காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!

This entry is part 1 of 28 in the series 3 ஜூன் 2012

டமாரக் கோமாளி
2ஜி, காமன்வெல்த், கார்கில் வீரர்களின் வீட்டு ஊழல், சுரங்க ஊழல் என்று கலக்கிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் ரியல் எஸ்டேட்டை விட்டு வைப்பார்களா? எல்லாத்தையும் பத்தி சிரிச்சாச்சு, இதையும் சிரிச்சு வெப்போமே?

 

கல்மாடி ப்ரொமோட்டர்ஸ்

 

கல்மாடி: வாங்க வாங்க, எங்கிட்ட வீடு வாங்கினீங்கன்னா, உங்களுக்கு ஒரு தங்க மெடல் தருவேன். நாங்க கட்டற வீட்டில மாடி மட்டும் தான் இருக்கும். நோ க்ரவுண்ட் ஃப்ளோர். எங்க பேரைப் பார்க்கலை? கல்மாடி ப்ரொமோட்டர்ஸ். எங்க சிஸ்டர் கன்ஸர்ன் பேரு காமன்  வெல்த்  ப்ரோமோடர்ஸ். என்ன பேரு பாருங்க, வெல்த்ங்கறதே காமன் தானே? அதான் தாராளமா செலவு செய்யறோம்.

 

எங்களின் சிறப்பம்சம் என்னன்னா, நாங்க இருபது ரூபாய் ப்ளாஸ்டிக் குழாய் போட்டுட்டு உங்க கிட்ட 2000 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் போடுவோம். அதெல்லாம் ஷரத்திலே விவரமா எழுதியிருக்கோம்.

 

பொதுஜனம் 1: ஸார், நான் உங்க கிட்ட ஒரு ப்ளாட் புக் பண்ணிருக்கேன். என்னிக்கி வீடு கிடைக்கும்?

 

க: நீங்க யாரு? எனக்கு லேசா ஞாபக மறதி உண்டு. ஆனா நீங்க என் கிட்ட வீடு வாங்கலைங்கறது நல்லா நியாபகம் இருக்கு.

 

ராசாவின் பார்வை 2ஜியின் பக்கம்

 

2ஜி ரியால்டர்ஸ் பெருமையுடன் வழங்கும்: ராசா ப்ரொமோட்டர்ஸ் அண்ட் சிஸ்டர் கம்பெனி (ரியல் எஸ்டேட் கழகம்).

 

ராசா: எங்க பில்டிங்க்ல ரெண்டே ரெண்டு ஃப்ளோர் தான். க்ரவுண்ட்+2, அதாவது க்ரவுண்ட்க்கு ஜி தான் முதல் எழுத்து, 2 சேர்த்து 2ஜி. எப்டி? ப்ரமாதம்லே? எங்க பாலிஸி ரொம்ப சிம்பிள், நாங்க வீடு கட்டினோம்னு நீங்க சொன்னா நீங்களும் கட்டினீங்கன்னு ஒத்துக்கணும். இல்லேன்னா நாங்களும் கட்டலை, சரிதானே?

 

நாங்கள்ளாம் லா அபைடிங் சிடிசன்ஸ். கைல காசு, வாயிலே தோசை, இதான் எங்க பாலிஸி. மொதல்ல வந்து பணத்த கட்டிடீங்கன்னா உங்களுக்கு நாங்க எங்க மனம் போன போக்கில வீடு தருவோம்.

 

சிபல் விர்ச்சுவல் ரியல் எஸ்டேட் ஏஜின்ஸி

 

கபில் சிபல் – நீங்க பைசா போடலைன்னு நான் சொன்னேனா?

கஸ்டமர் – சரி, அப்போ என் ஃப்ளாட் எங்கே?

கபில் சிபல் – ஃப்ளாட்டெல்லாம் இல்லை, நான் உங்க கிட்ட இருக்குன்னு சொன்னேனா?

கஸ்டமர் – சார்! உங்க கம்பெனி ப்ரொமோட் பண்ணாங்களே? நான் வாயைக் கட்டி வயித்தைக் கட்டிப் பணம் போட்டிருக்கேனே?

கபில் சிபல் – ஆமா, நீங்க பணம் போடலைன்னு நான் சொல்லவே இல்லையே, அதே மாதிரி, ப்ளாட் இருக்குன்னும் நான் சொல்லலையே? நாங்க இதுக்கு எப்படி பொறுப்பாக முடியும், நீங்க பாட்டுக்கு பணம் போட்டேன், ப்ளாட் எங்கேன்னா? இந்த இடம் முன்னாடி தாமரை ஏஜென்ஸிக்கு சொந்தமா இருந்தது தெரியுமா? அவங்களக் கேளுங்க, “ஏன் ப்ளாட் கட்டலைன்னு?”

கஸ்டமர் – சார், ஆனா நீங்க தானே இப்போ ப்ரொமோட்டர், உங்ககிட்ட தானே நான் பணம் கட்டினேன்? எதுக்கு தாமரை ஏஜென்ஸிக்கு நான் போகணும்? இது பெரிய ஊழலா இருக்கும் போலருக்குதே?

கபில் சிபல் – அதெல்லாம் அப்படித்தான். உங்க கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன், ஊழல் எல்லாம் எதுவும் நடக்கவேயில்லை இங்கே. நீங்க பணம் போட்டீங்க, ஆமா, ஆனா இங்க பில்டிங் இல்லைன்னா மொதல்ல இந்த இடத்த யாரு வெச்சிருந்தாங்களோ அவங்களத்தானே கேக்கணும்? அதானே நியாயம்?

கஸ்டமர் – சார், என்ன சொல்றீங்க சார்? உங்க கம்பெனி பேர்ல தானே நான் பணம் கட்டியிருக்கேன், உங்களத்தானே கேக்க முடியும்?

கபில் சிபல் – என் கம்பெனி பேரைப் பாத்தீங்களா மொதல்ல?

கஸ்டமர் – பேர்ல என்ன சார் இருக்கு? சிபல் விர்ச்சுவல் ரியல் எஸ்டேட் ஏஜென்ஸி

கபில் சிபல் – சபாஷ். பேர்ல தான் எல்லாமே இருக்கு, விர்ச்சுவல் ரியாலிட்டி பத்தித் தெரியுமா? அது நிஜம் தான், ஆனா விர்ச்சுவல், அதாவது விர்ச்சுவலி ரியல், ஆனா நிஜமா ஒண்ணும் கிடையாது. அப்படி விர்ச்சுவலி ரியலா இருக்கற ஒண்ணைப் போயி நிஜமா,  பிசிக்கலா என் கண்ணு முன்னாடி காட்டுன்னு கேட்டா நான் என்ன மந்திரவாதியா?

கஸ்டமர் – ??!!?!?!?!!

கபில் சிபல் – அட! என்ன முழிக்கறீங்க, உங்களுக்கு பில்டிங் பார்க்கணும் அதானே, கண்ண மூடிக்கோங்க, மூச்சை ஆழமா இழுத்து வுடுங்க, பாருங்க உங்க பில்டிங்கை!  அப்டியே வாங்க கைய நீட்டிக்கிட்டு, இதோ உங்க பால்கனி தெரியுதா? சுவரெல்லாம் புது பெயிண்ட் வாடை வருது பாருங்க, அப்டியே வாங்க, கையை அப்டி நீட்டியே வெச்சுக்கோங்க….ஏய் ஏய் ஏய்!! இந்த ஆளு பால்கனிலேர்ந்து குதிச்சிட்டான்யா! இதுவும் அந்த தாமரக் கார ஏஜென்ஸி பயலுக வேலையாத்தான் இருக்கணும், இது ஜனநாயக நாடா இல்ல வேறே எதுவுமா?!!!

 

ரியல் எஸ்டேட் கழகம் (REK)

உனக்கு 2ஜி (கடமை), எனக்குக் காசு (கண்ணியம்), மக்களுக்கு நாமம்  (கட்டுப்பாடு)

 

ப்ரோமோட்டர் டிவியில் அவர்களின் விளம்பரம் ஓடுகிறது:

“சோணகிரிகளே சோணகிரிகளே, நீங்கள் எங்களை மச்சு மாடியில் வைத்தாலும் குச்சு குடிசையில் வைத்தாலும் உங்கள் டவுசருக்குள் கையை வுட்டு உங்களுக்குத் தெரியாமலே லவட்டுவேன் என்று சொல்லிக் கொள்கிறேன்….”

 

உரிமையாளர் (பெரியவர்) – யோவ், அந்த டிவி சவுண்டைக் கம்மி பண்ணுய்யா! புது சோணகிரி…அ..கஸ்டமர்…சீ வாடிக்கையாளர் வந்திருக்கார்.

கஸ்டமர் – ஐயா, உங்க ஏஜென்ஸில ஒரு வீடு புக் பண்ணினேன், ஆனா உங்க ஆளுங்க காச வாங்கிக்கிட்டு வீட்டைக் கேட்டா மிரட்டறாங்க சார்.

பெரியவர் – கென்னடி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா உடன்பிறப்பே?

கஸ்டமர் – என்ன சொல்லியிருக்கார்?

பெரியவர் – ரியல் எஸ்டேட் கழகம் உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே, நீ அதற்கு என்ன செய்தாய் என்று கேள், என்றிருக்கிறார்

கஸ்டமர் – கென்னடி நாட்டைப் பத்தித் தானெ இப்படி சொல்லியிருக்கார். அதெல்லாம் சரி, என் பணம் என்னாச்சி?

பெரியவர் – அது நம்ம தொகுதி செயலாளர் கென்னடியைச் சொன்னேன். உங்கள் பணம், என் பணம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. நாமெல்லாம் உடன்பிறப்புக்கள், இது எல்லாமே பொதுப் பணம். அதாவது உன் பணம் என் பணம், என் பணம் என் பணம். அந்த மாதிரி.

கஸ்டமர் – தலை சுத்துதே, இப்போ நான் போட்ட பணத்துக்கு என் வீடு எங்கேய்யா? உங்க சிஸ்டர் கம்பெனி ராசா ப்ரோமோட்டர்ஸ்ல வேற ஏதோ ஊழல் நடந்திருக்குன்னு சொல்றாங்களே?

பெரியவர் – பணம் போகும் வரும், ஆனால் குணம்? அது சான்றோர் சொத்து. இதையே தான் அய்யன் குறளில் சொல்கிறான்.

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை

இதுக்கு தப்பா அர்த்தம் பண்ணியிருக்காங்க. இதுக்குச் சரியான அர்த்தம் புரிஞ்சதுன்னா யாருக்கும் இதிலே ஊழல்ன்னு சந்தேகமே வராது. செல்வத்துள் செல்வம் – அதாவது காசு மேல, காசு வந்து கொட்டுகிற நேரமிதுன்னு ஒரு திரைப்பட பாடல் இருக்குது பார்த்தீங்களா, அத அப்பவே அய்யன் எழுதிட்டான். அப்படி காசு மேல காசு கொட்டற செல்வத்துள் செல்வம் என்னது? செவிச் செல்வம். செவியில என்ன வெச்சுப்பீங்க, அலை பேசி. அதைத்தான் சொல்றான் அய்யன்.

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் – காசு மேல காசு கொட்டற அலைபேசி மூலமா வர்ற காசு, அச்செல்வம், செல்வத்துள் எல்லாம் தலை, அதாவது, இதுல வர்ற காசில பெரும் பகுதி தலைவருக்கு வரணுங்கறது. அத அவரு தலைவருங்களோட பகிர்ந்துக்கிட்டாரு. பகிர்ந்துண்பதே கழக மாண்பு. இதுல போயி எப்படி ஊழல்ன்னு சந்தேகப்படறீங்க? இது கண்டிப்பா கைபர் கணவாய் வழியா வந்து கம்பெனி ஆரம்பிச்சிருக்கற “ஆர்யா ப்ரொமோட்டர்ஸ்” சதி தான்.

 

பசி ஏஜென்சி

 

பசி – எனக்கும் அந்த மாடிக்காரர் மாதிரி கொஞ்சம் நியாபக மறதி உண்டு. அதனால நீங்க எனக்கு அப்பப்போ எதைப் பத்தி பேசறோம்னு நினைவு படுத்திடணும். ஆனா நான் ரொம்ப நியாயவாதி. ஊழல் அது இதுன்னெல்லாம் என்கிட்ட மூச்சு விடக்கூடாது.

 

க – சார், நான் உங்க ஏஜென்சி மூலமா ஒரு ஃப்ளாட் புக் பண்ணியிருக்கேன் சார். அந்த ப்ராஜெக்ட் எப்போ முடியும்?

 

பசி – அப்படியா, ஒரு ப்ராஜெக்ட் ஆரம்பிச்சோமா, சரி, நினைவில்லை, பார்க்கலாம், அதுக்கென்ன இப்போ? நீங்க அப்படி ஏதும் புக் பண்ணினதா எனக்கு மார்க்கெட்டிங் டீம் தகவல் தரலயே?

 

க – அதுக்கு நான் என்ன பண்ண முடியும் சார்? இதோ பாருங்க டாகுமெண்ட்ஸ்

 

பசி – அதுக்கு நானும் என்ன பண்ண முடியும்? இப்போல்லாம் தீவிரவாதிங்க ஒரு இடத்துல குண்டு வைக்க போறாங்கன்னா எங்க கிட்ட ஈமெயில் அனுப்பிட்டு வைங்கன்னு சொல்லலாம்னு கவர்மெண்டுலயே பேசிக்கறாங்க. இந்த டாகுமெண்டை தாங்க, பாக்கறேன். (மேலோட்டமாகப் பார்த்து விட்டு)…இந்த ஃப்ளாட் பாகிஸ்தான்ல தானே இருக்கு? உங்களுக்கு எப்படி அலாட் பண்ணாங்க?

 

க – என்னது? பாகிஸ்தான்ல இருக்கா?! என்ன சொல்றீங்க சார்?

 

பசி – இருங்க, தவறுதல் மனித இயல்பு தான். அதுக்காக ரொம்ப அலட்டிக்க வேண்டாம், உங்களுக்கு என்ன பங்களாதேஷ்ல ப்ளாட் வேணுமா?

 

க – சார், நான் இந்தியன் சார். இந்தியாவுல தமிழ்நாட்டில வாங்கியிருக்கேன் ப்ளாட்.

 

பசி – அப்புறம் என்ன, பேசாம இருங்க, லிஸ்ட்டைத் திருப்பிப் பார்த்துட்டு சொல்றேன். எதுக்கும் நீங்க ஒரு முறை இந்த ரூம்லேர்ந்து வெளியில போயிட்டு வாங்க.

 

க – அதுக்கும் நான் ரூமை விட்டு வெளிய போறதுக்கும் என்ன சார் சம்பந்தம்?

 

பசி – அட ரூமுக்குள்ளேர்ந்து வெளியில போயிட்டு வர்ற கேப்ல தான் சார் நம்ம ஜெயிச்சோமா தோத்தோமாங்கறதையே மாத்த முடியும், நீங்க புரியாத ஆளா இருக்கீங்களே? உங்கள அந்த பெட்டியை வெச்சுகிட்டு அலையுவாரே, அவரு அனுப்பிச்சாரா?

Series Navigationமுள்வெளி அத்தியாயம் -11
author

டமாரக் கோமாளி

Similar Posts

Comments

  1. Avatar
    punai peyaril says:

    டமாரமாக கேலி செய்தால் கூட கேவலம் தெரியா ஜன்மங்களாக இருக்கிறார்களே… நாளை தேசத்தின் தெருக்களில் இவர்கள் சிலைகளாக நாம் இவர்களை வலம் வந்து பாதைகள் கடப்போம்… எல்லாம் நம் தலையெழுத்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *