அகஸ்டோவின் “ அச்சு அசல் “

This entry is part 12 of 40 in the series 6 மே 2012

கார்த்திக் பைன் ஆர்ட்சின் கோடை நாடகவிழாவில் ஞாயிற்றுக்கிழமை (22.4.2011) அன்று அரங்கேறிய நாடகம் “ அச்சு அசல்.” முதலில் ஒரு விசயத்திற்கு அகஸ்டோவைப் பாராட்டியாக வேண்டும். தொழில் ரீதியாக மூக்குக் கண்ணாடிக் கடை வைத்திருப்பவர் அவர். ஆனால் இலக்கிய ரீதியாகவும், படைப்பு ரீதியாகவும் தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்ள, அவர் எடுத்துக் கொள்ளும் அக்கறை, அலாதியானது.

நாடகம் கொஞ்சம் சமூக நீதிக் கதை கொண்டதுதான். அதைத் தன் பாணியில் ஒரு திரில்லராகப் படைக்கும் வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் அகஸ்டோ. வெற்றி பெற்றாரா என்று பிறகு பார்ப்போம்.

நாடகத்தின் பாத்திரப் படைப்புகளும் அலாதியானவை. வாடகை நூல் நிலையம் நடத்தும் பொன்மலை, வித்தியாசமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்கும் சேகர், டாப் ஸ்டார் ஜித்தேந்திரன், பல வெற்றிப்படங்களைத் தந்த அவரது தந்தை ராஜேந்திரன், தொழிலதிபர் ரவீந்திரன், நடன ஆசிரியை ஹேமா, ஜித்தேந்திரனின் வக்கீல், இடையிடையே வந்து போகும் நூல் நிலைய வாடிக்கையாளரான ஒரு திருநெல்வேலிக்காரர். ஒரு கிளெடிலாஸ்கோப் வண்ணக் கண்ணாடித் துண்டுகள் போல் பாத்திரங்கள்.

வாடகை நூல் நிலையத்தில், சேகருக்கு ஒரு புதிய நிகழ்ச்சிக்கான வித்தைத் தருகிறார் பொன்மலை. பிரபலங்களைப் போல் இருக்கும் சாமான்னியர்களை வைத்து காட்டப்படும் நிகழ்வு. சோ, பாலச்சந்தர் என பலரின் நகல்கள் பங்கேற்றதில், நிகழ்ச்சி இமாலய வெற்றி பெறுகிறது. டாப் ஸ்டார் ஜிதேந்திரனின் நகலாக இருக்கும் ரவீந்திரன், ஒரு தொழிலதிபர். அவர் பங்கேற்கும் நிகழ்வு அதிக வரவேற்பைப் பெற்று, அவருக்கு சிறந்த நகல் என்கிற பட்டத்தையும், ஒரு கோடி ரூபாய் பரிசையும் வாங்கித்தருகிறது. சூரஜ் என்கிற காதாசிரியனின் கதையைத் திருடி, இயக்குனர் ராஜேந்திரன், ஜித்தேந்திரனை வைத்து எடுக்கப்பட்ட படம் சூப்பர் ஹிட். சூரஜுக்கு ராஜேந்திரனைப் பழி வாங்க ஒரு வெறி. ஹேமா, தன் பெற்றோர் வசித்து இறந்த, ஊட்டி எஸ்டேட்டின் உரிமையாளர் வரலட்சுமி, ஜிதேந்திரனின் மேல் உள்ள ரசிக வெறியால் தன் சொத்து ( மதிப்பு 225 கோடி) முழுவதையும் அவர் மேல் எழுதி வைத்துவிட, ஜிதேந்திரன், வரலட்சுமியைச் சந்திக்கக் கோரும் விண்ணப்பத்துடன் வருகிறாள். அவளுக்கும் ஒரு ஆசை இருக்கிறது. தன் காலம் முடியும் வரை, தன் பெற்றோர் வசித்த அதே கொட்டகையில், தானும் வசிக்க வேண்டும். அதற்கு ஜிதேந்திரனின் அனுமதி வேண்டும். ஜிதேந்திரனின் மகன் ப்ரானேஷ், விநோத வியாதியால் மருத்துவமனையில். ஜிதேந்திரன் சுவிட்சர்லாந்தில்! அப்பாவின் அரவணைப்பு தேவைப்படும் அபாயக் கட்டம். ரவிந்திரன் ஜிதேந்திரனாக நடித்து, அவன் உயிரைக் காப்பாற்றுவதும், அதற்கு நன்றிக் கடனாக ராஜேந்திரன், சூரஜின் கதையின் உரிமையை அவனுக்கே தருவதும், ஹேமாவின் ஆசை பூர்த்தியாவதும் கிளைமேக்ஸ்.

நீதிபோதனை இல்லாத போட்டி நாடகம் வெல்லுவதில்லை என்பதால், ஏகத்துக்கு கடைசி காட்சியில் போதனைகள். அதுவரை ஒரு இடத்தில் கூட நாடகத்தில் அதற்கான கோடி காட்டப்படவில்லை என்பது ஒரு சறுக்கல் தான்.

நிறைகளைப் பார்ப்போம். வாடகை நூல் நிலையம் என்கிற களத்தில், தமிழ் சினிமாவிலோ, நாடக மேடையிலோ யாராவது முயற்சித்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. அப்படியே இருந்தாலும், அது காதலன் காதலி சந்திப்பிற்காக காட்டப்படும் இடம் என்பது வரைதான் என் ஞாபகம். புத்தகங்களின் தலைப்பை வைத்து காதலைச் சொல்லும் வசனங்கள் உண்டு. (‘ நீங்க குங்குமம் தந்தால் நான் இதயம் தரேன் ‘ ) புத்தகங்கள் மூலமாக நாயகனின் புத்திக் கூர்மையை வெளிக்கொணரும் உத்தி புதிது. காட்சி ஜோடனைகளில் உழைப்பு தெரிகிறது. அரங்கேற்றக் காட்சி என்றாலும், நடிகர்கள் வசனங்களைக் கோர்வையாகவும் தெளிவாகவும் பேசுவது, பாராட்டுக்குரியது. நடன ஆசிரியை பாத்திரம் என்பதால், ஒரு மினி நடனக் காட்சியைக் காட்டியது புதிய உத்தி.

இனி குறைகள். எந்த வாடகை நூல் நிலையம் அமெரிக்கன் லைப்பரரி போல் இருக்கிறது? டிஜிட்டல் பிரிண்டிங்கில் செய்யப்பட்ட பேக் டிராப், அன்னியத் தன்மையைத் தருகிறது. பச்சை பெயிண்ட் அடித்த ஒரு மர ஷெல்பில், பழைய புத்தகங்களை அடுக்கி இருந்தாலே நிஜத் தோற்றம் கிடைத்திருக்கும். செலவும் கம்மியாகியிருக்கும். பெரிய தொழிலதிபர், வாடகை நூல் நிலையத்திற்கு வந்து, அவரே புத்தகங்களை, அதுவும் பைண்டிங் செய்யப்பட்டு இன்னமும் ஈரம் காயாது இருக்கும் புத்தகங்களைத், தேடுவது கொஞ்சம் செயற்கை தான். இன்னமும் நடு நடுவே காமெடிக் காட்சிகளை வைப்பது என்கிற பழைய பாணி, நாடகத்தை நவீனத்திற்கு அழைத்துச் செல்ல மறுக்கிறது. வாடகை நூல் நிலையம் என்கிற களத்தைத் தேர்ந்து எடுத்து விட்ட காரணத்தினாலேயே, கதை நகர்தலை அங்கேயே வலுக்கட்டாயமாக திணித்து இருப்பது கொஞ்சம் அழற்சியைத் தருகிறது.

ரவிந்திரனாக நடித்தவர் தொலைக்காட்சி நடிகர். அனாயசமாக நடிக்கிறார். ஆனால் அவர் ஜிதேந்திரனை உள்வாங்கி ரவீந்திரனாக நடிக்கிறாரோ என்று உள்ளூர ஒரு எண்ணம் எனக்கு ஓடிக்கொண்டிருந்தது. சூரஜாக நடித்தவர் துள்ளலுடன் நடித்தார். பாத்திரத்திகேற்ற நடிப்பு. ராஜேந்திரனாக வந்த ‘வாலிவதம்’ ஜெயகுமார் சீனியர் நடிகர். ஆனால் பிரபல இயக்குனர் என்றால் வாய் கிழிய கத்த வேண்டுமா? லாயராக வந்தவரும் சேகராக வந்தவரும் கச்சிதம். ஹேமாவாக வந்தவர் ( எழுத்தாளர் ஷங்கர நாராயணனின் மனைவி ) நிஜ வாழ்வில் நாட்டியம் கற்றவர். அதனால், அவரது நடனம் அப்பழுக்கில்லாமல் இருந்தது. நடிப்பும் ஓகே. ஆனால் குரல்தான், கிணற்றுக்குள்ளிருந்து கேட்பது போல், இருந்தது. உடைகளும் பொருந்தவில்லை. சில காட்சிகளிலாவது சேலையில் வந்திருந்தால், பாத்திர கனம் கூடியிருக்கும். பொன்மலை நகைச்சுவைக் காட்சிகளுக்காக திணிக்கப்பட்டவர். ஒரே டெசிபலில் பேசுவது அவரது குறை. திருநெல்வேலிக்காரராக வரும் போத்திராஜ் பல நாடகங் களில் வில்லன். இதில் அவருக்குக் காமெடி வேடம். மனிதர் இயல்பாக நடித்தார். அவருக்குத்தான் புல் மார்க்ஸ்.

வருடம் ஒரு முறை நாடகம் போடும் அகஸ்டோ, அடுத்த முறை மையக் கதைப் பாத்திரங்கள் மூலமும், காட்சியமைப்பின் மூலமும் நகைச்சுவையைச் சேர்ப்பது நாடகத்திற்கு பலம் சேர்க்கும். இதில் நூல் நிலையக் காட்சிகளை நீக்கிவிட்டாலும் கதை புரியும் என்பது அகஸ்டோவுக்குப் புரிய வேண்டும்.

#

கொசுறு

நாரத கான சபையில் மையப்பகுதியில் இருக்கும் முதல் வரிசை நாடகப்போட்டியின் நீதிபதிகளுக்கு, மற்றும் சபையின் முக்கியப் புள்ளிகளுக்கு. இரண்டாம் வரிசையிலிருந்து, யார் வேண்டுமானாலும் உட்காரலாம். ஆனால் உட்கார்ந்தபின் எழுந்திருக்க முடியாது. நீரிழிவுக்காரர்கள் இந்த வரிசையைத் தவிர்ப்பது நலம். அவசரமாகப் ‘போக ‘ வேண்டுமென்றால், கால் நகர்த்தக் கூட இடமில்லை. உட்கார்ந்தபடியே நகர வேண்டியது தான். என்னுடைய இருக்கை இந்த வரிசையில் எண் 15. நடுசெண்டர். வலதுபுறம் ஏழு இருக்கைகளில் வயதான மாமிகள். இடது புறம் மாமாக்கள். இடைவேளையில், உட்கார்ந்த நிலையில், மாமிகள் மடியைத் தவிர்த்து, வெளியேற, நான் பட்ட அவஸ்தை சொல்லிமாளாது. திரும்புகையில் மாமாக்கள் பக்கமிருந்து நுழைந்தேன். அது கொஞ்சம் பரவாயில்லை. என் டிக்கியில் கை கொடுத்து, என்னைப் பத்திரமாக என் இருக்கையில் சேர்த்து விட்டார்கள் மாமாக்கள்.

நாடகம் ஆரம்பிப்பதற்கு முன்பே ஒரு தாட்டியான குண்டப்பா, ஆறாவது வரிசையில் உட்கார்ந்து தன் இருபக்கமும் உள்ள இருக்கைகளில் துண்டு போட்டிருந்தார். நுழைய முற்பட்டவர்களையெல்லாம், ‘ ஆள் வருது ‘ என்று விரட்டிக் கொண்டிருந்தார். நாடகம் முடியும் வரை அவரது ஆள் வரவேயில்லை. அவர் சௌகரியமாக இரு கை, கால் நீட்டி நாடகம் பார்த்தார். இரண்டு நாடக ரசிகர்களுக்கு நல்ல இருக்கைகள் மறுக்கப்பட்டன. இந்த விசயத்தில் தாட்டி ரொம்ப நாட்டி!

#

Series Navigation“பெண் ” ஒரு மாதிரி……………!பஞ்சதந்திரம் தொடர் 42- அரசனைத் தேர்ந்தெடுத்த பறவைகள்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *