அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்
ஏப்ரல் ஒன்றாம் தேதி பிற்பகல் அண்ட்டல்யாவின் பழைய நகரத்தோடு கழிந்தது. ஒரு தேசத்தைப்போலவே ஊர் அல்லது நகரத்திற்கும் நெடிய வரலாறுகளுண்டு. இலக்கியம் போன்று பாடல் போன்று இசைபோன்று கடந்த காலத்திய நீங்காத நினைவுகளை மீட்கவென்று ஊரின் ஒரு தோப்போ, குளமோ நகரத்தின் கோபுரமோ, கோட்டை மதிற்சுவரோ காலக் கறையானுக்கு இரையாகமல் நிற்கலாம். இம்மகிழ்ச்சியும், களிப்பும் அந்தி நேரக் காற்றுபோல மனதோடு சலசலப்பவை கல்வெட்டுபோல காலத்தை எதிர்கொள்ளும் எச்சங்கள் அவை வரலாற்றின் குறியீடுகள்.
ஐரோப்பிய நாடுகளில் எங்கு சென்றாலும் பழமையானக் கட்டடங்களை பராமரிப்பதில் அவர்கள் காட்டும் அக்கறை நம்மை வியப்பில் ஆழ்த்தும். ஒரு நகரத்தின் அழகு வானளாவ எனப்புகழப்படும் மீட்டர் அளவுகளிலில்லை, அந்நகரத்தில் பழைய நகரம் எங்கே இருக்கிறதென விசாரித்து சென்று பாருங்கள். ஒரு தேசத்தின் பெருமையும் கம்பீரமும் அங்கேதான் ஒளிந்திருக்கும். ஐரோப்பாவில் பல நூற்றாண்டுகளை கடந்த இல்லங்களும், மண்டபங்களும், தேவாலயங்களும், தேசிய சொத்துகள். துருக்கி நாட்டின் அண்ட்டல்யாவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளைபோலவே பழைய அண்ட்டல்யாவை கம்பீரத்துடன் நெஞ்சில் சுமந்திருந்தது.
எங்கள் பேருந்து துருக்கி விடுதலைப்படையினர் சிலைக்கருகே (சென்னை உழைப்பாளர் சிலையை நினைவூட்டும்) மத்திய தரைக்கடலையொட்டி இறக்கிவிட்டது. வழிகாட்டி அங்கு சற்று தூரத்தில் தெரிந்த மினாரைக் காட்டி நான்கு மணிக்கு வந்துவிடவேண்டுமென்றார். பழைய அண்ட்டல்யா என்பது கோட்டைச்சுவர்போன்ற மதிற்சுவர் ஒருபுறம் புதிய நகரின் இரண்டு நீண்டவீதிகள் மற்றொரு புறமென்று இரண்டிற்குமிடையில் தொட்டிற்குழந்தைபோல கிடந்தது. குறுகலான நீண்ட வீதிகள், அவற்றை வீதிகள் என்பதைக்காட்டிலும் சற்று அகலமான நடைபாதைகஎன கூற வேண்டும். ஒட்டோமான் காலத்து வீடுகள் வரிசைகட்டி நின்றன. பெரும்பாலும் மரத்தாலானவை. வெள்ளை அடித்த முகப்புகளும் போர்டிகோவில் படர்ந்த்திருக்கும் மல்லிகையும் காலனியத்துவ கால இல்லங்களை நினைவூட்டுபவை. ஒட்டோமான் காலத்தில் இதொரு மிகப்பெரிய கிராமமென்று வழிகாட்டிகூறினார். கண்முன்னே விரிந்த திரையில் கிராமம் அசைந்து கொடுத்தது. பெரும்பாலான இல்லங்கள் இன்றைக்கு உணவு விடுதிகளாகவோ, தங்கும் விடுதிகளாகவோ இருக்கின்றன. மேசைகள் நாற்காலிகளும் வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து மேற்கத்திய மொழிகளில் கிடைக்கும் உணவையும் ஒயினையும் பட்டியலிட்டுக் காத்திருக்கின்றன. ஆர்வக்கோளாறினால் எங்கள் குழுவைச்சேர்ந்த ஒருவர் இல்லத்தின் கதவைத் திறக்க நாங்கள் அவரைத் தொடர்ந்தோம், இல்லத்துக்குச் சொந்தக்காரர்கள் பொதுவாக அனுமதிக்கிறார்கள். அநேகமாக சற்று முந்தைய வரியில் குறிப்பிட்டிருந்ததுபோன்று உணவு விடுதிகளாக மாற்றப்பட்டிருந்தது காரணமாக இருக்கலாம். ஏராளமான செடிகொடிகள், பாக்கு மரங்கள், விசிறிவாழை கூண்டில் அடைத்த பஞ்சவர்ணக் கிளிகள், சிறியதொரு நீச்சல் குளம்த்துடன் கூடிய விசாலமான முற்றம். புதுச்சேரியிலும் நீச்சல் குளம் தவிர்த்து இதுபோன்ற வீடுகள் வெள்ளையர் பகுதியில் இருக்கின்றன. பழைய அண்டல்யாவில் தீக்கிரையான பத்தொன்பதாம் நூற்றாண்டைச்சேர்ந்த சிதிலமடைந்த பள்ளிவாசலொன்றையும் காணமுடிந்தது.
வழிகாட்டி கூறியபடி நான்கு மணிக்கு அவர் கைகாட்டிய மினார் திசைக்கு வந்து சேர்ந்தோம். பதினெட்டாம் நூற்றாண்டைசேர்ந்த பள்ளிவாசல் அதன் மினார் எங்கிருந்து பார்த்தாலும் கலங்கரை விளக்கம் போல தெரிகிறது. நல்ல உயரமாக இருக்கவேண்டும். பிறகு அங்கிருந்து அத்ரியன் துறமுகம். நகரின் சுவரைகுடைந்து உருவாக்கியதுபோலவிருந்த இத்துறைமுகம் ரோமாபுரிமன்னன் அத்ரியன் என்பவனால் கி.பி 130 ல் ஏற்படுத்தப்பட்டது. இந்த அத்ரியனை மையமாக வைத்து மார்கரித் யூர்சினார் என்பர் பிரெஞ்சில் எழுதிய அத்ரியன் நினைவுகள் ( Memoires d’Hadrien) உலக இலக்கியங்களில் மிக முக்கியமானது. சுமார் 7 வருடங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட 20பக்கம் மொழிபெயர்த்து பிறகு தொடரவில்லை. சென்னைக்கு வருகிறபோதெல்லாம் கடந்த நான்கு வருடங்களாக கி.அ. சச்சிதானந்தம் முடிக்கவேண்டுமென வற்புறுத்துவார். அவருக்கும் அலுத்திருக்கவேண்டும் தற்போது சொல்வதில்லை. அத்ரியன் துறைமுகத்திலிருந்து மத்திய தரைகடல் வளைகுடாபகுதியை பார்த்தீர்ளெனில் பிரிந்துவரமாட்டீர்கள்.
இரவு வேறொரு ஓட்டலில் தங்கவைக்கப்பட்டோம். பிரெஞ்சு நண்பர்களில் பலர் ஓட்டலில் இருந்த ஹமாம் குளியலுக்குச்சென்றார்கள், கட்டணம் 50யூரோ. நாங்கள் எங்கள் அறைகளிலேயே குளியலை முடித்துவிட்டு நிம்மதியாக டின்னரை முடித்துக்கொண்டு படுத்தோம்.
ஏப்ரல் 2 ந்தேதி
காலை ஓட்டலிலிருந்து விடைபெற்றுக்கொண்டு மீண்டும் பேருந்து. காலை ஒன்பது மணிக்கு ஒரு தோலாடை நிறுவனத்தை பார்வையிடல். ஏற்கனவே சுற்றுலாவில் இதுபோன்ற நிறுவனங்களின் பங்களிப்புகுறித்து சற்று அலுப்போடு எழுதியிருக்கிறேன். இங்கே கிழக்கு ஐரோப்பிய இளம் பெண்களை தோலாடை அணிவித்து பூனை நடை போடவைத்தார்கள். பிறகு வழக்கம்போல ஏமாந்த சுற்றுலா பயணிகளின் தலையில் அவற்றை கட்டுவதற்கான முயற்சிகள். பன்னிரண்டு மணிக்கு வெளியில் வந்திருப்போம். அங்கிருந்து நேராக செலால் என்ற வனப்பகுதியிலிருந்த நீர்வீழ்ச்சி. பிற்பகல் ஒன்று அல்லது ஒன்றரை மணிக்கு துருக்கியில் புகழ் பெற்ற உணவு விடுதியென்று ஒன்றிர்க்குக் கூட்டிசென்றார்கள். அங்கே கெபாப் புகழ் பெற்றதாம். அக்கட்டணம் இங்கள் சுற்றுலாக் கட்டணத்தில் அடங்காது. நான் இருக்கிற Strasbourg நகரில் துருக்கியர் அல்லது கிரேக்கர்கள் நடத்தும் உணவு விடுதியில் 8 யூரோவுக்கு நல்ல கெபாப்புடன் கூடிய டின்னர் கிடைக்கும். அங்கே அதற்கு எங்களிடம் 20 யூரோவை வாங்கிக்கொண்டார்கள். வந்திருந்த அத்தனைபேரும் புலம்பினாலும் வாயை மூடிக்கொண்டு சாப்பிட்டுவிட்டு நான்கு மணிக்குப் புறப்பட்டு விமான நிலையம் வந்தோம். விமான நிலையமே சுற்றுலா பயணிகளுக்காக இயங்கிறதோ என்பதுபோல வேறு பயணிகளில்லை. முதல் நாள் எங்கள் விமானத்தில் வந்த பலரும் வரிசையில் நிற்பதைப்பார்த்தேன். நாங்கள் வரிசையில் நிற்கிறபொழுது தட்டச்சு செய்யப்பட பெயர்களை வைத்துக்கொண்டு வரிசையில் நின்ற பயணிகளை விமான ஊழியர்கள் தேடினார்கள். எங்களைக்கூப்பிடவில்லை. முதலில் புரியவில்லை. எதற்காக கூப்பிட்டிருப்பார்கள் என்று மண்டையைகுடைந்துகொண்டிருந்தேன். நானும் எனது மனைவியும் ஏதேதோ கற்பனை செய்துக்கொண்டோம். எங்களுடனிருந்த டாக்டரின் தம்பதி புலம்பிகொண்டு வந்து சேர்ந்தார். என்ன நடந்ததென விசாரித்தேன். தரைவிரிப்பு, நகை தொழிற்சாலை, தோலாடை என்றெல்லாம் பார்வையிட்டோமில்லையா, அங்கே பொருட்களை வாங்கியவர்களின் பெயர் பட்டியல் துருக்கி சுங்கத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட அவர்கள் கணிசமானதொரு தொகையை சுங்கவரியாக இவர்களிடம் வசூலித்திருக்கிறார்கள். பலர் முகத்தைத் தொங்கப்போட்டபடி விமானத்தில் பயணிப்பதை காணமுடிந்தது.
முடிக்கு முன்பாக ஒரு கொசுறுச் செய்தி: ஐரோப்பிய நாடுகளுக்கு விலக்காக துருக்கியில் கடனட்டையை விரும்புவதில்லை. துருக்கி நாட்டில் ரஷ்யாவைப்போலவே சுற்றுலாவும் பெரும் வணிகமும் மபியாக்கள் வசம் இருக்கவேண்டுமென்பதென் யூகம், யூகம் மட்டுமே. இரவு ஒன்பது மணிக்கெல்லாம் பாரீஸ் திரும்பிவிட்டோம்.
தொடரை வாசித்த அனைவருக்கும் நன்றி
-நிறைவுபெறுகிறது-
- முள்வெளி அத்தியாயம் -15
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 19
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 32
- நினைவுகளின் சுவட்டில் (91)
- ஏகாலி
- சித்திரவதைக் கூடத்திலிருந்து
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -1
- தமிழிலக்கியத்தை பிரெஞ்சுமொழியினருக்கு அறிமுகப்படுத்த
- “ல”என்றால் லட்டு என்றுதான் பொருள்…
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 26)
- சூலைத் திங்கள் 7, 8 நாள்களில் பிரான்சு திரான்சி பெரு நகரில் தமிழிலக்கிய உலக மாநாடு
- தாகூரின் கீதப் பாமாலை – 20 இரவின் மந்திர சக்தி !
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-8)
- காலணி அளவு
- ஹைக்கூ தடங்கள்
- உள்ளோசை கேட்காத பேரழுகை
- பஞ்சதந்திரம் தொடர் 50 -அடைந்ததை அழித்தல்
- துரத்தல்
- ஏழாம் அறிவு….
- கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -3 நிறைவுப் பகுதி)
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஆறு
- பத்தாவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா
- அஞ்சுவன்னங்களும் அரபுக் குதிரைகளும்
- சின்னஞ்சிறு கிளியே…!
- துருக்கி பயணம்-8 – இறுதிப் பகுதி
- மணமான அந்தப் பெண்களின் பெயரில்…
- திண்ணைப் பேச்சு – புத்தகங்களிற்கு எதிரான போர்
- ஒரு வெளிர் நீல நிறப் புள்ளி : பூமி மீது ஓர் அன்னியப் பார்வை
- குழந்தைகள் நலனைப் பலி கொடுக்கும் மதவாதக் கலாசாரம்
- அன்பிற்குப் பாத்திரம்
- அண்டவெளிச் சிமிழ் கையாட்சி இணைப்புக்குப் பிறகு சைன விண்வெளி விமானிகள் பூமிக்கு மீட்சி
- ஜெயமோகனின் இந்தியா : ராஜன் குறையின் “தர்க்க” ரீதியான மறுப்பும் பூச்சாண்டி வேடக் கலைப்பும்