பீர்முகமது அப்பாவின் படைப்புலகம் யதார்த்தமும் கனவும் ஒருங்கே உருப்பெற்ற தரிசனமாகும். யதார்த்தம், வாழ்வின் இருப்புகுறித்த நிகழ்வுகளின் தொகுப்பாகவும், கனவுலகம் விரும்புகிற நேசிக்கிற வாழ்க்கையைப் பற்றிய படிமமாகவும், அமையப் பெற்றுள்ளது. கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இம்மூன்றும் ஒன்றில் ஒன்று கலந்து காட்சி சித்திரங்களாக உரு மாறி இடம் பெயர்கின்றன.
பீரப்பாவின் மொழியில் வாழ்வின் இருப்பு திருப்திகரமானதாக இல்லை. துன்பதுயரங்களின் புதர்க்காடாக கிடக்கிறது. இருள் நிறைந்த துக்கத்தின் சாயல்களை அதில் நிறையக் காணலாம். இத்தகைய பிம்பங்களிலிருந்து விடுபடவேண்டி இறையிடம் வேண்டுகிற குரலின் தொனி ஞானப்புகழ்ச்சி முழுவதிலும் விரவி இழையோடிக்கிடக்கிறது.
சுயம்சார்ந்த துன்பங்களிலிருந்து விடுபட வேண்டுதல் என்பது ஒரு பகுதியாகவும், சுயத்தைதாண்டி சுற்றம், இனம், புவிமுழுவதும் துயர்விலகி இன்பம் நிறையவேண்டும் என்பது மறுபகுதியாகவும் ஒருங்கிணைந்து இவ்வுணர்ச்சிகள் வலிமையாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றன.
வாழ்வின் அடிப்படை துன்ப துயரங்கள் எதன்காரணமாக உருவாகின்றன என்பது பற்றிய குறிப்புணர்த்தல்கள் ஞானப்புகழ்ச்சியின் நிறைய இடங்களில் தென்படுகின்றன.
எந்தன் வறுமையறக் கண்டுன்னை வருந்தியானும் (87)
எளிமையறிந்து ஏழைக்கிரங்குவாய் (131)
என்றன் வறுமை தவிர்ப்பாய் (176)
பஞ்சமகற்ற நின் வானவரோடு (37)
புவிக்குள் பசித்தவர்க் கொன்று ஈயாத (9)
இப்பாடல்வரிகளில் இடம்பெறும் சில முக்கியச் சொற்களை வறுமை, ஏழை, பஞ்சம், பசி என தொகுக்கலாம். இவையனைத்தும் அடித்தட்டில் அல்லல்படும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள். அகம் புறம் என பிளவுண்டு கிடக்கும் மனிதவாழ்வின் நிலைபாடுகள் சமூகத்தளத்தில் வறுமையின் சுவடாகவும், பசியின் ரேகைகளாகவும் மிகக் கொடுரமான கோரமுகத்தை காட்டுகின்றன.
இத்தகையதான புறவாழ்வின் குரூரங்களை கடந்து செல்ல அகஞானவாழ்வை நோக்கியும், இறையருள் வேண்டியும் பிரார்த்தனை புரிதல் ஒருவகையான விடைதேடலாக நிகழ்கிறது.
ஈனமொரு நாளுமணுகாமலடியேன் (70)
பழுதுபல வினைகளொரு நாளும் வராமல் (43)
எனையடுத்தோர்க் கோரிழிவு வாராமல் (57)
இனத்திலுள்ளோர் ரனைத்துமோரிழிவும் வாராமல்
சுந்தரப் புவிக் குள்ளொரு தீங்கு வராமல் (61)
எனத்தொடரும் வரிகளில் ஈனம், பழுதுபலவினை, இழிவு, தீங்கு உட்பட்ட சர்வமயப்பட்ட துயரின் ரூபங்கள் களையப்பட வேண்டுமென்ற பிரார்த்தனைக்குரல் நீண்டு செல்வதைக் காணலாம்.
இங்கே மனித நேயத்தின் மிகச்சிறந்த பேருருகொண்ட வடிவமாக தனக்காக மட்டுமின்றி, தன்னையடுத்து வாழ்வோருக்கும், தன் இனம் சார்ந்த மக்களுக்கும், இந்த சுந்தரப் புவியில் வாழும் அனைத்து மக்களுக்கும் இழிவுவராமல் காத்திட இறைஞ்சும் பீரப்பாவின் குரல் மனித நேயப் பண்பின் அடையாளமாக உயர்ந்தோங்கி நிற்கிறது.
நாம் எதிர்கொள்ளும் வாழ்வு ஒடுக்குவோர்-ஒடுக்கப்படுவோர் ஆதிக்கம் செலுத்துவோர்-அடிமைப்படுவோர் என முரண்பட்டு இயங்குகிறது. பொருளியல் ரீதியாகவும், சமூக, பண்பாட்டியல் ரீதியாகவும் இந்த ஒடுக்குமுறை நிகழ்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் நின்றுகொண்டு ஆதிக்கம் செலுத்தும் சக்திகளை அம்பலப்படுத்துவதும், அச்சக்திகள் மீதான கோபத்தை, கண்டனத்தை தெரிவிப்பதும், அவசியத்தேவையாக உள்ளது. இந்த கோபமான கண்டனக் குரலையும் பீரப்பா ஒலிக்கத் தவறவில்லை.
இருளாக, துக்கமாக, புதர்க்காடாக காட்சி தருகிற இந்த வாழ்க்கை மீது வன்முறையைத் தொடுப்பவர்கள் யார் என்கிற கேள்விக்கான பதிலையும் இப்பாடல்கள் வெளிப்படுத்திக் காட்டுகின்றன.
கல்லாத கயவரெனை வெல்லாமல் அடியேன் (76)
கொடியவர்கள் முடுகிவினை (59)
வஞ்சகரென்னோடு பல்மாறு பேசாமல் ஈனர்சிலரென்னை வீடு செய்யாமல் (50)
பொல்லாத சூமரெனை வெல்லாமல் (47)
ஈயாத லுத்தரையும் படைத்தா யெம் இறைவனே (9)
இங்கே கல்லாத கயவர், கொடியவர், வஞ்சகர், ஈனர், பொல்லாத சூமர், ஈயாதலுத்தர் என்பதாக அர்த்தப்படுத்தப்படும் சொற்களில் இடம்பெறும் கோபம் அதிகாரம் சார்ந்த அடையாளத்தை முற்றிலுமாக எதிர்த்தே வினைபுரிகிறது.
இதுபோன்றே இறைவனுடனான உரையாடலில் தன்னை அடிமையாகவும், கோழையாகவும், பேயனாகவும், சிறுவனாகவும், பயலாகவும், மூடனாகவும், தாழ்நிலையில் வைத்து இறைஞ்சி இரங்கி வேண்டும் பீரப்பாவின் குரல்.
வெறியருக்கு நீ பவுசளித்தவன்/வள்ளனீதி எவர்க்கும் ஈந்தவன் /
அள்ளும் நாயகர்க்கு அமுதளித்தவன்/அடியனுக்கருள் தருகிலாய்
அன்பனே நீ நடத்தும் நீதி அநீதியாக இருந்ததே (375)
என சில நேரம் மிக உரிமையோடு இறைவனை நோக்கி, கோபம் சார்ந்த இரங்கலாகவும் வெளிப்படுகிறது.
பீரப்பா தரிசிக்க விரும்பிய உலகம் என்பது துக்கமற்ற, சங்கடமற்ற, குரூரமற்ற அற்புதமான உலகம் இதுவே பாடல்பிரதிக்குள் கனவுலகமாக படைத்துக் காட்டப்படுகிறது. இதன் ஒருபகுதியாக வளம் நிறைந்த வாழ்வை தேடல் என்பது இறைவேட்டலாக வெளிப்படுகிறது.
சிந்திடாத பொலிவும் மெனக்குன் தறஜாத்துந் தந்தருளென் செல்வனே (35)
குறையாத செல்வந்தருவாய் (41)
தறைமீது செல்வந் தவறாத வாழ்வுந்தருவாய் (42)
இரணப்பொலிவு றகுமத்திலாமலடியேன் (64)
வித்தார வாழ்வு தருவாய் (178)
சிந்திடாத பொலிவு, வற்றாத செல்வம் இரணப்பொலிவு எனத்தொடரும் உணர்வு நிலைகள் இன்மையிலிருந்து வெளிக்கிளம்புவதாகவே உள்ளது. இத்தகையதான நிறைந்த வாழ்க்கை நிஜமாகாத ஒரு கனவாகவே உருப்பெற்றுள்ளது. சொர்க்க சுகங்கள் அனைத்தும், ஹுருல்ஈன்களுடனான (அரம்பைமாரும்)உறவும், அண்ணல் நபிநாயகத்தின் அருளும், மறுமைக்காட்சியும், இக்கணத்திலே இவ்வுலகத்திலேயே அருளும்படி (227) இறையிடம் வேண்டும் குரல் ஆழமாகவும், அழுத்தமாகவும் ஒலிப்பது இங்கே கவனிக்கதக்கது.
ஆன்மீகஞானிகளை இவ்வுலகு தொடர்பான அனைத்து ஆசாபாசங்களுக்கும் எதிரானவர்கள், மக்கள் பிரச்சினைகள் உணர்ச்சிகளிலிருந்து அந்நியமாகிப் போனவர்கள் என்பதாக கற்பிதம் செய்து ஞானப்படித்தரங்களை மட்டுமே சிலர்விளக்க முற்படுகின்றனர். வைதீக பிராமணீய சிமிழுக்குள் அடைத்துவிடவும் முயல்கின்றனர்.
இன்னுஞ்சிலரோ, சூபிக்கவிஞர்களை இஸ்லாமியக் கொள்கைக்கே முரணானவர்கள், கற்பனைவாதிகளாய் உளறுபவர்கள் என எந்தவித பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் மிக எளிமையாக முத்திரை குத்தியும் விடுகிறார்கள்.
எனவே இவ்விரு அதீத எல்லைகளையும் மறுவரையறை செய்ய வேண்டியுள்ளது. சில கடமைகள் வடிவிலான சடங்காச்சாரங் களைத் தவிர்த்துப் பார்த்தால் இறை அம்சமாகவும் சமூக அம்சமாகவும் சில பண்பாட்டியல் மதிப்புகளை இஸ்லாம் தன்னகத்தே கொண்டுள்ளது.
அடிமைப்பட்டோர் விடுதலை,அநாதைகள், விதவைப்பெண்கள், நலிந்தபிரிவினர் என விளிம்புநிலை மக்களுக்கான மீட்சி, சமத்துவம், மனிதகுலநேயம் என இந்தப் பண்பாட்டியல் மதிப்பீடுகளை வரிசைப்படுத்தலாம்.
இஸ்லாத்திற்காக வாழ்தல் என்பதே இஸ்லாம்பேசும் விடுதலையை, சகோதரத்துவத்தை, மனித நேயத்தை உருவாக்க அர்ப்பணித்தல் என்பதாகவே பொருள்படுகிறது.இந்தவகையில்தான் சூபிஞானிகளின் சமூகவாழ்வியல் கண்ணோட்டம் சார்ந்த சிந்தனை பங்களிப்பின் தடயங்களை மறுபடியும் தேட வேண்டியுள்ளது.
- நிலைத்தகவல்
- அவன் – அவள் – காலம்
- சீறுவோர்ச் சீறு
- அரிமா விருதுகள் 2012
- ராஜதுரோகங்களின் மத்தியில்.. அகிலின் “ கூடுகள் சிதைந்த போது…” சிறுகதைத்தொகுதி..
- உருக்கொண்டவை..
- சூபிஞானி பீர்முகமது அப்பா –விளிம்புநிலை மக்களுக்கான மீட்சி
- பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்
- மகிழ்திருமேனியின் “ தடையறத் தாக்க “
- ஊமைக் காயங்கள்…..!
- தங்கம்10 தொழில்நுட்பத்தில் தங்கம்
- நினைவுகளின் சுவட்டில் – 88
- திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை
- இதுவேறு நந்தன் கதா..
- பாரதி
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5
- ருத்ராவின் குறும்பாக்கள்
- ருத்ராவின் குறும்பாக்கள்
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 29
- துருக்கி பயணம்-5
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் 16
- 2012 ஜுனில் பூமிக்கு நேராகச் சூரியனைக் கடந்து சென்ற சுக்கிரன்
- ஜுமானா ஜுனைட் கவிதைகள்
- அன்பின் தீக்கொடி
- நெஞ்சு பொறுக்குதில்லையே
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 23)
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-5)
- முள்வெளி அத்தியாயம் -12
- தாகூரின் கீதப் பாமாலை – 17 விருப்பமற்ற இல்லம்
- திலக பாமா – தனித்து நிற்கும் ஒரு கவிஞர்
- ஒரு விவாகரத்து இப்படியாக…!
- வழக்கு எண் 18/9 திரைப்பட விமர்சனக் கூட்டம்
- கன்னியாஸ்திரிகளின் சிலுவைகளும் சில பிரார்த்தனைகளும்
- பிரேதம்
- பஞ்சதந்திரம் தொடர் 47
- புதிய கட்டளைகளின் பட்டியல்..
- தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்
- வருகை
- காசி யாத்திரை
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றுமூன்று
- கணையாழியின் கதை