இஸ்லாமியப் பண்பாட்டில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மானுடவியல் அணுகுமுறை

This entry is part 26 of 43 in the series 24 ஜூன் 2012

 

மேற்கில் அமெரிக்கா செவ்விந்தியர்களின் எண்ணூறு புராணக்கதைகளை ஆராய்ந்து அமைப்பியல் விமர்சன முறையை உருவாக்கிய லெவிஸ்ட்ராஸில் துவங்கி, சசூர், ழாக்லகான், ரோலான்பர்த் என வளர்ந்து பிரதிகளில் கட்டுடைப்பு விமர்சனத்தை பின்பற்றிய ழாக்தெரிதா எனத்தொடரும் திறனாய்வாளர்கள், தற்போது இனவரைவியல் அடையாளம் சார்ந்து நுண்கதையாடல்கள், நுண் அரசியல் தளங்கிலும் இயங்குவதை பரிசீலிக்க வேண்டும்.

அடித்தள இஸ்லாமிய மக்கள் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் விடுகதைகள், பழமொழிகள், நாட்டார் பாடல்கள், கதை சொல்லல்கள், புராணீகங்கள், புனைவுகள், பிறப்பு முதல் இறப்பு வரை செய்யும் சடங்குகள் என நுண்கதையாடல்கள் பலவுண்டு.  இவற்றின் உள்ளே பொதிந்திருக்கும் வாழ்வுகுறித்த கண்ணோட்டம், உறவுகள் குறித்த மதிப்பீடு, நுண் அரசியல், என பலவற்றை அடித்தளமக்கள் ஆய்வின் மூலம் கண்டறிய முடியும்.              இந்த வாய்மொழி மரபுக் கதைகளை வரிக்குவரி, வார்த்தைக்கு வார்த்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றோ, ஆன்மீகத்தள நோக்கில் இறைத்தன்மையை நிறுவ வேண்டும் என்றோ அவசியம் இல்லை.  அதே சமயம் நவீனத்துவத்தின் கூறான பகுத்தறிவின் வன்முறையால், போலி அறிவு வாதத்தால் வாய்மொழி வரலாற்று மரபுகளை, அடித்தள இஸ்லாமிய மக்கள்சார் சடங்குகளை நிராகரிப்பது என்பதும் அராஜகமானது.  எனவேதான் இவற்றின் வரலாறு சார்ந்த சாரமும், சமூகத்தன்மையும், உளவியல் விஞ்ஞான அம்சங்களும் முக்கியமானதாக மாறுகிறது.

இஸ்லாம் அறிவுப்புரட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மார்க்கம் என்பது உண்மைதான்.. திருக்குர்ஆன் விளக்கவுரையாளர்களெல்லாம், காலந்தோறும் வளர்ந்து வரும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டு திருக்குர்ஆன் வசனங்களுக்கு விஞ்ஞான சொல்லாடல்களை பயன்படுத்துவதை காணலாம். எனினும்  இங்கே அறிவு என்பது தொடர்பு நிலையும் சார்புத்தன்மையும் கொண்ட ஒரு சொல்லாடலாகும்.  அறிவு என்பதற்கு தனித்த ஒரு அர்த்தமும் கிடையாது.  காலம், வெளி, சூழல் மக்கள் பிரிவு சார்ந்து இதற்கென புதிய அர்த்தம் உருவாகிறது.  கிறிஸ்தவர்களுக்கு இந்து நம்பிக்கைகள் மூட நம்பிக்கை. வகாபிகளுக்கு தர்கா மரபுகள் மூடநம்பிக்கை. அஹ்லெகுர்ஆனிகளுக்கு வகாபிகளின் ஹதீஸ் பற்றிய பார்வை மூடநம்பிக்கை.   சுன்னிகளுக்கு ஷியாக்களின் கலாச்சார நிகழ்வுகள் மூடநம்பிக்கை.  ஷியாக்களுக்கு காதியானிகளின் கொள்கை மூடநம்பிக்கை. ஒரு பகுத்தறிவுவாதிக்கு இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையே மூடநம்பிக்கை. ஒரு மார்க்ஸியனுக்கு பெரியாரிய கொள்கை மூட நம்பிக்கை.அறிவின் அணுகுமுறை இவ்வாறெல்லாம் வித்தியாசப்படுகிறது.  இந்நிலையில் இந்த எல்லாவித கூற்றுகளையும் மறுவரையறை செய்யவேண்டிய அணுகுமுறையே இன்றைய தேவை.

வெறும் அறிவு அளவுகோல் நாம் அல்லாஹ்வை, வஹியை மலக்குகளை, ஹுருல்ஈன்களை, ஜின்களை, சொர்க்கம், நகரத்தை, மன்னுஸல்வாவை, லௌஹுல் மஹ்பூழை, மூஸாநபி, யூனுஸ்நபி, இபுராகீம்நபி, அண்ணல் நபி வாழ்வின் விசித்திர சம்பவங்களை அணுகமுடியுமா? நபிமார்களின் முஅஜிசாத்துகளை வலிமார்களின் கராமத்துக்களை புரிந்து கொள்ள முடியுமா என கேள்வி எழுகிறது.

மேலும் திருமறையின் ஒரு வசனம், சூனியத்தால் துன்பம் நிகழ்கிறது என்பதை ஏற்றுக் கொண்டு, அதிலிருந்து மீட்சி பெற இறையிடம் பாதுகாவல் தேடச் சொல்கிறது.  இங்கே பெண் சூது செய்பவளாக காட்டப்பட்டு கண்டிக்கப்பட்டாலும், நபி முகமது(ஸல்)விற்கு சூனியம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டநிகழ்வு வரலாற்றில் பதிந்துள்ளது.

இதுபோன்ற மந்திரவாதிகளின் சூனிய வித்தைகளை எதிர்கொள்ளவே மூஸாநபியின் அஸாவிற்கு ஆற்றல் கிடைக்கிறது.

இஸ்லாம் வாய்மொழி மரபுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.  மாற்றுமத நம்பிக்கையாளன் கலிமா சொன்னதும் முஸ்லிமாகிறான்.  நிக்காஹ் ஓதியதும் திருமண ஒப்பந்தம் நிகழ்கிறது.  தலாக் சொன்னதும் மணமுறிவு ஏற்படுகிறது.  இப்படியாக வாழ்வியல் சார்ந்த நிகழ்வுகள் அனைத்தும் வாய்மொழி மரபுக்கூறுகளை உள்ளடக்கியே இயங்குகிறது.

 

இஸ்லாமிய நாட்டார் நம்பிக்கைகளாக கறுப்புகயிற்றில் ஓதி ஊதி சகல நோய்களுக்கும் நிவாரணி எனக்கூறுதல், மந்திரித்தல், தாயத்துக்கட்டுதல், என்பதாக செயல்கள் முன்வைக்கப்படுகின்றன. ஓதிப்பார்த்தல், தாயத்துகட்டுதல் உட்பட்ட நடவடிக்கைகளின் சாராம்சத்தை அதில் உட்பொதிந்து கிடக்கும் இஸ்லாமிய நாட்டார் சமயக் கூறுகளின் அம்சங்களை, அச்செயல்கள் எளிய மக்களிடம் உருவாக்கும் மனோவியல் நம்பிக்கையை குறைத்து மதிப்பிட முடியாது.

ஏனெனில் ஓதிஊதுதல் என்கிற நிகழ்வில் ஓதுதல் என்பதே திருமறை வசனங்களை ஓதி ஊதுவதின் மூலமாக நோய் தீர்ந்துவிடும் என்பதான தீவிர மனோவியல் நம்பிக்கையும், தாயத்தில் உள்ள தகட்டில் திருமறை வசனங்கள் சிலவற்றை எழுதுவதின் மூலமாக இந்நோய் தீர்ந்துவிடும் என்பதான நம்பிக்கையும், இதை சரியாக ஓதவோ, எழுதவோ புரிந்து கொள்ளவோ முடியாத நிலையில் உள்ள மக்கள் ஆலிமை நாடிச் செல்வதும் நிகழ்கிறது.  இங்கே இறைவனின் மீதான நம்பிக்கைகள் இறைவசனங்களின் மீதான நம்பிக்கையாக, தாயத்துகளின் மீதான நம்பிக்கைகயாக வடிவ மாற்றம் பெறுகிறது.

இதுவாழ்வில் ஏற்படும் இடர்பாடுகளை தீர்த்துக் கொள்ள முயல்வதையும் இயலாமைக்கு வடிகாலாக, அமைவதையும், அடிப்படையாக கொண்டுள்ளது.  வறுமை, துன்பம், மருத்துவத்தால் தீராத நோய், சித்தபிரமை உள்ளிட்ட மனித இடர்பாடுகளை தீர்க்க, இயலாமையிலிருந்து விடுபட முயல்கிறது.  நடைமுறை சாத்தியமுள்ள, மனோவியல் நம்பிக்கையை அளிக்கும் புதிய மாற்றுகள் ஆன்மீகத்தளத்தில் வேறு இல்லை.  பிறகெந்த அளவுகோலால் ஊதுதலையும் தாயத்து கட்டுதலையும் நாம் மதிப்பீடு செய்வது.  இத்தகு வாழ்வியல் நிகழ்வுகளை நாம் நாட்டார் இஸ்லாம் (Folk Islam) என்பதாக அடையாளப்படுத்தலாம்.

மரபு வழி இஸ்லாமிய சடங்குகளிலும் அரேபிய நாட்டார் மரபுகளின் பண்பாடு ஒன்று கலந்திருக்கின்றன. முஸ்லிம்களின் ஹஜ் கடமைகளான ஸபாமர்வா குன்றுகளை வலம்வருதல், ஷைத்தானை கல்லெறிதல், ஆடு, ஒட்டகம் பலி கெ’டுத்தல், தலைமுடிகளைந்து மொட்டை போடுதல் அனைத்தும் அரபு கலாச்சார சூழல் சார்ந்த நாட்டார் மரபுகளாகும்.

தமிழ் சூழலில் உம்மா நேர்ந்த கடனுக்காக ஆத்தரங்கரை பள்ளி மரத்தில் தொட்டில் கட்டி தாலாட்டுவது, நோய்தீர தங்கக்கம்பி அடிச்சு தர்காவுக்கு தருவேனென நேர்வது இப்படியான அன்றாட வாழ்வியல் நம்பிக்கைகளின் பெருக்கமும் நிறைந்துள்ளன.

வயித்துவலிக்கு உப்பும்புளியும் கொண்டு கொதிக்கு ஓதுவது, மொளவும் žனக்காரமும் கொண்டு தலை சுற்றி கண்ணேறுக்கு பார்ப்பது, மண்ணனோ, பொக்கனோ வந்து விட்டால் நோய் குணமாகி குளித்த பிறகு பொங்காலைப் போடுவது, முட்டுக்காலில் பொக்காளம் வந்தால் முட்டை வச்சு ஓதிப்பார்ப்பது கழிப்பு நடத்துவது, தண்ணி ஓதிக்குடிப்பது, எந்திரம் கட்டுவது – எல்லாமும் உடலை வீழ்த்திப்போடும் நோயின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் சில நம்பிக்கை சார்ந்த ஏற்பாடுகளாய் தொடருகின்றன.

இந்நிகழ்வை எல்லாம் எளிமைப்படுத்தி ஷிர்க் (இணை வைத்தல்) குபிர் (மாறு செய்தல்) பித்அத் (புதிதாக உருவானவை) என சிலர் அடையாளப்படுத்த முயல்கின்றனர்.  இஸ்லாத்தின் அடிப்படை ஏகத்துவக் கொள்கைக்கு எதிரானது எனவும் நீட்டி முழங்குகின்றனர்.  இந்த வித அணுகுமுறை மிகவும் வறட்டுத்தனமான ஒன்றாகும்.  ஆன்மீக நம்பிக்கைக்கும், வாழ்வியல் நம்பிக்கைக்குமிடையே நுண்ணிய அளவிலான வித்தியாசங்கள் உண்டு. அடித்தளமக்கள் சார்ந்த இந்த சடங்குகளை நாம் இன்னொரு கோணத்திலும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

தர்காவிற்கு தங்கக்கம்பி அடித்துப்போடுவது, தொட்டில் கட்டிப் போட்டு நேர்ச்சைக் கடன் செய்வது உள்ளிட்ட செயல்களில் உள்ளாற்றலாய் புதைந்திருப்பது போலச் செய்தலாகும்.  நிறைவுறாத ஒரு விருப்பம் இப்பாவனைச் செயலால் நிறைவு பெறும் என்பதான நம்பிக்கையாகும்.  ஒத்தது ஒத்ததை உருவாக்குகிறது என்கிற ஒத்தவிதியின் கூறுகளை இதில் உணரலாம்.

கொதிக்கு ஓதிய உப்பும் புளியையும் வாயில் போட்டு நுணைப்பது கண்ணேறுக்கு தலையைச் சுற்றிய மிளகையும் சீனக்காரத்தையும் அடுப்பில் எரிப்பது உட்பட்ட எல்லா சடங்குகளிலும், உடல் மற்றும் ஆன்மீக புரதான வைத்திய சிகிச்சை முறைக்கூறுகள் இணைந்துள்ளன.  மிளகு, சீனக்காரம், முட்டை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நோயுற்றவரின் உடம்பைத் தொடும்போது நோய் அப்பொருளில் தொற்றி இடமாறிவிடுகிறது.  நோய் தொற்றிய அப்பொருளை அழிப்பதன் மூலம் நோயை அழித்து விடலாம் என்பதான எண்ண வெளிப்பாடாகவும் அமைகிறது. இது தொடர்பு விதியின் அடிப்படையிலான தொடர்பு மந்திரச் செயல்பாடாகும். இச்செயல்கள் அனைத்தும் ஒருவிதத்தில் விரக்தியின் எல்லையில் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு உளவியல் ரீதியான வலிமையையும் புத்துணர்வையும் மீட்டுருவாக்கம் செய்கின்றன.

அன்னை ஹாஜிரா தாகம் தணிக்க தண்ணீர் தேடி மக்கா நகரின் ஸபா, மர்வா குன்றுகளிடையே ஓடி அலைந்ததை ஞாபகப்படுத்தும் தொங்கோட்டம், மினாவில் ஷைத்தான் மீது  கல்லெறிதல், கஃபத்துல்லாவில் ஹஜ்ருல் அஸ்வத் என்னும் சொர்க்க முத்திரையான பளிங்குக் கல்லை முத்தமிடுதல் இறைக்கட்டளையை நிறைவேற்ற நபி இஸ்மாயிலுக்குப் பதிலாக ஆடு, ஒட்டகம் ஏதேனும் ஒன்றை பலி கொடுக்கச் சொன்னதை நபி இபுராகீம் தொடர்ந்து நிறைவேற்றுதல் உள்ளிட்ட இஸ்லாமிய மரபுவழிச் சடங்குகளிலும் இத்தகையதான ஒத்தவிதி மற்றும் தொடர்பு விதி சார்ந்த சமூக வாழ்வியல் அம்சங்கள் புனிதக் கடமைகளினூடே ஒருசேர இணைந்து இயங்கியுள்ளன.  அண்ணல் நபி முகம்மது(ஸல்)வின் வாழ்வு நிகழ்வுகள் பலவற்றிலும் இத்தகையதான சாயல்கள் கொண்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

பாம்பு கடிக்கு மந்திரிக்க அனுமதித்ததும் இன்னொரு தடவை ஒருவருக்கு தேள் கொட்டிய நிலையில் உடனிருந்த தோழர்களில் ஒருவர் நாயகமே நான் மந்திரிக்கிறேன் எனக் கூறியபோது உங்களில் எவரேனும் தம்சகோதரருக்கு நலன் நல்க இயலுமாயின் அவ்விதமே அவர் செய்யவும் என நபி முகமது மந்திரிப்பதற்கு அனுமதியளித்ததையும் ஹஸ்ரத் ஜாபிர் முஸ்லிம் ஹதீஸில் அறிவிக்கிறார்.

நபி முகமது (ஸல்)நோயுற்றிருந்தபோது சூன்யத்தால் இது ஏற்பட்டதென எண்ணப்பட்டது. பேரீத்தம்பாளை உறைக்குள் சீப்பிலும் தலைமுடியிலும் பதினொன்று முடிச்சுகள் போட்டு ஒரு மெழுகுபொம்மை அதில் ஊசிகள் குத்தப்பட்டு ஒரு கிணற்றின் அடியில் கல்லுக்கு கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் ஹதீஸ் வாய்மொழி வரலாற்றில் பதிவாகி உள்ளது.

ஈச்சமரத்தை ஆண்மரம், பெண்மரம் என்று பாகுபடுத்தி இரண்டு மரத்தையும் ஒன்றாக கட்டி வைத்தால் அம்மரத்தில் நிறைய காய்க்கும் என்ற அம்மண்ணின் மக்களது நம்பிக்கையையும் நபி முகமது(ஸல்) அங்கீகரித்திருந்த வரலாற்று நிகழ்வையும் இத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டும். அடித்தள மக்களின் நம்பிக்கைகளின் பால் அணுகவேண்டிய முறையியலைப் பற்றி இச்சம்பங்கள் நமக்கு பலவிதமாய் அறிவுறுத்துகின்றன.

———

Series Navigationகாசிமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7
author

ஹெச்.ஜி.ரசூல்

Similar Posts

Comments

  1. Avatar
    punai peyaril says:

    அடித்தள மக்களின் நம்பிக்கைகளின் பால் அணுகவேண்டிய முறையியலைப் பற்றி இச்சம்பங்கள் நமக்கு பலவிதமாய் அறிவுறுத்துகின்றன.—> அதை இந்துமதத்தினரோ, பௌத்தரோ,மாயன் கலாச்சாரத்தினரோ செய்தால் மூடநம்பிக்கை… என பெரியார் வீரமணிகள் கிழிப்பர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *