அறைக்குள்ளேயே வெகுதொலைவு (ஒரு அஞ்ஞானியின் ”ஆகா” கவிதைகள்) -1

This entry is part 31 of 41 in the series 8 ஜூலை 2012

1

கண்ணில்
ஒரு பிடி
ஆகாயம் தூவி விட்டுக்
காணாமல்
புள்ளியாய் மறையும்
ஒரு சின்னப் பறவை.

2

கோடானு கோடி
நட்சத்திரத் திருவிழாவில்
ஒரே ஒரு யாத்ரீகன்
நிலா செல்லும்.

3

நட்சத்திரங்களை

’எண்ணுவதை’ விட

நிலாவை

’எண்ணுவது’ மேல்.

4

என்

கூட்டம்

‘நான்’ சுருங்கி.

5

மினுக்கென்று எரியும்
இந்த தீபம் தான்
இந்த இரவில்
என் துணை.
தீபம் அணையும் முன்
தூங்கி விடவேண்டும்.

6

காலி நாற்காலியில்
காலியாய் உட்கார்ந்திருக்கும்
அரூபம் யாருடையது?

7

காலவெளி நாக்காய்
இடிந்த
காரை வீட்டின்
முற்றம் பேசாது கிடக்கும்.
எனன சோகம்?

8

சவ ஊர்வலத்தின்
வெடிச் சத்தம்
சாவையே உலுக்கிச்
சாகும்.

9

கூண்டுக்குள்
காடு தேடிக்
குமுறும் புலி.

10

அசையாமல்
இருக்கும் மலை தான்.
அசையும்
என் மூச்சில்.

11

வெளியில்
பறந்து பறந்து
பறவைகள் வரையும்
மனச் சித்திரங்களைக்
காற்று  இரசிப்பது
கலைத்துக் கொண்டேயிருப்பதாய் இருக்கும்.

12

உறக்கம் கெட்டுச் சோகிக்கும் எனக்கு
இரவின் வழி தப்பாமல்
வந்து சேரும் குயிலின் அழைப்பு
விடியும் வரை கூடவே இருக்கும்.

13

தனியாய்க்
கூடு திரும்பும்
ஒரு பறவை
ஓய்ந்து
வீடு திரும்பும்
என் தனிமையைத்
தீர்க்கும்.

14

வீட்டுக்குள் திரிந்த
அணிலை
வெளியில் விரட்டும் என்னை
விட்டத்திலிருந்து வெறிக்கும்
அணிலின் குட்டிகள்
“இது யார் வீடு” என்று.

15

உச்சி மாடியின்
ஜன்னலைத் தான் திறந்தேன்.
என் கழுத்துக்கு மேல் ஆடும்
தெரியும்
ஒரு தென்னையின் கிளைகள்

16

கடலலைகளிடம்
காதல் பேசி
கடல் மேல்
தள்ளாடும் நிலா.

17

மேகங்களில் மறைந்து
மீண்டும் வெளிப்பட்ட
முழு நிலவு பிரசவித்தது
முழு நிலவே தானா?.

18

இந்த இரவு
’முழு நிலாவைக்’
கற்பனை செய்து கொண்டிருக்கும்
பிறை நிலாவைப்
பார்த்துக் கொண்டே இருப்பேன்.

19

உச்சி விளிம்பில்
விழுமோவென்று நிற்கும்
ஒரு காகம்.
விசுக்கென்று
கீழே பாய்ந்து கொத்தும்
என் ’அச்சத்தின்’
அழுகிய நிணத்தை.

20

ஏன் சுமந்து செல்கிறாய்
கவலைகளில்
உன் ஆகாயத்தை?
மேகங்களே
சுமந்து செல்லாத போது.

21

திரியும்
பறவைகளோடு
சேர்ந்து
திரியும்
’பொழுதும்’.

22

உன்
நாற்காலியின் காலை
உடைத்து விடு.
உன் தனிமையில்
உட்காராதே அதில்.

23

மலை விளிம்பில்
மரண பயத்தில் நான்.
அகல பாதாளத்தில்
விழுந்த மனம்
விரைந்தென்னைச் சேரும் வரை.

24

மலங்கள் நிறைந்து கிடக்கும்
வயல் வெளிக்கு அப்பால்
தெரியும் மலை
வளங்கள் நிறைந்தது தான்!

25

வெளி
வசீகரிக்கும்.
மனம்
வெற்றெனக் கிடக்கும்.
மரத்தின் சருகு வீழும்
மண்ணிலல்லாது
என் மனத்தில்.

26

தினம் தினம்
முனகும்
புறா தான்.
தெரிந்தும் இது வரை
கூப்பிட்டுப் போட்டதில்லை
தான்யம்.

27

மழையடித்து உதிர்ந்து
மடிந்திருக்கும்
மலர்களை மிதித்த போது தான்
மரத்தின் சோகம்
சில்லிடும் எனக்கு.

28

திரும்பிப் பார்ப்பேன்.
பார்க்காதது
இன்னும்
’பின்னால்’ தான்.

29

அந்தி வேளை.
மரத்தடிச் சமாதி.
காகங்கள்
கரைந்து கொண்டேயிருக்கும்.
தீரா சப்தம்
தியானமாயிருக்கும்.

30

செல்லும்
ஒவ்வொரு
விநாடியும்
துண்டிக்கும் என்னை
மண் புழுவாய்.

31

ஊரும்
கம்பளிப் பூச்சி
என்று போய்
ஊர் சேரும்
தனியாய்.

32

நான்கு
மூலைகளிலிருந்தும்
விரிந்து பரவும்
வெளிகள் கூடும் நடுவில்
காலி அறை
நெரிசலாயிருக்கும்.

33

உன் தனிமை

தீராததாகி விடும்.

கண்டு கொள் உன்னை

யாரும் உன்னைக்

கண்டு கொள்ளாத போது.

34

என் ’காலத்திற்குப்’ பின்

வரும் குண்டு நிலாவைப்

பார்க்க முடியாதே என்று

ஒரு வருத்தம் எனக்கு.

35

மரத்தடிச் சமாதி.

பிற்பகல் வெயில்.

கூன் விழுந்த மூதாட்டி

கூட்டிக் கொண்டேயிருப்பாள்

சருகுகளையும்

நிழலாடும் தன்

கடந்த கால  நினைவுகளையும்.

36

ஆகாயமெங்கும் மழை.

’அறைக்குள் வந்த

ஆகாயத்தில்’ பெய்யும் மழை

அறைக்குள்

பெய்யவில்லை.

37

காட்டுத் தீ

பற்றி எரியும்

காமத் தீ போல.

38

சென்று விடு.

அறைக்குள்ளேயே

வெகு தொலைவு

சென்று விடு.

39

அறைக்குள்
வந்திருக்கும்
முழுநிலா.
ஜன்னல் சாத்தக் கூடாது
தப்பி விடும்.

40

என்று தொடங்கிய
என் பயணம்
என்று முடியும்?
‘நின்று’
யோசனை.

41

சித்திரை முழுநிலவின்
ஒளிக் காடு.
சுற்றிச் சுற்றி
இருள் தூவிப் பார்க்கும்
ஒரு கருங்காகம்
மரத்தில் அடையாமல்.

42

சதா நிற்கிறதா?
அல்லது
கண்மூடிக் கண்திறப்பதற்குள்
பிரபஞ்சம் சுற்றி வந்து
நிற்கிறதா
கல்குதிரை?

43

சருகுகள் மேல்
சருகுகள் மெத்தி
அடர்ந்த மாங்காட்டின்
அமைதி
மெத்தி இருக்கும்.

44

கடலுக்கும் தாகமா?
கடல் மேல் மழை.
கடல் மேல்
கடல்.

45

புத்தர் மரச்சிற்பம்.

புத்தர்

மரத்திலிருப்பார்.

மரம்

புத்தரில் இருக்கும்.

46

நீர் ஓடாத

ஓடை நெடுக

ஓடியிருக்கும் மரங்களின்

வேர்களுக்குத் தெரியும்

கண்ணுக்குத் தெரியாமல்

ஓடும் நீரோடை.

47

இந்த விநாடியில்

ஜன்னலில் தெரியும்

என் ஆகாயத்தைப்

பிடித்து வைத்துக் கொள்ளப் பார்க்கிறேன்.

ஒரு பறவை

விசுக்கென்று வந்து தட்டிப் போகும்.

48

பூக்காத மனசில்
பூத்துப் போக
கவலைகள் வரும்.

49

கறுப்பு நாய்க் குட்டியின்

கண்களில்

ஓடி ஓடிப் போகும்

குழந்தையின் கண்களில்

கறுப்பு நாய்க்குட்டி

ஓடி ஓடிப் போகும்.

50

படுத்திருந்த நான்

படுத்திருந்த

பாயைச் சுருட்டி விட்டு

படுத்திருந்த “ஆளைத்”

தேடுவேன்.

—————–

 

Series Navigationசெர்ன் விரைவாக்கி யந்திரத்தில் கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸான் தடம் கண்டுபிடிப்புகவிதைகள்
author

கு.அழகர்சாமி

Similar Posts

Comments

  1. Avatar
    G.Alagarsamy says:

    நான்காவது கவிதையில் ‘நான் சுருங்கி’ என்பதற்குப் பதிலாக ‘நான் ஒடுங்கி’ என்பது சரியாக இருக்கும். 23 வது கவிதையில் ‘மரண பயத்தில் நான்’ என்பதற்குப் பதிலாக ‘மரணித்து நான்’ என்பது சரியாக இருக்கும். வார்த்தைகள் முயற்சித்துக் கொண்டே தான் இருக்கின்றன அர்த்தத்தைத் தொட்டு விட.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *