ஈழத்து கவிதைப் புலத்தில் ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள் !“கனவுகளுக்கு மரணம் உண்டு” தொகுப்பை முன்வைத்து” !)

This entry is part 35 of 41 in the series 8 ஜூலை 2012

ஈழத்து கவிதைப் புலத்தில்

ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்
!“கனவுகளுக்கு மரணம் உண்டு” தொகுப்பை முன்வைத்து” !

நான் அறிந்தவரை ஈழத்துக் கவிதைகளின் அசைவுகள்,அனுபவங்கள் அண்மைக்கால சூழலில் புலமும் புறமுமாக எழுதப்படுவதையும் சித்தரிப்பதையும் அவதானிக்க முடிகின்றது.பிரிநிலை என்பதுகளில் தீவிரமாக கட்டமைக்கப்பட்ட சூழலில் யுத்தத்தின் அனுபவங்களை அல்லது வரலாற்றுப் பதிவுகளை தொண் ணூறுகளில் துயர்தலின் வலிகளாக,ஆறாத காயங்களின் முறையீடுகளாக காணப்பட்டன.

நீளும் சமூகப் பிரச்சினைகளை அகிலன்,சிவசேகரன்,அரபாத்,ஜெயபாலன்,இளைய அப்துள்ளாஹ் என படைப்புக்கள் காயங்களோடு வெளிவந்தன.நெஞ்சை உழுக்கும் விதமாக வாசிப்புக்கள் அமைந்ததோடு உண்மைநிலை சடுதியாக வேகமெடுத்ததை மறக்க முடியாது.இவருடைய படைப்பு முறையும் அறிவித்தல் முறையும் சாத்தியமாகின.

பிரக்ஞையுடன் ஈழத்திலிருந்து ஏ.நஸ்புள்ளாஹ்வின் “நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம்”அமைந்திருந்தமை இங்கு யதார்த்த பூர்வமாக வெளிப்படுத்த வேண்டும்.ஏனெனில், ஏ.நஸ்புள்ளாஹ்வின் “நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம”வெளிவந்த காலத்து நடப்பியலில் நான் ஈழத்தில் இருந்தேன்.அக்காலப்பகுதியில் தீவிர கவிதை வாசிப்புத் துறையில் நான் இருந்ததின் காரணமாக ஏ.நஸ்புள்ளாஹ்வின் படைப்புக்களையும் விரும்பி உள்வாங்கினேன்.

ஈழத்துப் படைப்பாளிகளில் முக்கிய தளத்தில் உள்ள திக்கவல்லை கமால் ஏ.நஸ்புள்ளாஹ்வின் கவிதைகள் பற்றிதான விமர்சனப் பார்வையை பத்திரிகையொன்றில் மிக அழகாக இவ்வாறு காட்சிப் படுத்தி இருந்தார். “கவித்துவமான வெளிப்பாடுகள் புத்தகம் நிறைய விரவிக்கிடப்பதை அவதானிக்க முடிகின்றது.தலைப்புக்கள் கூட அழகிய உணர்வையும் சிந்தனை அதிர்வுகளையும் எழுப்பும் விதமாக இருக்கின்றன”என “நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம்” பற்றயதான தனது அதானிப்பை சொல்லி இருந்தார். திக்கவல்லை கமால்.

ஏ.நஸ்புள்ளாஹ் சமகால சூழலில் கவிதைகள் எழுதும் படைப்பாளிகளில் முக்கியமானவர்,இவரின் கவிதைகள் மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன.முதற் தொகுதி “துளியூண்டு புன்னகைத்து”(2003), “நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம்”(2009),கனவுகளுக்கு மரணம் உண்டு”(2011) என வெளிவந்துள்ளன. ஏ.நஸ்புள்ளாஹ்வின் “கனவுகளுக்கு மரணம் உண்டு”கவிதைத் தொகுதி அவரின் இரண்டு தொகுதிகளிலிருந்து அவரை இன்னுமொறு தளத்திற்கு அடையாளப்படுத்தி நிற்பதை காண முடிவதோடு கவிதைகள் தனித் தன்மை பெற்றிருப்பதால் “கனவுகளுக்கு மரணம் உண்டு”கவிதைகள் மீது வேட்கை கொள்ள வைப்பதற்கான காரணமாகின்றது.

தொகுதியிலுள்ள முதற் கவிதை அல்லது ஏ.நஸ்புள்ளாஹ்வின் வாழ்வியலின் நடப்பியல் கவிதை.

“என் ரத்தங்களே

அவர்கள்

என்னை எதிரியாக கொண்டாடிய போதும்

இவன் எறும்புகளுக்குக் கூட

குறிவைத்ததில்லை”

இக்கவிதை தனிமனித வாழ்வியலின் அனுபவ முகத்தினை, பங்காளிகளின் முரணை,உள்ளம் எதிர்கொள்ளும் பதிவின் கனப்பினை மேலும் அத்வைதக கோட்பாட்டினையும் தெளிவு படுத்துவதோடு எந்த நெருக்கடியான நேரத்திலும் தன் மனதை விட்டு வெளியேறாக் கொள்கை உணர்த்துதலுடன் தன் கவிப் போக்கை ஏ.நஸ்புள்ளாஹ் காட்சிப் படுத்துகிறார்.

என் மேலான கூர்ந்த பார்வையில் மாற்றுக் கருத்தக்களை நேருக்கு நேர் தன் படைப்புக்களில் முன்வைக்கும் புதிய உடைப்பை ஏ.நஸ்புள்ளாஹ்வின் படைப்பக்களில் காண முடிகின்றது.

ஒரு பொழுதும் சம்மதிக்காத
பாம்பு வெளிக்குச் செல்லும் என் தனிமை
கனத்து வருகிற இருள்
மிடறுகளை நக்கி
என்னை கவ்விக் கிடக்கிற காற்று
ஆகாய அளவில் தேடலும் வேட்கையுமாக
நுரைத்துப் பொஙகிய கடன்
இப்படித்தான் அலைந்து கொண்டிருக்கிறது நான்.

“கடன் வேட்டை” என்னும் கவிதையின் ஒரு பகுதி இது.இவருடைய இக் கவிதை நவீன இயக்கத்திற்;கு மகுடத்தையும் தமிழுக்கு கௌரவத்தையும் உருவாக்கி தந்திருக்கிறது.இக்கவிதை நெடுக அனுபவங்களும் உணர்ச்சிகளும் இன்னும் மாறுபடும் கருத்து நிலைகளும் நிறைந்து இன்றைய வாழ்வியல் பற்றியதான அனுபவ வெளிக்குள் நம்மை பிரயாணப்பட வைத்திருக்கிறது.

ஏழாவது வானுக்க அப்பால்

கழற்றி வைக்கலாம்

மரணத்தையம்

அதன் தோழமைகளையும்

முடிவில் தனிமையும் சுகம்தான்

மரணமும் அழகுதான்.

“நியாயப்படுத்துவதற்காக” என்னும் கவிதையின் வரிகள் இவை.நிலையாமை நிரம்பிய உலகத்தின் காட்சி வெளிப்பாடுகள் உணர்வாய் பதிந்த கவிதை இது.என்றோ ஒரு நாள் மனித வாழ்வியலின் நிலையான உலக வாழ்விற்கு உத்தரவாதம் வழங்க முடியாது.மனிதன் அல்லது ஏதோ ஒன்று மரணத்தின் உள்ளடக்கத்தை ஒரு கட்டத்தில் ஏற்றே ஆக வேண்டும்.என்பதை இவ்வரிகள் பிரதிபளிக்கிறது.

நான்

உன்மொழி பேசுகிறேன் என்றும்

அவன் இன்னொறு மொழி

பேசுகிறான் என்றும்

நம் முனைப்பின் சாலையை

நீட்டிக் கொண்டு

எதிரெதிர் திசைகளில் நடக்கயில்

ஒவ்வொறு முறையும்

இழப்புக்கள் மேலதிகமாகலாம்.

“உன் மொழி பேசும் சகோதரன்”என்னும் கவிதையின் வரிகள் போர்க்காலத்தின் மீது படிந்திருக்கும் பயங்கர இன முரண்களை இந்த கவிதை நிரப்பி வைத்திருடிக்கிறது.இன்றைய சமகால சூழலில் ஒரு சமூகம் இன்னொறு சமூகத்துடன் நட்பு ரீதியான உறவையும் மொழி ரீதியான உறவையும் வலிமைப்படுத்த வேண்டும்.என தனக்கேயான தொனியில் வலிமையாக மொழிகிறார் ஏ.நஸ்புள்ளாஹ்.

ஆனால் எதிலும் இன்னும் சில முரண்களிருக்கின்றது.எழுத்துக்கள்தான் மனித வரலாற்றில் சாட்சிகளாய் நாளை அமையக் கூடும். நமது சாட்சிகளில் ஏ.நஸ்புள்ளாஹ்.

படைப்புக்களும் நாளைய சாட்சிகளாக அமையும் என்பது திண்ணம்.

யாரும் இல்லாத

அரச மரத்தில் காவலுக்கு நின்;றன

சில வெளவால்கள்.

இந்தக் கவிதையும் சமகால நடப்பியலின் பின்னனி எனக்கூட சொல்லலாம்.நிகழும் அசாத்தியங்கள் கவிதையைப் போல வேறு எந்த மொழிவழி அடைவுகளிலும் உருவாகுவதில்லை.சமூகத்தின் சில நெருக்கடி மிக்க பயணத்தை உற்று நோக்குவதாக இந்தக் கவிதை அமைவதையும் ஏ.நஸ்புள்ளாஹ்வின் பேனாவின் கூர் முனையையும் இக்கவிதையிலும் காண முடிகிறது.

ஏ.நஸ்புள்ளாஹ்வின் கவிதைகள் வாசணை ஈர்ப்புக்கு உள்வாங்கிய காரணம் அவருடைய கவித்துவ எல்லைகள் நவீன மொழிப்பாதையில் பயணம் பண்ணியதும் தனது படைப்பக்களில் பிற படைப்பாளிகளின் பாதையை விட்டு தனித்துவப் பாதையில் பயணம் பண்ணியதை இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

யுத்தத்தின் பின் விளைவுகளால் குரலெழுப்ப முடியாமல் அரசியல் காட்டுக்குள் தனித்து விடப்பட்டுள்ளதான.மக்களின் இன்றைய தேவை சார் உணர்வுகளையும் கவனத்தின் கீழ் ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள் கொண்டு வர வேண்டும்.

எனினும் தனிமையையும் அனுபவங்களின் அசைவுகளையும் பேசி நிற்கும் ஏ.நஸ்புள்ளாஹ் ஆற்றாமைக்கு அப்பாலாக விரிந்து கிடக்கும் சமூக இருப்புக்காக குரல் தருகிறார்.

“கனவுகளுக்கு மரணம் உண்டு” தொகுதி ஏ.நஸ்புள்ளாஹ்வின் கவிதா ஆளுமையை இன்னுமொறு முறை வெளிப்படுத்துகின்றது.பொதுவாக பல படைப்பாளிகளின் படைப்புக்களை நேரடித்தன்மையுடன் வாசித்து அதன் அக உணர்வை அறிந்து கொள்ளலாம் ஆனால் ஏ.நஸ்புள்ளாஹ்வின் படைப்புக்களை முதிர்ந்த வாசகனும் நவீன படைப்பாளிகளுமே சரிநிகராக உள்வாங்க முடியும்.ஏனெனில் ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள் இருக்கமான மொழி பிரக்ஞை கொண்டு எழுதப் படுகின்றது என்பது கண்காணிப்பாளர்களின் கருத்தியல்.

சென்னையிலிருந்து தர்மினி

Series Navigationகவிதைகள்அறைக்குள்ளேயே வெகுதொலைவு-II (ஒரு அஞ்ஞானியின் ”ஆகா” கவிதைகள்)

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *