நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி, இவ்வையம் தழைக்குமாம்
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்
மூடக் கட்டுக்கள் யாவும் தகர்ப்பராம்
ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்
அச்சம், நாணம் விடுத்து, நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடன் ஞானச் செருக்குடன் இருக்கும் பெண், ஆண்மக்களும் போற்றிட வாழ்வர் என்பதையும் கூறியுள்ளார்.
பெண் விடுதலை என்ற பேச்சு வந்தாலே அங்கே பாரதியைப் பார்க்கலாம். பட்டங்கள் பெற்றோம், சட்டங்கள் செய்தோம். ஆட்சியிலும் அமர்ந்தோம்.
மதுரையில் பிறந்தாலும் வாழ்ந்தது எட்டயபுரத்தில். பாரதி வீட்டில் சிறிது காலம் இருந்தேன் பாரதியின் தாய்மாமன் சாம்பு மாமா பாரதி பாடல் பாட நான் ஆடுவேன். பாரதி கட்டித் தழுவிய தூணை நானும் பிடித்துக் கொண்டு பாரதி பாடல்களைப் பாடினேன்.அவர் படித்த பள்ளியில் பயின்றேன். நான் படிக்க ஆரம்பிக்கும் பொழுது அங்கே எட்டாவது வகுப்புவரை இருந்தது. ஆனால் நான் படிக்கும் பொழுதே ஒவ்வொரு வகுப்பாகக் கூடி உயர்நிலைப் பள்ளியாயிற்று. அங்குதான் பள்ளிப் படிப்பை முடித்தேன். பாரதியின் ஊரில் பள்ளிப் படிப்பை முடித்த முதல் மாணவி நான். பட்டம் பெற்ற முதல் பெண் நான். அரசுப் பதவியில் உயர்நிலை வரை சென்ற பெண்கள் வரிசையிலும் முதல் பெண் நான். அக்காலத்தில் விமானப் பயணம் அதிசயம். விமானத்தில் பறந்த முதல் பெண் நான். உலகில் பல நாடுகள் சுற்றியவள் என்ற வரிசையிலும் முதல் பெண் நான். இத்தனை பெருமைக்கும் உரியவர் பாரதி. பிஞ்சுப் பருவத்திலே எனக்குள் குடிபுகுந்தவர் பாரதி. ஆசிரியர் வடிவில் வந்தார். நண்பர் வடிவிலும் வந்தார். எனக்குக் கிடைத்த பெருமைகளைப் பாரதிக்கு சமர்ப்பிக்கின்றேன். என் சிறுமைகளுக்கு நான் காரணம். நானும் ஓர் சாதாரண மனுஷி.
இப்பொழுது எனக்கு வயது 78. கைகள் முறிந்து மூட்டு எலும்புகள் தேய்ந்து நடையும் தள்ளாடி விட்டது. மரணத்தின் வாடையை உணர்கின்றேன். வலிகள் மறக்க இந்த நினைவலைகள் உதவுகின்றன. வேறு எந்த ஆசைகளூம் என்னிடம் இல்லை. என்னை வழிநடத்தும் இறைவனுக்கும் நன்றி.
நாட்டு சுதந்திரம் பற்றி எண்ணும் பொழுதே பெண் விடுதலை பற்றியும் எண்ணிப் பலர் போராட்டத்தைத் தொடங்கி விட்டனர். அன்று முதல் முயற்சி செய்தும் பெண்கள் நிலை உயர்ந்து விட்டதா? சில பிரிவுகளில் முன்னேற ஆரம்பித்திருக்கின்றோம்.
பள்ளித் தேர்வின் மதிப்பெண் வரும் பொழுது கூட மாணவிகள் அதிகமாக மதிப்பெண் பெறுகின்றார்கள் என்ற நிலை மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. நாட்டை ஆள்வதுவரை பல நிலைகளில் பெண் அமர்ந்து தன் ஆற்றலைக் காண்பித்து வருகின்றாள். ஆனாலும் எங்கும் எதிலும் அவள் போராடிக் கொண்டே செல்ல வேண்டி யிருக்கின்றது. இரவு நேரப் பணிகளுக்குப் போக 75 சதவிகிதப் பெண்கள் தயங்குகின்றார்கள். சில ஆண்களுக்குள் இருக்கும் அரக்க குணத்தில் சிறுமிகளைக் கூடச் சிதைத்து அழிப்பது தொடர்கதையாக இருக்கின்றது.
என் பணிக்களம் சாதாரணமானதல்ல. சமுதாயத்தில் பல வகையிலும் பாதிக்கப் பட்டு நலிவடைந்தவர்களின் உலகம்.
சென்னையில் குடிசைப் பகுதிக்குச் சென்றிருந்த பொழுது நான் கண்ட ஒரு காட்சியைக் கூற வேண்டும். வீடு திறந்திருந்தது. குழந்தை தூளீயில் தூங்கிக் கொண்டிருந்தது. பெரியவர்கள் யாரும் வீட்டில் இல்லை. பக்கத்து குடிசையிலிருந்து ஒரு அம்மாள் வந்தார்கள். அவர்களிடம் பேசினேன்
குழந்தை தனியாக இருக்கே, அதன் அம்மா எங்கே
வீட்டு வேலை செய்யப் போயிருக்கா திரும்பிவர சாயங்காலம் ஆகும்
குழந்தை முழித்து அழாதா? யார் பார்த்துக் கொள்வார்கள் ?
கிடைத்த பதில் என்னை நடுங்க வைத்தது
அது எழுந்திருக்காதும்மா. போகும் பொழுதே கொஞ்சம் சாராயம் கொடுத்துட்டுத்தான் போவா. அவ வர வரைக்கும் தூங்கும்
பாழும் உலகமே, தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அம்மா தன் குழந்தைக்கு சாராயம் கொடுத்து தூங்க வைப்பதைப் பாருங்கள். அவள் கணவன் ஓர் குடிகாரன். குடிமயக்கத்திலே பொண்டாட்டியும் வேணும். அடி உதையுடன் கலவி. அதற்கு அவளுக்கு இரண்டு குழந்தைகள். ஒன்று பள்ளிக்கூடம் போய்விட்டது. இன்னொன்று தூளியில் தூங்குகின்றது. இந்த வேலையால்தான் சாப்பாடு. குடிகாரப் புருஷனுக்கும் சேர்த்துத்தான். எந்த வீட்டிலும் கைக்குழந்தையுடன் வீட்டு வேலைக்குச் செல்ல முடியாது. இது கதையல்ல நிஜம்
எத்தனை பேர்களூக்கு நம்மைச் சுற்றி நடக்கும் அவலங்கள் தெரியும் ? போகும் பாதையில் தடுக்கி விழும் அளவில் ஓர் கல் கண்டாலும் அதனை எடுத்து ஒதுக்குப் புறமாகப் போடுவதைவிட அதனைத் தாண்டிப் போகின்றோம். நம் குடும்பத்தில் கூட பல விஷயங்களில் அக்கறை காட்டுவது குறைந்து வருகின்றது. குடிகாரப் புருஷன் தொல்லை தாங்காமல் கன்னியாகுமரியிலும் காஞ்சியிலும் கணவன் மேல் கல்லைப் போட்டுக் கொன்ற செய்திகள் பத்திரிகைகளினல் வந்தன. பெண்ணும் தவறு செய்வதில் துணை போக ஆரம்பித்தால் சேர்ந்து வாழ்வதைவிட ஒருவரை ஒருவர் தாக்கி அழித்துக் மொண்டு காட்டு வாழ்க்கையைவிட மோசமான நிலைக்குப் போய்விடுவோம்..
எதற்கும் அரசாங்கத்தைக் குறை சொல்வோம். மனிதன் தன் பொறுப்பையும் உணர வேண்டும்.
சமுதாய அக்கறையின்றி பொறுப்பற்று, வெட்டிப் பேச்சிலும் போதை வாழ்க்கையிலும் கழிக்கின்றவர்களைத் திருத்த வேண்டும். திருந்த வேண்டும். இது நாம் வாழும் சமுதாயம். எனவே சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கும் கடமைகள் உண்டு. மாதச் சம்பளம் வாங்கிய சாதாரண வேலைக்காரிதான் நான். என் கூட்டத்திலும் தங்கள் பணிகளை எல்லோரும் சீராகச் செய்கின்றார்கள் என்று கூறமாட்டேன். நம்மில் கடமையை உணர்ந்தவர்கள் சிலர். ஆம் எல்லாத்தரப்பிலும் கூறுகின்றேன். மூளைச் சலவை செய்யப்பட்டு கடமையை மறந்தது மட்டுமல்ல, சமூகச் சீரழிவிற்குத் துணை போகின்றவர்கள் அதிகம். கவிஞர்கள் பாட்டுக்கள் எழுதலாம். அறிஞர்கள் பேசலாம்., நிறைய எழுதலாம். ஆனால் களத்தில் இறங்கும் பொழுது சாட்டையடி போன்று சாடல்களின் மத்தியில் பணியாற்றுவது மிகமிகக் க்டினம்.
1958 ல் நான் எழுதிய ஓர் கதையில் செத்துப் போன பாரதியை வரவழைத்து இப்பொழுது இருக்கும் பெண்ணுலகம் காட்டுவேன். அவர் முகம் மலரவில்லை. சோர்ந்து போய் திரும்பிவிடுவார். நம் தந்தை பெரியார் அவர்களையும் அப்படி கூட்டிவந்து காட்ட வேண்டும். அவர் உணர்வுகளை எழுத வேண்டும் என்று ஆசை. ஆனால் அந்தப் பெரியவருக்குக் கற்பனையில் கூட வேதனையைக் கொடுக்க விரும்ப வில்லை. பொதுவாகப் பேசியது போதும். இப்பொழுது அய்யா அவர்களின் சில கருத்துக்கள், பாரதியின் சில சிந்தனைகள், நம் சமுதாயத்தில் நடக்கும் சில சம்பவங்கள் பார்க்கலாம்
கணவன் ஒருத்தியை வைத்துக் கொண்டால் மனைவி மூன்று பேரை வைத்துக் கொள்ளட்டும் அப்பொழுதுதான் ஆண்களுக்குப் புத்திவரும் என்று கோபத்துடன் தன் ஆத்திரத்தை வெளியிட்டவர் அய்யா அவர்கள்
நான் நேரிடையாக அறிந்த சம்பவம் ஒன்று கூற நினைக்கின்றேன்
அவர் ஒரு பெரிய அதிகாரி. அவர் குடும்பத்தில் கணவனும் மனைவியும் இணக்கத்துடன் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுடன் நெருக்கமான நட்பு இல்லாவிட்டாலும் அவர்கள் வீட்டிற்குச் சில முறை போய் வந்ததுண்டு அவர்களுக்குக் குழந்தைகள் கிடையாது. இனிய தாம்பத்திய சங்கீதத்தில் ஓர் அபஸ்வரம் தட்ட ஆரம்[பித்தது. அந்தப் பெண்மணி ஓர் பணக்கார வீட்டு வாலிபனுடன் பழக ஆரம்பித்தார்கள். அந்தப் பெண்ணைவிட வயதில் மிகவும் சிறியவன். அவனுடைய குடும்பம் ஓர் பிரபலமான குடும்பம். கொஞ்சம் கொஞ்சமாக உண்மை கசிய ஆரம்பித்தது. மனைவிக்கு புத்திமதி கூறினார் கணவர்.. அன்புடன் பேசினார். அதட்டிப் பேசினார். பயன் அளிக்கவில்லை. பையன் வீட்டிலும் கண்டித்தார்கள். அவனோ அந்தப் பெண்ணை விட்டுப் பிரிய முடியாது என்று கூறி விட்டான். அவனை வீட்டைவிட்டுப் போகச் சொல்லிவிட்டார்கள். அவனோ ஆடம்பர வாழ்க்கையில் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. வேலை கிடையாது. எங்கு போவான்? அந்தப் பெண்ணிடமே போனான். அவளோ தயங்காமல் புருஷனிடம் பேசினாள். அவளால் அவனைக் கைவிட முடியாதாம். அவனைவிட்டு இருப்பதும் கஷ்டமாம். அவர்கள் சேர்ந்து வாழ்வதற்குக் கணவனே உதவ வேண்டுமாம்
என்ன இந்த செய்தியை நம்ப முடியவில்லையா? இன்னும் நடந்ததைக் கேளுங்கள். அவள் கணவர் மிக மிக உயர்ந்த பதவியில் இருப்பவர். குடும்ப கவுரவம் வேறு. தன் வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டார். வீட்டுக்குள் அவர் ஒரு துறவி .ஒரே ஒரு நாள் மனம்விட்டுப் பேசினார். கர்மவினை என்று கூறி சமாதானபடுத்திக் கொண்டுவிட்டார்
படித்த பெண்கள், பட்டணத்துப் பெண்கள் இது போன்ற தவறுகள் செய்வார்கள் என்று பேசுவோம். நான் அந்தக் காலத்து மனுஷி. கிராமங்களிலும் கணவன் இருக்கையில் தவறு செய்யும் பெண்களைப் பார்த்திருகின்றேன். ஆனால் அங்கே இதனை வழக்கமாக வைத்துக் கொள்வதில்லை. கழிவறைகள் இல்லாத இடங்களில் தோப்பிற்கும் வாய்க்கால்கரைக்கும் பெண்களும் போவதுண்டு. யதார்த்தமாக நடக்கும் வழுக்கல்கள் இவை. புருஷனுக்குத் தெரிந்தால் கொலையும் நடக்கலாம். இத்தகைய தவறுகள் செய்யும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
ஒரு பெண்ணிற்கு இரட்டை வாழ்க்கை என்பது விஷச் செடிக்கு ஒப்பானது. குடும்பம் என்ற அமைப்பில் ஆணும் பெண்ணுடன் முடிவதல்ல. புது உயிர்கள் தோன்றும் நந்தவனம். மனிதன் கடவுளைப் படைத்தானா அல்லது கடவுள் அவனை வைத்து தன்னை அடையாளம் காட்டிக் கொண்டாரா என்ற அலசலுக்குள் நான் நுழைய விரும்ப வில்லை. ஆனால் மனிதன் தன்னைப் பெற்றவளை மிக மிக உயர்வாக மதிக்கின்றான். குடும்பம் என்ற அமைப்பையே நாசப் படுத்தும் இத்தகைய செயலை தொடக்கத்திலேயே அழித்துவிட வேண்டும்
அய்யா அவர்கள் பேசியது பெண்களுக்குப் பரிதாபப்பட்டு என்று இருந்தாலும் பெரியவர்கள் எக்கருத்தையும் சொல்லும் பொழுது கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். . எந்த சூழலில், எந்தக் காலத்தில் எந்த கருத்தில் சொல்லப் பட்டது என்ற விளக்கமும் நாம் பதிவது நல்லது என்பதற்காகவே இதனைக் குறிப்பிடுகின்றேன். மாறிக் கொண்டிருக்கும் காலம் வியப்பை மட்டுமல்ல பயத்தையும் கொடுக்கின்றது. பேச்சு, செயல் இவைகளின் நல்லதை விட்டுவிட்டு அவலத்தை தங்கள் ருசிக்கேற்ப வளைத்துப் பேசும் காலம் இது. எதிர்காலத்தில் இதனைத் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டுவிடக் கூடாது, குழப்பிவிடக் கூடாது என்பதற்கு இதனை விளக்குகின்றேன்.
. நம் வள்ளுவர் வாழ்வியலை எழுதும் பொழுது அறத்துப்பால், பொருட்பால் காமத்துப்பால் என்று மூன்றுவகையாகக் காட்டியுள்ளார். காதல்பால், இல்லறப்பால் என்று வைக்கவில்லை. தாம்பத்தியத்தில் காமம் இன்றியமையாதது. எப்படி அமைய வேண்டும் என்பதைச் சுவையுடன் கூறுகின்றார். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம். எனவே அந்த அளவுகோலுடன் எழுதியிருக்கின்றார். கொக்கோகம் போன்று கலவையின் முறைகளை அடுக்கடுக்காகக் காட்ட வில்லை..எழுதும் பொழுதும், பேசும் பொழுதும் மனிதன் எந்த அளவு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதற்கு வள்ளுவரின் வாழ்வியல் பாக்கள் வழிகாட்டியாக இருக்கின்றன.
இத்தனை விளக்கங்கள் கொடுப்பதால் அய்யாவின் கருத்தை நான் விமர்சிப்பதாக நினைக்க வேண்டாம். எங்களூக்காகக் குரல் கொடுத்தவர்.. எதிர்காலத்தில் இக்கருத்து எதிர்மறை விளைவுகளை உண்டாக்கிவிடக் கூடாது. ஏற்கனவே நமக்குத் தெரியாமல் வளர்ந்து வரும் விஷச் செடிபற்றி அதனால்தான் கூறினேன்.
அய்யா சொன்ன இன்னொரு கருத்தையும் சொல்ல வேண்டும். பெண்களைத் தன் கருவறையை அறுத்து எறியச் சொன்னார். ஒருகாலத்தில் தவறு செய்தால் கர்ப்பமாகி விடும் என்ற பயமாவது இருந்தது. இப்பொழுது கர்ப்பத்தைத் தடுக்கப் பல வழிகள் வந்துவிட்டன. குழந்தை சுமப்பதும் பெறுவதும் பெண்ணை அடிமைப்படுத்தப் பயன் படுகின்றது என்ற கருத்தில் அய்யா கூறியிருக்கலாம். பிள்ளைக்காகத் தானே பெண்ணை வீட்டில் சிறைவைத்தான் ஆண்.
பெண்ணின் உணர்வு என்ன? நான் ஒரு தாய். தாம்பத்தியத்தில் குழந்தை உண்டாகியிருக்கின்றோம் என்று அறியவும் ஏற்படும் மகிழ்ச்சி அபூர்வமானது. அச்செய்தியைக் கணவனிடம் கூறும்பொழுதே வெட்கம் வரும். கணவன் மனைவி உறவைப் பறை சாற்றும் சாட்சி குழந்தை. மசக்கை கஷ்டப்படுத்தினாலும் பின்னால் வயிற்றில் குழந்தை அசைய ஆரம்பிக்கவும் தாயின் மனமும் துள்ளூம். (அளவுடன் குழந்தைகளைப் பெறும் பொழுதுமட்டும் மகிழ்ச்சி.) கரு உருவாவதிலிருந்தே அதன் வளர்ச்சியில் தாய் அக்கறை எடுத்துக் கொள்கின்றாள். எடுத்துக் கொள்ள வேண்டும். நல்லதை நினைக்க வேண்டும். மனத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அபிமன்யு கதை பலரும் அறிந்ததே. அவன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது கேட்ட யுத்த வியூகத்தை பாரதப் போரில் கையாண்டான். அம்மா தூங்கிவிட, ஹூம் கொட்டியதால் கதை சொன்னவர் பாதியில் நிறுத்திவிட்டார். உள்ளே நுழையச் சென்றவன் வெளிவர முடியாமல் மாண்டது வேதனைச் செய்தி..
. பெண்ணின் சிறப்பு தாய்மை. .உலகில் எப்பகுதியிலும் கர்ப்ப காலம் ஒன்றுதான். எத்தனை ஆண்டுகளானால் என்ன? எங்கோ மகன் விழுந்து அடிபட்டாலும் பிள்ளையைச் சுமந்த வயிற்றில் ஓர் அதிர்வு, தோன்றும். இது மாறக்கூடிய உறவல்ல. இதுதான் தொப்புள்கொடி உறவு.. போதையில் தன்னை மறப்பது போல் பிற இன்பங்களில் மூழ்கி விடுபவர்களால் இதனை உணார முடியாது.. ஓர் பெண்ணிற்குத் தாய்மை அன்புச் சங்கிலியாகலாம் ஆனால் அடிமைச் சங்கிலியாகி விடக் கூடாது
பாரதியைப் பார்க்கலாம். அவர் பாடியவை நிறைய. குறிப்பாக ஆணும் பெண்ணும் சமநிகர் என்பதை அடிக்கடி வலியுறுத்துகின்றார். அவர் பாடிய காலக் கட்டம் அத்தகைய சூழலில் இருந்தது. நான் வீட்டை விட்டு வெளிவந்து பள்ளிக்குப் போவதற்குள் வசைமாரியில் என்னைக் குளிப்பாட்டி யிருக்கின்றார்கள். காலங்களின் மாற்றத்தில் இப்பொழுது பாரதியின் கூற்றைத் தங்களுக்குச் சாதகமாகக் கூறிக்கொண்டு மாறிவரும் பெண் சமுதாயத்தின் அடுத்த பக்கத்தையும் தொட்டுக் காண்பிக்க வேண்டும். தவறினால் நான் ஓர் சமூகநலத் தொண்டர் என்று கூறுதல் சரியாகாது. நம் தவறுகளையும் நாம் உணர வேண்டும். குறைகாணின் சீர்திருத்த வேண்டும். கசப்பான செய்தியாயினும் சொல்ல வேண்டியதைச் சொல்லியாக வேண்டும். நான் ஒரு அம்மா. என் பெண்ணைப் பற்றிய அக்கறை எனக்குண்டு என்பதைப் பெண்ணுலகம் மறக்க வேண்டாம். என் குழந்தைக்கு நோய்வரின் அதனைப் பாதுகாக்க வேண்டியதும் என் கடமை.
ஈஸ்வரி எனக்குத் தெரிந்த பெண். அவளுடைய ஒன்றுவிட்ட சகோதரி எனக்குத் தோழி. ஈஸ்வரி எனக்கு அறிமுகம் ஆகும் பொழுது மத்திய அரசில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வந்தாள். கெட்டிக்காரப் பெண். சிந்தனையாளர். எங்கள் சந்திப்பின் பொழுதெல்லாம் பொது விஷயங்கள் நிறைய பேசுவோம். அவள் கலப்புத் திருமணம் செய்து கொண்டவள். அவள் கணவர் தோற்றத்தில் அழகானவர். இவள் மிகவும் சாதாரணமாக இருப்பாள். காதலிக்கும் பொழுது இருவரும் சாதாரண பட்டதாரிகள். அவர் சென்னையில் ஒர் ஹோட்டலில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார். இவள் அஞ்சல் கல்வி மூலம், படித்து படிப்பிலே தன்னை உயர்த்திக் கொண்டு அதற்கேற்ப மத்திய அரசில் ஓர் உயர்பதவியும் பெற்றாள். இவர்களுக்கு ஓர் ஆண்மகன் உண்டு. அவள் கணவர் அமைதியானவர்.
தாம்பத்தியம் ஓர் விசித்திரமான கூட்டணி. பெற்றோர் ஜாதகத்தில் பொருத்தம் பார்த்து மணம் முடிப்பர். திருமணமாக விட்டு தமபதிகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக இடையில் இருக்கும் வித்தியாசங்கள் புரிய ஆரம்பிக்கும் முன்பெல்லாம் பெரியவர்களை மதித்த காலம் ஊடகத்தாக்கங்களும் இப்பொழுது இருக்கின்றார்போல் கிடையாது. எனவே வித்தியாசங்கள் உணர்ந்தாலும் அக்காலத்தில் சமரசம் செய்து கொண்டு குடும்பத்தை நடத்துவார்கள். பெரிதாகப் பிரச்சனைகள் தலைகாட்டாது. ஆனால் இப்பொழுது நிலைமை மாற ஆரம்பித்து விட்டது. தங்களுக்குள் சமரசம் செய்து கொள்ள கஷ்டப்படுகின்றனர். எனவே பிணக்குகளும் மோதல்களும் அமைதியின்மையும் நாளுக்கு நாள் வளர ஆரம்பித்திருக்கின்றது. புதிதாகச் சேர்ந்து கொண்ட பிரச்சனை கணவனைவிட மனைவி அதிகச் சம்பளம் வாங்கும் பணியில் இருந்துவிட்டால் தாம்பத்தியத்தில் விரிசல் தோன்றி விடுகின்றது. சமீபத்தில் நடந்த ஆய்வின்படி இந்தியாவில் தமிழ் நாட்டில்தான் விவாகரத்து செய்துகொள்பவர்கள், பிரிந்து வாழ்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆம், நாம் வரிசையில் முதலில் நிற்கின்றோம். இது முன்னேற்றமா? பண்பாடு என்பது வெறும் ஏட்டில் மட்டும் தானா என்று மனம் திகைக்கின்றது.
காதலித்து மணமுடித்த ஈஸ்வரிக்கும் அகந்தை எட்டிப் பார்க்கத் தொடங்கியது. என்னிடம் ஏதாவது குறை சொன்னால் வாழ்வியலின் அர்த்தம் கூறி கண்டிப்பேன்
ஒரு பெண் சபலத்திற்கு அடிமையாகக் கூடாது என்று கூறுவாள் ஈஸ்வரி. தாம்பத்தியத்தின் முக்கியத்துவத்தைப்பற்றி எத்தனை நாட்கள் என்னுடன் பேசியிருக்கின்றாள். ஆனால் பதவியும் பணமும், அவனைவிட அவளுக்கிருந்த அறிவும் அவர்கள் தாம்பத்தியத்தைக் கலைத்துவிட்டது. நான் இருக்கும் பொழுது இந்த பிரிவு நடக்கவில்லை. அப்பொழுது அமெரிக்காவில் இருந்தேன். சென்னைக்குச் சென்ற பொழுது அவள் கணவர் வேலை பார்க்கும் ஹோட்டலுக்குச் சென்றேன். அவர்தான் மனச் சோர்வுடன் தாங்கள் பிரிந்து விட்டதாகச் சொன்னார். அவர்கள் பிரிவிற்கு இன்னொரு ஆடவன் காரணமல்ல. பதவியும் பணமும் ஏற்படுத்திய ஆணவமும் காரணிகள். இருவர் திறமைகளும் ரசனைகளும் வேறுபடின் மேலும் ஆணைவிட பெண் உயர்பதவியில் இருந்துவிட்டால் ஏற்படும் இடைவெளி பெரிதாகிவிடுகின்றது.
சில சீர்திருத்த எண்ணங்கள் இல்லறம் நல்லறமாக நடக்க வந்தவை. ஆனால் திசை மாறிப் போகும் வாழ்வியலைக் காணும் பொழுது இதன் இலக்கணமே புதிராக இருக்கின்றது.
இன்னொரு குடும்பத்திலும் குழப்பம். கணினி உலகில் மிகப் பெரிய பதவிக்குப் போய்விட்டாள் கணவனுடன் சரியாகப் பேச மாட்டாள். கணவன் தொடக் கூடாது. வீட்டில் இருக்கமட்டும், அனுமதி . இரட்டைக் குழந்தைகள். அவனும் அந்த வாழ்க்கையில் குழந்தைகளையாவது பார்க்க முடிகின்றதே என்று சமாளித்து வாழ்ந்து வருகின்றான் இப்பொழுது சமரசம் போகும் லட்சணத்தைப் பாருங்கள்.!
பேசத் தெரிந்த பாரதி அருகில் இருந்தால் இக்காட்சிகளைக் கண்டிருந்தால் பேசாமல், பேச முடியாமல் விண்ணுலகம் பறந்திருப்பார்.
அய்யாவின் இன்னொரு கருத்தைச் சொல்லாமல் இருக்கக்கூடாது. ஒவ்வொரு பெண்ணும் கருத்தில் கொள்ள வேண்டிய அர்த்தமுள்ள வரிகள். .
பெண்கள் மதிப்பற்று போவதற்கும், அவர்கள் வெறும் போகப் பொருள்தான் என்று ஆண்கள் கருதி நடப்பதற்கும் முக்கிய காரணமே பெண்கள் தங்களை ஆபாசமாகச் சிங்காரித்துக் கொள்வதே ஆகும். குடியரசு இதழ் -15 -6 – 1943
இதுபற்றி அடுத்துப் பேசுவோம்.
உறுதிமிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை. அதுபோல் அறிவாளிகள் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை. நல்லதையே எண்ண வேண்டும். தீமையை நன்மையால் வெல்லுங்கள். பொய்யினை உண்மையால் வெல்லுங்கள். நல்ல மனமே சிறந்த வழிகாட்டி.
புத்தர்
தொடரும்
படத்திற்கு நன்றி
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -13
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-2)
- தாகூரின் கீதப் பாமாலை – 14 இளமங்கைக்குப் புரியமா ?
- முள்வெளி அத்தியாயம் -9
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 20)
- திரைப்படம்: ஹாங்காங்கின் இரவுகள்
- சுந்தர் சி யின் “ கலகலப்பு “
- அன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர்
- பொக்கிஷம் – ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, மா. அரங்கநாதன் – ஆவணப்படங்கள்.
- கே.எஸ்.தங்கசாமியின் “ ராட்டினம் “
- யமுனா ராஜேந்திரனுடன் சில மணித்தியாலங்கள்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம்
- எம் சூர்யோதயம்
- வளவ. துரையனின் நேர்காணல்
- நாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் – அத்தியாயம் ஒன்று: தோர்ன்கிளிவ் பார்க்கில்
- உழைப்பால் உயர்ந்த உத்தமி! – சுசேதா கிருபளானி – (1906 – 1974)
- கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மம்தா பானர்ஜியின் நடவடிக்கைகளை கண்டித்து கண்டனக் கருத்தரங்கம்
- பஞ்சதந்திரம் தொடர் 44 – வேதியனும் திருடர்களும்
- மலைப்பேச்சு -செஞ்சி சொல்லும் கதை-26
- என் முகம் தேடி….
- தங்கம் – 7 சீனாவின் மைடாஸ்
- சின்னமகளிடம் கிங் ஃபிஷர் பற்றி ஒரு உரையாடல்
- தருணங்கள்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூறு இரா.முருகன்
- வரலாறும் நமது அடையாளங்களும் – ஜோ டி குருஸ்
- ஃபேஸ்புக் உரையாடல்கள் மற்றும் அவற்றின் மீதான டிப்பணிகள்
- 2025 ஆண்டுக்குள் முரண்கோள் (Asteroid) ஒன்றில் மனிதத் தளவுளவி இறங்கி ஆராய நாசா விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது.
- முகம்மது வரலாற்றில் இருந்தாரா? Did Muhammad Exist? புத்தக விமர்சனம்
- துருக்கி பயணம்-2 அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்