திருப்பதியில் நடைபெற்ற சாகித்ய அகாதெமியின் வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்களின் சந்திப்பில் இடம் பெற்ற சில கவிதைகள்

This entry is part 34 of 37 in the series 22 ஜூலை 2012

தமிழில்: சுப்ரபாரதிமணியன்
1.
அரசியல்வாதியும் புறாவும்
ஓர் அரசியல்வாதியும் வெள்ளைப் புறாவும்
அன்பாகவும், அடிக்கடி சண்டையிட்டும் இருந்தனர்
வானில் சுதந்திரமாக பறக்க விரும்புவதாக புறா சொன்னது.
அரசியல்வாதி சொன்னார்:
“ உன்னை பறக்க அனுமதிப்பதோ, இல்லையோ
அது என் அரசியல்”
புறா மீண்டும் சொன்னது:
“நான் என் இறக்கைகளை அடித்தபடி
வானில் பறப்பேன்””
அரசியல்வாதி ஒரு  துப்பாக்கியைக் காட்டினான்.

புறா பறக்க இயலாமல் மெளனமானது.
இப்போது வெள்ளைப்புறா
அரசியல்வாதியின் பாக்கெட்டின் உள்ளே இருக்கிறது.

  • ரகு லைசாங்கதம் (மணிப்பூரி)

2.காந்தியும், ரோபோவும்
நீண்ட காலத்திற்கு முன்
நேருஜி ரஷ்யாவிலிருந்து வந்த ஒரு ரோபோவை வைத்திருந்தார்
அதன் வாய் ஒரே நிமிடத்தில்
ஆயிரம் முறை “ஹரே ராமா””வை உச்சரிக்கும்
பாலாபாஜி பிர்லாவிடமிருந்து கடன் பெற்ற காந்தியை வைத்திருந்தார்
பத்து கண்டு நூலை ஒரு மணிநேரத்தில் நூற்கும்
விக்ரம் சாராபாய் குடியரசு தினத்தில் அறிவித்தார்:
ட்ராம் பேயில் விஞ்ஞானத்திற்காக புது புனித ஸ்தலத்தை சிருஷ்டிப்பேன்

தில்லி செங்கோட்டையில்
வெறும் வயிற்றோடும் வறண்ட தொண்டையோடும்
கழுதைகள் கத்துகின்றன.
வண்ணார்கள் “ ஹரிஜன”” தினசரியின் பழைய பிரதிகளை
துண்டுதுண்டாக்கி தின்னக் கொடுக்கிறார்கள்.

இன்று சாதுக்கள் அறிவிக்கிறார்கள்:
பொக்கரனில் கோவில் ஒன்றைக் கட்டுவோம்,
புது புத்தரை வைக்க.
மகிழ்ச்சியுடன் கத்தினேன்:
“வாழ்க பாரதம், வாழ்க””     -தங்ஜாம் ஜபோபி சாக்(மணிப்பூரி)
3.கடல் கவிதைகள்

1. கப்பல்கள் பயணிக்கின்றன
இரவுகளின் தடுமாறும் திசைகளில்
தாறுமாறான விதிகளின் வழியில்.
கரை தெரியாது பார்வையில்,
எனினும் பயணித்தபடி.

கயிறு கட்டிய பொம்மை
கயிரே சூத்ரதாரி.
அதன் வழியைத் தீர்மானிக்க
கப்பலுக்குத் தடுப்புண்டு.

இறுகிய காரையும், நீரும் அலசி
பலகை மீது
பொன்னான ஜாத்ரா
வர்ணங்களின் சிதிலமும்
இசை, நடனம், விருப்பு வெறுப்பு
இணைந்த இனிப்புப் பண்டம்.

ஒருவனே சூத்ரதாரி
கடலின் அதிகாரத்தை எதிர்ப்பவன்
வெற்றிவரை தோல்வி மீண்டும் மீண்டும்

வாழ்க்கையின் நிர்பந்தங்களை
அவனே நின்று சமாளித்து
ஒவ்வொரு நிலையிலும்
வாழ்க்கை
மரணத்தை ஜெயித்து..

2.
அம்மா மாதவிடாய் பிறகு மறுபடியும்
புதுப் பிறப்பிற்குக் காத்திருக்கிறாள்
பிறகு வாழ்க்கையின் பயணம்,
கடல் வழி காற்றுபோல்
அம்மாவின் முலைப்பாலை
அமிர்தமாய் சுவைக்கும் குழந்தைபோல்
சுறாவளியில் சிக்கியும்.

தாயும் மகனும் சேர்ந்து
கனவுப் பயணம் போல
கடல் வழிகளாகின்றன.
ஒவ்வொரு மூச்சிழைப்பையும் பிடித்து
கடல் பயணம் தொடர்ந்து..
வாழ்க்கையின் சந்தோஷம் கடலாய்
துக்கமூட்டைகளைக் களைந்து
சுகங்களைத் தந்தபடி.

துக்கங்களில் சரணடைந்து

ஒருவன் புத்தனாகிறான்.

கடல் விந்தைகளுக்கு
யாராக இருப்பினும்
அவன் சரணடைந்து
கடல் பயண
உச்ச சந்தோஷத்தைக் கொள்ளுதலாய்…

  • நிங்கப்ப முதேனூர்(கன்னடம்)

4.மாய துணி

பல வர்ண  நூல்களால் எனது தறியில் நெய்கிறேன்
என் துணி சொல்கிறது.
என்  உணர்வுகளான மகிழ்ச்சி மற்றும் காயம் என.
இன்று நான் புதிதாக ஏதாவது நெய்ய விரும்புகிறேன்.
பூக்கள், பறவைகள், ரகசியமான வனம், வசந்தம்
நதிகள், மலைகள்.
நான் தீவுகளை நெய்ய விரும்புகிறேன்
கடல், நட்சத்திரங்கள் மின்னும் வானம்
எனது துணி உலகைப் பிரதிபலிக்க விரும்புகிறதா?

பூமியில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர்
மூன்றில் ஒரு பாகமே நிலம்
என் மாய துணி மாய வடிவமைப்புகளால் வளர்கிறது.

மரத்தில் செய்யப்பட்ட கூரிய நாடாவால் நெய்கிறேன்
இந்த நாடாவை தங்களைக் காத்துக் கொள்ள
எனது மூத்தப்பாட்டிகள் ஒரு காலத்தில் போராடியிருக்கிறார்கள்
“ரூமா” தறி நாடாவைக் கையில் வைத்துக்கொண்டு
கெட்ட்தை அழித்து சுத்தமான உலகிற்காக
இப்போது மீண்டும் எழுச்சி கொள்ளும் காலம்.
வினோத வர்ண நூல்
இனம், பிரதேசம், நம்பிக்கை என்று.
இந்த “ரூமா””வால் விரிவான மாயத்துணியை நெய்யட்டுமா.
புது உலகில் அன்பு,அமைதியுடன்
வினோதத் துணி விரியும்
போர்வீர்ர்களின் தலைமுறைகள் அடையாளத்தை
தாய் மண்ணிற்காக மலைகளின் மகள் தொடர்கிறாள்.

  • க்ரைரி மோக் சவுத்ரி ( மோக்)

 


5.ஒலி


இன்னொரு ஜன்னலையும் திறந்தேன்
திடுமென உணர்ந்தேன்
அன்றைய தினங்களின் போகுல் மலரின் வாசனை
என் நாசியைத் தொட்ட்தைப் போல்
எங்கிருந்தோ காட்டின் ஒலி
மெதுவாய் வந்து தொட்ட்து என்னை.
இன்னும் அதி உணர்கிரேன்.
நகரத்திலிருந்து கிராமத்திற்கு வரும் வழியில்
வீதியின் வளைவில்
உன்னை நான் தாண்டி வந்ததைப்போல்.
ஒரு இதமான மதிய வேளை ஓய்வாக
அமர்ந்திருந்தது என் அருகே.
உனக்காகக் காத்திருந்தது.
வாசலில்
உதிர்ந்த இலைகள் ஏதோ சொல்ல விரும்பியது
சிறு புல்லிடம்.

  • தேபா பிரசாத் தாலூக்தார்  (அசாமி)

6.பிரிவினை

எங்கும் ரத்தத்தின் நிறம் ஒன்றே
எங்கும் கண்ணீரும், வியர்வை ருசியும் ஒன்றே
எங்கும் பசியின் கதறல் ஒன்றே
ஆனால் நாம் ஒன்றல்ல.

எழுத்து

பாறையில் மழையால எழுதினேன்

மகிழ்ச்சியாய் படித்தேன்

சூரிய ஒளியும் அதுவே.

காந்தீயம்

நான் காந்தீயத்தை மிகவும் நேசிக்கிறேன்

அது அய்நூறு அல்லது ஆயிரம் ரூபாய் நோட்டாய்

இருந்தால் இன்னும்.

 

மயிலம்மா

 

பிளாச்சிமடா வீரநாயகி

இறந்துவிட்டாள்

கொகோ கோலா நிறுவனங்கள்

நெகிழி போல எப்போதைக்கும்

 

  • ஹரிதாஸ் பாலகிருஷ்ணன் (மலையாளம்)

7.வளர்ச்சியின் மறுபுறம்

நீங்கள் யாராக இருப்பினும் வணக்கங்கள்.

எங்கள் நலம் பற்றி விசாரித்ததற்கு ஆயிரம் வணக்கங்கள்

சாகச நவீன வளர்ச்சியின் புரட்சி பற்றியும்.

 

வனங்களிலிருந்து எங்களை விலக்கி விட்டீர்கள்

வனத்துறையினரின் உதவியுடன்.

பசுமை வாழ்க்கையைத் திருடி கொண்டு விட்டீர்கள்

பசுமைப் புரட்சி என்ற பெயரால்.

பசுமைப் புரட்சி என்றதில்

பாலை எடுத்துக் கொண்டு விட்டார்கள்.

நீல புரட்சி என்ற பெயரில்

எங்கள் வாழ்க்கையை எடுத்துக் கொண்டீர்கள்

தொழில் புரட்சி என்ற பெயரில்

எங்கள் கரங்களை வெட்டினீர்கள்

ஆணைகளுக்கு அஸ்திவாரங்களாக

எங்கள் இரத்தத்தை ஊற்றி அமைத்தீர்கள்

பல வர்ண கண்ணாடிகளையும்

பல கொடிகளையும் தந்தீர்கள்.

உங்களின் புதிய ஆயுதங்களின் பலத்தை

பரிசோதித்தீர்கள்.

எங்கள் நிலத்தை, நீரை, வானத்தை, காற்றை

அபகரித்தீர்கள்.

இன்னும் உங்கள் அணு வெடிப்புகளால்

எங்களையும்.

ஒவ்வொரு படியிலும் கரங்களையும் உருவாக்கினீர்கள்.

முதுகெலும்பை முறித்து சாய்ந்திருக்க செய்தீர்கள்.

சார், மேடம்

நீங்கள் யாராக இருந்தாலும்

நாங்கள் மனிதப் பிறவிகள்

எங்கள் மனிதப் பிறவிகளால்  வாழ விடுங்கள்

இயற்கையின் மடியில்

ஓற்றுமையுடன் மனிதப் பிறவிகளாய் வாழ்வோம்

எங்கள் வாழ்க்கையை நாங்கள் வாழ விடுங்கள்

எங்கள் சாவை நாங்கள் எதிர்கொள்ள விடுங்கள்

 

  • கே.எஸ். ரமணா (தெலுங்கு)

                                      subrabharathi@gmail.com

 

Series Navigationபாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-11)பஞ்சதந்திரம் தொடர் 53
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *