அன்னியமாகிவரும் ஒரு உன்னதம் – பழகி வரும் ஒரு சீரழிவு

This entry is part 25 of 43 in the series 17 ஜூன் 2012

நா. விச்வநாதனை எத்தனை பேர் அறிவார்களோ, படித்திருப்பார்களோ, படித்து ரசித்திருப்பார்களோ தெரியாது. இன்றைய எழுத்து வானில் ஒளிரும் தாரகைகளில் அவர் இல்லை. நிச்சயம்.  அவர் எழுத்தும், அவர் நம் முன் நிறுத்தும் உலகமும் அவ்வுலக மனிதரும் வாழ்க்கையும் இன்று ஃபாஷனபிளாகக் கருதப்படுபவை அல்ல. இதுவும் நிச்சயம். இவை கூகிள் தந்தவையோ, கட்சிக்கொள்கைகள் தந்தவையோ அல்ல. லத்தீன் அமெரிக்க தந்ததும் அல்ல. தஞ்சை கிராமம் தந்தவை.   அவர் அதிகம் எழுதுபவரும் அல்ல. இதையும் சேர்த்து மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கவிதைத் தொகுப்புகள். பத்து வருடங்களுக்கு முன் அவர் கவிதைத் தொகுப்பின் தட்டச்சுப் பிரதி அச்சுக்குப் போகும் முன் எனக்குத் தரப்பட்டது. அதன் கவித்துவமும், அலட்டலற்ற இயல்பும் எனக்குப் பிடித்துப் போயின. அதற்கு முன்னுரை ஒன்று எழுதிக் கொடுத்தேன். அத் தொகுப்பு பிரசுரமாயிற்றா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அவர் போலவே அவர் எழுத்தும் கவிதையும். அது பாட்டிலே அது இருக்கும். அவரைத் தேடித்தான், ”நல்லா இருக்கீங்களா?” என்று நாம் போய்க் கேட்கவேண்டும். இல்லையெனில் அவர் இருக்குமிடம் தெரியாது. ஆனால் அதிசயமாக, இன்று, நிகழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் புத்தாண்டு விழாவில் பரிசு பெறும் 27 தமிழ்ப் புத்தகங்களில் நா.விசுவநாதனின் நிரம்பித் ததும்பும் மௌனம் என்னும் இப்போது பேசிக்கொண்டிருக்கும் சிறுகதைத் தொகுப்பும் ஒன்று. அவரும் அவர் எழுத்தும் எப்படி பரிசுக்கும் பாராட்டுக்கும் உரியதாயின என்று எனக்குத் தெரியாது. இன்றைய இலக்கிய சூழலில் ஓர் அரசு பரிசு பெற தேர்வு பெறக் கூடும் மனிதர் அவரல்ல. எழுத்து அவரதல்ல. இருப்பினும் நடப்பு உண்மை நம் எதிரில் செய்தியாகியுள்ளது.

இதற்கு முன் பாட்டிகளின் சினேகிதன் என்ற அவரது முதல் சிறுகதைத் தொகுப்பை நான் படித்திருக்கிறேன். நா. விசுவநாதனின் மனிதரும் உலகமும் வாழ்க்கை மதிப்புகளும் ஏதும் மாறிவிடவில்லை. அவர் தான் அவர் எழுத்துக்கள் எல்லாவற்றிலும், கவிதையிலும் தான். அந்தக் கவித்வம் சாதாரண மொழியினால் ஆனது. இயல்பான வாழ்க்கைப் பார்வையினால் ஆனது. அந்தக் கவித்வம் இவரது சிறு கதைகளிலும் பிரசன்னம் கொண்டுள்ளது.

ஒரு சில வரிகளை அவரது கவிதைகளிலிருந்து தருகிறேன். இவ்வரிகள் இவர் கதைகளின் பின்னிருந்து  மின் மினிகளாகப் பளிச்சிட்டு ஒளிரும். பின் மறையும். அதாவது காண்பவர்களுக்கு  காட்சி தரும் என்று சொல்ல வேண்டும்.  .

நூறு வயது வாழ்ந்த
நேசம் கொண்ட கிழம்
தொட்ட கதவு ……….

நாகரீகக் குறைவென்று
குதித்து விளையாடிய
திண்ணையை இடித்தபோது…….

பிழைப்புக்காய் ஊர் தேடி
கடல் தாண்டி
பாஷை தொலைத்த
பிள்ளைகளைப் பெற்று……..

பூவின் சேதி தெரியுமா?
சினேகிதனே
மஞ்சள் நிறம் காட்டி
மகத்தான செய்தி சொல்லக்
காத்திருக்கும் தவம் புரியுமா?…

வானத்தில் புள்ளியாய்
வட்டமிடும் பறவையின் தூரம்
அளந்தாயிற்று –
அதன் கர்வமும் அழகும்
பிடிபடவேயில்லை.

உதாரணத்துக்குத் தரப்பட்ட இவ்வரிகளில் காணும் வாழ்க்கை நோக்கும், மதிப்புகளும், கால உணர்வும் அவரது சிறு கதைகளைப் படிக்கும்போதும் நாம் உணர்வோம். அதே கவித்வத்தோடு.

நிரம்பித் ததும்பும் மௌனம் தான் இக்கதைகளின் அடியோட்டம். அடங்கி மறையும், அடக்கி மறக்கப்படும் அழிக்கப் படும் மௌனமும் அல்ல. இது ஒரு காலகட்ட தஞ்சை கிராமத்து வாழ்க்கையின் சித்திரம். அவ்வாழ்க்கை காலவோட்டத்தில் மாறியும் வந்திருக்கிறது. நாற்பதுகளின் தஞ்சை கிராமம் அதன் மலரும் அழகிய உன்னதங்களோடும் அத்துடன்  மௌனமாக அழுந்தி வதைபட்ட ரணங்களோடும் நம் முன் காட்சிகளாக விரியும். மாற்றங்கள் கொண்டு வந்த உன்னதமும் அழகுமற்ற இன்றைய அகோரங்களையும் நம் முன் விரிக்கும். தனக்கென வாழமுடியாது பழம் மரபுகளின் தடைகளால் காயப்படுகிறார்கள் பெண்கள். அனேகமாக உன்னதங்களும் அழகுகளும் பெண்களிடம் தான். காயப்படுபவர்கள், மௌனமாக சகித்துகொண்டே வாழ்பவர்கள் அவர்கள். தடைகளை மீறுபவர்கள் தடையங்களின்றி அழிகிறார்கள்.

குனிந்து கோலமிட்டு வாசலுக்கு அழகு சேர்ப்பவள் கண்முன் தெருவில் நடப்பவன் புத்தி பேதலித்தவனாயினும் ஆண் அல்லவா? அவன் விரட்டப் படவேண்டியவன். கோடுகள் கிழித்து சித்திரம் வரைபவளால் குடும்பத்துக்கு என்ன பயன்? “ஒரு பொண் என்றால் வீடு பெருக்க வேண்டாமோ, சமையல் செய்ய வேண்டாமோ? அதிசயம் தான் ஆசார குடும்பமாம். இவ தாத்தா வாஜபேய யாகம் பண்ணினவராமே?

“படம் வரையறா… கோடுதான் தெரியறது…. எதுக்கு இந்தப்பாடுன்னு தெரியலை..” இப்படி ஒரு ருத்ர காளியின் ஆவேசம். அவரவர் பாடும் தர்மமும் அவரவர்க்கு. யாரைக் குறை சொல்லமுடியும்? இது அதீதம் என்றாலும்,

பாரம்பரியமாக குக்கிராமமே ஆனாலும் காற்றை நிரப்பி அலைமோதும் சங்கீதம்…” சின்ன வயசில் பாட்டியின் குரல் கேட்கும், “ஏய் விசாலாட்சி, யார் பாடறா..? உசேனி தானேடி இது? மேல் சஞ்சாரத்திலே இழையவேண்டாமோ? இப்படி கீழ் ஸ்தாயியிலேயே கடிச்சுத் துப்பிண்டிருக்கானே வித்வான்?…….உசேனி கேட்கறவாளை கூடவே கை பிடிச்சு அழைச்சிண்டு போகும்………ஸ்வாமிகள் ஆனந்தக் கூத்தாடற காட்சி ஸ்வரங்கள்ளேயே தெரியணும், … நான் பாடறேன், நீயும் பாடு, தெருவே கூடும்…..என்று பாட்டியும் குடும்பமும் ஆதரவு தந்த பருவம் வேறு. கல்யாணத்துக்கு பெண் பார்க்க வருவோரிடம் அப்பா சொல்கிறார். “பெண் நன்னா பாடுவோ, ஏழு வருஷம் பாடாந்தரம்.” என்று சொன்னது காதில் ஏறவில்லை. “குடும்ப ஸ்த்ரீகளுக்கு சங்கீதம் சதிர்க்கச்சேரி இதெல்லாம் சரிவராது.”
என்று அத்தோடு சங்கேதத்திற்கு முடிவு கட்டியாயிற்று. போன இடம், “இருபது பேர் சின்னதும் பெரிதுமாக. வீடு நிறைய மனிதர்கள். சின்ன திருவிழா கூட்டம். ஆறு கட்டு வீடு. எல்லா இடங்களிலும் நடமாட்டம். அதிகாரக் குரல்கள், ஆணைகள். அத்தனையையும் செய்து முடிக்க விசாலாட்சி. புருஷன் இவளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. “அடியேய், அல்லது அடியே தான்.

கிணற்று ஜகடையில் மலைய மாருதம் கேட்கும். “ராமா …நீயெட ..”என்று இழைக்கத் தோன்றும். ஆனால், “சாலு, ..பால் கறந்தாச்சா பார் பெரியவருக்கு விழிச்சா காபி வேணும். இல்லாட்டா ரகளை தான்..

இனி இப்படியே தான் வாழ்க்கை கடக்க வேண்டும். கடந்தும் விடுகிறது. சங்கீதம் பிறந்த காவிரிக்கரை கிராமத்தில், சொத்து நிறைந்த குடும்பத்தில் ஒரு ஜீவனின் வாழ்க்கை இப்படி சோகத்தில் நீள்கிறது.  ஏதும் அபூர்வ சோக நிகழ்வு அல்ல. ராவணன் சீதையைக் கடத்திச் சிறை வைத்த இதிகாச கால  சோகம் அல்ல. அன்றாடம் சகஜமாக நிகழும் இயல்பாக எடுத்துக்கொள்ளப் படும் சோகம்.

வதைப்பவர்கள் தம்மை வதைப்பவர்களாகக் காணவில்லை. கிராமத்தில் எல்லோருக்கும் விசாலாட்சியைக் கண்டு பொறாமைதான். ”குடும்பப் பெண்ணுக்கு சங்கீதம் எல்லாம் சரிவராது” என்று சொன்ன மாமியார் அவர் நினைப்பில் கருணை நிறைந்தவள்: “எப்போதும் வாட்டமாவே தெரியறது. உனக்கு இங்கே ஏதாவது குறையோ? நீ விபரம் தெரிஞ்ச வயசிலே வந்தே. நான் வந்தபோது எனக்கு வயசு பதிமூணு. அம்மி, கல்லோரல், அரிக்கேன் லைட்டு, புகையடுப்பு, ஊதி ஊதி முகமே வீங்கிப் போயிடும். இப்போ பொத்தானைத் தட்டினா நிமிஷத்திலே சமயல், கிரைண்டர், ஏசி, வாஷிங் மெஷீன், டிவி…” என்று மறுமகளின் சுக வாழ்க்கையை வர்ணிக்கிறாள்.

“இன்னும் கம்பீரம் வேணும், தாளம் தப்பறது,. சக்கரவாகத்த மத்திம காலத்திலே பாடணும் சரணத்தை மாத்திரம் விளம்ப காலத்திலே……… பாட்டி குரல் காற்றிலே மிதந்து வருகிறது. அந்தப் பாட்டி இப்போ போய்ச்சேர்ந்து விட்டாள்.

வேத வாசகம் போல் ஒரு அசரீரி உள்ளுக்குள் ஒலிக்கிறது. “போராட்டம் ஏன்? இயல்பாய் இரு. இயல்பாய் இருத்தலின் அழகைப் புரிந்து கொள் இதயத்திலுள்ள முடிச்சுகள் எல்லாம் அவிழ்ந்து போகும் போது சாகும் இயல்புள்ளவர்கள் நித்யர்கள் ஆகிறார்கள். நீ நித்யமானவள். உன் தவம் உள்ளுக்குள் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்… இறுக்கம் தளர். தரையில் நடந்து பழகு………

விசாலாட்சியின் வாழ்க்கையே ஒரு நீடித்த மௌனமாகிப் போயிற்று. நிரம்பித் ததும்பும் மௌனம். நிரம்பி வழியவில்லை. அவள் போராடவில்லை.

போராடியவள் ரங்க நாயகி.  கச கசன்னு பவுடர் செண்ட் இல்லாமலேயே கண் படற மாதிரி இருப்பவள். அவளுக்கு எதற்கு அலங்காரம்? அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள். ”டீ ரங்கநாயகி, உனக்குப் பைத்தியமா பிடிச்சிருக்கு நல்ல இடமா வந்திருக்கு வாண்டாங்கறயே சீர் செனத்தி ஒண்ணும் வேண்டாமாம். பொண்ணைக் கொடுங்கோ போறும்ங்கறா. பையனுக்கு லட்சம் ரூபா சம்பளமாம்….நீயானா இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் தலையாட்டறே வேண்டாம்னு…” வயசு முப்பத்திரண்டாறது. இனிமே ரண்டாம் தாரமா கிழங்கட்டைக்குத் தான் விதி…”என்று அலுத்துக்கொள்கிறார்கள். அப்பா, அம்மா போய்ச் சேர்ந்தாச்சு. சொத்து பத்தெல்லாம் எங்கோ போய்……

வரிசையாக நிற்பவரையெல்லாம் அவள் நிராகரிப்பதன் காரணமேதும் யாருக்கும் புரியவில்லை.

“நான் தேவமகள். இமய புத்ரி யாரை நான் விரும்புகிறேனோ அவன் மட்டுமே சிறந்தவன். மேன்மையானவன்.”  என்று சொல்லாத சொல் அலைபாய்கிறது.

இருட்டில் வளையல்கள் ஒலி, முணுமுணுப்புகள் சல்லாப ஒலி. யாரது? அரவமற்ற பொழுதில் அரவமெழுப்பிக்கொண்டு…. இருட்டில் துளாவிப் பார்க்கும் கண்கள். இத்தனை நாளா இவ்வளவு கொள்ளை ஆசைய மனதில் வைத்துக்கொண்டு…எப்படிடீ, எப்படீ…நீ ராஜகுமாரி, ஆகாயத்தில் பறக்கும்  சுதந்திரப் பட்சி, எந்த பந்தங்களுக்கும் உட்படாதவள். வயசு கடந்தாலென்ன. அழகு அழியுமோ?

கடைசியில் எப்படி நடந்தது இந்தக் குற்றம்? இதற்குட்பட்டது எப்படி? என்று அவளே தன்னைக் கேட்டுக்கொள்கிறாள். ஆக, ஆயிரம் வேலிக்கணக்கில் நிலம் வில்வண்டி அரண்மணை மாதிரி நாலு கட்டு வீடு எல்லாத்தொடும் வயசான பஞ்சுவுக்கு துணை ஏகப்பட்ட ஐவேஜிக்கு வாரிசாகிப் போகிறாள்.

ஆக இரண்டு மாச தாடி, சாளேசுர கண்கள் காவியேறிய பஞ்ச கச்சம், மூக்குப் பொடி, காயத்ரி ஜபம் மாசத்துக்கு ரெண்டு சிரார்த்தம் பொன்னிற சிறகுகளோடே மேகங்களிடையே சஞ்சரிக்கும் ரங்க நாயகிக்கு கிடைத்தது பஞ்சாப கேச கனபாடிகள்.

“உம்ம பொண்ணு எனக்கு வேணாம் சதா பிரமை பிடிச்சாற்போல் தனக்குத் தானே சிரிச்சிக்கறா, அழறா. பைத்தியத்தைக் தலையிலே கட்டிவிட்டீர்…..வைதீகம்னு தெரிஞ்சு தானே பண்ணீண்டா…..சதா மலங்க மலங்க மோட்டு வளையைப் பாத்துண்டு…. எனக்கு உம்ம பொண்ணு வாணாம் எல்லாருமா சேந்து என்னை ஏமாத்திட்டேள்…. என்று பஞ்சாப கேச கனபாடிகளும் உதறிவிட்டுப் போய்விட்டார்.  அவரை யார் தப்பு சொல்ல முடியும்?

பைத்தியமாய் தாடியும் மீசையுமாய் பைத்தியம் போல வெறிச்சுப் பார்க்கும்  பரமு, யார் இது? அறிந்தும் அறியாதவளாய் முயங்கிக் கல்லாய்ச் சாபமேற்க அகலிகை ஒருத்தி தானா என்ன?

அந்தப் பரமுவுக்கும்  ஒரு நாள் லாரி ஒன்று யமனாய் வந்து சேர்ந்தது

தாடி மீசையோடு நின்றவனைப் பார்த்து, “யார்ரா அது? பைத்தியம்மாதிரி  நின்னுண்டு?  ஏதாவது போட்டு அனுப்பு”” என்று ஒரு குரல் அதட்ட,

இவன் உற்றுப் பார்த்தான், பார்வையில் மூர்க்கம் தெரிந்தது தலையைக் கோதிக்கொண்டு, தாடியை வருடிக்கொண்டு ஆலமரத்தடிக்கு வந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். என்ன சேதி? என்று இரண்டு குருவிகள் விசாரித்ததைக் கூட கண்டு கொள்ளாமல் சிரித்தான் சட்டென்று சிரிப்பு மாறியது சினத்தில் கண்கள் சிவந்து துடித்தன.

மளமளவென செய்தி பரவியது “ரங்கம் ஆத்மநாதனோடு ஓடிப் போய்ட்டாளாம்.

ரங்கத்தைப் பற்றியே பேச்சு. அங்கே பாத்தேன். இங்கே பாத்தேன். ஆத்மநாதனையும் இப்போ கழட்டி விட்டுட்டாளாம். …சினிமாலே சேர்ந்துட்டாளாம்… தஞ்சாவூர் பக்கம் ஒரு மிராசுதார் வச்சுண்டிருக்கானாம். ….     ‘

“எவர்கள் அசுத்தத்தை உபதேசிக்கிறார்களோ அவர்கள் காரிருளில் புகுகிறார்கள்…….

“அக்னியே  செல்வத்தை அனுபவிப்பதற்கு நல்ல மார்க்கத்தில் எங்களை அழைத்துச் செல். தேவனே எல்லா எண்ணங்களையும் அறிந்தவரே. மறைந்து நின்று கெடுக்கும் பாவத்தை நாசம் செய்வீர்… ஓ அக்னியே…….

ரங்கம் பொட்டுத் துணியின்றி ஆலமரத்தடியில்  வெள்ளையாய்க் கிடந்தாள்.. முகத்தருகே ஏராளமான ஈக்கள்..நின்று பார்க்க யாருக்கும் நேரமில்லை……

“பூமியில் எது உண்டோ அது எல்லாவற்றையும்
எரித்து விடக்கூடும். – எங்கும் தீச்சுவாலை.

இது தேவதையோடு ஒரு போர் என்ற கதையிலிருந்து   .
இத்தொகுப்பில் கிட்டத் தட்ட இருபது கதைகளோ என்னவோ இருக்கின்றன.

தஞ்சை கிராமத்து மக்கள். அவரவர் மதிப்புகள். தர்மங்கள். அந்தந்தக் காலகட்டத்தவை.. வதை படுவது என்னவோ எப்போதும் பெண்கள தான். காலம் மாறினாலும், மதிப்புகள் மாறினாலும். கல்லுரலும்  அம்மியும் தான் அவளை காயப்படுத்துகின்றன என்றில்லை. க்ரைண்டரும் மிக்ஸியும் வந்தாலும் அவள் விதி மாறுவதில்லை. வேலிகள் நூற்றுக்கணக்கிலென்று நிலமும் ஐவேஜும் இருந்தாலும் அவள் வாழ்வு மாறுவதில்லை  .எல்லாம் சகஜமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. காயம்பட்டவளாலும் கூட. மௌனத்தில் எல்லாம் அழிகின்றன.

விசுவநாதனின் எழுத்து கம்பீரமும், கவித்வமும், கொண்டது. எழுத்து ஃபாஷன்கள் மாறிவிட்ட இக்காலத்தில், தி.ஜானகிராமனையும், லா.ச.ராமாமிர்தத்தையும் நினைவு படுத்துவது. நினைவு படுத்தி நகர்ந்து விடுகிறது. காரணம் தஞ்சையும் கிராமமும் காரணமாக இருக்குமோ. இவரது மனிதர்களும் உலகமும் அவர்கள் காலத்தவர்கள். நம் காலத்தவரும் கூட சங்கீதம் எப்போதும் அலையோடும் உலகம். வேதோபாசனை போன்று வாசகங்கள் மந்திர கம்பீரத்தோடு  மனத்தில், ஆகாயத்தில் அசரீரியாக அவ்வப்போது ஒலித்துக்கொண்டிருக்கும்.

படிக்க வேண்டிய எழுத்து. பழக வேண்டிய மனிதர்கள். “சட்ஜமத்திலே ஏண்டி அரை மாத்திரை நீட்றே? கல்யாணி ரீதி கௌளையாயிடும். ஸ்ருதி சுத்தமில்லேன்னா அதுக்குப் பேரு சங்கீதமில்லே…ம்.ம்.ம்….ம்னு நிரவிப் பாடணும்.  கல்யாணி குழந்தை மாதிரி, கொஞ்சம் தாஜா பண்ணினா இழுத்த இழுப்புக்கெல்லாம் தளர் நடை போட்டு வரும். எங்கே இப்போ பாடு…..”வாசு தேவ யெனி…..” என்று பேசும் அடுக்களையோடு ஒடுங்கிய கிராமத்துப் பாட்டிகளை இப்போது எங்கு பார்க்கமுடியும்?. அவள் ஒரு உன்னதம். காலத்தோடு மறைந்து விட்ட உன்னதம். இருப்பினும் காலம் முழுதும் அவளும் சோகித்தவள் தான்.
_____________________________________________________________________

நிரம்பித் ததும்பும் மௌனம்: (சிறு கதைகள்) நா. விசுவநாதன். அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம். 41. கல்யாண சுந்தரம் தெரு பெரம்பூர், சென்னை 600 011 பக்கம் 176. ரூ 80..  .

Series Navigation2012 ஆகஸ்டில் இறக்கப் போகும் நாசாவின் செவ்வாய்க் கோள் தளவூர்திநினைவுகளின் சுவ ட்டில் (89)
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *