காசி , எஸ்.எஸ்.எல்.ஸி எனப்படும் பள்ளியின் கடைசி வருடமான பதினோறாம் வகுப்பில் ஏன் எங்கள் ரயில்வே ஸ்கூலில் வந்து சேர்ந்தான் என்று தெரியவில்லை. எங்களின் ஆங்கில ஆசிரியர் நடராஜன் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது பள்ளியின் சீனியர் ப்யூன் ராஜன்தான் காசியை அழைத்துக்கொண்டுவந்து, ” சார்! ஹெட்மாஸ்டர் இந்தப் பையனை ஒங்க க்ளாசில ஒக்காரவக்கச் சொன்னாரு ” என்று காசியின் முதுகில் கையைவைத்து மெதுவாகத் தள்ளிவிட்டான். தயங்கியபடியே காசி வகுப்பில் நுழைந்துகொண்டிருந்த பொழுது, நடராஜன் சார், பியூன் ராஜனைப் பார்த்து, ” என்னடா! என்னமோ முதலிரவு அறைக்குள்ள பொண்ணைத் தள்ளிவிடறதுமாதிரி இவனைத் தள்ளிவிட்டுட்டுப் போற ? ” என்று கேட்டபோது ராஜன் அதீதமாக வெட்கப்பட்டுக் கால்கள் பின்ன நடந்துபோனதைப்பார்த்து நடராஜன் சார் தன் ஹாஸ்யத்தைத் தானே ரசித்துச் சிரித்ததைக் கண்டு ஆங்கிலப் பாடத்தில் தேவையில்லாமல் மார்க் குறைந்துவிடக்கூடாதென்பதை உணர்ந்து நாங்களும் சத்தமாகச் சிரித்தோம். காசியோ முதல் இரண்டு வரிசைகளை விட்டுவிட்டு, மூன்றாவது வரிசையைத் தேர்ந்தெடுத்து என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். நடராஜன் சார் எப்போதாவது வெளிப்படுத்தும் அவரது அபூர்வ ஹாஸ்யத்தின் தொடர்ச்சியாக என்னைப்பார்த்து, ” ஓஹோ! இவன்தான் மாப்பிள்ளையா ? ” என்பதை வடிவேலுவின் ” அவனா நீயி ” என்பதுபோலக் கேட்டது மாணவர்களை நடராஜன் சாரின் ஆங்கில அவஸ்தையிலிருந்து வெகுதூரம் தள்ளிக்கொண்டுவந்தது.
காசி என்றழைக்கப்பட்ட காசிநாதன், துறையூர் ஜமீன்தார் உயர்நிலைப் பள்ளியிலிருந்து என்ன காரணத்தாலோ பெயர்ந்து பொன்மலைக்கு வந்தது அவன் வாழ்க்கையில் முக்கியமானத் திருப்பமாக இருக்கும் என அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. சரிந்து அடிக்கடி நெற்றியில் விழும் கோரைத் தலைமுடியை ஸ்டைலாகக் கழுத்தைப் பின்பக்கமாக வெட்டிக் கைகளால் ஒதுக்கித் தள்ளுவது அவனது மேனரிசமாக இருந்தது .செப்டம்பர் மாசத்துச் சாயந்தரம்போல நெற்றியில் விபூதியும் மறந்துபோய்க்கொண்டிருக்கும் பதில்போல நேரம் ஆக ஆக மறைந்துகொண்டிருக்கும் குங்குமமும், வாய்விட்டு சிரித்துவிட்டுப்பின் அதையே உதட்டுக்குள் ஒளித்து ஒரு மெஜிஷியன்போலக் கண்களுக்குள் சிரிப்பை மாற்றிக்கொண்டுவிடும் சாதுர்யமும் அவனிடம் இருந்தது. உடம்போடு ஒட்டியிருக்குமாறு கச்சிதமாக யூனிஃபார்ம் அணிந்து என் பக்கத்தில் அவன் உட்கார்ந்திருந்தது காமராஜர் பக்கத்தில் எம்.ஜி.ஆர்.,உட்கார்ந்திருந்தது
காசியின் வீடு எங்கள் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த மாரிமுத்துவின் பக்கத்து வீடு. மாரிமுத்து எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பான். வகுப்பில் ஆசிரியர்கள் , ” ஏண்டா ஒனக்கு மூளையே கெடையாதாடா ? ” என்று கேட்பதற்கும் பதிலேதும் சொல்லாமல் சிரித்துக்கொண்டிருப்பான். அவன் எஸ்.எஸ்.எல்.சி வரை எந்த க்ளாஸிலும் ஃபெயிலே ஆகாமல் மேலேறி வந்ததற்கு டேவிட் வாத்தியார்தான் காரணம் என்று எல்லோருக்கும் தெரிந்திருந்தது. மாரிமுத்துவின் அம்மா, டேவிட் வாத்தியாருக்கு வருடா வருடம் மளிகை சாமான்களைக் கொல்லிமலையிலிருந்து தான் வாங்கும்போது வாங்கி வந்து கொடுத்துவிடுவதோடு நிறைய குழந்தைகளோடு வறுமையில் தவித்துக்கொண்டிருந்த அவருக்கு அவ்வப்போது பண உதவியும் செய்துகொடுப்பதற்குப் பிரதியுபகாரமாக டேவிட் சார் ஹெட்மாஸ்டர் கால்கையைப் பிடித்து எப்படியோ பத்தாவது வரை மாரிமுத்துவை பாஸ் பண்ணவைத்துவிட்டார். மாரிமுத்துவினால் இன்னும் சில ‘ பார்டர் மார்க் ‘ பையன்களுக்கும் அவ்வப்போது யோகம் அடித்து சில வருடங்களில் பாஸ் பண்ணிக்கொண்டிருந்ததால் யாரும் மாரிமுத்துவின் தடங்கலில்லாத முன்னேற்றத்தைக் கேள்வி கேட்கவில்லை.
இந்த வருடம் பரீட்சையும் பேப்பர் திருத்துதலும் டேவிட் வாத்தியார் கையில் இல்லாததால், மாரிமுத்துவை எப்படிப் பாஸ் பண்ணவைப்பது என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தபோது , காசியின் வருகை மாரிமுத்துவின் அம்மாவுக்குக் கொஞ்சம் தெம்பைக் கொடுத்திருந்தது. காசியின் களை பொருந்திய முகமும், சுறுசுறுப்பும், பணிவான பேச்சும் மாரிமுத்துவின் அம்மாவிற்குக் கலவையான உணர்வைக் கொடுத்திருந்தது. ” நீ இங்கேயே உக்காந்து படிடா காசி . நீ படிக்கும்போது அப்படியே மாரிமுத்துவுக்கும் பாடம் சொல்லிக் கொடு. ” என்று சொன்னபோது காசியும் சரி என்று சொல்லி, சொன்னபடியே செய்தும் கொண்டிருந்ததில் அவன் மீது அன்பும், அந்த வயதிலேயே ஒரு பெரும்போக்கும், புத்திசாலித்தனமும் காசிக்கு அமைந்திருந்து, ஆனால் அப்படி எந்த நல்லதும் இல்லாது தன் பிள்ளை ரெண்டுக்கெட்டானாய் அமைந்துவிட்டதில் காசியின் மீது மெல்லிய படலமாய் அசூயையும் மாரிமுத்துவின் அம்மாவின் மனதில் படர்ந்திருந்தது. காசியின் பெற்றோர்கள் மெட்ராஸில் ரயில்வேயில் ஜி.எம். ஆஃபிசில் வேலை செய்துகொண்டிருந்ததால் இங்கே தன் அத்தை வீட்டில் தங்கி படித்துக்கொண்டிருந்ததில், காசியைச் சரிவரக் கவனிக்க யாரும் இல்லாமல்போனது வேறு காசியைத் தன்போக்கிற்கு ஆட்டிவைக்க மாரிமுத்துவின் அம்மாவிற்கு சௌகர்யமாய்ப் போயிற்று.
மாரிமுத்துவின் வீட்டில் இல்லாத சமயங்களில், காசி எங்களோடுதான் இருப்பான். காசி படிப்பில் எங்களைவிட பெரிய ஆளாக இருந்தாலும் விளையாட்டில் எங்களை அடித்துக்கொள்ள முடியாது அவனால். ஒரு ஞாயிற்றுக்கிழமை காசியை விளையாடுவதற்காகக் கூப்பிடப்போயிருந்தபோது, அவன் மாரிமுத்துவின் வீட்டில் ஒட்டடை அடித்துக்கொண்டிருந்தான். ” டே காசி ! வாடா போகலாம் ” என்று கூப்பிட்டபோது, மாரிமுத்துவின் அம்மா ” அவன் ஒண்ணும் இப்ப வரமாட்டான். ஒங்களுக்கு எப்பவும் விளையாட்டுதானா ? ” என்று என்னை விரட்டிவிட்டார். காசியோ, போடா நான் அப்புறமா வரேன் என்பதாகச் சைகை காட்டினான். கொஞ்ச நாளைக்கு முன்பு பொன்மலைப்பட்டியில் உள்ள நெல்லை நாடார் ஸ்டோர்ஸில் மளிகை சாமான்களை ஒரு பெரிய பையில் வாங்கிக்கொண்டு அந்தப் பையைத் தூக்க முடியாமல் தூக்கிகொண்டு வந்தான் காசி. “என்னடா இவ்வளவு பெரிய மூட்டை ? ” என்று கேட்டபோது அது மாரிமுத்து வீட்டுக்கு என்றான். ” மாரிமுத்துவின் அம்மா காசியை நன்றாக உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறா
சமீப காலங்களில் காசி எங்களுடன் அதிகமாக விளையாட வருவதில்லை. மாரிமுத்துவின் வீட்டில் தண்ணீர் பிடிப்பது, மருந்து வாங்கி வருவது, தோட்டத்தைப் பார்த்துக்கொள்வது என்று தினம் செய்ய வேண்டிய சில்லரை வேலைகளை காசியே கவனித்துக்கொள்வதாக வகுப்பில் மாரிமுத்துவே ஒரு முறை சங்கரனிடம் சொல்லிக்கொண்டிருந்தான். காலாண்டுத் தேர்வுகளில், காசி எங்கள் பள்ளியிலேயே மூன்றாவது மார்க் வாங்கியிருந்தான். ஆனால், மாரிமுத்து வழக்கம்போல எல்லாவற்றிலும் ஃபெயில்தான். இதனால் மாரிமுத்துவின் அம்மா காசியிடம் ஒருவாரம் பேசாமல் இருந்தாராம். காசிதான் அவரிடம் ஏதோ தப்பு செய்துவிட்டவன் போல் ” ஏம்மா எங்கிட்ட பேசமாட்டேங்கிறீங்க ! நான் என்ன தப்பு செஞ்சிருந்தாலும் மன்னிச்சுக்கங்க ” என்று மருகி மருகி மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்தானாம். இதையெல்லாம் கேள்விப்பட்ட என் நண்பன் சங்கரன் காசியிடம் கோபமாய், ” ஒனக்கென்னடா பைத்தியம் புடிச்சுடிச்சா ? அந்தக் கெளவிகிட்ட நீ ஏண்டா மன்னிப்புக் கேக்கற ? இன்னோரு தபா நீ மன்னிப்புக் கேட்டதா தெரிஞ்சுது… மவனே ஒன்னதான் ஒதப்பேன் ” என்று நிறைய கெட்டவார்த்தைகள் சேர்த்து திட்டியபோது பக்கத்திலிருந்த என் தம்பி சங்கரனிடம் அந்தக் கெட்டவார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தம் கேட்க ஆரம்பித்துவிட்டான். ஆனால் காசியோ அவனது வழக்கமான சிரிப்பு மாறாமல் சங்கரனிடம், ” இல்ல சங்கரா ! மாரிமுத்து, நான் சொல்லிக்கொடுத்தும் எல்லா சப்ஜெக்டுலயும் ஃபெயில் ஆனதுல அவங்கம்மாவுக்கு ரொம்ப வருத்தம். அவன் பாஸ் பண்ற அளவுக்கு நான் அவனத் தேத்தியிருக்கணும். ஒரு எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் பொய்க்கும்போது விரக்தி வர்றது சகஜம்தானே ? அதுவும் மாரிமுத்து மாதிரி ஒரு பையனுக்கு அம்மாவா இருந்து, அந்த நம்பிக்கை தன்னைச் சாய்ச்சுத் தள்ளிப்புட்டு எக்காளம்போடும்போது வலி ஜாஸ்திதானே இருக்கும். சரி பண்ணிடலாம் ” என்று பெரிய மனுஷன் மாதிரி பேசியது சங்கரனுக்குப் பிடிக்கவில்லை. ” போடா போ ! எதுனாச்சும் சினிமா பாத்துட்டு வந்து பேசறயா ? தத்துவம் பேசி வாழ்க்கையக் கெடுத்துக்காதே ! ” என்று ப்ராக்டிகலாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
அதன் பிறகு, காசி அதிக நேரம் மாரிமுத்துவின் படிப்புக்காகச் செலவிட்டது , அவன் அம்மாவைக் கொஞ்சம் சாந்தமாக்கி சகஜ பாவத்திற்கு வரவழைத்திருந்தது. ஆனால், பக்கத்தில் எல்லோரும் காசியின் அத்தையிடம் காசியைப் போலப் பிள்ளை கிடைக்கக் கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்று பாராட்டும்போதெல்லாம் மாரிமுத்துவின் அம்மா தனக்கு அப்படி ஒரு பெருமையைத் தன் மகன் கொடுக்கவில்லையே என்ற ஆதங்கம் கிளப்பும் தீயை அடக்க ரொம்ப சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். என் அம்மாவும் கொலு பார்க்க வீட்டுக்கு வந்திருந்த காசியைப் பார்த்து, ” எங்க ரமணிக்கும் கொஞ்சம் பாடம் சொல்லிக்கொடுத்து நல்ல மார்க் வாங்க வைக்கக்கூடாதாப்பா நீ ? ” என்று சொன்னவுடனேயே நான் அவசரம் அவசரமாக அவனுக்குச் சுண்டலைக் கொடுத்து அனுப்பிவிட்டேன். காசி பள்ளியில் ஆசிரியர்களிடையே மாத்திரமின்றி இப்படி பொன்மலைவாழ் தாய்மார்களிடமும் நல்ல பெயர் எடுத்துக்கொண்டிருந்தது எல்லாம் எல்லோர் காதுகளுக்கும் குறிப்பாக மாரிமுத்துவின் அம்மாவின் காதுகளுக்கு இனிப்பாக இருந்துவிடவில்லை.
பள்ளியின் கடைசி வருடமாதலால், எஸ்.எஸ்.எல்,ஸி மாணவ மாணவிகளுக்கு அரையாண்டுத் தேர்வின்போதே முழுப்பாடங்களையும் நடத்தி முடித்து அதன்பின் நிரைய ரிவிஷன் டெஸ்ட்டுகளாக வைத்து எங்களை வதைத்துக்கொண்டிருந்தார்கள். காசியின் விடா முயற்சியால் மாரிமுத்துவும் எல்லா சப்ஜெக்டுகளிலும் முப்பத்தைந்து மார்க்குகள் வாங்கியிருந்தான். ஆனால் காசிக்குத்தான் மார்க்குகள் கம்மியாகி , பள்ளியில் பத்தாவது இடத்துக்குப் போயிருந்தான். இதைக்கண்ட ஆசிரியர்கள் காசிக்கு எச்சரிக்கை விடுத்ததோடல்லாமல், அவன் மாமாவையும் அழைத்து ” மாரிமுத்துவுக்கு உங்க காசி ரொம்ப நேரம் பாடம் சொல்லிக்கொடுக்கிறானாமில்ல ! வெரி குட் ! நல்ல விஷயம்தான் . ஆனா அதே சமயத்துல அவன் அவனோட படிப்புல கோட்டை விட்டிரக்கூடாது ! அதையும் பாத்துக்கணும் ” என்பது போன்ற அறிவுரைகளோடு ” அவன நாங்க ரொம்ப எதிர்பாக்கறோம் . முயற்சி பண்ணினா அறு நூறுக்கு ஐனூறு மார்க்குக்கு மேல வாங்கி அவன் ஜில்லாலியே ரேங்க் எடுக்க முடியும் . அவன் அம்மா அப்பா வேற இங்க இல்லேன்னு கேள்விப்பட்டோம் பாத்துக்கங்க ” என்று சொல்லி அனுப்பியது மாரிமுத்துவின் அம்மாவின் காதுகளுக்கு நல்ல செய்தியாக இல்லை.
பொதுத்தேர்வுகளுக்கான நாள் நெருங்க நெருங்க நானும் சங்கரனும் மாரியம்மன் கோவிலிலுள்ள எல்லா சன்னதிகளிலும் குறைந்தது பத்து நிமிடமாவது நின்று மனமுருக வேண்டிக்கொண்டிருந்தோம். ஒரு சாமி விட்டுவிட்டாலும் இன்னொரு சாமி எங்களைக் காப்பாற்றிவிடாதா என்று கொஞ்சம் தள்ளி இருக்கும் பொன்னேஸ்வரி அம்மன் கோவிலுக்கும் அவ்வப்போது போய்க் கும்பிட்டு வந்துகொண்டிருந்தோம். போன வருடம் ஸ்டேட் ரேங்க் வாங்கியிருந்த ஆரோக்கியசாமி என்ற மாணவன் யேசுவின் கிருபையால்தான் தான் அவ்வளவு மதிப்பெண் வாங்க முடிந்தது என்று தந்தி பேப்பரில் பேட்டி கொடுந்திருந்ததை ஞாபகப் படுத்திய சங்கரன் வெள்ளிக்கிழமைகளில் சர்ச்சுக்கும் போய்வரலாம் என்றவுடன் அதையும் செய்துகொண்டிருந்தோம். இவ்வளவும் போன வருடத்திய முதல் மாணவன் போல ஸ்டேட் ரேங்க் எடுக்க அல்ல. ஒரு அறுபது பெர்செண்ட் எடுத்தால்தான் என் அண்ணன் போல சேஷசாயி இன்ஸ்டிட்யூட்டில் பாலி டெக்னிக் சேரலாம் என்பதற்காகத்தான். ஆனால் காசியோ என்னையும் சங்கரனையும் போல ஒன்றும் அலட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை. வழக்கம்போல அவன் வேலையைச் செய்துகொண்டிருந்தான். அவனால் எப்படி அவ்வளவு ‘ கூலாக ‘ இருக்கமுடிகிறதென்று தெரியவில்லை என எங்கள் நண்பர் குழாமில் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தோம். அதே ஆச்சர்யம் மாரிமுத்துவின் அம்மாவிற்கும் இருந்ததோ என்னவோ.
ஆனால் மாரிமுத்துவின் அம்மாவால் எங்களைப் போல வெறும் ஆச்சரியம் மாத்திரம் பட்டுக்கொண்டிராமல், தன் பையனுடன் அவனை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருந்ததில், கடவுளின் வஞ்சனையின் மீது அதிகக் கோபமும் படமுடிந்திருந்தது. கடவுளை மாரிமுத்துவின் அம்மா தோற்கடிக்க விரும்ப ஆரம்பித்திருந்தார். இவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வுகள் ஒத்த வயதுடைய இரண்டு பையன்களுக்கிடையில் ஏன்? அதுவும் தன் பையன் ஏன் இவ்வளவு தாழ்வாக இருக்க , காசி மாத்திரம் எப்படி இவ்வளவு புத்திசாலித்தனத்தோடு இருக்கலாம் ? வெறும் புத்திசாலித்தனம் மட்டுமா ? எவ்வளவு பொறுமையும் நல்ல குணமும் இருந்தால் தன்னையும் அவனால் பொறுத்துக்கொள்ளமுடியும் ? தனக்கில்லாதது தன் மகனுக்கில்லாதது காசிக்கு மாத்திரம் ஏன் இருக்கவேண்டும் ? பரீட்சை முடிவுகள் வரும்போது ஸ்கூல் வாதியார்களெல்லாம் எதிர்பார்ப்பதுபோல காசி நல்ல மதிப்பெண்கள் எடுத்து பேப்பரில் ஃபோட்டோ , பேர் எல்லாம் வந்து தன் பிள்ளை ஃபெயிலாகியிருக்க, அந்தத் தாயால் அந்தக் காட்சியை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால், காசியோ மாரிமுத்துவோடு தன் படிப்பையும் விட்டு மன்னாடிக்கொண்டிருந்தான். தான் முதல் மார்க் வாங்குவதைவிட மாரிமுத்து பாஸாகிவிடுவதே தனது லட்சியம் போல நடந்துகொண்டிருந்தான்.
காசி பொதுத்தேர்வின் முதல் நாளன்று கடைசி நிமிடத்தில் சைக்கிள் ரிக் ஷாவில் பரீட்சை எழுதுவதற்காக வந்திறங்கியது எங்களுக்கெல்லாம் வியப்பை ஏற்படுத்தியது. ஆள் மிகவும் சோர்வாக தளர்ந்த நடையோடு வந்திறங்கியதில் பள்ளி ஆசிரியர்களே பயந்து போனார்கள். என்னாச்சு என்று கேட்டதற்கு காசியின் கூட வந்திருந்த அவன் அத்தை நேற்று இரவிலிருந்து கடுமையான டிஸென்ட்ரி என்றும் அவனால் தூங்கவோ உட்கார்ந்து படிக்கவோ முடியாமல் போய் டாக்டர் கொடுத்திருக்கும் மருந்தை சாப்பிட்டுவிட்டு பரீட்சையை விடக்கூடாது என்பதற்காகத்தான் வந்திருப்பதாகச் சொன்னார். முதல் மூன்று நாட்கள் சரியாகத் தேர்வுகளை எழுதமுடியாத காசி, அடுத்த நாட்களிலெல்லாம் மாரிமுத்துவிற்கே உதவிக்கொண்டிருந்தான்.
பொதுத்தேர்வுகள் முடிந்தபின் மாரிமுத்துவின் அம்மா எல்லக் கோவில்களுக்கும் சென்று காசியின் பெயருக்கு மட்டும் தினமும் அர்ச்சனை செய்துகொண்டிருந்தார்கள். வாரத்திற்கொருமுறை ஸ்ரீரங்கம் சென்று ஹயக்ரீவப் பெருமாளுக்கும் அர்ச்சனை செய்துகொண்டிருந்தார்கள். பரீட்சை முடிந்தபின், மாரிமுத்துவை , மெட்ராஸில் பேங்க்கில் வேலையிலிருக்கும் தன் தம்பி வீட்டிற்கு அனுப்பிவைத்துவிட்டார் அவன் அம்மா. காசியும் அவன் அம்மா அப்பாவிடம் போய்த் தங்கியிருந்தான். பத்து நாளைக்கொரு முறை எங்களுக்கு ” டியர் ஃப்ரெண்ட்ஸ் ரமணி & சங்கரன் ” என்று தொடங்கி முத்து முத்தான கையெழுத்தில் லெட்டர் எழுதிக்கொண்டிருந்தான். பரீட்சை முடிவுகள் வர இருப்பதற்கு ஒரு வாரம் முன்பு, அவன் எழுதியிருந்த கடிதம் அவன் பாஸாவதற்கான மிகக் குறைந்த சாத்தியத்தையும், மாரிமுத்துவின் அம்மா தேர்வுகளுக்கு முந்தைய நாளில் இரவில் கண் விழித்துப் படிக்கும் தனக்கும் மாரிமுத்துவிற்கும் பால் எல்லாம் கொடுத்து நன்றாகப் பார்த்துக்கொண்டாலும் ஒருவிதமான நெர்வஸ்னஸோடு இருந்ததை நினைவு கூர்ந்தது, மாரிமுத்து அவன் அம்மாவிற்காகவாவது பாஸ் செய்துவிடவேண்டும் என்று எழுதியிருந்தது எங்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. நாங்களும் எங்களுக்குத் தெரிந்த இங்கிலீஷில் அவன் நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும் என்பதை ” யுவர் குட் ஹார்ட் டெஃபனட்லி வில் கெட் குட் ரிசல்ட் ” என்று அவனுக்கு ஆறுதல் சொல்லியிருந்தோம்.
அந்த வருடத் தேர்வு முடிவுகள் நாங்கள் வேண்டிக்கொண்டதற்கு மேலாக எல்லாக் கடவுள்களின் ஆசிர்வாதத்தின் படியும் எனக்கும் சங்கரனுக்கும் எழுபது சதவீத மதிப்பெண்களைக் கொடுத்திருந்தது. மாரிமுத்துவும் பாஸாகியிருந்தான். ஆனால் அவன் மெட்ராஸில் மாமா வீட்டில் இருந்தபோது ரிஸல்ட் வந்ததைக்கேட்டு அந்த அதிர்ச்சியிலேயே ஸ்ட்ரோக் வந்து படுத்துவிட்டான். காசி முதலில் எழுதிய மூன்று தேர்வுகளில் இரண்டில் பாசாகதால் அவன் தேர்வு முடிவுகள் குறித்து அவனுடைய கணிப்பு சரியாகவே இருந்தது. மாரிமுத்துவின் அம்மா தன் மகனின் நிலையைவிட காசியின் தேர்வு முடிவுக்காக அழுது கொண்டிருந்தார்கள். காசியை அவன் வீட்டிற்குச் சென்று பார்த்து அவனைக்கட்டிக்கொண்டு தன்னால்தான் அவனுக்கு அந்த நிலைமை என்று கதறி அழுதார்களாம். காசி எங்களுக்கு எழுதிய கடைசிக் கடிதத்தில், மாரிமுத்துவின் மாமா ஸ்டேட் பேங்க்கில் தனக்கு சப் ஸ்டாஃப் வேலை வாங்கித்தரப்போவதாகவும், தான் எஸ்.எஸ்.எல்.ஸி யில் ஃபெயிலானதால்தான் இது சாத்தியமானது என்றும், பாஸாகி இருந்தால் பேங்க் வேலை அதுவும் ஸ்டேட் பேங்க்கில் வேலைக்கு வாய்ப்பில்லை என்றும் இதையும் மாரிமுத்துவின் அம்மாதான் அவனுக்காகச் செய்திருப்பதாகவும் பெருமையுடன் எழுதியிருந்தான்.
அடுத்த வருடம் நடந்த பரீட்சையில் காசி எஸ்.எஸ்.எல். சி பாஸ் செய்திருந்தான். சீக்கிரத்திலேயே க்ளார்க் ப்ரொமோஷன் கிடைத்து, பின் திரும்பிப் பார்க்க நேராத வகையில் அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்று இப்போது பெரிய பொசிஷனில் வசதியான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சங்கரன் போன மாதம் என்னைப் பார்த்தபோது சொன்னான். மாரிமுத்து குணமாகாமல் ரொம்ப நாள் கோமாவில் இருந்து பின்தான் தவிர்க்கவியலாதது நேர்ந்ததாகத் தெரிந்தது. மாரிமுத்துவின் அம்மா ப்ராயச்சித்தத்திற்காக காசிக்குப் போய்வந்திருப்பதாகவும் அங்கு போய் வந்தபின் பால் சாப்பிடுவதை விட்டுவிட்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.
—————————
- நிலைத்தகவல்
- அவன் – அவள் – காலம்
- சீறுவோர்ச் சீறு
- அரிமா விருதுகள் 2012
- ராஜதுரோகங்களின் மத்தியில்.. அகிலின் “ கூடுகள் சிதைந்த போது…” சிறுகதைத்தொகுதி..
- உருக்கொண்டவை..
- சூபிஞானி பீர்முகமது அப்பா –விளிம்புநிலை மக்களுக்கான மீட்சி
- பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்
- மகிழ்திருமேனியின் “ தடையறத் தாக்க “
- ஊமைக் காயங்கள்…..!
- தங்கம்10 தொழில்நுட்பத்தில் தங்கம்
- நினைவுகளின் சுவட்டில் – 88
- திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை
- இதுவேறு நந்தன் கதா..
- பாரதி
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5
- ருத்ராவின் குறும்பாக்கள்
- ருத்ராவின் குறும்பாக்கள்
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 29
- துருக்கி பயணம்-5
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் 16
- 2012 ஜுனில் பூமிக்கு நேராகச் சூரியனைக் கடந்து சென்ற சுக்கிரன்
- ஜுமானா ஜுனைட் கவிதைகள்
- அன்பின் தீக்கொடி
- நெஞ்சு பொறுக்குதில்லையே
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 23)
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-5)
- முள்வெளி அத்தியாயம் -12
- தாகூரின் கீதப் பாமாலை – 17 விருப்பமற்ற இல்லம்
- திலக பாமா – தனித்து நிற்கும் ஒரு கவிஞர்
- ஒரு விவாகரத்து இப்படியாக…!
- வழக்கு எண் 18/9 திரைப்பட விமர்சனக் கூட்டம்
- கன்னியாஸ்திரிகளின் சிலுவைகளும் சில பிரார்த்தனைகளும்
- பிரேதம்
- பஞ்சதந்திரம் தொடர் 47
- புதிய கட்டளைகளின் பட்டியல்..
- தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்
- வருகை
- காசி யாத்திரை
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றுமூன்று
- கணையாழியின் கதை