துருக்கி பயணம்-3

This entry is part 31 of 33 in the series 27 மே 2012

 

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்

– நாகரத்தினம் கிருஷ்ணா

மார்ச்-28

காலை 7.30க்கு பேருந்தில் இருக்கவேண்டுமென சொல்லப்பட்டிருந்தது. எங்கே உறங்கினாலும் இரவு எத்தனை மணிக்கு உறங்கப்போனாலும் அதிகாலை நான்கு மணிக்கு முன்பாக விழித்துக்கொள்வதென்பது பள்ளிவயதிலிருந்தே பழகிப்போனது. விழித்துக்கொண்டபோதும் அறையில் இணையத் தொடர்பு ஒழுங்காக கிடைக்காதென்பதை மூளை தெரிவித்தால் சோர்வுடன் படுத்திருந்தேன். ஐந்து மணிக்கு குளித்து முடித்ததும், லி·ப்ட் பிடித்து கீழே இறங்கினேன் லாபியில் ஒருவருமில்லை. வரவேற்பு முகப்பு அரை உறக்கத்தில் கிடந்தது. தனியே லாபியில் உட்கார்ந்திருக்க தயக்கமாக இருந்தது. எனது தயக்கத்தை டெலிபதியில் அறிந்தவர்போல குழுவின்

 

வழிகாட்டி உள்ளேவந்தார். அவர் நாற்பது வயது இளைஞர். சுறுசுறுப்பான ஆசாமி. வளைகுடா நாடுகளைத் தவிர பிற இஸ்லாமிய நாடுகளில் இந்தியர்களை கூடுதலாக நேசிப்பதை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். ஹெய்டென் என பெயர்கொண்ட அத்துருக்கி வழிகாட்டியும் அப்படி பட்டவராக இருந்தார். பொதுவில் எல்லா வழிகாட்டிகளையும்போலவே தகவல்களை விரல் நுணியில் வைத்திருப்பார். அவருடைய பாலிவுட் பற்றிய கேள்விகளுக்கு எனது அஞ்ஞானம் ஏமாற்றத்தை அளித்திருக்கக்கூடும். இந்தித் திரைப்படங்களில் நான் அரிச்சுவடியைத் தாண்டியவனில்லை. A for Aradhana B for Bobby யென எழுபதுகளில் வந்த படங்களையும் அவற்றின் நாயக நாயகிகளயும் அறிவேனே தவிர மற்றபடி ஞானசூன்யம். தவிர ஹெய்டெனைப் போன்றவர்களுக்கு இந்தியர்களென்றாலே பம்பாயிலிருந்து வந்திறங்கியதாக எண்ணமிருக்கிறது. திலிப் குமார், மீனாகுமாரியில் ஆரம்பித்து அமீர்கான் ஷாருக்கான் வகையறாக்களைத் தொட்டுக்கொண்டு எழுபதுக்குள் நுழைந்தார். ஒருவரையும் விடவில்லை: ராஜேஷ் கன்னா, அமிதாப், தர்மேந்திரா, தேவ் ஆனந்த், கபூர் குடும்பம், ஹேமாமாலினி, ஜீனத்.. பாலிவுட்டின் அம்பாசடராக பணிய புரியலாமென்ற எனது யோசனையைக் காதில்வாங்கினதாக தெரியவில்லை. ‘மேரே சப்னொ கீ ராணி’யை மெல்லிய குரலில் பாடிக்காட்டினார். அசப்பில் கிஷோர் குரல். அவருக்கு நேரத்தை நினைவூட்டினேன். எழுமணிக்கு அறையப்பூட்டிக்கொண்டு இறங்கிவந்த மனைவியுடனும் டாக்டர் தம்பதியுடனும் டைனிங் ஹாலுக்குள் நுழைந்தோம். காலை உணவை முடித்துக்கொண்டு, பெட்டிகளுடன் ஏழரைமணிக்கு இறங்கிவிட்டோம். அன்றிரவு கப்படோஸில் தங்க இருந்ததால் ஓட்டலை காலிசெய்யவேண்டியிருந்தது.

ஓட்டலிலிருந்து புறப்பட்ட பேருந்து நேற்று பார்த்த மனவ்காட் நதியைத் தொட்டுக்கொண்டே சென்றது. சுமார் ஐம்பது கி.மீட்டர்தூரம் சமவெளி. கொன்யா நகருக்குச் செல்வதற்கு முன்னால் இடையில் குறுக்கிடும் தொரொஸ் மலைத் தொடரைப் பற்றி எழுதாதுபோனால் இன்றைய தினம் நிறைவுறாது. அண்ட்டால்யாவிலிருந்து கப்படோஸ் சுமார் அறுநூறு கி.மீட்டர். சமவெளிகளும் மலைத்தொடர்களும் மிடையில் குறுக்கிட்டன. சமவெளியெனில் கண்ணுக்கெட்டியதூரம்வரை தரிசு நிலங்கள் பயன்பாடற்று இருந்தன. கிராமங்களில் குறைவான எண்ணிக்கையில் வீடுகள். அண்ட்டால்யாவுக்கும் கொன்யாவுக்குமிடையில் நானூறு கி.மீட்டர் இருக்கலாம்.இதில் குறைந்தது மூன்றுமணிநேரமாவது பனிமூடிய தொரொஸ் (Taurus) மலைத்தொடரைக் கடந்து செல்லவேண்டியிருந்தது.

தொரொஸ்: மத்தியதரைகடல் நிலப்பரப்பையும் அனத்தோலியன் பீடபூமியையும் இம்மலைத் தொடர் பிரிக்கிறது. நீள்சதுர கற் படிமங்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கியதுபோன்றிருந்தது இம்மலைகள். தொடக்கத்தில் அந்நியரென்று உணராமல் முகத்தை மறைக்காமலும், பின்னர் சட்டென்று அன்னியர் இருப்பு நினைவுக்கு வந்ததைபோல துருக்கிப்பெண்களில் ஓரிருவர் முகத்தை மறைத்து உரையாடுவதைக்கண்டேன். அவர்களைப்போலவே தொரொஸ் மலைத்தொடரும் ஆரம்பத்தில் முகத்தை மறைக்கமறந்தும் பின்னர் பனிமூடியும் இருந்தது. வெள்ளிச்சங்கிலிபோல தொடரும் மலைககளுக்கிடையே நீலக்கற்களை பதித்ததுபோல ஆங்காங்கே நீர்ப்பரப்பு. கரு நீலநிற ஏரிகளில் சர்க்கரைப்பொடியைத் தூவியதுபோல பனித்துகள்கள் மிதப்பதை நின்று நிதானமாக ரசிக்க ஆயிரம் ஆண்டுகளாவது குறைந்த பட்சம் வேண்டும். சாலை பல இடங்களில் 1500 மீட்டர் உயரத்திற்கு குறையாமலிருந்ததை அறிவிப்புப் பலகைகள் தெரிவித்தன. உலகெங்குமுள்ள நவீனசாலைகளை ஒத்திருந்தன. எனினும் ஐரோப்பிய நகரங்களில் இருக்கிற பராமரிப்பு இல்லை. ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகள் நிறைய. நாங்கள் சென்ற பேருந்துவில் அமர்ந்திருந்த பகுதிக்குக் கீழே ஏதோ விடுப்பட்டதுபோல சப்தம் வந்தது. அதை வழிகாட்டியிடம் தெரிவிக்கவும் செய்தோம். அவர் ஓட்டுனரிடம் தகவலைச்சேர்த்தார். முதல் அரைமணிநேரம் ஓட்டுனரிடம் எதிர்வினையேதுமில்லை என்பதால் நிம்மதியாகவே பேசிக்கொண்டு வந்தோம். மலைத்தொடருக்கிடையே ஒரு பள்ளத்தாக்கில் சாலையோரமாக வண்டியை நிறுத்த, நேர்ந்துள்ள சிக்கல் அலட்சியப்படுத்தக்கூடியதல்ல என்பது விளங்கிற்று. இறங்கினோம். ஒரு சிறிய கிராமம். பள்ளிவாசல் அருகில் தேனீர்கடை, மளிகைக் கடையொன்று, கிராம நிர்வாக அலுவலகம், கழிவறை- அவசர தேவைக்கு பிரச்சினைகளில்லை. வழிகாட்டியும் ஓட்டுனரும் பேருந்துக்கேற்பட்ட இடற்பாட்டை கைத்தொலைபேசியில் நிர்வாகத்திற்கு தெரிவித்தார்கள். அவ்வழியாகச்சென்ற எங்கள் சுற்றுலா நிறுவனத்தின் மற்ற பேருந்துகள் நின்றன. அனுதாபங்கள், நலன் விசாரிப்புகள். ஒரு சிலமுகங்களில், நமக்கு பிரச்சினையில்லை என்பதுபோன்ற நிம்மதி. விடைபெற்றுகொண்டார்கள். எங்களுக்கு அன்றையபொழுது அங்கேயே தங்க நேருமோ என்ற அச்சமிருந்தது. . ஒரு முறை இந்தியாவில் அப்படியொரு அனுபவம் ஏற்பட்டது. வழிகாட்டியின் தகவல் சமாதானம் செய்தது. ‘பெரிய பிரச்சினையென்றில்லை, அடுத்து இருபது கி.மீட்டர் தூரத்தில் பேருந்து பழுது சரிபார்க்கப்படுமென்றார். ஓட்டுனரின் மௌனம் அதை அங்கீகரிக்க பேருந்துக்குள் ஏறி அமர்ந்தோம். வழிகாட்டியின் கூற்றுக்கேற்ப பேருந்து அடுத்த பள்ளத்தாக்கில் நின்றது. கூடுதலாக இரண்டுமணிநேரம் செலவிடலாமென்பதுபோல அங்கே இயற்கை அழகு, ஆனால் அரைமணிநேரத்தில் பேருந்து சரி செய்யப்பட, பயனத்தைத் தொடர்ந்தோம்.

கொன்யா: மத்திய துருக்கியின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்று. இரண்டு மில்லியன் மக்கள் வசிப்பதாகச்சொல்லப்படுகிறது. சரித்திர புகழ்வாய்ந்த நகரம். இரண்டு இடங்களை அங்கே பார்த்தோம்.

அ. மெவ்லானா நினைவிடம்:

கொன்யா சூ·பிஸப் பிரிவினரின் முக்கிய புனிதத்தலமாக கருதப்படுகிறது. செலாலெதின் ரூமி அல்லது மெவ்லானா (Celaludin Rumi Mevlana) துருக்கிய சூபிஸ மெய்யியல்வாதி. அரபுமக்களால் ரொமானியர் பிரதேசமென நம்பப்பட்ட துருக்கியின் அனாத்தொலி பிரதேசத்தில் வாழ்ந்ததால், இவரை ரூமி எனவும் அழைத்தார்கள். ஆப்கானிஸ்தானத்திற்கும் ஈரானுக்குமிடையிலிருந்த பிரதேசமொன்றில் 1207ல் பிறந்த செலாலெதின், மங்கோலியரின் படையெடுப்பு காரணமாக குடும்பத்துடன் துருக்கிக்கு வருகிறார். தந்தையின் இறப்புக்குப் பிறகு மெவ்லானா சிரியா, டமாஸ்கஸ் போன்ற நகரங்களில் இறையியல் கற்கிறார். 1244ம் ஆண்டு அவர் நாடோடியாக சுற்றித் திரிந்த செமா என்கிற தெர்விஷ் துறவியை சந்திக்கிறார். அப்பெரியாரை ஆன்மீக குருவாக ஏற்கவும் செய்கிறார். தெர்விஷ் எதிர்பாராதவிதமாக கொல்லப்பட அவருடைய நெறிமுறைகள் ரூமியைப் பெரிதும் ஈர்க்கின்றன. செமா (Sema) என்கிற சூபிநடனமும் சூபிஸமும் உருவாகிறது. சூபிஸ நடனம் – (Dervish)ஓர் ஆன்மீகப்பயணம். அன்பினூடாக, தன்முனைப்பை தொலைத்து உண்மையைத் தேடும் பயணம் என்கிறார்கள். அப்படியொரு நடனத்தை காணும் வாய்ப்பு பேறு கப்படோஸில் தங்கியிருந்த முதல் நாள் வாய்த்தது. அதை அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன்.

மெவ்லானாவின் சமாதியும், அவரும் அவர் சீடர்களும் தங்கிய மடமும் இங்கு உள்ளன. மடம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. அவரது ஆடை, அவர் வாசித்த திருமறை, அவர் அணிந்த தலைப்பாகை, அவர் உடலோடு ஒட்டிய பொருட்கள் என பலவும் காட்சிக்கு உள்ளன. ஆக்ரா தாஜ்மகாலில் வழங்கப்படுவதுபோல காலணிகளைத் தவிர்க்க பிளாஸ்டிக் உரைகளை கால்களுக்குக் கொடுக்கிறார்கள். வெகுதூரத்தில் வருகிறபோதே தாஜ்மகால் கலசம்போன்ற நீலமும் பச்சையும் கலந்த பளிங்குக்கல் முகட்டைக் காண்கிறோம். முற்றமும்வாசலுங்கொண்ட பெரிய தொரு ஜமீன் வீட்டை நினைவுபடுத்துகிறது. நீண்ட நடைபாதையின் இடப்புறம் திரும்பியதும் முகப்பில் அழகான நீரூற்று, கைகால்களை சுத்திசெய்துகொள்ள வலப்புறம் நீண்ட தாழ்வாரத்துடன் கூடிய புறாக்கூண்டுபோல மிகச்சிறிய கொள்ளளவுடன் கூடிய அறைகள் இருக்கிந்றன. அறைகளில் டெர்விஷ் நடனக்கலைஞர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் வெறும் நடனக் கலைஞர்களல்ல, எளிமையான வாழ்க்கையை நெறியாகக்கொண்டவர்கள். பிச்சுகள் வாழ்க்கை. பக்தியின் அடிப்படையில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு வளையவரும் நடனமொன்றை நிகழ்த்தியவர்கள். அடிப்படைகடமையான இவர்களுக்கு தொழுகையுமுண்டு. இடப்புறமுள்ள மண்டபத்தில் நுழைந்ததும் அங்கே மெவ்லானாவின் செனொதாப்கள்(Cenotaph). இருக்கின்றன. செலாலெதினுடையது, அவரது குடும்பத்தைச்சேர்ந்தவர்களுடையது, அவரது சீடர்களுடையது என பலவுமுண்டு. அலங்கரிப்புகள் அவ்வளவும் தங்க முலாம் பூசப்பட்டோ தங்கச் சரிகை வேய்ந்த பட்டுத்துணிகளாகவோ இருக்கின்றன. சுவரெங்கும் பிறவற்றிலும் குர் ஆன் வாசகங்களை மிக அழகாக சித்திர எழுத்துகளில் தீட்டியிருந்தார்கள். இந்த செனொதாப்களின் மீது மெவ்லானாக்களின் பிரத்தியேக தலைப்பாகையுமிருந்தன. அருகிலிருந்த மற்றொரு மண்டபத்திலும் மெவ்லானாவுக்கு வேண்டியவர்களின் செனோதா·ப்களிருந்தன. இவற்றைதவிர மெவ்லானா உபயோகித்த பொருட்களனைத்தும் காட்சிபடுத்தப்பட்டிருந்தன. உலகின் மிகப்பெரிய ஜாடி, உலகத்தின் மிகச்சிறிய குர்ஆன், மெவ்லானா இசைத்த கருவி, கம்பள விரிப்பு, உயர்வகை கற்கள்..இவை தவிர வேறு பொருட்களுக்கும் குறைவில்லை. இங்கே சிறிய பேழையில் வைத்திருந்த அவரது தாடி மயிரையும்குறிப்பிடலாம்.

ஆ. காரவான்செராய் (Caravanserail de Sultanhan) பயன்பாட்டளவில் நம்ம ஊர் சத்திரங்களையும், பாதுகாப்பில் கோட்டைகளையும் நினைவூட்டக்கூடியது. இங்கே இரவு நேரங்களில் பயணிகளும் வியாபாரிகளும் கொள்ளையரியமிருந்து தங்களை காத்துக்கொள்ள தங்குவது வழக்கமாம். இதனுள்ளே குதிரைகளும், ஒட்டகங்களும் நூற்றுக்கணக்கில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. பொழுது சாய்வதற்குள் உள்ளே போய்விடவேண்டும். இல்லையெனில் அதன் மிகப்பெரிய கதவுகள திறக்கப்படமாட்டா. நாங்கள் பார்த்த காரவான் செராய் துருக்கியிலேயே மிகப்பெரியது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் கைக்கோபாத் எனும் சுல்தானால் கட்டப்பட்டது. பெரியகதவுகளைக் கடந்து சென்றால் உள்ளே பயணிகள், வியாபாரிகள் ஆகியோருக்கு தனித்தனி அறைகளும், தொழுகைக்கான மசூதியும், துருக்கி குளியலுக்கான ஹமாமும் விலங்குகளுக்கான கொட்டடிகளும் இருக்கின்றன. இந்நேரத்தில் நான்கைந்து வருடங்களுக்கு முன்பு படித்த ‘Birds Without Wings'(Louis de Berniere என்பவர் எழுதிய) நாவல் நினைவுக்கு வருகிறது. இதில் காரவான்சாராயைப்பற்றிய விவரணை வருகிறது. இந்நாவல் பற்றி திண்ணையில் எழுதிய ஞாபகம். இந்நாவலுக்கு முன்னால், My name is Red ல் ஒன்றுமே இல்லை என்பேன்.

 

மதிய உணவு கொன்யாவிலேயேஒரு ஓட்டலிமென்று ஆயிற்று. துருக்கி ஓட்டல்களில் சைவ உணவுவகைகள் நிறையக் கிடைக்கின்றன. பொதுவாக நட்சத்திர ஓட்டல்களில் துருக்கியில் சிவப்பு ஒயின் கிடைக்கிறது. ஆனால் அன்று நாங்கள் மதிய உணவு சாப்பிட்ட ரெஸ்டாரெண்ட்டில்

தடைசெய்யப்பட்டதென்றார்கள். உணவின் இறுதியில் எடுத்துக்கொள்ளும் டெசெர்ட்களில் ஐஸ்கிரீமை காணமுடிவதில்லை. இந்திய இனிப்புகளோடு நிறைய ஒற்றுமைகள். கொரிக்க நிறைய கிடைக்கிறது விலையும் மலிவு: பாதாம், பிஸ்தா, வால்நட், உலர்ந்த பழவகைகள், உப்பு கடலை. மக்காசோளமென்று பட்டியல் போடலாம்.


கொன்யாவிலிருந்து மீண்டும் இரண்டரமணிநேர பயணம். கப்படோஸ¤க்கு மாலை ஆறுமணிக்கெல்லாம் வந்துவிட்டோம். பேருந்தின்வெளித்தோற்றம் பயமுறுத்தியது. ஆனால் அறைகளும், கவனித்துக்கொண்டவிதத்திலும் எவ்விதகுறைகளுமில்லை. ஒரு நான்கு நட்சத்திர ஓட்டலுக்குரிய அத்தனை சௌகரியங்களுமிருந்தன. துருக்கியர்களின் ஹமாம் சேவை உட்பட.(தொடரும்) 

 

Series Navigation‘கனவு மெய்ப்பட வேண்டும்’ – துபாய் ‘அமீரகத் தமிழ் மன்றத்தின்’ பெண்கள் விழாஅறிவிப்பு: எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *