மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 29

This entry is part 19 of 41 in the series 10 ஜூன் 2012

32. வெகு நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் மதிற்சுவருக்கு மறுபக்கம் நள்ளிரவில் தொலைந்த ஆட்டைத்தேடி அலைந்ததும், செண்பகத்துடன் மூன்று காவலர்கள் களையும் பூசாரிஒருவனையும் காணநேர்ந்ததை நினைவு கூர்ந்தான். அவர்கள் செட்டிக்குள திட்டிவாசல் வழியாக கோட்டைக்குள் நுழைந்திருக்கவேண்டும். தவிர காவலர்களின் அனுமதியோடு உள்ளே நுழைந்திருக்கிறார்களெனில் அரசாங்கத்தில் செல்வாக்குள்ள மனிதர்களின் சகாயமின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை. அதிகாரம், செல்வாக்கு என்றுவரும்போது  கள்ளமும் சூதும்  தவறாமல் உள்ளே நுழைந்துவிடும் போலிருக்கிறது.

பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கேன் என்றும் கார்மேகம் நினைப்பதுண்டு. பிரதானி நந்தகோபால்பிள்ளை கூற்றையும் ஏற்க வேண்டும்.  மலையும் கோட்டையும் இடைக்குடிகளுக்குச் சொந்தமென்கிறார். எந்தக்காலத்திலோ கோனார் ஒருவர் இக்கோட்டையையும் மாடமாளிகையும் கட்டி எழுப்பினாராம்.  இவனுக்கு அவர்கள் தாயாதி உறவென்கிறார். கிருஷ்ணப்ப நாயக்கருக்கு பிறகு தாமேகூட கோட்டையைப் பிடிக்கலாம் என்கிறார்.

நந்தகோபால் பிள்ளை மனோரதம் நிறைவேறினால் இவன் ஆடுமேய்க்க தேவையில்லை. துறட்டுகோல் எடுத்த கையில், வாளை சுழற்றலாம்.  அதற்கும் பழகி இருக்கிறான். ஜெகதாம்பாளுக்கு மட்டும் நம்பிக்கை இல்லை. ‘பிழைப்பதற்கு வழி என்னவென்று தேடு, இவ்வளவு தினங்களாக இந்த நந்தகோபால் பிள்ளை எங்கே போயிருந்தார்? கேள்வி நியாயமின்றி தண்டல்காரன் தீர்வை பாக்கிக்காக ஆடுகளை இழுத்துபோகிறானென்று எத்தனை நாள் முறையிட்டிருப்பேன். அரசாங்க நடவடிக்கைளை குற்றஞ்சொல்லமுடியாதெனவும், இதில் தாம் தலையிடமுடியாது என்றும் சொன்னவராயிற்றே?, என்கிறாள்.

– ஐயா வந்து விட்டார், உங்களை வரச்சொன்னார்.

திடீரென்று, பின்னாலிருந்து வந்தக் குரலைக்கேட்டு கார்மேகம் பயந்துபோனான். வந்தவன் இன்னாரென்று தெரியவில்லை. இவன் பதிலுக்குக் காத்திருப்பவனாவும் தெரியவில்லை. விடுவிடுவென்று மரங்களுக்குள் வேகமாய் நடந்தான். கார்மேகம் அவன் பின்னால் ஓடவேண்டியிருந்தது. “சிறிது நிதானமாக நடந்தால் உம்மைப் பின் பற்றிவர எனக்கு சௌகரியமாக இருக்கும்”, என்றான். “அரை கூப்பீடு தூரமே நாம் செல்லவேண்டியது. வழியைத் தவறவிட்டால் கமலக்கண்ணியம்மன்கோவிலுக்குள் திட்டிவாசல் வழியாக வந்துவிடு. நம் ஆட்கள் இருப்பார்கள்”, என இருட்டு பேசியது.

அடுத்த அரை நாழிகை நேரத்தில் இருட்டு ஆசாமியும் அவனுமாக  கமலக்கண்ணி அம்மன் கோவிலுக்குக்கீழேயிருந்த நிலவறையொன்றுக்கு வந்திருந்தனர். அங்கே  நந்தகோபால் பிள்ளையோடு வேறு இருவர் இருந்தார்கள். இருட்டையும், எண்ணெய் வாடையுடன் கூடிய ஒரேயொரு தீவட்டியையையும் தவிர வேற்று மனிதர்களில்லை.

– கார்மேகம் உட்கார்.  வெகுநேரமாக காத்திருந்தாயோ? -நந்தகோபால்பிள்ளை. .

– இல்லை. எனினும் அரண்மனைக் காவலர்கள்  பாராவில் இருந்தனர். அவர்களிடம் சிக்கிக்கொள்வேனோ என்று அஞ்சினேன்.

– இனி  கீழ்க்கோட்டை வாசல் வழியாக வரவேண்டாம். சந்திராயன் துர்க்கம் பிடித்து வரவேண்டும். இனியாவது கவனமாக இரு. இவர்களை இதற்குமுன் பார்த்திருக்கிறாயா?

– இல்லை.

– இவர் தானாதிபதி சேஷாசல ஐயங்கார். இராகவ ஐயங்காரின் சட்டகர். மற்றவர் பட்டத்து ராணியின் சகோதரர் கோவிந்தராஜுலு நாயுடு. நாம் அதிக நேரம் இங்கே இருக்க முடியாது. எவ்வளவு சீக்கிரம் இவ்விடத்திலிருந்து கலைந்து செல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கலைந்து செல்லமுடியுமெனில்  மெத்தவும் பயனுண்டு.

– எனக்கு விளங்கவில்லை.

– செண்பகத்தின் மகனை விஜயநகர சாம்ராச்சியத்தின் பட்டம் சூட்ட ஏற்பாடுகள் நடக்கின்றனவென நீதானே கூறினாய்.

– ஆமாம்.

– ஆனால் அதற்கான பூர்வாங்க யோசனைகள் எங்கே எப்படி அரங்கேறியதென்று உனக்கு தெரியாதல்லவா?

—-

– நமது மகாராயர் விஜயநகர சக்கரவர்த்தி வெங்கடபதிக்கு ஆறு மனைவியர். ஆறுமனைவியர்களிருந்தும் அவர்களில் ஒருவருக்குக்கூட சந்தான பாக்கியமில்லை. அவர்களில் மூத்தவர் வெங்கடாம்பாள். அவர் பிள்ளை இல்லாதகுறையால் வரக்கூடிய இழப்பை யோசித்துபார்த்திருக்கிறார். நாளைக்கே மன்னருக்கு அறுவரில் யார் வாரிசொன்றை பெற்று கொடுக்கிறார்களோ அவர்களுடைய செல்வாக்கு அரண்மனையில் உயர்ந்துவிடும். மற்றவர்கள் கதி அதோகதிதான். மன்னர் அந்தரபுரத்திற்கு திரும்புகிறபோது தாம்பூலம் மடித்துக்கொடுக்கவும், கால் கை பிடித்துவிடவும் என்றாகிவிடும் என்பதுறுதி. இந்நிலையில் ஏதேனும் செய்தாகவேண்டும். தமது நெருங்கிய பார்ப்பனர் ஒருவரின் மனைவி கர்ப்பமுற்ற சேதி கிடைத்திருக்கிறது. வெங்கடாம்பா புத்தியில் வேறு மாதிரியான யோசனைகள் தோன்றியிருக்கின்றன. மன்னரிடம் தாம் கர்ப்பமுற்றிருப்பதாகத் தெரிவித்தார். அதாவது பொய் சொல்லியிருக்கிறார். அங்கே அந்தணர் பாரியாள் வயிறு பெருத்ததோ இல்லையோ வெங்கடாம்பாள் வயிறு பெருத்தது. அந்தணர் மனைவிக்கு பிரசவ வலிகண்டு தாய்வீடுபோனபோது வெங்கடாம்பாளும் வலியால் துடித்தார் அல்லது வலி கண்டவர்போல பாசாங்கு செய்தார். ஆண் மகவொன்றை அரசரிடம் கொடுத்து தாம்பெற்ற செல்வமென்றார். நாடே விழாக்கோலம்பூண்டது. குழந்தைக்கு சிக்கம நாயக்கர் என்று பெயரையும் சூட்டிமகிழ்ந்தார்கள். நீ இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிவித்த சங்கதியிலிருந்து அதில் வேறொரு சதி இருக்கிறதென்று அறியவந்தோம். நீ தெரிவிப்பது உண்மையெனில் வெங்கடாம்பாள் தமது மகனென்று விஜயநகர பேரரசுக்கு வாரிசாக அறிவித்திருக்க்கிற சிக்கம நாயக்கன் என்பவன், உண்மையில் அந்தணர் குழந்தையல்ல, செண்பகத்தின் மகன்.

– இதில் நமது நாயக்கருக்கு என்ன இலாபம்?

– இதென்ன முட்டாள்தனமான கேள்வி.  இரண்டு தினங்களுக்கு முன் என்ன நடந்தது. ஒவ்வொரு முறையும் மஹாராயருக்கெதிராக இவர் குழப்படி செய்வதும், அவர்கள் சிறை வைப்பதும், தஞ்சை நாயக்கர் தயவால் உயிர் பிச்சை அளிப்பதும் ஊரறிந்த உண்மை ஆயிற்றே. ஆக விஜயநகரத்தில் இவர் நினைக்கிறவரை ஆசனத்தில் உட்காரவைத்துவிட்டால் எல்லாம் பிரச்சினக்கும் தீர்வு கிடைத்துவிடுமே.

– இதில் உங்களுக்கு என்ன லாபம்?

– சிக்கம நாய்க்கன் இன்னாரென்ற உண்மையை மன்னருக்கு தெரிவிக்க முடிந்தால், கிருஷ்ணபுர நிர்வாகத்தை எம்மிடமோ, அல்லது இதோ நம்முடைய கோவிந்தராஜுலு நாயக்கரிடமோ மகாராயர் ஒப்படைப்பாரென்கிற நம்பிக்கை  எங்களுக்கு இருக்கிறது.

– இதற்கெல்லாம் மிகுந்த பொருட்செலவு ஆகுமே.

– கமலக்கண்ணியென்று கூறி ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கும் பெண்ணை வீழ்த்த நமது ராஜாவின் மூத்தமனைவியின் சகோதரரும் நமக்குத் துணையாக இருக்கிறார்கள்.  அதுவன்றி செட்டிகுளத்தில் கிடக்கிற பொற்சிலை கைக்குக் கிடைத்தால் ஏழுதலைமுறைக்கு பிரச்சினைகளில்லை. கிருஷ்ணபுரம்போல இரண்டு பட்டணங்களை கட்டி ஆளலாம்.

செட்டிகுளத்தில் பொற்சிலையா?

– ஆம்பொற்சிலையொன்று கிடக்கிறது. கமலக்கண்ணிக்கு நான்குபெண்களை இதுவரை பலிக்கொடுத்தாயிற்று ஐந்தாவதாக ஒருத்தியை பலிகொடுக்கமுடிந்தால் சிலை கைக்குக்கிடைத்துவிடும்.

நந்தகோபால் பிள்ளை வாய்விட்டு சிரித்தார்; காத்திருந்தவர்கள் போல அங்கிருந்த பிறமனிதர்களும் கலகலவென்று சிரித்தார்கள்.

(தொடரும்)

Series Navigationருத்ராவின் குறும்பாக்கள்துருக்கி பயணம்-5
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *