“உங்களுக்கொரு கடிதம். இலங்கையிலிருந்து ஒரு ‘கேர்ள்’ போட்டிருக்கின்றாள்” தந்துவிட்டு அருகில் அதன் வாசிப்புக்காகக் காத்திருக்கின்றாள் மனைவி. பத்திரிகையில் மூழ்கியிருந்த என்னை அந்தக் கடிதம் திசை திருப்பியது.
வழமைக்கு மாறான ஒரு கடிதம். கடிதத்தின் ‘கவரில்’ இருந்த பெயரை மட்டும் வைத்துக் கொண்டு பார்த்தால் அது ஒரு இளம்பெண்ணின் கடிதமாகத்தான் இருக்க வேண்டும். ஊகம் சரியானதுதான்.
வாசித்த நேரத்திலிருந்து மனம் கிளுகிளுப்பாக இருந்தது. உணர்வுகள் ‘வயக்கிரா’வினால் வாரி விடப்பட்டது போன்று தாளமிட்டன. இற்றைவரைக்கும் எனக்கு ஒரு காதல் கடிதம் கிடைத்ததில்லை. நாற்பத்தெட்டுக்கும் பத்தொன்பதிற்கும் இடையே எவ்வளவு இடைத்தூரம். வயதைத்தான் சொல்கின்றேன். கடிதத்தை அப்படியே இங்கே தருகின்றேன். அதில் எந்தவித புனைவிற்கும் இடமில்லை. கடிதத்தில் குழந்தமைத்தனம் இருந்தால் மன்னிக்கவும். அது அவளைச் சார்ந்தது.
வவனியா, சிறீ லங்கா.
16.12.2008
Hello திவாகர்!
எப்படி சுகம்? நீங்கள் நலமாக இருக்க இறைவனை வேண்டுகின்றேன்.
திவாகர் என்னை உங்களுக்குத் தெரியாது. எனக்கும் உங்களைத் தெரியாது. ஆனால் உங்கட சிறுகதையையும் உங்களுடைய எழுத்தாற்றலையும் எனக்கு தெரியும். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். எனக்கு உங்கட சிறுகதையிலே உங்களை பிடித்துக் கொண்டது. உங்களுடன் penfriend ஆகவேண்டும் என்ற ஆசை. உங்களுக்கும் விருப்பம் என்றால் பதில் போடவும்.
O.K என்னைப் பற்றி உங்களுக்கு தெரியாதல்லவா? எனது பெயர்…….. நான் தரம் 13ல் கல்வி கற்கின்றேன். நீங்கள் penfriend ஆகலாம் என்று சொன்னால் என்னைப் பற்றி விபரம் பின் தொடரும். நீங்கள் உங்களுடைய இலட்சியத்தை அடைய எனது இனிய வாழ்த்துக்கள்.உங்களுடைய பெயர் Very nice. சரி திவாகர் அவுஸ்திரேலியாவில் என்ன செய்கின்றீர்கள்? உங்கள் பதில் கண்டால் என் மடலுடன் கூடிய அன்பு, பாசம் மீண்டும் உங்களுடன் பகிரப்படும்.
இங்கணம்
Penfriend
மேலே தந்தவை கறுப்பு மையில் எழுதப்பட்டிருந்தன. கீழே நீல மையில் இருந்தவை இதோ!
“மலர்ந்த மலர்கள் மடியுமென்று
மலரும் மலர்கள் நினைப்பதில்லை”
கடிதத்துடன் கொசுறாக இன்னொரு இணைப்பு. கட்டம் போட்டு சிகப்பு மையில்.
” உன் இலக்கியம் – என் மனதை ரணமாக்கியது.
உன் கைதனில் இருந்து வரும் ‘Yes’ என்ற வார்த்தைக்காக
எத்தனை ஜென்மமும் காத்திருக்க நினைக்கின்றேன்.”
” Life is the window of the world.
Try and try oneday your can fly
Best wishes and good luck”
கடித்தத்தைப் படித்ததும் மலைத்துப் போனேன். உங்களுக்கு அவளின் பெயரைச் சொன்னால், நீங்கள் ஒருவேளை அதுக்கு கண், காது, மூக்கு வைத்து ஒரு ‘ஹலோவீன் பூசணிக்காய்’ போலாக்கி ஊருக்கு அனுப்பி வைத்து விடுவீர்கள். பிறகு அவளை அடித்தே கொன்று விடுவார்கள். நான் கடிதத்தை இன்னொரு தடவை ‘ரொயிலற்’றுக்குள் இருந்து மறுவாசிப்புச் செய்தேன்.
“எவ்வளவு நேரமா உதுக்குள்ளை இருக்கிறியள்? வயித்தைக் கலக்குதோ?” மனைவி சத்தமிட்டாள்.
“எங்கை அந்தப் பிள்ளை எழுதின கடிதம்? இன்னொரு தரம் வாசிப்பம் எண்டா காணக் கிடைக்கேல்லை” ரொயிலற்றை விட்டு வெளியே வரும்போது என்னை மேலும் கீழும் பார்த்த மனைவி சந்தேகப்பட்டாள். அந்தக் கடிதம் எனது படைப்பாற்றலுக்கு கிடைத்த வெற்றி என்றேன். அதன் எதிரொலியை அன்று முழுவதும் அனுபவித்தேன்.
எப்படி என்னுடைய முகவரியை எடுத்திருப்பாள்? ஓரிரு சஞ்சிகைகளில் கதை கட்டுரைகளின் கீழே எனது சுய விபரக் கோவையைப் போட்டிருந்தார்கள். அப்படியாயின் அதிலிருந்த எனது புகைப்படம் வயது என்பவற்றை அவள் கண்டு கொள்ளவில்லையா?
“உங்களை வசியம் பண்ணி அவுஸ்திரேலியா வரப்போகின்றாள். face book ற்குள்ளாலை உப்பிடி எத்தனையோ பேர் தொடர்பு வைச்சு ஆக்களைக் கடைசியிலை ஏமாற்றியிருக்கினம்” மனைவி தன் எண்ணத்தைச் சூட்சுமமாகச் சொன்னாள்.
மணி மணியாக விரிந்து – சரம் போல செல்லும் குண்டு குண்டான கையெழுத்தும் – அந்த கடித அமைப்பும், ஆங்காங்கே தெளித்து விடப்பட்ட ஆங்கில தத்துவங்களும் – அவளை ஒரு திறமையான பள்ளி மாணவி என்று கூறியது. அவள் தனது புகைப்படமொன்றையும் இணைத்திருக்கலாம்.
“கடிதம் போடவில்லையா?” மனைவி அடிக்கடி சீண்டினாள்.
அன்புள்ள சகோதரிக்கு,
எனது படைப்புகளை சிலாகித்து எழுதியதற்கு நன்றிகள். மேலும் எனது படைப்புகளை வாசியுங்கள். கருத்துக் கூறுங்கள். உங்கள் கருத்துக்கள் என்னை ஏணிப்படியில் ஏற்றி வைக்கும். போராட்ட காலத்திலும் படிப்பை மறந்து விடாதீர்கள். அதுவே எப்போதும் எங்களுக்குத் துணை. எப்பொழுதாவது எமது உதவி தேவைப்படின்….. – எழுதிக் கொண்டிருக்கும்போதே கடிதத்தைப் பறித்தாள் மனைவி. ‘சிலாகையும் பலகையும்’ ஏசியபடி சுக்கு நூறாகக் கிழித்து எறிந்தாள்.
“இதையே ஒரு வயது முதிர்ந்த பெண் எழுதியிருந்தா, சுடச் சுட மறுமொழி எழுதியிருப்பியளா? பத்தொன்பது வயசு. மனம் கேட்குதில்லை. எத்தினை நாளா வேலைக்கு அப்பிளிகேஷன் போடுறதுக்கு ஒரு ‘கவரிங் லெட்டர்’ எழுதித் தரச்சொல்லிக் கேட்டிருப்பன். எழுதித் தந்தியளா?” சரமாரியான பேச்சுக்கள் விழுந்தன. இரவு படுக்கைக்குப் போகும் போது –
“அந்தப்பிள்ளை ஏன் அப்பிடியொரு கடிதத்தை எழுதினாள்? படிக்கிற பிள்ளையல்லவா?” மனைவி தோள் மீது கையைப் போட்டவாறே கேட்டாள். அவளது மனம் இளகியது. கேட்டு விட்டாள். என் மனம் அலை பாய்ந்தது. போர் நடந்து கொண்டிருக்கும் அந்த இக்கட்டான வேளையில் – இப்படிப்பட்ட கடிதத்தை எழுத எப்படி ஒரு பெண்ணால் முடிந்தது? ஒருவேளை அந்தக் கடிதத்தினூடாக எதையோ சொல்ல நினைக்கின்றாளா? ‘றெயின்’ ஒன்று கூவிவிட்டுப் புறப்படும் ஓசை கேட்டது.
வவனியாவில் இருக்கும் நண்பன் ரஞ்சனின் ஞாபகம் வந்தது. இலங்கையில் கடைசியாக நான் வேலை செய்த இடம் வவனியா. ரஞ்சனின் வீடும் ஒரு புகையிர நிலையத்திற்கு அண்மையில்தான் இருக்கின்றது. ரெலிபோன் செய்து விஷயத்தைச் சொல்லி அந்தப் பெண்ணைப் பற்றி விசாரிக்கலாம். அல்லது பொறுத்திருந்து இன்னமும் கடிதங்கள் வருகின்றதா எனப் பார்க்கலாம். எந்தப் பிரச்சினைக்கும் அவசரம் காட்டாமல் சற்று காலம் தாழ்த்துவதால், முடிச்சுகள் தானாக அவிழலாம் என்றது அரசியல் சித்தாந்தம். லைட்டை அணைத்துவிட்டு படுக்கையில் விழுந்தேன்.
அதன் பிறகு ஒரு கடிதமும் வரவில்லை. சிலவேளைகளில் அந்தப் பெண்ணைப் பற்றிக் கதைப்போம். நாளடைவில் அதை மறந்தே போய் விட்டோம்.
xxx
பல வருட கால யுத்தம் ஏதோ ஒரு வகையில் முடிவுக்கு வந்தது.
கொழும்பிலிருந்து சிங்களவர்களும், புலம்பெயர்ந்த நாட்டிலிருந்து தமிழர்களுமாக வடபகுதி நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். 21 வருடங்களாக அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அகப்பட்டு வனாந்தரமாகி இருக்கும் எமது கிராமத்தை பார்த்து வருவதற்காக நாமும் புறப்பட்டோம்.
வவனியாவில் ரஞ்சனின் வீட்டில் மூன்று நாட்கள் தங்கினோம். முதல்நாள் இரவு நண்பர்கள் விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கே அழகான இளம் பெண்ணொருத்தி எல்லோருக்கும் சிற்றுண்டி பரிமாறினாள். அவளைக் கண்டதும் மனைவிக்கு அந்தக் கடிதம் மீண்டும் ஞாபகத்திற்கு வந்தது. எனக்கு வவனியா நகரத்திற்குள் நுழையும்போதே அந்த நினைப்பு வந்திருந்தாலும் பேசாமல் இருந்து கொண்டேன்.
அடுத்தநாள் மாலை ரஞ்சனிடம் சைக்கிளை வாங்கிக் கொண்டு அந்தப் பெண்ணின் வீடு நோக்கிச் சென்றோம். வயல், குளம், நீர் ஓடும் வாய்க்கால், பறவைகள் – என இனிமையான காட்சிகள். வயல் வெளியை ஒட்டி அவர்களின் வீடு இருந்தது. சீமெந்து வீட்டிற்கு கிடுகுத் தொப்பி. முற்றத்தில் சாக்கின்மேல் காயும் மிளகாய். கொடியில் தொங்கும் வெளிறிய துணிகள். குரைப்பதற்கு திராணியற்று மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் நாய்.
வீட்டிற்கு முன்னால் நின்று தயங்கியவாறே சைக்கிள் மணியை அடித்தோம். அடுத்த வீட்டிலிருந்த மனிதர் வெளியே வந்து எட்டிப் பார்த்தார். சற்று நேரத்தில் வீட்டிற்குள்ளிருந்து ஒரு பையனும் அம்மாவும் வெளியே வந்தார்கள்.
“நாங்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து வருகின்றோம். சாதனாவின் வீடு இதுதானே!”
அந்தப் பெண் மெல்லத் தலையாட்டினாள்.
“சாதனாவை பார்த்துவிட்டுப் போகலாமென்று…” சொல்லி முடிப்பதற்குள் அவள் “ஐயோ ஐயோ” என்று தலையிலடித்துக் கொண்டு ஓடி கதவைத் தாழிட்டுக் கொண்டாள். பையன் செய்வதறியாது விழித்தான். அயல் வீட்டிலிருந்து எட்டிப் பார்த்தவர் இன்னமும் அங்கேயே நின்று கொண்டிருந்தார். எங்களைத் தன்னுடைய வீட்டிற்கு வருமாறு சைகை செய்தார்.
“சாதனா அருமையான பிள்ளை. படிப்பிலும் வலு கெட்டிக்காரி. பத்தாம் வகுப்புச் சோதினையிலை எல்லாப் பாடத்திலையும் திறமைச்சித்தி எடுத்தவள். எவ்வளவோ சாதனைகளைச் செய்ய வேண்டியவளை, விதி சின்ன வயதிலேயே கொண்டு போயிட்டுது” அவர் பெரியதொரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
“பள்ளிக்கூடத்துக்குப் போற வழியிலை ஒரு ஆமிக் காம்ப் இருந்தது. ஆமிக்காரன்கள் அதாலை போய் வாறவைக்கு எந்த நாளும் கரைச்சல் கொடுத்தபடி. செக்கிங் எண்டு பள்ளிக்கூடம் போய் வாற வளர்ந்த பிள்ளையளின்ரை மார்பைத் தடவுவதும், உதுக்குள்ளை என்ன குண்டா வைச்சிருக்கிறியள் எண்டு கேலி செய்வதுமாக இருந்தாங்கள். சாதனவுக்கு அதுதான் யமனாக வந்தது. ஒருநாள் கடிதம் எழுதி வைச்சிட்டுப் போயிட்டாள். எல்லாப் பெண்களும் படுகிற அவலத்தைப் பார்க்கச் சகிக்காமல் மார்போடை குண்டைக் கட்டிக் கொண்டு காம்பிற்குள் பாய்ந்து விட்டாள்.”
நாங்கள் சிலையாகி நின்றோம். அவர் பாயை விரித்துப் போட்டு, அதில் அமரச் சொன்னார். குடிப்பதற்கு தேநீர் தயாரித்துத் தந்துவிட்டு, சாதனாவின் வீட்டிற்குச் சென்றார். சற்று நேரத்தில் திரும்பி வந்து “இனி வாருங்கள்” என்று அவர்களின் வீட்டிற்குக் கூட்டிச் சென்றார். அந்தப்பெண் சீலைத்தலைப்பால் வாயைப் பொத்தியபடி எங்களை உள்ளே கூட்டிச் சென்றாள்.
வீட்டுச் சுவரில் சாதனாவும் அவளது தந்தையும் புகைப்படமாகி நின்றார்கள். அதன் முன்னே மெளனமாக நின்றோம். அந்தத்தாயின் விம்மும் குரல் கேட்டது. கனத்த மனத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்தோம். வாசலில் அந்தச் சிறுபையன் சாதனாவின் நினைவு மலர் ஒன்றைத் தந்துவிட்டு ஏக்கத்துடன் நாங்கள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான்.
—————-
- நினைவுகளின் சுவட்டில் – 94
- சென்னையில் கழிந்த முதல் ஒரு பகல்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 22
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 35
- மாமியார் வீடு
- கல்வியில் அரசியல் பகுதி – 2
- BAT MAN & BAD MAN பேட் மேனும், பேட்ட் மேனும்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பெரு வெடிப்புக்கு முன்பே பிரபஞ்சத்தில் கருந்துளைகள் சில இருந்துள்ளன (கட்டுரை 81)
- பூசாரி ஆகலாம்,! அர்ச்சகராக முடியாது?.
- ‘பினிஸ் பண்ணனும்’
- பூமிதி…..
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -4
- குடத்துக்குள் புயல்..!
- தஞ்சை பட்டறை செய்தி
- முள்வெளி அத்தியாயம் -18
- குற்றம்
- தாகூரின் கீதப் பாமாலை – 23 பிரிவுக் கவலை
- சிற்றிதழ் வானில் புதுப்புனல்
- உய்குர் இனக்கதைகள் (3)
- வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
- ஓரு கடிதத்தின் விலை!
- பதிவர் துளசி கோபால் அவர்களின் “என் செல்ல செல்வங்கள்” : புத்தக விமர்சனம்
- தில்லிகை
- கணினித்தமிழ் வேந்தர் மா.ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு ஒரு அஞ்சலி
- தாவரம் என் தாகம்
- நகர்வு
- பிறை நிலா
- உலராத மலம்
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
- தமிழில் எழுதப்படும் பகுத்தறிவு சார்ந்த வலைப்பதிவுகளைத் தொகுத்து, ” தமிழ் பகுத்தறிவாளர்கள்” என்ற தளத்தை நிறுவியுள்ளோம்.
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 29)
- கற்பித்தல் – கலீல் கிப்ரான்
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-11)
- திருப்பதியில் நடைபெற்ற சாகித்ய அகாதெமியின் வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்களின் சந்திப்பில் இடம் பெற்ற சில கவிதைகள்
- பஞ்சதந்திரம் தொடர் 53
- அப்படியோர் ஆசை!
- விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது