ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன.
பெர்னாட் ஷா (Preface to Mrs. Warren’s Profession Drama)
ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.
அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை. ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.
மேடம் மோனிகா வார்ரன் நாடகத்தைப் பற்றி :
[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]
பெர்னாட் ஷா நாடகத்தின் அடிப்படைக் கருத்து இதுதான் : ஏழ்மையாலும், சமூகப் புறக்கணிப்பாலும், தனிப்படுவ தாலும், இல்லாமையாலும், வேலையின்மையாலும் சில மாதர் பரத்தையர் தொழில் சிக்கிக் கொள்கிறார் என்பதாக பெர்னாட் ஷா தன் நாடக முன்னுரையில் கூறுகிறார். மிஸிஸ் மோனிகா வார்ரன் ஒரு நடுத்தர வயது மாது. உயர்தரப் பரத்தையர் மாளிகையை மேற்குடிச் செல்வந்தருக்கும், சமூகச் செல்வாக்கு மாந்தருக்கும் நடத்தி வரும் உரிமையாளி. நளினமும், நாகரீகமும் கவர்ச்சி மேனியும் கொண்டவள். மோனா லிஸா போன்று பார்க்க ஓர் அழகிதான். அவளுக்கு விவியன் என்றொரு வாலிபப் புதல்வி. மகள் கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிட்டி பட்டதாரி. அவளது கல்லூரிப் படிப்புக்குத் தொடர்ந்து பணத்தை அனுப்பிய அவளது அன்னை எப்படிப் பணம் சம்பாதிக்கிறாள் என்று தெரியாமல் இருக்கிறாள். அந்த இரகசியம் தெரிந்ததும் விவியன் வெகுண்டு, வெடித்து அன்னையைத் திட்டி அறவே வெறுக்கிறாள். தாய் சிறு வயதில் வறுமைப் பிடியில் பட்ட துயர்களைக் கூறிப் பரத்தையர் தொழிலில் தான் தள்ளப் பட்ட காரணத்தை விளக்குகிறாள். மகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தர்க்கத்தின் முடிவில் உடன்பட ஒருவரும் இயலாது இருவரும் தாம் விரும்பும் தனித்தனிப் பாதையில் போகிறார். மோனிகா தன் பரத்தையர் தொழிலைத் தொடர்கிறாள். தாயைப் போல பிள்ளை என்பார் சிலர். ஆனால் விவியன் ஒரு விதி விலக்கு மங்கை. அவள் அன்னையைப் போலின்றி ஒரு கௌரவத் தொழிலில் உழைத்துச் சம்பாதிக்க ஈடுபடுகிறாள்.
மிஸிஸ் வார்ரனின் தொழில் நாடகத்துக்குத் தடை உத்தரவு
1893 இல் எழுதிய பெர்னாட் ஷாவின் நாடகம் 1925 ஆண்டுவரை அடுத்தடுத்துத் தடை செய்யப்பட்டு இங்கிலாந்தில் அரங்கேறாது முடங்கியே மூலையில் கிடந்தது. பிரிட்டனின் அக்கால அரங்க மேடை அதிபரரான லார்டு சேம்பர்லின் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” நாடகத்தை எந்த நகரிலும் அரங்கேற்றக் கூடாது என்று தடை உத்தரவு போட்டார். காரணம் அந்த நாடகம் பரத்தையர் தொழிலைப் பற்றிக் காட்டி ஆடவரையும், மாதரையும் இழிவு செய்கிறது. பரத்தையர் தொழில் நாட்டில் ஊன்றி வளர்வதற்கு மூல காரணமே சமூகம் தான் என்பது நாடகக் காட்சியாக வெளியாவது அப்போது வரவேற்கப் படவில்லை. 1902 ஆண்டில் லண்டனில் உள்ள “நியூ லிரிக் கிளப்” தன் உறுப்பினர் மட்டும் பார்க்க அந்த நாடகம் முதலில் அரங்கேறியது. 1905 இல் நியூ யார்க்கில் “மிஸிஸ் வார்ரன் தொழில்” நாடகம் முதன்முதல் அரங்கேறிப் பாதியில் போலீசார் குறுக்கிட்டு நடிகர் குழுவினர் கைது செய்யப் பட்டனர். பொதுநபர் ரசிக்க 1925 ஆண்டில்தான் அதை லண்டன் நாடக அரங்குகள் மேடையில் காட்ட முன்வந்தன.
பரத்தைமைத் தொழில் (Prostitution) பற்றி பெர்னாட் ஷாவின் கருத்துகள்
பெர்னாட் ஷா 1893 இல் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” என்னும் நாடகத்தை எழுதினார். அது பரத்தைமைத் தொழலில் ஈடுபட்டு ஊதியம் சம்பாதிக்கும் மிஸிஸ் வார்ரனைப் பற்றியது. அந்த வெறுப்புத் தொழிலில் கிடைத்த பணத்தை மகளுக்குத் தெரியாமல் சேர்த்து மகளைப் பட்டப் படிப்பில் ஏற்றி வளர்த்த நிகழ்ச்சியே நாடகத்தின் ஆணிவேராய் அமைந்துள்ளது. இறுதியில் அதை அறிந்து கொண்ட மகள் ஆவேசம் கொண்டு அன்னையைப் பிரிவதே நாடக உச்ச முடிவாக எழுதப்பட்டுள்ளது.
மிஸிஸ் வார்ரன் உட்பட பரத்தைமைத் தொழிலில் பங்கு கொண்ட மற்றவரும், அவளது ஆசை நாயகரும் கண்ணியமாக காட்சி அளித்துப் போவதாய் பெர்னாட் ஷா காட்டி இருக்கிறார். இந்த கசப்பு நாடகத்தை தடை செய்யத் தகுதியுள்ள ஆபாச நடைப் போக்குகள், முரண்பாடுகள் எதுவும் வசனங்களில் இல்லை. பரத்தைமை பற்றிய ஆபாசக் காட்சிகள், அமங்கலச் சொற்கள், அதிர்ச்சி வரிகள் எவையும் நாடகத்தில் எங்கும் காணப் படவில்லை. நாடக வசனங்களை இரட்டைப் பொருளில் பெர்னாட் ஷா எழுதி இருப்பது திறமையான நவீன நடைப் போக்காக திகைக்க வைக்கிறது.
பரத்தையர் தொழில் மாளிகை வைத்து நடத்தும் மிஸிஸ் வார்ரன் முரண்பாடு நாடகத்தை பெர்னாட் ஷா எழுதியதின் நோக்கம் என்ன ? பரத்தைமைத் தொழிலின் மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட நெறிகள் அல்ல ! ஆடவரின் ஆதிக்க வன்முறை வெறிகள் அல்ல ! வறுமை, ஏழ்மை, பசி, பட்டினி, தனிமை, வேலையின்மை, சமூகப் புறக்கணிப்பு, முறிந்த குடும்பம், வன்முறைக் கற்பழிப்பு, கட்டாயத் தொழில் அழுத்தம் போன்ற சமூக இடை யூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன என்று பெர்னாட் ஷா தன் நாடக முகவுரையில் கூறுகிறார்.
**********************
நாடக உறுப்பினர்
1. மேடம் மோனிகா வார்ரன் [Mrs. Kitty Warren] (45 வயது)
2. மிஸ் விவியன் வார்ரன் – [Ms. Vivie Warren] மோனிகாவின் ஒற்றை மகள் (வயது : 22)
3. பாதிரியார் சாமுவெல் கார்டுநர் [The Rev. Samuel Gardner] (வயது : 50)
4. பிராங்க் கார்டுநர் [Frank Gardner], விவியனின் காதலன் & சாமுவெல் பாதிரியாரின் மகன் (வயது : 20)
5. வில்லியம் பவல் [Praed] (நடுத்தர வயது) : மேடம் மோனிகாவின் கூட்டாளி
6. ஜார்ஜ் வாலஸ் (Sir George Crofts) (50 வயது) : மேடம் மோனிகாவின் தோழன்.
************************
மேடம் மோனிகாவின் வேடம்
(Mrs. Warren’s Profession)
நான்கு அங்கங்கள்
(இரண்டாம் அங்கம்)
அங்கம் -2 பாகம் -2
இடம்: ஹாஸ்லிமியர், ஸுர்ரி, இங்கிலாந்து
நடந்த ஆண்டு : 1893
காலம் : வேனிற் கால இரவு
அரங்க அமைப்பு: மிஸ் விவியனின் தோட்ட மாளிகை. வீட்டில் விளக்கு வெளிச்சம் உள்ளது. இருளில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே மோனிகா நுழைகிறாள். கூட ஃபிராங்க் வருகிறான். வெளியே நடந்து களைத்துப் போய் சோபாவில் அமர்கிறான். அவர்கள் பேசிக் கொண்டுள்ள போது, பாதிரியார், வாலஸ் நுழைகிறார். அதன் பின் உலவச் சென்ற விவியனும், வில்லியமும் வருகிறார்.
ஜார்ஜ் வாலஸ்: ஸாம் கார்டுனர் எனக்குத் தங்க இடம் அளிப்பார். கவலைப் படாதே மோனிகா.
மேடம் மோனிகா: உன்னைப் பற்றிக் கவனித்துக் கொண்டாய். வில்லியம் எங்கே தங்குவார் என்று தெரியுமா ?
வாலஸ்: எனக்குத் தெரியாது, ஒரு வேளை வாடகை விடுதியில் தங்குவார்.
மேடம் மோனிகா: ஸாமுவெல் ! வில்லியத்துக்கு ஒரு தங்கும் அறை உன்வசம் இல்லையா ?
பாதிரியார்: (தயங்கிக் கொண்டே) பாதிரியாராய் பணி செய்யும் எனக்கு அந்த உரிமை அளிக்கப்பட வில்லை. என்ன செய்யலாம் ? சரி வில்லியத்தின் சமூக நிலை என்ன ?
மேடம் மோனிகா: (அதிர்ச்சி அடைந்து) நீ மேல் மட்டப் பாதிரி போல் பேசுகிறாய் ! அவர் ஒரு பெரிய கட்டடக் கலை நிபுணர். நீ என்ன இன்னும் பழைய காலத்து அடிக்குச்சியை வைத்து உயர்ச்சி, தாழ்ச்சி பார்க்கிறாய் ! உன்னை விட அதிகம் சம்பாதித்து சமூகத்தில் உயர்ந்த நிலையில் வாழ்கிறார் வில்லியம்.
பாதிரியார்: அப்போது பிரச்சனை எழாது ? கட்டடக் கலைஞருக்குத் தங்கும் அறை நான் கொடுக்கலாம்.
ஃபிராங்க்: மேன்மை தங்கிய பாதிரியாரே ! அவர் கோமான்களும், சீமான்களுக்கும் மாளிகை வரைந்து அமைத்துக் கொடுப்பவர். உங்களுக்குத் தெரிய வில்லை அவரைப் பற்றி. (மேடம் மோனிக்காவை ஓரக் கண்ணில் பார்த்து கண்ணடிக்கிறான்.)
பாதிரியார்: அவருக்குப் பெரிய கோமான்களைத் தெரியுமா ? இதை முதலில் என்னிடம் சொல்லி இருக்கலாம். அவருக்கு இல்லாத தங்கும் அறையா ?
மேடம் மோனிகா: அது முடிவானது நல்லது. விவியனும் வில்லியமும் வந்தவுடன் நாம் இரவுச் சாப்பாட்டை முடிக்கலாம். இருட்டிய பிறகு இப்படிச் சுற்றுவதா ஓர் இள நங்கை ?
ஜார்ஜ் வாலஸ்: (கோபமாக) அவர்கள் என்ன தீங்கு உனக்குச் செய்வதாய்ப் புலம்புகிறாய் ?
மேடம் மோனிகா: நல்லதோ, தீங்கோ எனக்குப் பிடிக்க வில்லை அவள் அன்னியரோடு சுற்றுவது.
ஃபிராங்க்: அவருக்கு நாம் ஏன் காத்திருக்க வேண்டும் ? நாம் உண்ணலாம். வில்லியம் என்னருமை விவியனுடன் நீண்ட பொழுதை இனிதாய்க் கடத்தி வருகிறார். என்னிட மிருந்து என் விவியனைப் பிரிக்க முனைந்து வருகிறார் ! அது மட்டும் என்னிடம் நடக்காது. விவியன் நேசிப்பது என்னை. அவளை மணந்து கொள்ளப் போகும் வாலிபன் நான். அந்த வயோதிக மனிதன் இல்லை.
வாலஸ்: வாருங்கள் நாம் ஒன்றாய்ச் சாப்பிடுவோம். அவர் வந்து சேரட்டும்.
பாதிரியார்: ஃபிராங்க் ! நீ அப்படிச் சொல்லத் தகுதியற்றவன் ! மேடம் மோனிகா தீர்மானிக்க வேண்டியது அது. மற்றொரு ஆலோசனை. நீ இளநங்கை மிஸ். விவினை மணக்கத் தகுதி இல்லாதவன் என்று தெரிந்து கொள்.
ஃபிராங்க்: அப்படியா மோனிகா ? நான்தானே விவியனுக்கு ஏற்ற வாலிபன்.
மேடம் மோனிகா: (சிந்தனையில் தடுமாறி) ஸாமுவேல் ! எனக்குத் தெரியாது. திருமணம் கடவுளால் நிச்சயக்கப்படுகிறது. என் மகள் திருமணம் புரிந்து கொள்ள விரும்பினால் அது அவள் தீர்மானம். நான் தடுத்து நிறுத்தப் போவதில்லை.
பாதிரியார்: (கோபத்தோடு) என்ன ? என் மகனுக்கும் உன் மகளுக்கும் திருமணமா ? அது நடக்காது, நடக்கக் கூடாது, நடக்க விட மாட்டேன் !
ஜார்ஜ் வாலஸ்: என்ன ? மறுபடியும் சமூக ஏற்றத் தாழ்வு பார்க்கிறீரா ? யார் உயர் மட்டம், யார் தாழ் மட்டம் உங்கள் விதிப்படி ? நீங்கள் உயர்ந்த மட்டமா ? அது போகட்டும் ! மோனிகா நீ, முட்டாள்தனமாய்ப் பார்த்துக் கொண்டு இருக்காதே !
மேடம் மோனிகா: (கோபத்தில் மேஜையைத் தட்டி) ஏன் நடக்கக் கூடாது ? என் மகள் உன் மகனுக்கு எந்த விதத்தில் குறைந்து போனாள் ?
பாதிரியார்: என்னருமை மோனிகா ! உனக்குக் காரணம் தெரியும் ! தெரியாதது போல் நீ நடிக்காதே.
மேடம் மோனிகா: எனக்கொன்றும் தெரியாது. உனக்குக் காரணம் தெரிந்தால், உன் மகனுக்குச் சொல். விவியனுக்குச் சொல். உன் கிறித்துவ உறுப்பினருக்குச் சொல்.
பாதிரியார்: (நாற்காலியில் தடாலென்று அமர்ந்து) மேடம் மோனிகா ! காரணம் உனக்கு நன்றாகத் தெரியும் ! நான் வாயால் வெளியே சொல்ல முடியாது. ஆனால் என் மகன் நம்புவான் நான் காரணம் சொன்னால் !
ஃபிராங்க்: சரியாகச் சொன்னீர் அப்பா ! உன் மகன் நடத்தை உமது காரணத்தால் என்றாவது பாதிக்கப் பட்டதா ?
ஜார்ஜ் வாலஸ்: (கோபத்தோடு) சாமுவெல் சொல்வது சரிதான். விவியனை நீ மணந்து கொள்ளக் கூடாது ! அதுவே என் அழுத்தமான அறிவுரை !
(தொடரும்)
***************
தகவல் :
Based on The Play : Mrs. Warren’s Profession By : George Bernard Shaw, – Plays Unpleasant) (1958)
(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)
(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)
(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)
(d) The Wicked Wit of Oscar Wilde (1997)
(e) http://en.wikipedia.org/wiki/
(f) http://www.enotes.com/mrs-
(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)
(h) BBC DVD Video Limited – Bernard Shaw’s Mrs. Warren’s Profession Released in August 2006 (109 minutes)
(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)
(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)
(k) http://www.online-literature.
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 6, 2012)
http://jayabarathan.wordpress.
- அம்மா என்றால்….
- காக்க…. காக்க….
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -2
- நினைவுகளின் சுவட்டில் (92)
- ’ சுஷ்மா ஸிண்ட்ரோம்’
- ‘துப்பாக்கி நாயுடு’: தமிழகத்தின் முன்னோடி ஹிந்துத்துவர்
- வாழ்வியலில் வரலாற்றில் சிலபக்கங்கள் -20
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 27)
- அம்மாவாகும்வரை……!
- எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?
- கோவை இலக்கியச் சந்திப்பு
- நிகழ்வுப்பதிவு போரூர் த.மு.எ.ச.வின் குறும்படத் திரையிடல்
- ‘ஒலிம்பிக்ஸ்’ க்கு முன்பே ஓர் ஒப்புதல் வாக்குமூலம்
- முள்வெளி அத்தியாயம் -16
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 33
- தாகூரின் கீதப் பாமாலை – 21 நிரம்பும் நின் நறுமணம்.
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-9)
- உகுயுர் இனக் கதைகள் (சீனா)
- கள்ளக்காதல்
- தமிழக முஸ்லிம்களின் வாழ்வியல் உருவாக்கம்
- மோட்டுவளை
- சேட்டைக்காரக் கறுப்புப் பெண் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)
- நேற்றைய நினைவுகள் கதை தான்
- தீவிரவாதம் ஆக்கிரமித்த முஸ்லீம் மனம்
- கங்குல்(நாவல்)
- சிரியாவில் என்ன நடக்கிறது?
- ராஜமௌலியின் “ நான் ஈ “
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 33
- அறிவிருந்தும் கல்லூரியில் சேரமுடியாதவர்களுக்கு….
- செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸான் தடம் கண்டுபிடிப்பு
- அறைக்குள்ளேயே வெகுதொலைவு (ஒரு அஞ்ஞானியின் ”ஆகா” கவிதைகள்) -1
- கவிதைகள்
- கவிதைகள்
- கவிதைகள்
- ஈழத்து கவிதைப் புலத்தில் ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள் !“கனவுகளுக்கு மரணம் உண்டு” தொகுப்பை முன்வைத்து” !)
- அறைக்குள்ளேயே வெகுதொலைவு-II (ஒரு அஞ்ஞானியின் ”ஆகா” கவிதைகள்)
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஏழு
- குறிஞ்சிப் பாடல்
- புள்ளியில் விரியும் வானம்
- சுப்புமணியும் சீஜிலும்
- பஞ்சதந்திரம் தொடர் 51 – கெடுவான் கேடு நினைப்பான்