சின்னமகளிடம் கிங் ஃபிஷர் பற்றி ஒரு உரையாடல்

This entry is part 22 of 29 in the series 20 மே 2012

(1)

’அம்மா
இங்க வாம்மா.
*
என்னம்மா
*
அங்க பாரேன்
கிங் ஃபிஷர்
’லூசு’ மாதிரி
சிலுப்புது.
*
அது
லூசில்லமா.
*
பறவைக்குப்
பைத்தியம்
பிடிக்குமுமாம்மா?
*
பிடிக்குமா?
பிடிக்காதா?
எனக்குத் தெரியாது
‘முழிப்பேன்’.
*
இதன்
முட்டை
எந்தக் கலரும்மா?
*
அதன்
முட்டையைப்
பார்த்ததில்லை.
*
சும்மா
சொல்லும்மா.
*
வெள்ளையா
இருக்கலாம்.
*
என் சின்னமகளுக்குக்
கேள்விகளே முக்கியம்
விடைகளல்ல.

(2)

கலர் கலரா
அழகா
இருக்கில்லேம்மா?
*
‘அழகு தான்
கலர்’.
*
மெல்லச்
சொல்லும்மா.
*
ஏம்மா?
*
சத்தம் கேட்டா
கத்திகிட்டு
காணமல் போயிடும்மா.
*
வார்த்தை நான்
பேசவில்லை
பின்
”அர்த்தம்”
காணாமல் போய் விடுமென்று.
*
எப்போதும் காத்திருக்கும் மெளனம்
ஏகமாய்ச் சூழ்ந்து விடும்.
*
திடீரென்று
விட்டு விட்டு விசாரிப்பதாய்
குரலெடுத்துப்
பறந்து விடும் பறவை.

(3)

எப்பம்மா
கிங் ஃபிஷர்
திரும்பி வரும்?
*
திரும்பி
வராதும்மா.
*
இல்ல
திரும்பி வரும்.
*
எப்படிம்மா?
*
‘அழகாயிருக்குன்னு’
மெல்லச் சொல்லு
திரும்பி வந்துடும்.
*
மெல்லச் சொல்லிட்டேன்
இப்ப
எங்கேம்மா?
*
அங்க
பாரும்மா?
*
எனக்குத் தான்
கிளையிலிருந்து
கிங் ஃபிஷர்
வெளியேறிப் போன பின்
வெற்றுக் கிளை.
என் சின்னமகளுக்கல்ல.

(4)

கிங் ஃபிஷர்
எப்பம்மா
திரும்பி வரும்?
மீண்டும் கேட்பாள்
சின்ன மகள்.
*
அதன்
பிறந்த நாளக்கி.
*
அதுக்கு
என்னக்கி
பிறந்த நாள்?
*
28, அக்டோபர்.
*
என்
பிறந்த நாளும்மா.
*
நீ தான்
கிங் ஃபிஷர்.
*
அப்படியாம்மா?
என் சின்னமகள்
கண்களின் சிரிப்பில்
ஒரு
பேருண்மை
ஒளிரும்.

Series Navigationதங்கம் – 7 சீனாவின் மைடாஸ்தருணங்கள்
author

கு.அழகர்சாமி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *