முள்வெளி அத்தியாயம் -13

This entry is part 31 of 43 in the series 17 ஜூன் 2012

“டாக்டரு.. டாக்டரு” ன்னு நீங்க அதுலயே நிக்கிறீங்கம்மா…” பொறுமையிழந்தவளாக பொன்னம்மளைப் பார்த்துக் கிட்டத் தட்ட கத்தினாள் மஞ்சுளா. “டாக்டரு இவரு பப்ளிக்ல தவறாகவோ தொந்தரவாகவோ நடந்துக்கலேன்னாக்க நார்மல் அப்படீங்கறாரு… ஆனா இவரை வீட்டுக்குள்ளே அடைச்சு வைக்கறது பெரும் பாடா இருக்கு. ரெண்டு நாளைக்கி மின்னாடி வேலைக்காரி செக்யூரிட்டி எல்லாருக்கும் டிமிக்கி கொடுத்திட்டு இவரு வீட்டுக்கு வெளியிலேயே போயிட்டாரு…நாலு இடத்தில பேந்தப் பேந்த முளிச்சிக்கிட்டு நின்னா அக்கம்பக்கத்தில இருக்குறவங்க வம்பு பேசறாங்க .. என்னைத்தானே விசாரிக்கறாங்க… நீங்க கொஞ்ச நாளாச்சும் உங்க ஊரிலே கொண்டு போய் வெச்சிக்கோங்க.. ஒரு மாசம் நான் அமெரிக்கா போய் வரணும். அங்கே என் தம்பி வீட்டில சீமந்தம் வளைகாப்பு. அவரு உங்க கிட்டே இருந்தாத் தானே நானும் கவலையில்லாம போய் வர இயலும்?”

பொன்னம்மா தன் மொபைல் போனை எடுத்தார். யாருடனோ சுமார் ஐந்து நிமிடம் பேசினார். வர்ற ஞாயித்திக் கிளமை நான் அவனை அளைச்சிக்கிட்டுப் போறேன்” என்றார்.

**__
**__**
** பழுத்த பழம் போன்ற பெரியவர். முழுதும் நரைத்த தலை. கருத்த நிறம். சுக்கு போல வற்றிய உடல். பொன்னம்மாள் வீட்டுக்கு முன்னால் குச்சியை ஊன்றியபடி அங்க வஸ்திரத்தை சரி செய்து கொண்டு ஒரு நோட்டம் விட்டார்.

யாரும் நடமாடுவதாகக் கண்ணில் படவில்லை. திண்ணையில் ராஜேந்திரன் உட்கார்ந்திருந்தான். அவன் எழுந்து தன்னை வணங்கி வரவேற்கக் கூடும் என்றே ஒரு நிமிடம் நின்றார். பிறகு தானே படியேறி திண்ணையில் இருந்த ராஜேந்திரன் முகம் முன் தனது முகத்தைக் கொண்டு சென்று “தம்பி, என்னைத் தெரியுதா?” என்றார். ராஜேந்திரனிடமிருந்து பதில் எதுவும் இல்லை. “நாந்தான்ப்பா.. தமிழ் ஆசிரியர் அரங்கநாதன்”. தொடர்ந்து ராஜேந்திரன் மௌனமாகவே இருந்தான். இதற்குள் வீட்டிற்குள் இருந்து ஒரு வேலைக்காரி எட்டிப் பார்த்தாள். ஓரிரு நிமிடங்களில் பொன்னம்மாள் திண்ணைக்கு வந்த போது அரங்கநாதன் ராஜேந்திரனின் திண்ணைக்கு எதிர் திண்ணையில் மௌனமாக அமர்ந்திருந்தார்.

“தமிழ் வாத்தியாரய்யாவா? வாங்கய்யா….”

“என்னம்மா.. நலமா இருக்கீங்களா? தம்பி ஏதோ உடம்பு சுகமில்லாம வந்திருக்காருன்னு கேள்விப்பட்டேன். பாத்திட்டுப் போகலாமின்னு வந்தேன்.”

“என்னத்தைய்யா சொல்லுறது? எப்பமும் பிரமை புடிச்சமாதிரி இருக்குறான்”

“வைத்தியம் பாத்தீங்களா?”

“மருமக பெரிய டாக்டருகிட்டே கூட்டிக்கிட்டுப் போச்சு போல. அவரு கடுமையான கோளாறு எதுவுமில்லயின்னு சில மாத்திரை மருந்து கொடுத்திருக்காரு.. சொல்லிக்கிற மாதிரி எந்த முன்னேற்றமுமில்லீங்கய்யா…”

“பள்ளி நாட்களில ராமாயணம், சிலப்பதிகாரமின்னு எந்தக் காவியம் பற்றிய வகுப்பாயிருந்தாலும் அந்தக் காவியத்துக்குள்ளே இருக்கற சமூக அமைப்பைக் கடுமையா விமர்சிக்கிற மாதிரி விவிவாதிப்பான்…”

“இப்பம் அனேகமா மௌனமாத்தான்யா இருக்கான்”

“சென்னையிலேயிருந்து நம்ம ஊருக்கு நீங்க அவனை அழைத்து வந்ததும் நல்லதுதான். அமைதியான சூழலில் அவன் கிட்டே ஒரு நல்ல மாற்றம் வரும்..”

“வந்து தானேய்யா தீரணும்.. சென்னையில ஒரு வாழ்க்கையை அமைச்சிக் கிட்டதும் அவன் தான்… மறுபடி அவன் பழைய மாதிரி சென்னைக்கிப் போயி வேலை பாக்கணும்”

பொன்னம்மாள் கொடுத்த மோரை அருந்தி விட்டு ஆசிரியர் விடை பெற்றார்.

திண்ணை சுவரில் சாய்ந்து அமர்ந்தான் ராஜேந்திரன். வலது கையால் தரையில் படர்ந்திருந்த தூசி மீது எழுதத் துவங்கி எழுதியதன் மேலேயே ஒவ்வொரு வரியாக எழுததினான்.

சிறு விளக்குத் திரியில்
சுடரோ
எரிமலையினின்று தெறிக்கும்
பெருங்கங்குகளோ
எப்போதும் பசித்திருக்கும்
நெருப்பு
தன் வடிவை மறைத்து
உஷ்ணம் என்னும்
அரூபத்திலும்
அது தின்னும்

கருப்பையின் கதகதப்பு
எங்கோ ஆழ
ஊடுருவி ஐந்து
தீப்பந்தங்களைப் பிடித்து
சுரங்கத்துள் அலைகிறது

வெளிப்படையாய் எரிந்தவை லங்கையும்
மதுரையும்
மட்டுமே

**__
**__**
** “சிடி எதுவும் வாங்கலியா மேடம்?” ஊதுபத்தியையும் சந்தனவில்லை டப்பாவையும் தேர்ந்தெடுத்து நகர்ந்து கொண்டிருந்த லதாவைக் கடையில் ஒரு மூலையிலிருந்த பெண்ணின் குரல் மறித்தது.

“ஆக்ட்சுவலா எதுவும் வாங்க நினைக்கலியே… ஓகே.. உனக்காக ஒரு சிடி வாங்கறேன். நீயே ஒண்ணை சஜ்ஜெஸ்ட் பண்ணு…” என்றாள்.

“தேவீ….நீயே துணை … தென் மதுரை வாழ் மீனலோசனி… தேவீ…” பாட்டு ஒலித்தது.

“நைஸ்.. ஐ வில் டேக் இட்…”

அவளுடைய கன்னத்தில் தட்டி விட்டு நகர்ந்தாள். கடையை விட்டுப் படி இறங்கும் போது “காரை ஈஸ்ட் மாடா ஸ்ட்ரீட்லே பார்க் பண்ணியிருக்கு மேடம்” என்றார் டிரைவர். “ஓகே. போன் பண்றேன்..குமரன் கிட்டே பிக் அப் பண்ணுங்க..” என்றாள்.

மறுபடியும் கடையில் நுழைந்த லதா அந்தப் பெண்ணிடம் ‘உன் பேர் என்ன?” என்றாள்.

“அம்புஜம்”

“குட் அம்புஜம்.. என்னை ஆஃபீஸ்ல வந்து பாரு…”

**__
**__**
** அம்புஜம் “தூரத்து உறவு” என்ற கதையைப் படிக்கத் துவங்கினாள்.

காலை மணி பத்து.

சுகுணா அந்தக் கடையில் சேர்ந்து இரண்டு மாதம் ஆகி விட்டது. காலையில் திறப்பது முன்னே பின்னே தான் இருக்கிறது. ஒன்பதரை என்று சேரும் போது மேனேஜர் சொன்னது. ஆனால் சாவியை வைத்திருக்கும் சூப்பர்வைசர் ஒன்பதே முக்கால், பத்து, பத்தரை என்று பல விதமான வசதிகளில் கடையைத் திறக்கிறார். மின்சார ரயில் ஒரு மணி நேரத்துக்கு ஒன்று தான். ஒன்பதரை வண்டியை விட்டால் பத்தரை மணிக்குத்தான் வர முடியும் என்று மேனேஜரிடமே சொல்லியாகி விட்டது. ஆனால் இரவு கிளம்பும் போது ஒரு மரியாதைக்கு “போய் வருகிறேன்” என்று சொன்னால் ” என்ன அவசரம் ? அந்த புடவை ‘ராக்’கை சரி பண்ணு .. அந்த ஷர்ட்ஸை அடுக்கு” என்று ஆரம்பிப்பார். மௌனமாகக் கிளம்பி விடுவதே உத்தமம். சரிக்குச் சரியாகக் குரலை உயர்த்தி சண்டை போட ஆம்பிளைப் பசங்கள் நிறையவே இருக்கிறார்கள். இவளைத் தவிர திருமணமான இவள் வயதுப் பெண் ரமா என்று ஒருத்தி இருக்கிறாள். பத்து மணிக்கு வருவாள். ஏழு மணிக்கு அவள் காணாமற் போயிருப்பாள். யாரோடும் பேசவும் மாட்டாள். சூப்பர்வைஸர் அவளை எதுவுமே சொல்வதில்லை.

ஷட்டர் திறக்கும் வரை படிகளில் அமர்ந்திருப்பது சங்கடமாகவே இருந்தது. சில நாட்களாகவே ஒரு பையன், சுகுணா வயதிருக்கும், முதலில் நடந்தபடியே திரும்பிப் பார்த்த படி இருந்தான். கடந்த இரண்டு நாட்களாக அவளுக்கு சற்றே இடைவெளி விட்டு அமர்ந்து மொபைலில் யாரிடமோ பேசுவது போல் “சுமார் அழகு தான்.. ஆனா கொயட் அன்ட் ஹோம்லி.. அதான் எப்படிச் சொல்லறதுன்னு ரொம்ப யோசனையா இருக்கு ” என்றும் , “ஒரு வாரமானும் ஆனா தயக்கமில்லாம பேசலாம்” என்றும் வேறு சொல்லி விட்டான்.

திருவான்மியூர் கோவில் இரண்டு கிலோ மீட்டர் தள்ளி இருந்தது. போய் வருவது சுளுவாக இல்லை. பக்கத்திலிருந்த திருமண மண்டபங்களிலிருந்து வரும் கும்பல் பல்வேறு எண்ணங்களைக் கிளறி தர்மசங்கடம் ஏற்படுத்தியது.

அப்பாவும் தன்னுடைய பங்காளி வீட்டுக்குப் போ என்றபடி தான் இருக்கிறார். இன்று இரவாவது அந்தப் சித்தப்பா வீடு எங்கே இருக்கிறது என்று கேட்க வேண்டும். பிஸினஸ் என்று அடிக்கடி வெளியூர் போய் விடுவார். சித்தி பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்கிறாள்.

மறுநாள் காலை சுகுணா மகிழ்ச்சியாக கடைப்பக்கம் வந்தாள். அப்பா படமே போட்டுக் கொடுத்து விட்டார். கடைக்குப் பின்னாடி சந்தில் இரண்டாவது வலது பிறகு இடது பக்கம் போனால் கல்யாண மண்டபம். அதற்கு அடுத்த குடியிருப்பில் ‘கிரவுண்ட் ஃப்ளோர்’ . ஃப்ளாடுகளில் கடைசி அது. குடியிருப்பின் நுழை வாயிலிலேயே சித்தி சித்தப்பா இருவரையும் பார்த்தாள். இருவருமே வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். “வா சுகுணா இன்னிக்கி ஒரு கல்யாணத்தை முன்னிட்டுக் கிளம்பிட்டோம். உங்க அப்பா ஃபோன் பண்ணினாங்க.. பொதுவா நான் எட்டு மணிக்கிக் கிளம்பிடுவேன். உங்க சித்தப்பா பத்து மணிக்கி மேலே தான் கிளம்புவாரு.. சாயங்காலம் நான் நாலு மணிக்கே வந்திடுவேன். நீ கடை வாசல்லேயெல்லாம் உக்கார வேண்டாம். எப்ப வேணுமின்னாலும் வா. பக்கத்து வீட்டு ஆன்ட்டியையும் இன்ட்ரொட்யூஸ் பண்ணி உடறேன்” என்றாள்.

பிறகு ஓரிரு நாட்கள் சூப்பர்வைஸர் சீக்கிரம் வந்தார். சித்தப்பா வீட்டுக்குப் போக வேண்டிய அவசியம் இருக்க வில்லை. ஆனால் அதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டி வரலாம். அந்தப் பையன் காலை ஒன்பதரைக்கு சரியாக கடைப் பக்கம் வரவே செய்கிறான்.

இன்று காலை சுகுணா ஒரு யுக்தி செய்தாள். சாலை மறுபக்கம் எதிர் வரிசையிலிருந்து தான் பணிபுரியும் கடையை நோட்டம் விட்டாள். சரியாக ஒன்பதரை மணிக்கு அந்தப் பையன் வந்து நோட்டம் விட்டு இங்கும் அங்கும் திரும்பிப் பார்த்தான். பிறகு அங்கே நிற்காமல் போய் விட்டான்.

ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டு சித்தப்பா வீட்டை நோக்கி நடந்தாள். இப்படி எதிர் புறம் இருந்து தான் வேறு இடம் போவதால் அவன் படிப்படியாக நோட்டம் விடுவது, ஜாடை பேசுவது இவற்றைக் குறைத்து தன் வழியைப் பார்த்துக் கொண்டு போவது நிச்சயம் என்று தோன்றியது.

சித்தியின் குடியிருப்பு சற்று சந்தடி குறைந்தே காணப் பட்டது. தரைத் தளத்தில் கார்கள் வெளியேறி நிறைய காலி இடம் தென் பட்டது. குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கூடம் போயிருக்க வேண்டும். யாரும் விளையாடக் காணும்.

சித்தி வீட்டில் ஹாலில் விளக்கெரிவது மங்கலாகத் தெரிந்தது. டிவியின் சத்தமும் நன்றாகவே கேட்டது. நிம்மதியுடன் அழைப்பு மணியை அழுத்தினாள். ஐந்து நிமிடமாகியும் கதவு திறக்கவில்லை. மறுபடி அழுத்தினாள். இன்னும் ஐந்து நிமிடம் கடந்த போது குளியலறையில் இருக்கிறாரோ என்று சந்தேகம் தோன்றியது.திரும்பி நடந்தவள் குடியிருப்பின் பிரதான வாயிலைக் கடக்கும் முன் அங்கே ஒரு ஐந்து நிமிடம் நிற்கலாம் என நினைத்து அங்கிருந்த படியே சித்தி வீட்டுக் கதவைப் பார்த்த படி இருந்தாள். திடீரென கதவு திறந்தது. ஒரு நடு வயதுப் பெண் வெளியே வந்து பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டாமலேயே திறந்து உள்ளே போனாள். இரண்டு நிமிடம் கழித்து சித்தப்பா எட்டிப் பார்த்து விட்டு கதவை மூடிக் கொண்டார்.

Series Navigationஇலங்கையில் வாழும் பெண் கவிஞர்களின் கவனத்திற்கு ..!பூட்ட இயலா கதவுகள்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *