்தைகளும்
- மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -23
- கடவுளும் கடவுளும்
- நூபுர கங்கை
- அக்கினி புத்திரி
- மறு முகம்
- ‘ மதில்களுக்கு அப்பால்……ஒரு நந்தக்குமாரன் ’
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தேழு
- முன்னால் வந்தவன்
- பள்ளிப்படை
- நியாயப் படுத்தாத தண்டனைகள்..!