பில்லா -2 இருத்தலியல்

This entry is part 27 of 32 in the series 15 ஜூலை 2012

அடக்க நினைக்கும் கூட்டத்திலிருந்து தப்பித்து அகதியாக ஒதுங்கும் ஒரு மனிதனின் கதை.”அங்கருக்கப்பவே நீ ஒழுங்கா இருந்ததில்ல, இப்பவும் அப்டியே தான் இருக்கியாடா”ன்னு அக்கா கேட்கிறார்.தவறி விழுந்த துப்பாக்கியை தடவி எடுத்து அஜித் தன் பேண்ட் பாக்கெட்டில் வைக்கும்போது.

சீண்டப்படுதல்,ஒதுக்கிவைத்தல், மிருகம் போல நடத்தப்படுதல், முழுக்க அங்கீகாரம் கிடைக்கவிடாது தள்ளிவைத்திருத்தல், தாம் நினைத்த அமைதி வாழ்க்கையை, எல்லோரும் போல வாழ நினைப்பவனை வாழ விடாது தடுத்தல், இதெல்லாம் தொடர்ந்தும் நடந்தால் ஒருவன் என்ன தான் செய்வான் ? இதற்கும் மேலாக சொந்த நாட்டிலேயே அகதி போல நடத்தப்படுதல் என்பன அவனின் அடையாளங்கள். “அடங்க மறு அத்து மீறு” என்றே களம் இறங்கியிருக்கிறார் ‘தல’ அஜித்.

இதுபோல பல படங்கள் ஆங்கிலத்தில் வந்திருந்தாலும் எனக்கு உடனே ஞாபகத்திற்கு வருவது First Blood தான். சொந்த நாட்டின் ராணுவ வீரனை , யார் எதிரி என்றே தெரியாத வியட்நாம் காட்டில் கொண்டுபோய் விட்டு அவனின் அமைதி வாழ்க்கையை சீரழித்து , அதில் அவனுக்கு வரும் முறையான கோபத்தை மிகுந்த வன்முறையோடு வெறியாட்டமாக ஆடியிருப்பதைக்காட்டிய படம் அது.ஒரு புழுவை தொடர்ந்தும் சீண்டினாலும் அது தன் கோபத்தை காட்டத்தான் செய்யும், இவனாலும் பொறுத்துக்கொள்ளத்தான் முடியவில்லை. அவனுடைய எண்ணமெல்லாம் தான் ஒரு கேங்க்ஸ்ட்டராக மாற வேண்டும் என்று முடிவெடுத்து செய்யவில்லை. தான் உயிருடன் இருக்கவும் தன்னையும் ஒரு சக மனிதன் என்று நினைக்கவும் வேண்டுமென்ற வெறி கொண்டவனின் இலக்கில்லாமல் பயணிக்கும் வாழ்க்கை வரலாறு இது.

Prequal , Sequal என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை. இதை ஒரு தனிப்படமாகவே பார்க்கலாம். என்ன அவரின் டேவிட் பில்லா என்ற பெயர் மட்டும் ஒத்துப்போவதால் அப்படிச் சொல்லிக்கொள்ளலாம். ஏதிலியாக வந்தவர்கள் , எவ்வளவுதான் தகுதியுள்ளவராயிருப்பினும் , படிப்பிலும், அனுபவத்திலும் உயர்ந்தவராயிருப்பினும் வாழ்க்கை நாமெல்லாம் வாழ்வது போன்று அவர்களுக்கு கிடைப்பதில்லைதான்.

மீன்களை அனுப்பிவைக்கும் சம்பவத்தில் அவர்களை மாட்டவைப்பதில் இருந்து தொடங்குகிறது வலை. அருமையாகச் சிக்கிக்கொள்கிறார் அஜித். ஒவ்வொரு தடவை சிக்கியபோதிலும் தனக்கிருக்கும் இயல்பான கோபத்தினாலும், திருப்பியடிக்கும் திறமை இருப்பதாலும் லாவகமாத்தப்பிக்கிறார். “ என் வாழ்க்கைல ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானாச்செதுக்கினதுடா” ன்னு அடிபட்ட புலி போலச் சீறுகிறார்.எத்தன பேருக்கு அப்படி ஒரு வாழ்க்கை அமையும் ? , நாமெல்லாம் வாழ்க்கைல பயணிக்கறதில்ல, அடித்துத்தான் செல்லப்படுகிறோம். அடித்துச்செல்லப்படும் வாழ்க்கையையும் நம்மளால செதுக்க முடிந்தால் ?,,,ஹ்ம்ம்…அது தான் இந்த டேவிட் பில்லாவின் வாழ்க்கை.

அவனுக்கு பயம்ங்கற ஒண்ணு இருக்கறதேயில்ல, தளைகள் இல்லாத ஒருவனுக்கு பயம் இருக்கணும்ங்கற அவசியம் இருப்பதில்லை. எதிர்ப்போர் யாராக இருப்பினும் தம் வழியை மறைப்பவராயின் அவர்களைப் போட்டுத்தள்ளி விட்டு முன்னேறுகிறான் பில்லா.வகை தொகையில்லாதபடி கொலைகள், தம்மிடம் இருக்கும் அத்தனை ஆயுதங்களையும் அத்தனை சுளுவாக உபயோகிக்கிறான் பில்லா. “மார்க்கெட் சாவுக்குத்தான் ஆயுதங்களுக்கு இல்ல ,சாவுங்கற ஒண்ணு இருக்கிற வரை ஆயுதங்கள் தொடர்ந்து கொண்டேதானிருக்கும்” னு நமக்குப்புரிய வைக்கிறான் பில்லா. அத்தனையும் உண்மை.
The Devils புதினத்துல ‘பீட்டர் வெற்கோவென்ஸ்கி’ என்னும் பாத்திரத்தின் மூலம், தம் கருத்துக்களைத் தஸ்தயேவ்ஸ்கி வெளிப்படுத்துகின்றார் … “நாம் முழுமனதுடன் அழித்தலுக்கு நம்மை ஆட்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகைய அழித்தலானது தொடர்ந்து நடைபெற வேண்டும். இப்போது இருக்கக் கூடிய நடைமுறைகள் எதுவுமே எஞ்சியிருக்கவில்லை என்னும் நிலை வரும் வரை, அந்த அழித்தல் பணியினை நாம் தொடர்ந்து செய்துகொண்டிருக்க வேண்டும். இந்தப் போரிலே புரட்சியாளர்கள் விஷம், கத்தி, கயிறு போன்றவை களையும் பயன்படுத்தலாம்” இதேதான் பில்லாவும் செய்கிறான்.
“நீ நினைச்சத சாதிச்சிட்ட”ன்னு (யோக் ஜேப்பி) ரஞ்சித் சொல்லும்போது , “இல்ல இதுதான் ஆரம்பம்”னு சொல்லுவான் அகதியான எனினும் அனாதையில்லாத பில்லா. பவளத்துறையிலிருந்து தொடங்கும் அவன் பயணம் ,வைரக்கற்கள் கொண்டு சேர்ப்பதிலிருந்து , பௌடர் வரை சென்று , படிப்படியாக ஆயுதம் கொள்முதல் மற்றும் கலாஷ்னிக்கோவ் கடத்தல் வரை பயணிக்கிறான் பில்லா. முடிவுறா சளைக்காத பயணம் அது. ஒருபோதும் உண்ட வீட்டிற்கு ரெண்டகம் நினைக்காத பில்லா.
அஜித் அதிகம் மெனக்கெடாமல், அலட்டிக்கொள்ளாமல் , ஒரு கேங்க்ஸ்ட்டருக்கான முகப்பாங்குடன், கொஞ்சம் அதைத்த ,எப்போதும் முந்தினநாள் அடித்த பியரின் மப்பில் இருக்கும் முகத்துடனேயே காணப்படுகிறார் படம் முழுக்க. எந்தப் பெண்ணிடமும் ஒட்டுதலோ இல்லை உறவோ வைத்துக்கொள்ளாமல், அவள் அக்கா மகளான (“பார்வதி”) முறைப்பெண்ணிடம் கூட ஒட்டிக்கொள்ளாமல் தன் போக்கில் பயணிக்கும் , எதற்கும் இடம் கொடாத பாங்குடனேயே இருக்கிறான் பில்லா. சில இடங்களில் மட்டுமே கோட், அணிந்து வருகிறார், மற்ற காட்சிகளில் சாதாரண Angry Young Man ஆகத்தான் காட்சியளிக்கிறார் தல.
இராமேஸ்வரக்கரையில் வந்திறங்கியதிலிருந்து , அங்கிருக்கும் சக மனிதர்களிடம் பேசும் போதும், படம் முழுக்கவும் ஈழத்துப்பாணியில் ஒரு சொல் கூடப் பேசாமல் சாதாரணத் தமிழ்நாட்டுத் தமிழுடனேயே உலா வருகிறார் அஜித்.அவரின் சக தோழரும் அங்கனமே.அது மட்டும் இடிக்கிறது. மேலும் எல்லோரும் அவரிடம் அடி வாங்குவதற்கெனவே ஜனித்தவர் போலக்காணப்படுவதும், போலீஸ்காரர்கள் கூட, கொஞ்சம் ரொம்பவே இடிக்கிறது.
ஒரு வில்லன் பபாசி , “து தின் பேதின் தேரா லிமிட் க்ராஸ் கர் ரஹாஹை பில்லா” (நீ நாளுக்கு நாள் உன் எல்லை தாண்டிப்போற பில்லா ) என்று ஹிந்தியில் வசனம் பேசுகிறார் திப்பு சுல்த்தான் தாடியுடன். வில்லனுக்கான மிடுக்கு என்ற ஏதுமின்றி. இன்னொரு வில்லன் சின்னதாக French Cut வைத்துக்கொண்டு எப்போதும் ரஷ்யனில் பேசுகிறார், Sorry Chakri Sir, இந்தப்படத்தின் வில்லன்கள் என்னைக்கவரவேயில்லை 
படத்தில் வரும் பெண்கள் , ஜேம்ஸ்பாண்டு படத்தில் வரும் வில்லிகள் போலவும் , கதாநாயகிகள் போலவும் , ஒல்லியாக தமது ஸீரோ சைஸ் உடலைக் காட்டுவதற்கெனவே வந்தது போல இருப்பது பெரிய குறை, பில்லா 1 லாவது கொஞ்சம் நம்மூர் பெண் போல குண்டாக நமீதா நடித்திருந்தார். இதில் மருந்துக்குக்கூட அப்படி ஒருவரும் இல்லை. மதுரப்பொண்ணு பாடலில் வரும் “மீனாக்ஷி தீக்ஷித்” கூட ரஷ்யன் டான்ஸர் போலவே இருப்பது வருத்தமே, அதிலும் அவர் கதம்பத்தை தலையிலணிந்துகொண்டு பாடுவது பார்க்கச்சகிக்கவேயில்லை.
“ஆசையில்ல அண்ணாச்சி ,பசி” , இது பஞ்ச் டயலாக் மாதிரி தோணவேயில்ல. அடிமனதில் இருக்கிற விஷயமாத்தான் இருக்கு.இது போல பல விஷயங்கள் பேசறார் அஜித் குரலின் மூலம் இரா.முருகன், ரசிக்கவும் சிந்திக்கவும் அவ்வப்போது தைக்கவும் செய்கிறது வசனம்.
வகைதொகையற்ற கொலைகள், மற்றும் வன்முறைகளால் அளவுக்கதிகமாக தணிக்கையில் வெட்டுகள் வாங்கியது , திரைக்கதை பல இடங்களில் நொண்டியடிப்பது, பல காட்சிகளை பள்ளிக்கூடப்பிள்ளைகள் கூட யூகிக்கும் வகையில் அமைந்திருப்பது போன்றவைகளால் படம் பல இடங்களில் தாவித் தாவிச்சென்று , பார்க்கும் நமக்கு ஆயாசம் வருவது தவிர்க்க இயலவில்லை.
சண்டைக்காட்சிகள் பற்றி பேசவேண்டுமெனில் , அந்த சர்ச் காட்சியை மட்டுமே குறிப்பிட்டுச்சொல்லலாம், பார்வதி ஓமனக்குட்டனை காப்பாற்ற முயற்சிக்கும் காட்சியில் தல பட்டையக்கிளப்புகிறார். இதே காட்சியை வைத்தே திரைப்படம் தொடங்குகிறது.வெறும் கைகளால் தொடங்கி பிறகு சிறு கத்தியை வைத்து அனைவரையும் குத்திச்சாய்ப்பது, குறிப்பாக கடைசியில் அந்த முகத்தில் வெள்ளைத் தழும்புகளுள்ளவரை நெஞ்சில் குத்திச் சாய்ப்பது நினைத்தே பார்க்காத இடம், Hats Off தல. பின்னர் அந்தக் “கார்னிவல்” நடக்கும் சமயத்திலான சண்டைக்காட்சி, வெகு இயல்பான காட்சியமைப்புடன் கவர்கிறது. மற்ற சண்டைக்காட்சிகளில் Latest Machine Guns வைத்துக்கொண்டு சண்டையிடுவது Hollywood படங்களில் ஏற்கனவே பார்த்துச்சலித்தவை.
பில்லா 1-ஐ ஒப்பிட்டுப்பார்க்கையில் யுவனின் பங்களிப்பு , பின்னணி இசையில் குறைந்தே காணப்படுகிறது. பில்லா 1-ல் முழுக்க Jazz மற்றும் அவ்வப்போது Rock இசையுமாக 80- களில் வந்த இசை போல வெள்ளம்போலபாய்ந்து வந்தது. இங்கு Hip Hop மற்றும் Arabian Style. பல இடங்களில் தெளிவாகத்தெரிகிறது. அந்த டிமிட்ரி’யின் கோட்டையைத்தகர்த்து விட்டு அஜித் வெளியேறும் போது , பின்னணியில் முழுக்க தீ பற்றி எரிவதற்கான பின்னணி இன்னும் மனதில் ரீங்கரித்துக்கொண்டு இருக்கிறது, தீம் ம்யூஸிக்கை பயன்படுத்தியிருக்கிறார். இருப்பினும் பில்லா-2 ஆல்பமில் இடம்பெறாத அரேபியன் பெல்லி டான்ஸ்-க்கான பாடலில் பின்னியிருக்கிறார் யுவன். ஊது குழல்களும் டபுள் பாஸுமாக பின்னணி இசை நம்மை சீட்டின் விளிம்பிற்கு கொண்டு செல்கிறது. பார்வதி ஓமனக்குட்டன் அறிமுகக்காட்சியில் “இதயம்” பாடலுக்கான Bit ஐ பியானோவின் அழுத்தமான கட்டைகளால் வாசித்திருப்பது நம்மைக்கொள்ளை கொள்ள் வைக்கிறது .கடைசி வரை அந்தப்பாடலை படத்தில் தேடித்தேடிப்பார்த்து அலுத்தே போனேன், ஹ்ம்..அந்தப்பாடல் படத்தில் இடம்பெறவேயில்லை.
மற்ற அத்தனை பாடல்களும் , அதனதன் தேவையான இடத்தில் கனகச்சிதமாகப் பொருந்திப்போகிறது. பில்லா 1 –ன் Theme Musicஐ அளவோடு இசைத்திருப்பது படத்தை முன்னையதிலிருந்து வேறுபடுத்திக்காட்டப் பயன்பட்டிருக்கிறது . “ஏதோ ஒரு மயக்கம்” பாடல் காட்சியமைப்பு , சுற்றும் Focus Lights- களுடன் அப்படியே “விளையாடு மங்காத்தா “பாடலின் காட்சிகளை நினைவுபடுத்துகிறது. “எனக்குள்ளே மிருகம்” பாடல் படமாக்கிய விதம் அந்தப்பாடலுக்கு யுவன் கொடுத்திருந்த முக்கியத்துவத்தைக் காப்பாற்றுவது போல இருப்பது மிகவும் வலுச்சேர்க்கிறது. படத்தின் கடைசியில் தல’க்காக அவர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு பாடும் கேங்க்ஸ்ட்டர் பாடல் அசத்தல்.
தர்க்கரீதியாக நம்ப இயலாத நிகழ்வுகள் , தொடரும் வகைதொகையில்லாத கொலைகள் மற்றும் வன்முறை, சீராகப்பயணிக்காத திரைக்கதை, பல மொழிகள் சர்வசாதரணமாக படம் முழுக்க, அதுவும் பார்க்கும் தமிழ் மட்டும் கூறும் நல்லுலகத்திற்குப்புரியுமா என்று கிஞ்சித்தும் நினைத்தும் பார்க்காமல் பேசப்படுதல், சப் டைட்டில் பார்த்தே பல விஷயங்களைப்புரிந்து கொள்ள வேண்டியிருப்பது போன்ற விஷயங்கள் எல்லாம் படத்தில் வெட்டவெளிச்சமான குறைகள்.
“தல” அஜித்’துக்கு இது இன்னொரு படம் , யுவனுக்கு தன்னுடைய சில புதிய இசை முயற்சிகளை செய்து பார்க்க முடிந்த ஒரு படம், ரசிகர்களுக்கு Hollywood Range-ல் தமிழில் பார்க்க முடிந்த ஒரு படம்,ஒளிப்பதிவாளருக்கு சரியான தீனி கொடுத்த படம் என்றெல்லாம் கூறிக்கொண்டு நம்மை சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டியது தான். 
– சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

Series Navigationவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று எட்டுஉய்குர் இனக்கதைகள் (2)
author

சின்னப்பயல்

Similar Posts

2 Comments

  1. Avatar
    punaipeyaril says:

    சுவாரசியமான விமர்சனம்… தொடர்ந்து விமர்சனங்கள் வரட்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *