– நாகரத்தினம் கிருஷ்ணா
மார்ச்-27
முன்னாள் இரவு விமானநிலையத்திலிருந்து ஓட்டலுக்குச்செல்லும்போதே எங்கள் குழுவினருக்கென பணியாற்றிய வழிகாட்டி காலை 9.30க்குப் பேருந்தில் இருக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். ஐரோப்பியர்கள் நேரத்தை பெரும்பாலும் ஒழுங்காக கடைபிடிப்பவர்கள். பிரான்சில் நம்மவர்களோடும் பயணம் செய்திருக்கிறேன், ஐரோப்பியர்களோடும் வாய்ப்புகள் அமைந்திருக்கின்றன. நாம் அலட்சியப்படுத்துகிறவற்றில் அவர்கள் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த அக்கறையே அவர்களின் முன்னேற்றத்திற்கும் காரணமாகவும் இருக்கின்றன. முதல்நாள் பாரீஸ் விமானதளத்தில் எங்கள் வரிசையில் பின்னால் நின்றிருந்த மூவரும் ஒரு டாக்டர் தம்பதியும் அவர் சகோதரியும் (இவருமொரு மருத்துவர்) முதல்நாள் பேருந்தில் அமர்ந்த அன்றே கலகலப்பாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். தவிர அன்றிரவு டாக்டர் தம்பதிக்குக் கொடுக்கப்பட்டிருந்த அறையும் அவர் சகோதரியின் அறையும் எங்கள் அறைக்கு அருகருகே இருந்தன. ஐந்துபேரும் ஓட்டல் ரெஸ்டாரெண்ட்டில் காலை 8.30க்குச் சந்திப்பதாகச் சொல்லியிருந்தோம். ஓட்டல் அறைகளில் Wi-Fi தொடர்பு ஒழுங்காகக் கிடைக்கவில்லையென்பது ஒரு குறை. எனவே கொஞ்சம் முன்னதாக இறங்கிவிட்டேன். லாபியில் ஒழுங்காக கணிணிக்குத் தொடர்பு கிடைத்தது. எட்டரை மணிக்கு அனைவருமாக ரெஸ்டாரெண்ட்டிற்கு காலை உணவிற்குச்சென்றோம். எங்கள் கைகளுக்கு அறைஎண்ணுடன்கூடிய ஒரு கங்கணத்தை கட்டிக்கொள்ளுமாறு முதல் நாள் இரவே வரவேற்பில் கொடுத்திருந்தார்கள். ஐரோப்பிய துருக்கிய உணவுகள் கிடைத்தன. துருக்கியரின் பிரத்தியேக சாயலுடன் கூடிய ஐரோப்பிய காலை உணவென்றும் சொல்லல்லாம். எக்மெக் என்கிற ரொட்டி, தெரெயா என்கிற வெண்ணெய் (கொஞ்சம் அதிகமாக வாடை இருக்கிறது) முதலில் தயக்கமாக இருந்தது. ஒரு முறை ருசித்துவிட்டால் விரும்புவோம். அடுத்து இஸ்லாமியமக்கள் விரும்பி எடுக்கும் பதப்படுத்தப்பட்ட ஆலிவ் (கறுப்பு, பச்சை, சாம்பல் வண்ணமென்று பல வகைகளில் மசாலா கலந்தும், கலவாமலும் கிடைக்கிறது) தக்காளி, வெள்ளரி துண்டுகள் மேற்கத்தியர்களைபோலவே தேன்; பாற்கட்டி, முட்டை, தயிர் இவற்றுடன் பிற இஸ்லாமியா நாடுகளிலுள்ள ஓட்டல்களில் பார்க்க வியலாத பன்றி சாசேஜ்களுமிருந்தன.
காலையில் அண்ட்டால்யா (Antalya) நகரின் அருகிலுள்ள ஒரு சரித்திரபுகழ்வாய்ந்த அரங்கொன்றையும் பிற்பகலில் மனவ்கா( Manavgat) நதியில் படகுச்சவாரியென்றும் எங்கள் பயணத்திட்டத்திலிருந்தது. முதல் நாள் கண்ட மூன்று இடங்களைக்குறித்து எழுதுவதற்கு முன்பாக அண்ட்டால்யாவைப் பற்றி சில தகவல்கள்:
அண்டால்யா துருக்கிக்கு தென்பகுதியிலுள்ள பிரதேசம். பிரதேசத்தின் பெயரையே தலை நகரத்திற்கும் வைத்துள்ளார்கள். நீர்வளம் நிலவளமும் என்று நம்முடைய பழம் நூல்களில் எழுதுவார்கள். அதுபோன்று நீர்வளமும் நிலவளமும் சேர்ந்து அமைந்ததால் சில ஆண்டுகள் வரை விவசாயம் இப்பிரதேசத்தின் பிரதான வருமானமாக இருந்திருக்கிறது. இன்றைக்கும் சுற்றுலா தொழிலில் ஆக்ரமிப்பிற்குத் தப்பிய இடங்களில் ஆலிவ், அப்ரிகாட், ஆரஞ்சு, திராட்சையைக் காணமுடிகிறது. அண்டல்யாவின் வரலாற்று எச்சமும் [ பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உதுமானியர்கள் (Ottomans)கீழ் வருவதற்கு முன்பாக இப்பகுதி ரோமானியர்கள், கிரேக்கர்கள் வசம் இருந்திருக்கிறது] நீலப்பச்சையில் பகற்பொழுதில் ஜொலிக்கும் மத்தியதரைகடலும், இயற்கை உளிகொண்டு கடற்கரையில் அது புரிந்துள்ளவிந்தையும் இப்பிரதேசத்தை ஒரு சுற்றுலா தலமாக அண்மைக்காலத்தில் மாற்றியுள்ளது.
பேருந்தில் சென்றபொழுதே பிரதேசத்தின் வளத்தை உணரமுடிந்தது. முதல்நாள் தொடங்கி இறுதிநாள்வரை சுற்றுலா அண்டல்யா வில் மும்முரமாக செயல்படுவதற்கான காரணிகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி ஐரோப்பியர்கள் உதவியுடன் துருக்கியர்கள் ஜெயித்திருக்கிறார்கள். இந்தியாவில் மத்திய தொல்பொருள் இலாக்காவின் பராமரிப்புலுள்ள இடங்கள் எந்த இலட்சனத்தில்லிருக்கின்றனவென ஐரோப்பியர்களுடன் ஒப்பிடவேண்டாம் துருக்கிபோன்ற நாடுகளோடு ஒப்பிட்டாலேபோதும்.
காலையில் சுமார் பத்து பத்தரை மணி அளவில் எங்கள் ஓட்டலிலிருந்து சுமார் நாற்பது கி.மீட்டத் தூரத்திலிருந்த அஸ்பெண்டோஸ் என்னும் இடத்திற்குச் சென்றோம். சுற்றுலா தலத்தில் பொதுவாக நாம் பார்க்கிற காட்சிகளை இங்கேயும் பார்க்கமுடிந்தது. நாங்கள் பயணித்த ஒருவாரமும் மக்கள் உபயோகத்தில் ஒட்டகங்கள் இல்லையென்றாலும் இதுபோன்ற இடங்களில் அலங்கரித்த ஒட்டகங்களை சுற்றுலா பயணிகளில் நிழற்படங்களுக்காக காத்திருந்தன. பிறகு சுவெனிர் கடைகள். குளிர்பானங்கள், தேனீர், 1யூரோவுக்கு நல்ல தண்ணீர் கலவாத ஆரஞ்சு பழச்சாறுகளும் (அதிகமாக விளைவதால்) கிடைக்கின்றன.
அஸ்பெண்டோஸ்( Aspendos). பண்டைய கிரேக்கர்களின் செல்வாக்கு மிகுந்த நகரமாக இருந்திருக்கிறது. நகரத்தின் சிதிலங்கள் ஆங்காங்கே பராமரிப்புடனிருந்தன. இந்நகரத்து குதிரைகள் அவ்வள்வு பிரசித்தமாம். இதனை நான்காம் நூற்றாண்டில் கைப்பற்றிய அலெக்ஸாண்டர் தமக்குத் திரைப்பணமாக குதிரைகளைத் தரவேண்டுமென நிர்ப்பந்தப்படுத்தியதாக வழிகாட்டி கூறினார். இந்த வழிகாட்டிகள் கூறுபவை பல நேரங்களில் புனைவுகளாக இருக்கக்கூடும். இங்கே நாங்கள் பார்த்தவற்றுள் காலத்தின் அரிப்பினால் அதிகம் பாதிக்கப்படாததாக ரோமானியர்கள் இந்நகரை ஆண்டபொழுது உபயோகித்திருந்த திறந்தவெளி நாடக அரங்கமிருந்தது. மார்க் ஒரேல் என்ற ரோமானிய மன்னனால் இரண்டாம் நூற்றாண்டில் செனோன் என்கிற உள்ளூர் கட்டிடகலைஞரால் உருவாக்கப்பட்ட அரங்கம். அப்போதே நடிப்பவர்களுக்கு உயரமான மேடை, அலங்கரிந்துக்கொள்ள தனி அறைகள், எதிரே பார்வையாளர்களுக்கு சமூக வாழ்நிலை அடுக்கிற்கு ஏற்ப இருக்கைகள். சூரிய ஒளியிடமிருந்து பகற்பொழுதில் நடிகர்களை தற்காத்துக்கொள்ளும் வகையில் பார்வையாளர்களின் இருக்கை, பேசும் வசனங்கள் பழுதின்றி பார்வையாளர்களைச் சென்றடையும் வகையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஓசை தடுப்புகள் என இருபது நூற்றாண்டுகளுக்குமுன்னரே ரோமானியர்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் கலைக்குக் கொடுத்திருந்த முக்கியத்துவம் தெரிந்தது.
பிறகு அருகிலேயே சுண்ணாம்பு படிமங்களுடன் பயணிக்கும் மனவ்காட் (Manavgat) நதியோடு பயணித்து பல இடங்களில் பேருந்தை நிறுத்தி அதன் அழகைப் பருகினோம். வெள்ளி திரவமாக பிரவாகமெடுத்ததுபோலவிருந்த வெயிற்பொழுதிற் மரகதப்பச்சையில் விரித்திருந்த நீர்ப்பரப்பின் அழகைக்குறித்து எழுத பாரதியோ பாரதிதாசனோ தேவை. பகல் ஒரு மணிக்கு எங்களுக்குப் படகுகுசவாரி. இரண்டு அடுக்கு கொண்ட படகில் மேல் தளத்தில் பயணிப்பதை தவிர்த்து முதற்தளத்தில் அமர்ந்தோம். பிரான்சு நாட்டு அரசியல், இந்தியாவின் வளர்ச்சி, ஐரோப்பாவின் நெருக்கடியென பலவற்றை விவாதிக்க முடிந்தது. மருத்துவரைக் காட்டிலும் அவரது சகோதரி அதிகம் அரசியல் பேசினார். வலது சாரிகளை வெறுப்பதாகத் தோன்றியது. அப்போது பிரான்சில் முதல் சுற்றுக்காக அதிபர் தேர்தலுக்கு தீவிர பிரச்சாரம் நடந்துகொண்டிருந்த நேரம். அதிலும் டாக்டர் பெண்மணி தீவி இடதுசாரி வேட்பாளரை ஆதரித்து பேசியதும் என்னையும் அந்தவேட்பாளருக்கே வாக்களிக்குமாறு வற்புறுத்தியதும் வியப்பளித்தியது. வெயில் கடுமையாக இருந்தது. நான்கைந்து கி.மீட்டரில் கடற்கரை ஓரமாகவே நதி நீள்கிறது. பிறகு ஒரு தீவு போன்ற இடத்தில் படகை நிறுத்தி எங்களுக்கு உணவை வழங்கினார்கள். நல்ல சாலட், ரொட்டி, புதிதாகப்பிடித்த ட்ரௌட் (Trout)இளஞ்சூட்டில் சுவையாக அவித்து தருகிறார்கள். ஆசிய ஐரோப்பா பறவைகள் பலவற்றை இங்கே காணமுடிந்தது. பிற்பகல் நான்கரை மணிக்கு நதிப்பயணம் நாங்கள் வந்த வழியே திரும்ப முடிவுற்றது.
மாலை ஐந்து மணி அளவில் அண்டல்யாவின் புறநகர் பகுதியில் மனவ்காட் நதிக்கு வெகு அண்மையில் செலிமியெ (Selimiye)வில் இஸ்டான்புல்லின் நீலமசூதியை வடிவிலும் அழகிலும் ஒத்திருந்த ஓரு மசூதியைக் காண்பித்தார்கள். இஸ்டான்புல் மசூதிதைப்பார்த்தது இல்லை. ஆனால் இதைப்பார்த்தபொழுது அதையும் பார்க்கவேண்டுமென்றிருக்கிறது. மசூதியில் நான்கு மினாரேக்கள் இருந்தன. மசூதியின் வாயிலுக்கு எதிரில் கால்கைகளை சுத்திசெய்வதற்கான இடம் பால்நிரபளிங்கு கற்களால் கட்டப்பட்டிருந்தது. நீல நிறம் மசூதியை பெரிதும் ஆக்ரமித்திருந்தது. உள்ளேயும் நுணுக்கமான கலைவேலைப்பாடுகள். பளிங்குகற்களில் சித்திரங்கள் பதித்த பட்டிகள், வண்ணகண்ணாடி சில்லுகளால் அலங்கரிக்கபட்ட சன்னல்கள், கூண்டுகள், தொழுகைக்ககான இரத்தினக் கம்பளம், மிருதுவாய் தொட்டுணரக்கூடிய ஒளி. அனுமதி தந்த இமாமுக்கு நன்றி சொல்லவேண்டும்.
மாலை ஏழு மணிக்கு ஓட்டல் திரும்பினோம். நேற்று வழங்காத காக்டெய்லை சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் வழங்கினார்கள்; அது காக்டெய்ல் என்றபெயரில் கொடுப்பட்ட அமெச்சூர்தனமான ஒரு பானம், வாயைக்கெடுத்தது. அறைக்குத் திருப்பியதும் ஒரு குளியல். ஒருமணிநேரம் ஓய்வெடுத்துவிட்டு இரவு எட்டு மணிக்கு சாப்பிட இறங்கினோம். மீண்டும் பு·பே உணவு. எல்லாமிருந்தது. இரவில் கடுமையாக உண்பதில்லை என்ற வழக்கப்படி நான் சூப்பும் சாலட்டென்று முடித்துக்கொண்டோம். மறுநாள் காலை ஆறுமணிக்கு புறப்படும் வேண்டுமென்றதால் அரைமணிநேரம் லாபியில் உட்கார்ந்து டாகடர் தம்பதிகளுடன்உரையாடிவிட்டு அறைக்குத் திரும்பினோம். .
(தொடரும்)
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -13
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-2)
- தாகூரின் கீதப் பாமாலை – 14 இளமங்கைக்குப் புரியமா ?
- முள்வெளி அத்தியாயம் -9
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 20)
- திரைப்படம்: ஹாங்காங்கின் இரவுகள்
- சுந்தர் சி யின் “ கலகலப்பு “
- அன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர்
- பொக்கிஷம் – ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, மா. அரங்கநாதன் – ஆவணப்படங்கள்.
- கே.எஸ்.தங்கசாமியின் “ ராட்டினம் “
- யமுனா ராஜேந்திரனுடன் சில மணித்தியாலங்கள்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம்
- எம் சூர்யோதயம்
- வளவ. துரையனின் நேர்காணல்
- நாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் – அத்தியாயம் ஒன்று: தோர்ன்கிளிவ் பார்க்கில்
- உழைப்பால் உயர்ந்த உத்தமி! – சுசேதா கிருபளானி – (1906 – 1974)
- கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மம்தா பானர்ஜியின் நடவடிக்கைகளை கண்டித்து கண்டனக் கருத்தரங்கம்
- பஞ்சதந்திரம் தொடர் 44 – வேதியனும் திருடர்களும்
- மலைப்பேச்சு -செஞ்சி சொல்லும் கதை-26
- என் முகம் தேடி….
- தங்கம் – 7 சீனாவின் மைடாஸ்
- சின்னமகளிடம் கிங் ஃபிஷர் பற்றி ஒரு உரையாடல்
- தருணங்கள்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூறு இரா.முருகன்
- வரலாறும் நமது அடையாளங்களும் – ஜோ டி குருஸ்
- ஃபேஸ்புக் உரையாடல்கள் மற்றும் அவற்றின் மீதான டிப்பணிகள்
- 2025 ஆண்டுக்குள் முரண்கோள் (Asteroid) ஒன்றில் மனிதத் தளவுளவி இறங்கி ஆராய நாசா விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது.
- முகம்மது வரலாற்றில் இருந்தாரா? Did Muhammad Exist? புத்தக விமர்சனம்
- துருக்கி பயணம்-2 அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்