விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஏழு

This entry is part 37 of 41 in the series 8 ஜூலை 2012

1938 டிசம்பர் 27 வெகுதான்ய மார்கழி 12 செவ்வாய்க்கிழமை

அம்மா, போகலாமா?

சாமா கேட்டான். மேல் சட்டையில்லாத உடம்பில் குற்றாலம் துண்டைப் போர்த்தி, கையில் சின்ன மூட்டையைத் தூக்கிப் பிடித்திருந்தான். இடுப்பில் வார் பெல்ட்டில் பத்திரமாக ரூபாய் நோட்டுகளை வைத்துவிட்டு, பர்ஸை மருதையனிடம் கொடுத்தான்.

குடிக்க கொஞ்சம் தண்ணி எடுத்துக்கலாமய்யா. அண்டா குண்டாவிலே வச்சு கங்கா ஜலம்னு சகலமானதுக்கும் எடுத்து நீட்டறான். மத்ததெல்லாம் சரிதான். குடிக்கவும் அதானான்னு எதுக்களிச்சுட்டு வருது.

மருதையன் சொல்வதும் உண்மைதான். பத்து அடி தூரத்தில் யாரோ யாருடைய சாம்பலையோ எரித்துக் கொண்டிருக்க, வலது கையை ஓங்கி நீட்டினால் முகத்தில் இடிக்கும் தூரத்தில் யாரோ கர்ம சிரத்தையாக உடம்பைச் சொறிந்து சொறிந்து அழுக்கு நீக்கிக் குளித்து முழுக்குப் போட்டுக் கொண்டிருக்க, இடது கை ஓரமாக மேல் படியில் நின்றபடிக்கே தகர டிரம்களில் தண்ணீரை நிறைத்துக் கொண்டு ஒரு மகா முண்டாசுக்காரன் நிற்கிறதை நேற்றுப் பார்க்க நேர்ந்தது. அவன் தான் இவர்கள் தங்கியிருக்கிற சத்திரத்துக்குக் குடிதண்ணீர் தினசரி கொண்டு வந்து ஊற்றி விட்டுப் போகிறான் என்றான் மருதையன்.

சத்திரக் கிணற்றில் இரைத்து, காய்ச்சி வைத்து ஆற்றிய வென்னீரோடு இரண்டு முந்திரிக்காய் கூஜாக்களை முன்னால் எடுத்து வைத்தாள் பகவதி. கூடவே களிம்பு ஏறிய கலசம்.

போகலாமா மன்னி?

அவள் மனதுக்குள் விசாலத்தை விசாரித்தாள்.

சாமா என்ன சொல்றான்னு கேளு.

இந்தச் சொம்பை எதுக்கும்மா இப்ப எடுத்து வைக்கறே? அப்பாவுக்கு சிரார்த்தக் காரியம் பண்ணப் போயிண்டு இருக்கோம். ஓர்மை இருக்கில்லியோ?

சாமா சிரித்தபடி தான் கேட்டான். ஆனாலும் பகவதிக்கு மனதில் சுருக்கென்று தைத்தது.

இல்லேடா, நம்மை நம்பி ஒப்படைச்சது. நாம தானே அதுக்கு ஒரு வழி செய்யணும்.

முதல்லே இந்தச் சொம்புக்குள்ளே என்ன இருக்குன்னே யாருக்கும் தெரியாது. கங்கா ஜலமாக் கூட இருக்கலாம். இல்லே காசி விசுவநாதர் வீபுதி அதுவும் இல்லியா வியாதியை ஸ்வஸ்தமாக்கிற ஏதாவது சூரணம். டப்பாவை அடைக்கிற மாதிரி வாயையும் இறுக்கமா மூடி வச்சிருக்கு. உள்ளே நகை பணம் காசு கூட இருக்கலாம். யார் சொத்தோ என்னமோ. எதுக்கும் ஒரு தடவை உடைச்சு திறந்து பார்த்துட்டு அப்புறம் தீர்மானிக்கலாமே.

குழந்தே நான் தாண்டா. உன்னோட பாட்டித் தள்ளை. உங்கம்மாவுக்கு மன்னி. விசாலம்.

விசாலம் பசித்து மெலிந்து கொஞ்சூண்டு சோற்றை யாசிக்கிற சிறுமி மாதிரி முறையிட்டாள். பகவதிக்கு மனசு நெகிழ்ந்து போனது,

மருதையன் கலசத்தை தனியாக எடுத்து வைத்தான்.

அம்மா, நாளைக்கு கட்டாயம் இதுக்கு ஒரு வழி செஞ்சுடலாம். இன்னிக்கு முக்கிய விஷயம் இவங்க அப்பாருக்கு திதி கொடுக்கறது. அதை முடிக்கவே நேரம் சரியா இருக்கும்னு அய்யர் சொன்னார்.

இருந்தாலும் இந்த கலசம்.

பகவதி தயங்கியபடி விசாலத்தை நோக்கினாள். அவள் காலையில் படிந்த பனியின் மிச்ச சொச்சமாக கலைந்து கொண்டிருந்தாள்.

பகவதி, பகவதி குட்டி நீ தாண்டி எனக்கு எல்லாம். அவள் திரும்பத் திரும்ப அரற்றிக் கொண்டிருந்தது பகவதி காதில் மாத்திரம் விழுந்தது..

மன்னி ஒரு நாள் மட்டும் பொறுத்துக்கலாமே. தயவு செய்யுங்கோ. நான் போய் முதல்லே உங்க மாப்பிள்ளையை அனுப்பி வச்சுட்டு வந்துடறேன். நான் ஒண்ணும் செய்யற இடம் இல்லே இது. உங்களுக்குத் தெரியுமே. முழுக்க ஆண் பிள்ளைகளுக்கான நியமம். ஓரமா நின்னு, புடவைத் தலைப்பால கண்ணைத் தொடச்சுண்டு கூஜாவிலே இருந்து வென்னீர் விளம்பிக் கொடுத்து ஒத்தாசை செய்யலாம். அவ்வளவுதான். செஞ்சுட்டு வர்றேன். நாளைக் கதை நாளைக்கு.

பகவதி சாமாவோடும், மருதையனோடும் கிளம்பினாள்.

கொஞ்சம் நில்லு. நல்ல சகுனம்.

ராம் நாம் சத்ய ஹை. ராம் நாம் சத்ய ஹை.

சாமா கையைக் காட்டினான். அடுத்த சவ ஊர்வலம் தெருவில் ஊர்ந்து கொண்டிருந்தது. சாவுக்கும் வாழ்வுக்கும் நடுவில் இடைவெளி மாதிரி குறுகிச் சிறுத்து இருந்த தெருவில் சடலத்தைச் சுமந்து போனவர்கள் முன்னால் பின்னால் வந்தவர்கள் மேல் இடித்து மோதிக் கொண்டுதான் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ஊரே மகா மாசானம். தீட்டும் சகுனமும் நல்ல நேரமும் அல்லாததும் பாவமும் புண்ணியமும் என்று தனித்தனியாக இங்கே ஒன்றும் இல்லை.

பகவதி கை கூப்பிக் கும்பிட்டாள், யாரோ, ஆணோ பெண்ணோ அலியோ. எந்த பாஷையிலோ சந்தோஷப்பட்டு அதிலேயே ரௌத்ரம் காட்டி ஆடி, குழைந்து மன்றாடி, இருமி இளைத்து அடங்கியது யாராக இருந்தாலும் அந்த ஆத்மா நல்ல கதிக்குப் போகட்டும்.

அவள் கையில் இருந்த இரண்டு கூஜாக்களில் ஒன்றை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொண்டான் மருதையன். போதாக்குறைக்கு சாமாவின் இன்னொரு ஜதை மடி வேஷ்டி, ஈரிழைத் துண்டு, ஆஸ்த்மா மருந்து, தலைவலிக்குத் தைலம் என்று அடைத்து வைத்த மஞ்சள் பையும் அவன் கையில் தான் இருந்தது.

கூட்டம் அதிகமா இருக்கும் போல இருக்கே

பகவதி மெல்லச் சொன்னாள்.

இங்கே கூட்டம் இல்லாம இருக்கணும்னா உலகத்திலே சாவு எங்கேயும் விழாம இருக்கற நாள் எதுவோ அன்னிக்குத்தான்.

மருதையன் சொன்னான். அவனுக்கு இதிலெல்லாம் ஒரு நம்பிக்கை இல்லை என்பது சாமாவுக்குத் தெரியும்.

ஏண்டா மருது, உங்க அப்பா அம்மாவுக்கும் சேர்த்துக் கொடுத்திடேண்டா. மகராஜி. பூவும் பொட்டுமா போய்ச் சேர்ந்திருக்கா எங்க மகாராணியம்மா. அவளையும் ராஜா சாகிப்பையும் வைகுந்தத்திலே அமர்க்களமா உட்கார வை. புண்ணியமாப் போகும்.

உள்ளபடி நம்பி, மனதில் இருந்து சுரக்கும் பரிவு வார்த்தையில் இழைந்து வர, பகவதி சொன்னாள். அண்டை வீட்டார்களை நினைக்கும்போது அவர்களின் அந்நியோன்யமும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட பிரியமும் தவறாமல் நினைவு வரும். இப்போதும்தான்.

அடுத்த முறை வரும்போது பார்த்துக்கலாம் அம்மா.

என்னமோ அரசூருக்கு நாலு மைல் தூரத்தில் வாரணாசி இருக்கிற சகஜமான பாவத்தில் சொன்னான்.

அவனை அடிக்கக் கை ஓங்கிய பகவதிக்கு சட்டென்று தேகம் முழுக்கத் தளர்ந்து கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.

மருதையா சித்தெ நில்லு. கண்ணைக் கட்டறது.

அவள் ஒரு வினாடி நின்றாள். சாமா விடுவிடுவென்று முன்னால் நடந்துபோய்க் கொண்டிருந்தான். மருதையன் அவள் வேகத்துக்குச் சரியாக மெல்ல ஊர்ந்து கொண்டு போக வேண்டி இருந்தாலும் பொருட்படுத்தாமல் நடந்து கொண்டிருந்தான். அவனுக்குப் பார்க்க எல்லாக் காட்சியும் வேண்டும். எல்லா கந்தமும் எல்லா சத்தமும் வேண்டும். பகவதியோடு போகிற போது அவளுக்கும் அம்மாவிடம் பேசித் தீர்க்கிற ஒரு குழந்தை மாதிரி எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மனது துடிக்கிறது.

சொந்த அம்மாவோடு ஆக ஒட்டாமல் அடிச்சுட்டா பாப்பாத்தின்னு சொல்லப் போறா ஊர்லே, ரொம்ப ஒட்டுதல் வேணுமான்னு பார்.

சங்கரன் கூட சமயத்தில் எச்சரித்திருக்கிறான். ஆனாலும் அந்தப் பிரியத்தை, அம்மா என்று ராகம் போட்டுக் கூப்பிட்டுக் கொண்டு வாசலில் வந்து நிற்கிற அவசரத்தை அவளுக்கு வேணாம் போ என்று தள்ளிக் களைய முடியவில்லை.

அய்யர் வீட்டுலே வளர்ந்தா ஆட்டுக்கறி திங்க வாய் பழகாது போயிடும். மத்தப்படிக்கு ஒரு குறைச்சலும் இல்லே. தயிர்சாதமும் வீபுதிப் பட்டையும் வாங்கோ போங்கோ கொச்சையுமாக நம்ம குமாரன் நல்லாப் படிச்சு நல்லா முன்னுக்கு வரட்டும். வேறென்ன வேணும் எனக்கும் கெழவிக்கும்?

ராஜா இந்தப் பிரச்சனையை யாரோ ரொம்பக் காரியமாக முன்னால் எடுத்து வந்தபோது சொன்னதை ராணியும் மனதார ஆமோதித்த தகவலையும் வேறு யார் மூலமாகவோ கேள்விப்பட்டு சங்கரன் தான் அவளிடம் சொன்னான்.

ரெண்டு பிள்ளையை வளர்க்கற அவசரத்துலே சாமாத் தேவனையும் மருது அய்யனையும் கொழக்கட்டை மாதிரி பிடிச்சு அனுப்பிடாதே. உலகம் தாங்காது.

அவளை சங்கரன் கிண்டல் செய்யும் போதெல்லாம் பகவதி சொல்வாள் – அது இல்லாம இருந்தா மட்டும் இந்த ரெண்டு வானரங்களை உலகம் அப்படியே தாங்கிடுமா என்ன?

என்ன அம்மா, பசி மயக்கம் தான் இது. காலையிலே ரெண்டு இட்டலியாவது புட்டுப் போட்டுக்கிட்டு வந்திருக்கலாமில்லே.

மருது ஐயர் விசாரிக்கிறார், இன்னொரு வானரம் அவசரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

சாப்பாடா? உங்க அப்பாவையே முழுசா முழுங்கிட்டு உக்காந்துண்டு இருக்கேன். அந்த மனுஷரையாக்கும் கடைத்தேத்த போயிண்டு இருக்கோம். பசியா பெரிசு இப்போ, அச்சாபிச்சம்.

அப்ப எதுக்கு நிக்கச் சொன்னீங்களாம்? ஜாட்ஜாட்டுனு நீங்க பாட்டுக்கு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதானே. நான் வயசான ஆளு பையப் பதறாம பின்னாடியே வரேன்.

அவன் மலங்க மலங்க விழித்தபடி சொல்லி விட்டுக் கண்ணால் சிரித்தான். படுபாவி, குடும்பம், குழந்தை குட்டி என்று சகல சௌகரியத்தோடும் இருக்கப் பிடிக்காமல் இப்படித் தனிக்கட்டையாகவே பாதி ஆயுசைக் கழித்து விட்டானே இந்தப் பிள்ளை. அவள் வளர்ப்பு தப்பு தானோ? ராணியம்மாவே ரெண்டு பேரையும் வளர்த்தி எடுத்திருக்கலாமோ?

அவளுக்குத் தெரியவில்லை. மருது தோளில் சற்றே சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டாள்.

ராம் நாம் சத்ய ஹை.

பின்னால் இருந்து யாரோ நெட்டித் தள்ளுகிறார்கள்.

அடுத்த ஊர்வலம்.

பகவதிக் குட்டி. சுகம் தன்னே.

படுத்துப் போனவள் கேட்டாள். அவள் நாணிக் குட்டிதான். பகவதிக்குத் தெரியும். எப்படி என்றெல்லாம் கேட்கக் கூடாது.

(தொடரும்)

Series Navigationஅறைக்குள்ளேயே வெகுதொலைவு-II (ஒரு அஞ்ஞானியின் ”ஆகா” கவிதைகள்)குறிஞ்சிப் பாடல்
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *