சிற்றிதழ் அறிமுகம் – சிகரம் ஜூன் 2012.

This entry is part 10 of 35 in the series 29 ஜூலை 2012


சந்திரா மனோகரன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு ஈரோட்டில் இருந்து வரும் இதழ். மூன்று வரிக் கவிதையோடு பல வண்ணங்களில் அச்சிடப்பட்ட அட்டை ஒரு ரிச் லுக்கைக் கொடுக்கிறது. கல்லூரி மாணவர்கள் எழுதிய ஹைக்கூ கவிதைகள், பள்ளி ஆசிரியர்கள் எழுதிய போட்டியில் பரிசு பெற்ற கதைகள் எனபயணிக்கிறது இதழ்.

கவிஞர் அமரன் எழுதியுள்ள ஹைக்கூ ஒப்பியல் ஒரு பயனுள்ள பகுதி. இந்தப் பகுதியின் விசேசமே, இது அமரன் எழுதிய ஹைக்கூக்களால் நிரம்பி விடாமல் பாஷோ போன்றோர் எழுதிய ஹைக்கூகளால் ( ஆங்கிலம் மற்றும் அதன் தமிழாக்கம் ) நிரப்பப்பட்டிருப்பதே. சாம்பிளுக்கு ஒன்று: wintry day / on my horse / a frozen shadow – பாஷோ. அமரன் இப்படி மொழி பெயர்த்திருக்கிறார்: குளிர் நாள் / என் புரவி மீது / உறைந்த நிழல்.

நூல் வெளியீடு பற்றிய செய்திகள் புகைப்படத்துடன், கடிதப் பகுதி, இரண்டு கவிதைகள், ஆசிரியரின் ஒரு சிறுகதை ( இது ஒவ்வொரு இதழிலும் உண்டு ) என முடிகிறது இதழ் 36 பக்கங்களில்.

நிறத்தின் முறுவல் என்கிற சந்திரா மனோகரனின் சிறுகதை, கறுப்பு கணவனும் சிகப்பு மனைவியும் எதிர்கொள்ளும் உளவியல் போராட்டங்களைப் பற்றியது.

சுந்தரம் கறுப்பு. பொற்கொடி சிவப்பு. தொலைக்காட்சி நடிகரைப் பார்த்து, தன் கணவன் அப்படியில்லையே என்கிற வெறுப்பில் நெருப்பாகத் தகிக்கும் மனைவி. அதனால் புழுங்கி அலுவலகத்தில் வேலையில் நாட்டமில்லாத கணவன். இதற்கு ஒரு முடிவு கட்டும் வைராக்கியத்தோடு வீடு வரும் கணவனுக்கு ஆச்சர்யம். ஹாலில் டிவி இல்லை, சோபா இல்லை, நாற்காலிகள் இல்லை. ஆனால் பொற்கொடி இருக்கிறாள், உடம்பெல்லாம் கறுப்புச்சாயம் பூசிக்கொண்டு. காரணம்? அவள் ரசித்த தொலைக்காட்சி நடிகருக்கு சொரியாசிஸ் என்கிற தோல் வியாதி. அழகின் அழிவு ஆரம்பம். கவர்ச்சிக்குப் பின் தெளிவு.

இந்தக் கதையைப் படித்தவுடன் இரண்டு கேள்விகள் எழுகின்றன. வெள்ளைத் தோல் ஆசாமிகளுக்குத்தான் தோல் வியாதி வருமா? கருப்புத்தோலுக்கு வராதா? அடுத்தது, கருப்புக் கணவனை அணைத்தாலே மனதின் மாற்றம் தெரிந்து விடுமே? பின் எதற்கு கருப்புச் சாயம்? இவரது முந்தைய இதழ் கதையும் செவப்பக்கா என்கிற வெள்ளைப் பெண்மணி பற்றியதுதான் என்பதைப் பார்க்கும்போது, சிகப்பு என்பது இவருக்கு ஒரு அவெர்ஷனோ என்று தோன்றுகிறது.

பதினொரு ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வரும் இவரது விடாமுயற்சியைப் பாராட்டியே ஆக வேண்டும். பல வித சுவைகளை ஒரே இதழில் தர முயற்சிக்கிறது சிகரம். சில சமயம் அதுவே முழுமையான தாக்கத்தைத் தராமல் போகலாம். இன்னொரு புதுமையான உத்தி: சிறுகதைப்போட்டிக்கான அறிவிப்பு. பரிசெல்லாம் உண்டு. ஆனால் கதை அனுப்புபவர்கள் இரண்டாண்டு சந்தா இணைக்க வேண்டும். கதைக்கு கதையும் ஆயிற்று. சந்தாவும் கூடிப் போச்சு. சபாஷ்!

0

தொடர்புக்கு:

சந்திரா இல்லம், 45ஏ, டெலிகாம் சிட்டி, செங்கோடம்பாளையம், திண்டல் அஞ்சல், ஈரோடு – 638 012. § 0424 – 2430367, 94438 41122, 98439 58827.

Series Navigationகசந்த….லட்டு….!இசை என்ற இன்ப வெள்ளம்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *