எஸ்.எழிலின் “ மனங்கொத்திப்பறவை “

This entry is part 17 of 28 in the series 3 ஜூன் 2012

சிறகு இரவிச்சந்திரன்.

சினிமாவுக்கான கோணங்களைக் கொண்டு, ஒரு தொலைக்காட்சித் தொடர் எடுத்தால் எப்படியிருக்கும்? இந்தப்படத்தைப் போல் இருக்கும். அப்படி வரும் எண்ணத்தை மனதை விட்டு பிடுங்கி எறிய முற்பட்டாலும் சிவகார்த்திகேயன் அந்த முயற்சியை முறியடித்து விடுகிறார், க்ளோஸப்பில் முகம் காட்டி, டி டி எஸ்ஸில் குரல் காட்டி.

ஒரு சராசரிக் கதையைத், தேர்ந்த நடிகர்களே, இன்னொரு தளத்துக்குக் கொண்டு போவார்கள் என்று, திடமாக நம்புபவன் நான். அதே சமயம், ஒரு திறமையான இயக்குனர் பளிச்சிட, தேர்ந்த நடிகர்கள் அவசியம் என்பது இந்தப் படத்திலிருந்து எனக்குக் கிடைத்த பாடம். விஜய், சிம்ரனை நினைத்து பெருமூச்சு விடத்தான் முடிகிறது. வேறொன்றும் செய்வதற்கில்லை.

எழிலிடம் ஒரு பாராட்டக்கூடிய விசயம். எங்கேயும், எதிலும், எப்போதும் விரசமோ முகம் சுளிக்கும் காட்சிகளோ இல்லை. ஆனால் அது மட்டும் போதுமா ஒரு படம் வெற்றி பெற.

கண்ணன் ( சிவகார்த்திகேயன்), ரேவதி ( ஆத்மியா) எதிரெதிர் வீடு, பால்ய காலப் பள்ளிக்கூட நண்பர்கள். சிவாவுக்கு ரேவதி மேல் காதல். ரேவதிக்கு அவன் மேல் அன்பு. கூடவே குடும்பப் பாசம், சமூக ஏற்றத்தாழ்வு போன்ற சிக்கல்கள். கதையில் ஒரே முடிச்சு, ஒரு தலைக்காதலன் சிவாவையும், ரேவதியையும், பரஸ்பரம் காதலிப்பதாக நண்பர்கள் கூட்டம் முடிவு செய்து, மயக்க நிலையில் இருவரையும் கடத்துவது. அவர்கள் கண்டுபிடிக்கப்படும்வரை இருக்கும் தனிமை, ரேவதிக்கு சிவாவின் மேல் காதல் கொள்ள வைப்பது. ஆங்கிலத்தில் hostage syndrome என்று ஒன்று சொல்வார்கள். அதாவது கடத்தப்படுபவன், நாளடைவில் கடத்தியவன் மேலே அன்பு கொள்வது. லைட்டாக உருவி தமிழ்ப்படுத்தியிருக்கிறார்கள். இதை ஒரு திரில்லராக எடுக்காமல் சொதப்பி விட்டார்கள். அதனால் படம் பாதி கிணறு!

ஏகப்பட்ட பாத்திரங்கள். ரேவதி வீட்டில் ஒரு கூட்டம். சிவாவைச் சுற்றி நான்கு பேர். போதாதற்கு மும்பையிலிருந்து இரண்டு பேர். சுற்றி சுற்றி காயடிக்கிறார்கள். நமக்கு காய்ந்து போகிறது. பரோட்டா சூரியின் வளர்ச்சி புரிகிறது. அவர்தான் இந்தப் படத்தில் மெயின் காமெடியன்.

சிவகார்த்திகேயன் வழக்கம்போல் மொக்கையாகப் பேசுகிறார். ஆனால் சில இடங்களில் நடிக்கவும் செய்கிறார். நடன அசைவுகளில் பாஸ் மார்க் வாங்குகிறார். பாடல்களில் வாயசைப்பும் கச்சிதம். ஆனால் ஏனோ தனுஷ் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கிறார். சிம்பு சந்தானத்தைக் கொண்டு வந்தது போல் தனுஷ் சிவாவைக் கொண்டு வர நினைக்கிறார் போலும். அவரது சொந்தப் படத்தில் சிவாதான் ஹீரோ.

ஆத்மியா கொஞ்சம் முதிர்ந்த மாடல். அடுத்தடுத்த படங்களில் அக்கா, அண்ணியாக ஓரங்கட்டப்படுவார். ஆனால் அவரால் கொஞ்சம் நடிக்க முடிகிறது என்பது ஆறுதல். சார்லி சாப்ளினிலிருந்து ஜாக்கிசான் வரை, எல்லாக் காமெடி காட்சிகளிலிருந்தும் சுட்டிருக்கிறார்கள். அதை மறந்து சனங்களும் சிரிக்கிறார்கள்.

டி. இமான் ஒரே ஒரு நல்ல பாட்டு போட்டிருக்கிறார். அதுவும் ‘ போடி போ ‘ ரகம். ஆனாலும் ரசிக்க முடிகிறது. மற்றதெல்லாம் குத்துப்பாட்டு. ஓளிப்பதிவில் குறையில்லை. ஆர்ட் டைரக்டருக்கு பெரும் வேலையில்லை. பெரும்பாலும் பாதி கட்டப்பட்ட கட்டிடங்கள், கோயில் என்று ஒப்பேற்றி விடுகிறார்.

பளிச்சென்று நாலு வசனங்களை கோடியிட்டுக் காட்டலாம் என்றால், என்னதான் மண்டையைப் பிராண்டினாலும் ஒன்றும் தேற மாட்டேன் என்கிறது.

மெரினாவில் ஒரு பகுதிக் கதையின் நாயகன் என்பதால் சிவா தேறினார். 3ல் பாதி படம் தான் வந்தார் ஓகே. ஆனால் இதில் முழுப்பட நாயகன். பக்குவப்பட இன்னமும் பல படங்கள் வேண்டும். ஒரு யோசனை. மூன்று திரைக்கதைகளை வைத்துக் கொண்டு, “அது இது எது “ என்று அவரே விளையாடி அசலைத் தேர்ந்தெடுக்கலாம். அப்போது தான் தேற முடியும்.

#

கொசுறு

விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் சாலையில் உள்ள சுந்தரவரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம். தெருவை அடைத்து பந்தல் கட்டி, ஒலிபெருக்கிகளில் பாசுரம் பாடுகிறார்கள். திவ்யமாக இருக்கிறது. ஒரே ஒரு நெருடல். கவுச்சி கடைகளுக்கு நடுவே கருட வாகனத்தில் பெருமாள். ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். மச்சமும் தசாவதாரத்தில் ஒன்று தானே!

#

Series Navigationஜூன் முழுவதும் சென்னையில் வானவில் விழா!பஞ்சதந்திரம் தொடர் 46

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *