ஒரு வண்ணத்துப்பூச்சியைப்
பிடிப்பது போல
மெல்லப் பின்பக்கம் போய்
அடிக்கமுடியவில்லை.
ஈயைப் பிடிக்கும்
உள்ளங்கைக் குழித்த
சாகசமும் பலன் தரவில்லை.
சாட்டையடித்து
மெய்வருத்திக்கொள்ளும்
கழைக்கூத்தாடி போல
கைகளால்மாறி மாறி
அடித்துக்கொண்டாலும்
தப்பித்து விடுகின்றன
கொசுக்கள்.
சரி, கடித்துவிட்டுப்போகட்டும்
என இயலாமையில் சோர்ந்து
கண்ணயர்ந்த பின்,
ரத்தம் குடித்த போதையில்
நகர முடியாது
நான் புரண்டு படுத்ததில்
நசுங்கி நேர்ந்த
அவற்றின் மரணம்
பெயர் தெரியாத
குட்டிச்சிகப்புப் பூக்களாய்ச்
சிதறிக்கிடக்கும்
மறு நாள் காலையில்
என் படுக்கை விரிப்பில்.
————————–
kavidhai kosuvai patri erundhalum edhu kadi kavidhai illai kalakkal kavidhai…..