ராஜதுரோகங்களின் மத்தியில்.. அகிலின் “ கூடுகள் சிதைந்த போது…” சிறுகதைத்தொகுதி..

This entry is part 5 of 41 in the series 10 ஜூன் 2012

கோவை இலக்கியச் சந்திப்பு என்ற இலக்கிய நிகழ்ச்சி மாதந்தோறும் கோவையில் இளஞ்சேரல், பொன் இளவேனில், யாழி, தியாகு போன்றவர்களால் காத்திரமான இலக்கிய விமர்சனங்கள், இலக்கிய உரைகளை முன்வைத்து நடத்தப்படுகிறது. மே மாத நிகழ்வில் கனடாவில் வாழும் அகிலின் “ கூடுகள் சிதைந்த போது..” சிறுகதைத் தொகுப்பு அறிமுகக் கூட்டமாக அமைந்திருந்தது. ஞானி, யுகமாயினி சித்தன், செல்வி, சுப்ரபாரதிமணியன் ஆகியோர் அந்த நூலை பற்றிப் பேசினர். பொதிகைச் சித்தர் சோலை சுந்தரப் பெருமாளின் “ தாண்டபுரம்” நாவலிப்பற்றி விரிவான விமர்சனக்கட்டுரையை வாசித்தார்.

அகிலின் தொகுப்பு பற்றி சுப்ரபாரதிமணியன் உரை:

புலம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கை அனுபவங்களும், புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் ஈழ மண்ணின் போர், மற்றும் துயரங்கள் பற்றி எழுதுவதும் 30 ஆண்டுகளுக்கு மேலாக நமக்குக் கிடைத்து வருகிறது. அந்த வகை எழுத்துக்களின் பொது மாதிரிகளை இந்த்த் தொகுப்பும் கொண்டிருக்கிறது.. புலம் பெயர்கையில் நாடுகளின் எல்லைகளைத் தாண்டும் போது அவர்களின் அவஸ்தை, தப்பிக்கிற போது எழும் ஆசுவாசம் கணிசமான கதைகளில் வலி உணர்கிற வகையில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இன்று பெருகி வரும் முதியோர் இல்லங்கள் புலம் பெயர்ந்த மக்கள் உள்ள மேற்கத்திய நாடுகளில் சுலபமாகக் காண்க் கிடைகிற அவலம் பற்றி அகிலும் திரும்பத்திரும்ப்ப் பேசுகிறார். முதியோர்களின் ஏக்கம், கை விடுபவர்களின் உறுத்தல் வெளிப்படுகிறது.தமிழனின் உயர்வு, சிங்களவனின் சிறுமை போன்றவை கட்டமைக்கப்படும் சிறுகதைகள் வழமையானவையே. வெகுவாகச் சிலாகிக்கப்படும் பதவி உயர்வு கதையில் சிங்களவனின் மனமாற்றம் இத்தகையதே.அசைவம் சாப்பிட்டுக் கொண்டிருப்பவன் புலம் பெயர்கையில் ஏற்படும் அனுபவங்கள் சைவனாக மன மாற்றம் ஆவதைக் கூட வேறு வகையில் சொல்லியிருந்தால் திணிக்கப்பட்ட்தாய் தோன்றும் மன்மாற்றம் இயல்பானதாய் இருந்திருக்கும்..இத்தொகுப்பின் போர் சூழல் கதைகளை முள்ளிவாய்க்காலோ, வேறு எந்த ஈழப்பகுதி நிகழ்வாகவே எடுத்துக் கொள்ளலாம். எல்லாம் துயரங்களின் சர்வ மயம். . ரேடியோபெட்டியோ, வீடோ தரும் நினைவுகளும், அவை சார்ந்த ஆறுதல்களும் குறியீடாக இயங்குகின்றன. ஒன்று செயல் இழக்கையில் மனிதர்கள் சிதைந்தும், சாவை ஏற்றும் கொள்கிறார்கள். தமிழகச்சூழலில் தென்படும் போலித்தனமும் கடவுளும் கந்தசாமியும் போல் அண்ணாநகரில் கடவுள் என்ற கதையில் வெளிப்பட்டிருக்கிறது. சாதியம் செயல்படும் தளங்களைக் கொண்ட கதைகளை துணிச்சலாக எழுதியிருக்கிறார். புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இதை ஈழ்மக்கள் தீவிரமாகக் கைகொள்கிறார்கள்.இது ஈழசூழலிலும் அயல் மண்ணில் திருமண பேரங்களின் போதும் வெளிபடுவதை சரியாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.ஈழ மண்ணில் வெள்ளாளர் அல்லாத் தலையாக போராளிகள் உருவாகினர். தலைமையில் தலித்துகள் இருந்திருக்கின்றனர். சாதி ஒழிப்பை முன் நிறுத்துவது பெரும்பான்மையான ஆதிக்க சாதியினரிடமிருந்து தங்களை அந்நியப்படுத்தும் என்பதால் முன் எடுக்கப்படவில்லை.போராளிகள் நிர்வாகத்தில் இருந்த பகுதிகளில் இருந்த இந்து கோயில்களில் தலித்துகளின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. முஸ்லீம்கள் விரட்டப்பட்டது ஞாபகம் வருகிறது. இந்த வகை உள் முரண்கள் முழு விடுதலைக்கு பின் கவனிக்கபடும் என்ற சமாதானங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.. இன ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்டி சாதியவிடுதலையை கவனிக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. இதே நிலைமை அவர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் தங்கள் சாதியைச் சார்ந்தவர்கள் தனி அமைப்புகளை உருவாக்கிக் கொள்வதும், கோயில் கட்டுவதும், திருமண பந்தங்களில் சாதி சார்ந்த இறுக்கமும் தொடர்ந்திருக்கிறது. இது இரண்டு கதைகளில் நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நினைவுகளை மீட்டெடுக்கவும் அதில் தோய்ந்து போவதும் குடும்ப நிலையை பேணும் நிர்பந்தங்களும் அவர்களின் வாழ்நிலை நிர்பந்தங்களாய் எழில் வெளிபடுத்தியிருக்கிறார்.ஈழ மக்களின் உள்ளூர் அனுபவங்களை உள்ளூரில் எழுத முடியாது. ராஜ துரோகம் வரை செல்லும் ஒரு குற்றம் அது என்கிறார் முன்னுரையில் கார்த்திகேசு சிவத்தம்பி. அவற்றை புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து எழுதுவதும் போராட்டத்திற்கான நிதி அளிப்புமே போராட்டத்தை நீண்ட காலம் கொண்டு சென்றதாக அகில் கூறுகிறார்.

= சுப்ரபாரதிமணியன் ( subrabharathi@gmail.com)

Series Navigationஅரிமா விருதுகள் 2012உருக்கொண்டவை..
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *