சங்கர் தயாளின் “ சகுனி “

This entry is part 2 of 43 in the series 24 ஜூன் 2012

“ Busy city பசி Citizen “ சகுனி படத்தில், அறிமுகக் காட்சியில், கார்த்தி பேசும் முதல் வசனம். காதில் விழுந்தவுடனேயே, நிமிர்ந்து உட்காருகிறார்கள் போருர் கோபாலகிருஷ்ணாவில், முதல் நாள் மாலைக்காட்சிக்கு வந்திருந்த 200 சொச்சம் ரசிகர்கள். (!)

படம் மொத்தமே இந்த வசனத்தில் அடங்கி விடுகிறது என்றால் மிகையில்லை. பசி என்பது உணவு சம்பந்தப்பட்ட விசயம் மட்டுமில்லை என்பது தான் 158 நிமிடப் படத்தின் கதை. கார்த்தி ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். “ சகுனி படத்தின் கதை சொல்லும்போது, சிரிச்சிக்கிட்டே இருந்தேன். “ முதலிலேயே சிரித்து விட்டதால், ஸ்டாக் தீர்ந்து போய், படத்தில் அவர் கூட அவ்வளவாகச் சிரிக்கவில்லை.

காரைக்குடி தாத்தா ( வி எஸ் ராகவன் ) வின் அரண்மனை போன்ற வீட்டில் வந்தோர்க்கெல்லாம் உணவு உண்டு. பேரன் கமல் ( கார்த்தி ) என்கிற கமலக்கண்ணன் தான் நள பாகம். தமிழக முதலமைச்சர் பூபதி ( பிரகாஷ்ராஜ் ) அநியாய ஆள். நல்ல முதலமைச்சர் சத்யமூர்த்தியைப் ( ஏன் நல்ல முதலமைச்சர்க்கெல்லாம் சத்யமூர்த்தி என்றே பெயர் தமிழ் சினிமாவில்? ) போட்டுத் தள்ளிவிட்டு, தானே முதலமைச்சராக, தேர்தலில் நிற்க, பிரச்சாரத்தின்போது கமலின் தாத்தா வீட்டில் சாப்பிட்டுவிட்டு, தான் சி எம் ஆனவுடன் எது வேண்டுமானாலும் தன்னை வந்து பார்க்கும்படி வார்த்தை விட, அதை வாக்குறுதியாக நம்பி சென்னை வரும் கமல். காரணம்? ரெயில்வே மேம்பாலத்திற்காக தாத்தா வீட்டை இடிக்கப் போகிறார்கள். அதைத் தடுக்க வேண்டும். சென்னையில் அத்தை ( ரோஜா) வீட்டில் டிரைவர் வேலை. அத்தை மகள் ஸ்ரீதேவியுடன் ( ப்ரணீதா ) ஒருதலைக்காதல். சுயநலம் மிகுந்த உலகைப் புரிந்து, பட்டினியுடன் சென்னைச் சூட்டில் கோட்டு சூட்டுடன் அலையும் கமலுக்கு, அவரைப் பெரிய மனிதன் என்று நம்பி, ஆட்டோ ஓட்டும் ரஜினி அப்பாத்துரை ( சந்தானம் ) கடைசியில் கமல் எப்படி பூபதியைக் கவிழ்த்து, வீட்டைக் காப்பாற்றுகிறார் என்பது, சுண்டு விரல் நக சைசில் உள்ள கதை.

கமல், ரஜினி, ஸ்ரீதேவி என்று பெயர் வைத்துக் கொண்டதால், சகட்டுமேனிக்கு எல்லாக் காட்சிகளையும், அவர்கள் படங்களிலிருந்தே உருவி இருக்கிறார்கள். சில கட்டங்களில் வசனங்களைக் கூட. கார்த்தி, மணிரத்னத்திடம் பயிற்சி பெற்றவராம். அதனால் தான் நல்ல கதைத் தேர்வு ஞானம் அவரிடம் இருக்கிறதாம். அவரே பீத்திக் கொண்ட தகவல். மணிரத்னம் கூடக், காவியங்களைத் தான் தழுவுகிறார். ஆனாலும் அதில் அவர் ஸ்டாம்ப் நிச்சயம் இருக்கும். ஆனால் இவரோ ‘ காப்பி ‘ யங்களை ஜெராக்ஸ் எடுத்து திணற வைக்கிறார் நம்மை.

கார்த்தியிடம் ஒரு ஸ்கிரீன் charisma இருக்கிறது. ஆனால் எவ்வளவு நாளைக்குத் தாக்குப்பிடிக்கும் என்பது திரையுலகினர் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி. எவ்வளவு நாட்களுக்குத்தான், கோணல் சிரிப்பையும் ஓரக்கண் பார்வையையும் வைத்துக் கல்லா கட்ட முடியும்?

ப்ரணீதா அழகாக இருக்கிறார். ஆனாலும் நடிக்க வாய்ப்பெல்லாம் இல்லை. அவரும் அதற்கெல்லாம் மெனக்கெடவில்லை. சந்தானம் இல்லாமலே கதை சொல்லியிருக்க முடியும். ஆனாலும் கல்யாண வீட்டு வாழை இலை போல முதலில் அவரைப் போட்டு விட்டுத்தான், மற்ற ஐட்டங்களைப் பறிமாறுகிறார்கள் இப்போதெல்லாம். சாப்பிட்டவுடன் வாழை இலை என்னாகிறது என்று சந்தானம் கொஞ்சம் யோசித்தால் தேவலை.

சில காட்சிகளில் வரும் ரோஜா, இடைவேளைக்குப் பின் வரும் ராதிகா, கடைசிக் கட்டத்தில் வரும் கோட்டா சீனிவாச ராவ், ஊறுகாயாக வரும் நாசர் என ஏகத்துக்கு நட்சத்திரப் பட்டாளம். ஆனாலும் கறிவேப்பிலை மாதிரி தூக்கி எறியத்தான் வேண்டி இருக்கிறது.

பிரகாஷ்ராஜை, கார்த்தி, புத்தியால் முறியடிப்பதாகக் கதை. சகுனி டைட்டில். ஆனாலும் ஒரு யுக்தியாவது ‘அட’ என்று நிமிர்ந்து உட்காரும் வகையில் இல்லை. தனக்கு வேண்டியவர்கள் மேயரானபோதும், தெருவில் சும்மா சுற்றிக் கொண்டே இருக்கிறார் கார்த்தி. அந்த நேரத்தில் அடுத்த படம் பற்றி யோசித்திருந்தால் நல்லது.

சங்கர் தயாள் தேர்ந்த டெக்னியிஷியன்களை நம்புவதை விட்டு விட்டு, நல்ல கதையைத் தேர்வு செய்தால் வண்டி ஓடும். இல்லை என்றால் கொஞ்ச நாளில் டப்பா டான்ஸ் ஆடிவிடும். கோணியில் கோட்டு தைக்க ரேமண்ட்ஸ் டெய்லர் எதுக்கு?

#

கொசுறு

படம் பார்த்த இருவர் பேசிக்கொண்டனர்.

“ படம் எப்படி மச்சான் ?

“ நல்ல்ல்லாயிருக்கு .. “ ( சிரிக்கிறார் )

“ நல்லவேளை.. நாங்கூட நெசமாத்தான் சொல்றியோன்னு பயந்துட்டேன் “

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஒட்டு மொத்த ரசிகர் ரசனைக்கு இந்த ஒரு காமெண்ட் பதம்.

#

Series Navigationமுள்ளாகும் உறவுகள்மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 31
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *